Press "Enter" to skip to content

உலகக்கோப்பை: பல முகங்கள், ஒரே கனவு, எல்லாம் காணாமல் போன இரவு – ஆமதாபாத் நேரடி பதிவு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து முடிந்த கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியைப் பற்றிய செய்தி சேகரிக்க, பிபிசி தமிழ் நேரடியாகக் ஆமதாபாத் சென்றிருந்தது.

விமானத்திலேயே கிரிக்கெட் ரசிகர்கள் பலர் நம்முடன் பயணித்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததுமே, ஆமதாபாத் நகரமே களை கட்டியிருந்ததைப் பார்க்கமுடிந்தது.

ஒரு மாபெரும் திருவிழாவாக நடக்கவிருந்த போட்டியை எதிர்பார்த்து இந்திய ரசிகர்களும், நகரவாசிகளும் பெரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

ஆனால், போட்டியில் இந்தியா தோற்றதும், அவர்களது உற்சாகம் கலைந்து, ஊரே களையிழந்துக் காணப்பட்டது.

இந்த அனுபவங்களை, அங்கு சென்ற பிபிசி நிருபர் நேரடிப் பதிவுகளாக தொகுத்தளிக்கிறார். 

களை கட்டிய ஆமதாபாத்

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

நாங்கள் ஆமதாபாத்திற்கு பயணம் செய்த விமானத்தில் எங்களுடன் வேறு சில ரசிகர்களும் ஆமதாபாத் வந்தனர்.

ஆமதாபாத் விமான நிலையத்தில் இறங்கிய பிறகு, அங்கிருந்தே இந்த போட்டிக்காக அந்த நகரம் எப்படி தயாராகி வந்தது என்பதைப் பார்க்க முடிந்தது.

போட்டியைக் காண வரும் ரசிகர்களை வரவேற்க விமான நிலையத்தில் பதாகைகளும், உலகக்கோப்பையின் மாதிரியும் வைக்கப்பட்டிருந்தன. இந்திய அணியை ஆதரிக்க, அந்த அணியின் நீல நிற ஜெர்சியும் சில இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு வெள்ளை போர்ட் முழுவதும் இந்திய அணிக்கான வாழ்த்துச் செய்திகள் எழுதப்பட்டிருந்தன. அதில் கிடைத்த ஒரு சிறிய இடத்தில் ஒருவர் ‘விராட்’ என எழுதினார்.

இப்படி நூற்றுக்கணக்கான வாழ்த்து வாசகங்கள் இந்திய அணியை வாழ்த்தி அந்த வெள்ளை போர்டில் எழுதப்பட்டிருந்தன.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

ஓட்டுநரின் உற்சாகம்

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த பிறகு, எங்களுக்காக முன்பதிவு செய்யப்படிருந்த காரில் ஏறி ஊரை வலம் வரத் தொடங்கினோம்.

எங்கள் குழுவுடன் பேசத்தொடங்கிய காரின் ஓட்டுநர், சிறிது நேரத்திலேயே நாங்கள் உலகக்கோப்பை போட்டிக்கான செய்தியை சேகரிக்க வந்துள்ளோம் என்பதை அறிந்தவுடன் மிகுந்த உற்சாகமடைந்தார்.

“மேட்ச் பாக்க உள்ளே போவீங்களா, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கிட்ட நீங்க பேசுவீங்களா”, என்று எங்களிடம் கேட்டார்.

அவர் பேசியது ஹிந்தியா அல்லது குஜராத்தியா என்பது முழுமையாக புரியாத நிலையில், எங்களுக்குத் தெரிந்த கொஞ்சம் ஹிந்தியை வைத்து அவரிடம் நாங்கள் செய்தி சேகரிக்க வந்துள்ளோம் என்று விளக்கினோம்.

நமது குழுவுடன் சேர்ந்து கிரிக்கெட் வீரர்களை பார்க்கலாம் என்ற அவரின் ஆசை பலிக்காது என்பதை அறிந்த பிறகு அந்த தேர் ஓட்டுநர் ஏமாற்றமடைந்தார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

‘வைப்’ செய்த ரசிகர்கள்

ஆமதாபாத் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள நரேந்திர மோதி மைதானத்திற்கு செல்லும் வழியின் பல இடங்களில் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வெல்ல வாழ்த்தி சுவரொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. சில இடங்களில் கணினி மயமான போர்டுகளிலும் இந்த வாழ்த்து இடம்பெற்றிருந்தது.

இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் மைதானத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற போதே, அந்த இடம் களை கட்ட தொடங்கியிருந்தது.

உள்ளூரில் நடக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க போட்டி நடக்கும் இடத்தை பார்க்க சில பேர், குடும்பத்துடன் மைதானத்திற்கு வெளியே புகைப்படம் எடுக்க சில பேர், மைதானத்தில் அனுமதிச்சீட்டு விற்பனை நடக்கிறதா என்று தெரிந்துகொள்ள சில பேர், பிளாக்கில் போட்டிக்கான அனுமதிச்சீட்டு கிடைக்குமா என்று தேடி அலைந்த சில பேர் என அந்த மைதானத்திற்கு வந்திருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் இருந்தது. ஆனால் அனைவரின் எண்ணத்திலும், இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது.

போட்டிக்கான அனுமதிச்சீட்டு கிடைக்காத போதும், இந்திய அணியை வாழ்த்துவதற்காக மும்பை, புனே, லக்னௌ என பல ஊர்களிலிருந்து வந்த ரசிகர்கள் முதல் நாளே குவிந்திருந்தனர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக பாடல்களை ஒலிக்கவிட்டு, அனைவரும் சேர்ந்து மைதானத்திற்கு வெளியே ‘வைப்’ (vibe) செய்து கொண்டிருந்தனர்.

முகத்தில் இந்தியாவின் மூவர்ண கொடியை வரைவது, வித்தியாசமான உடையில் வந்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிப்பது, உலகக்கோப்பை மாதிரியை தலையில் வைத்துக் கொண்டு வலம் வருவது, ‘ஐ லவ் டீம் இந்தியா’ என்று முடிவெட்டிக் கொண்ட நபர் என மைதானத்திற்கு வெளியே வலம் வந்த நபர்களை ஊடகங்கள் ஆக்கிரமித்து கொண்டு நேரலைகள் செய்துகொண்டிருந்தன.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பல முகங்கள், ஒரே கனவு

உள்ளூரில் நடக்கும் போட்டிக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், தனது பணியின் போது கிடைத்த சொற்ப நேரத்தில் சாலைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இந்திய அணியின் தொப்பியை தலையில் அணிந்து தனது நினைவுக்காக சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். காக்கித் தொப்பியை நாள் முழுவதும் அணிந்து கொண்டிருந்த அந்த காவலருக்கு, பணிக்கு நடுவே ஆசுவாசத்தை தந்தன அவரின் அந்த இந்திய தொப்பியுடனான கணங்கள்.

இறுதிப்போட்டி நடந்த ஆமதாபாத் மைதானத்தைச் சுற்றியுள்ள சாலைகளின் அருகே இருக்கும் வீடுகளில் குடியிருக்கும் உள்ளூர் மக்கள் அனைவரும் மைதானத்தில் ஒலிக்கும் போட்டியின் ஆராவாரத்தை கேட்டுக்கொண்டே, போட்டியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்தனர். தனது வீட்டின் அருகே போட்டி நடந்தாலும், அதற்கான அனுமதிச்சீட்டு இணையத்தில் விற்கப்பட்டதால் நேரில் செல்ல முடியவில்லை என அந்தப் பகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக குடியிருக்கும் நபர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.

போட்டி முடிந்து வெளியே வரும் ரசிகர்களை அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கோ, ஊருக்கு செல்ல தொடர் வண்டிநிலையம், பேருந்து நிலையம் அல்லது விமான நிலையத்திற்கு அழைத்து சென்று வருமானம் ஈட்டலாம் என்ற நம்பிகையுடன் மைதானத்திற்கு அருகே காத்திருந்த பல ஆட்டோ டிரைவர்கள், காத்திருப்பிற்கு இடையே தங்கள் கைபேசி திரையில் போட்டியைப் பார்த்துக்கொன்டிருந்தனர்.

எங்கெங்கு காணினும் நீல ஜெர்சி!

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

நவம்பர் 19-ஆம் தேதி காலை 9 மணி முதலே ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானம் செல்லக்கூடிய மொட்டேரா சாலை நீல வண்ணத்தில் காட்சியளித்தது. ‘Bleed Blue’ ஜெர்சியை அணிந்து கொண்ட பல்லாயிரக்கான ரசிகர்கள் இந்த சாலை வழியாக இறுதிப் போட்டியை காண மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

இந்திய விமானப்படையின் சிறப்பு அணிவகுப்பு, உலகக்கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன்களின் அணிவகுப்பு, இசை நிகழ்ச்சிகள் என போட்டிக்கு முன்பாக சில நிகழ்ச்சிகள் இருந்ததால் மைதானத்திற்குள் 10 மணி முதலே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மைதானத்திற்கு வெளியே இந்திய கிரிக்கெட் அணியின் நீல நிற ஜெர்சி விற்பனையும் களைக்கட்டியது. இந்திய அணிக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்பதால், போட்டிக்கு செல்லும் பெரும்பான்மை ரசிகர்கள் இந்த ஜெர்சியை வாங்கி அணிந்து கொண்டனர்.

பலருக்கும் இந்த போட்டி விளையாட்டாக இருந்தாலும், ஜெர்சி, தொப்பி, தேசியக் கொடி விற்பனை, முகத்தில் தேசிய கொடி வர்ணம் பூசுவது என போட்டிக்கு நடுவே சிலருக்கு இது தங்கள் வருமானத்திற்கான வாய்ப்பாகவும் இருந்தது.

ஜெர்சி வணிகத்தில் ஈடுபட சென்னையைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஆமதாபாத் வந்திருந்தனர்.

பாக்கியலெட்சுமி அவர்களில் ஒருவர்.

“ஸ்டேடியம் வெளிய தான் எங்க பொழப்பு. மேட்ச் இல்லாத நாள்ல சிக்னல்ல நின்னு காருக்கு தேவையான பொருள விற்போம். ஐ.பி.எல் மேட்ச் அப்போ டி-ஷர்ட் வாங்க ஃபேன்ஸ் யாராச்சும் எக்ஸ்ட்ரா அனுமதிச்சீட்டு இருந்தா எங்களுக்கு கொடுப்பாங்க. அதை வச்சு பசங்க தான் மேட்ச் பாப்பாங்க. நான் சில ஐபிஎல் போட்டியை நேர்ல பாத்திருந்தாலும், வேர்ல்டு கப் பாக்கனும்னு ஆசை,” என்றார் பாக்கியலெட்சுமி.

உலகக்கோப்பை போட்டி குறித்து பிபிசி தமிழுக்காக நேரலை செய்த போது நம்மிடம் வந்து பேசிய பல ரசிகர்களிடம் ஒரு கேள்வியை முன்வைத்தேன்.

“இறுதி போட்டியில் இந்திய அணியை 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியா வீழ்த்துமா?” என்று கேட்ட போது சில ரசிகர்களால் இந்த கேள்வியை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

“அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை, இந்த மாதிரி கேக்காதீங்க,” என்றனர்.

ஒரு சிலர், ஆஸ்திரேலியா கடந்த காலத்தில் வலுவான அணியாக இருந்தது, இப்போதும் இருக்கிறது, இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் இடையே கடுமையாக இருக்கும், ஆனால் இந்தியாவால் மட்டுமே உலகக்கோப்பையை வெல்ல முடியும் என்று கூறினர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

அப்பா இந்தியா ரசிகர், மகன் ஆஸ்திரேலியா ரசிகர்!

நண்பகல் 1 மணியளவில் மைதானம் இருந்த இடமே நீல நிற கடல் போல காட்சியளித்தது. அதில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் வெகு சில மஞ்சள் நிற ஜெர்சி மட்டுமே இருந்தன.

பிபிசி மராத்தி சேவையின் நேரலையின் போது பேசிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய ரசிகருக்கும், இந்திய ரசிகருக்கும் சிறிய பிணக்கம் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே இருவரும் சமாதானம் ஆகினர்.

நம்மிடம் பேசிய துபாயைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரும் வித்தியாசமாக போட்டியைக் காண வந்திருந்தனர்.

அப்பா இந்திய அணிக்கும், மகன் ஆஸ்திரேலிய அணிக்கும் ஆதரவாக அந்தந்த அணிகளின் ஜெர்சியை அணிந்திருந்தனர்.

அந்த சிறுவனிடம் கேட்ட போது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்காக இந்த உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று கூறினார்.

சிறுவனின் அப்பாவிடம், “அப்பாவாக இன்று நீங்கள் ஜெயிக்கனுமா இல்லை இந்திய அணியின் ரசிகராக நீங்கள் ஜெயிக்கனுமா,” என்று கேட்டேன்.

அதற்கு பதிலளித்த அவர், “என் மகனுக்காக ஆஸ்திரேலியா ஜெயிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை. ஆனால் மனதளவில் இந்தியா தான் இன்று ஜெயிக்க வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியா தோற்றால் என் மகனை பிறகு நான் சமாதானம் செய்து கொள்வேன்,” என்றார்.

‘அமைதி’யான சாலைகள்

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Sharad Badhe

”மட்டையிலக்குடுகளை வீழ்த்தி மைதானத்தில் இருக்கும் இந்திய ரசிகர்களை மௌனமாக்குவதே எங்கள் நோக்கம்,” என்று போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியிருந்தார்.

அது மைதானத்திற்கு உள்ளே நடந்ததைவிட, நரேந்திர மோதி மைதானத்திற்கு வெளியே நடந்தது.

போட்டி நடந்த நாளன்று மதியம் இருந்த ஆராவாரம், இந்திய அணியின் மட்டையாட்டம் முடியும் போது இருந்த இடமே தெரியாமல் காணாமல் போனது.

முதல் சுற்று முடிந்த பிறகு மைதானத்தைச் சுற்றியிருந்த பகுதிகளில் ஆள்நடமாட்டமே இல்லாமல் போனது.

இருந்த ஒரு சிலரிடமும், இந்திய அணியின் கோப்பை வெல்வதற்கான வாய்ப்பு பறிபோன கவலை அவர்களின் முகத்தில் வெளிப்பட்டது.

இந்திய அணி பந்துவீச்சின் போது 3 மட்டையிலக்குடுகளை விரைவாக வீழ்த்தியதும், சாலைகளில் எனர்ஜி அதிகரிக்க தொடங்கியது.

ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. இந்திய பவுலர்கள் மட்டையிலக்குடை வீழ்த்தாமல் ரன்களைக் கொடுக்கத் தொடங்கியதும் ரசிகர்கள் நம்பிக்கை இழந்தனர்.

ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 34-வது ஓவரின் போது சதமடித்ததும், இந்திய ரசிகர்களின் கோப்பை கனவு கலைந்தது.

மைதானத்தினுள் இருந்த பல ரசிகர்கள் அப்போது எழுந்து வெளியே வரத்தொடங்கினர்.

இந்தியா, ஆஸ்திரேலியா, கிரிக்கெட் உலகக்கோப்பை

பட மூலாதாரம், Sharad Badhe

”இந்திய அணி வீரர்களின் தோல்வியை எங்களால் நேரில் பார்க்க முடியாது. நாங்கள் பார்க்க விரும்பிய வரலாற்று தருணம் இது கிடையாது,” என்று மைதானத்திலிருந்து வெளியே வந்த ரசிகர்கள் கூறினர்.

அடுத்த சில நிமிடங்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவ, மைதானத்தில் இருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கவலை தோய்ந்த முகங்களுடன் வெளியே வரத்தொடங்கினர்.

இந்தியா வெற்றி பெற்ற தருணத்தை விட, தோல்வி அடைந்த இந்நேரத்தில் அணிக்கு எங்கள் ஆதரவை தருகிறோம், என்று போட்டி முடிந்து வெளியே வந்த ரசிகர் ஒருவர் கூறினார்.

”80ஸ், 90ஸ் கிட்ஸ்களுக்கு எப்படி 2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிவு இதயத்தை நொறுக்கியதோ, அதைபோலவே என்னைப் போன்ற 2K கிட்ஸ்களுக்கும் இது ஹார்ட் பிரேக் தருணம்,” என்றார் மற்றொரு ரசிகர்.

“நான் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரிலிருந்து நண்பர்களுடன் ஆமதாபாத் வந்தேன். 2 நாட்களாக ஆயிரம் கிலோமீட்டரை கடந்து ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு, கனவுகளோட இங்க வந்தேன். இப்போ தோல்வி தந்த வலியை விட, மீண்டும் ஆயிரம் கிலோமீட்டர் இந்த ஏமாற்றத்தோட போகும் பயணம் தான் இன்னும் அதிக வலியை தரும்,” என்று சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் தெரிவித்தார்.

அபுதாபியிலிருந்து போட்டியைக் காண வந்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், மறுபடியும் வேலைக்கு போகும் போது கூட வேலை பாக்குற என்னோட பாகிஸ்தானி நண்பர்கள் என்னை கேலி பண்ணுவாங்க. அவங்கள எப்படி சமாளிக்க போறேன் அப்படினு தெரியல,” என்று நம்மிடம் நேரலையின் போது பகிர்ந்து கொண்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வி இப்படி ஒவ்வொரு ரசிகர்களிடமும், ஒவ்வொரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

மதியம் 1 மணிக்கு ஆமதாபாத்தில் இருந்த ஆரவாரம் 8 மணி நேர இடைவெளியில் தடமே தெரியாமல் காணாமல் போனது.

[கூடுதல் தகவல் உதவி – டேனியல்]

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »