Press "Enter" to skip to content

நீலகிரி: டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பேராபத்து – கேரளாவில் என்ன நடந்தது தெரியுமா?

பட மூலாதாரம், Somasundaram Jayaraman

நீலகிரியில் விளைநிலங்களில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்க சோதனை ஓட்டம் நிகழ்த்தியுள்ளது இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆணையம். இது, கேரள காசர்கோட்டில் நடந்ததைப் போன்ற பேராபத்தை ஏற்படுத்தும் எனவும், நாடு முழுவதிலும் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பதை தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர் வல்லுநர்கள்.

காரணம் என்ன? காசர்கோட்டில் என்ன நடந்தது?

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு

பட மூலாதாரம், Somasundaram Jayaraman

நீலகிரியில் டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி?

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆணையம், நீலகிரி முழுவதிலும் விளைநிலங்களில் பூச்சிக்கொல்லி தெளிக்க டிரோன் பயன்படுத்த திட்டமிட்டு, செப்டம்பர் 30ம் தேதி, ஊட்டி அருகே டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளித்து சோதனை ஓட்டம் நிகழ்த்தியுள்ளனர்.

இந்த செயல்பாட்டால் கேரளாவைப் போன்று பல்லுயிர் பெருக்கம் பேராபத்துக்கு உள்ளாகும் என்றும், இந்தியா முழுவதிலும் பூச்சிக்கொல்லி தெளிப்புக்கு டிரோன் பயன்பாட்டை தடை செய்ய வேண்டும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர் சூழலியலாளர்கள். டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பதால் பாதிப்பு என்ன? ஏன் தடை செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறார்கள் அவர்கள்.

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு

பட மூலாதாரம், Somasundaram Jayaraman

‘நிச்சயம் வனத்துக்குள் பரவும்’

நீலகிரியில் ஏற்கெனவே விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக் கொல்லிகளால் பாதிப்பு இருப்பதாகவும், டிரோன் மூலம் தெளித்தால் பாதிப்பு இன்னும் தீவிரமாகும் என்கிறார் நீலகிரி என்விரோன்ட்மென்ட் மற்றும் கல்சுரல் சர்வீஸஸ் உடைட் நிறுவனர் சிவதாஸ்.

அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் இந்தியாவின் முக்கிய பல்லுயிர் பெருக்க மண்டலங்களுள் ஒன்றாக உள்ளது. இங்கு காப்புக்காட்டுக்கு மத்தியில் தான் விளைநிலங்கள் உள்ளன.

நீலகிரி விவசாயிகள் ஏற்கனவே காய்கறிகள் மற்றும் இதர பயிர்களுக்கு அதிக நச்சுத்தன்மையுள்ள பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால், மக்கள் பாதிக்கப்பட்டு, நீர் நிலைகள் மாசடைந்து வருகிறது. பல தோட்ட தொழிலாளர்களிடம் தோல் சம்பந்தமான நோய்களையும், விளைநிலங்கள் அருகே வனத்தில் தாவரங்கள் கருகியுள்ளதையும் காண முடிகிறது. இந்த நிலையில், டிரோன் வாயிலாக ரசாயன பூச்சிக்கொல்லி தெளித்தால் பல்லுயிர் பெருக்கம் பேராபத்தை சந்திக்கும்,’’ என்றார் சிவதாஸ்.

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு

பட மூலாதாரம், சிவதாஸ்

பாதிப்பை சந்திக்க நேரிடும்…

பூச்சிக்கொல்லியை நேரடியாக தெளிப்பதை விட டிரோன் மூலமாக தெளிப்பதில் என்ன ஆபத்து என விளக்குகிறார் சிவதாஸ்.

“பூச்சிக்கொல்லிகளை டிரோன் மூலம் தெளித்தால் அது நிச்சயம் வனப்பகுதிக்குள்ளும் பரவும். முதலில், பட்டாம்பூச்சி, தவளை, பறவைகள் என அனைத்தின் இனப்பெருக்கம் பாதிப்பதுடன், தாவரங்களின் பரவலும் குறைந்து, சில ஆண்டுகளில் பல வகை வனவிலங்குகள் பாதிப்பை சந்திக்க நேரிடும். கேரளாவில் மனிதர்களுக்கே அந்த நிலை என்றால் அங்கு பல்லுயிர் பெருக்கம் எவ்வளவு பாதித்திருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை,’’ என்கிறார் அவர்.

‘டெக்னாலஜியை அறிமுகம் செய்கிறோம்’

டிரோன் என்ற புதிய தொழில்நுட்பம் விவசாயத்தில் விளை நிலங்களை கண்காணிக்க, நிலத்தில் உள்ள ஈரப்பத்தை கண்டறிந்து நீர் பாய்ச்ச என பல்வேறு விசயங்களுக்கு பயன்படுத்தப்படுவது போலவே பூச்சிக் கொல்லி தெளிக்கவும் தற்போதுப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஊட்டி இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சோமசுந்தரம் ஜெயராமனிடம். இந்த புதிய தொழில்நுட்பம் இன்றியமையாதது என்றும் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் விளக்கமளித்த சோமசுந்தரம் ஜெயராமன், “வழக்கமாக ஒரு ஏக்கரில் பூச்சிக்கொல்லி தெளிக்க, ஒரு வேலையாள் 3 – 4 மணி நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளதுடன், 50 லிட்டர் நீர் தேவைப்படும். இதுவே டிரோன் பயன்படுத்தினால் வெறும், 10 – 12 லிட்டர் நீரைக் கொண்டு 20 நிமிடங்களுக்குள் தெளித்து விடலாம். டிரோன் பயன்பாட்டால் விவசாயிகளுக்கு செலவு வெகுவாக குறைகிறது. தற்போது அனைத்து பகுதிகளிலும் வேலையாட்கள் தட்டுப்பாடு நிலவுகிறது, இதற்கு தீர்வு தான் டிரோன்,’’ என்கிறார் சோமசுந்தரம் ஜெயராமன்.

டிரோன் மூலம் ரசாயன பூச்சிக்கொல்லி தெளித்தால் சூழல் மாசுபாடு ஏற்படாதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘டிரோன் பல வகைகளில் விவசாயிகளுக்கு உதவும். இதில் விவசாயிகள் இயற்கை பூச்சிக்கொல்லிகளைக் கூட பயன்படுத்தலாம். நீலகிரியை பொறுத்தவரையில் சோதனை ஓட்டமாகத்தான் டிரோன் மூலம் பூஞ்சைக்கொல்லிகள் தெளிக்கப்பட்டன. ரசாயனம் பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்தாலும், டிரோன் மூலம் நிகழ்த்தப்படும் பல செயல்பாடுகளால் பல நன்மைகள் உள்ளன, அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். நாங்கள் டெக்னாலஜியை அறிமுகம் செய்கிறோம் அவ்வளவுதான்,’’ என்றார்.

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு

பட மூலாதாரம், Somasundaram Jayaraman

‘பல்லுயிர் பெருக்கம் அழியும்!’

டிரோனில் பூச்சிக்கொல்லி தெளிப்பதால் அருகில் உள்ள செடிகள் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள பிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, பல்லுயிர் பெருக்கம் அழியும் என்று எச்சரிக்கிறார் கோவை ஆனைகட்டி சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் முனைவர் எஸ்.ஏ அஜீஜ்.

பிபிசி தமிழிடம் பேசிய அஜீஜ், “பொதுவாக டிரோன்களை, பயிர்களுக்கு 3 – 7 அடி உயரத்துக்கு மேல் பறக்க விட்டு தான் பூச்சிக்கொல்லிகளை தெளிக்கின்றனர். மக்காச்சோளம், கம்பு, கரும்பு போன்ற பயிர்களே தரையில் இருந்து, 4 – 6 அடி உயரம் வரையில் வளரும், அதற்கும் மேல் தான் டிரோன் பறந்து பூச்சிக்கொல்லிகளை தெளிக்கும். அப்போது, அருகிலுள்ள பகுதிக்குள் சில மீட்டர்கள் வரையில் நச்சுத்தன்மை நிச்சயம் பரவும்.

டிரோனால் காற்றில் நச்சுத்தன்மை பரவி, மரங்களில் உள்ள பறவைகளின் கூடுகளில் உள்ள முட்டைகள் வரையில் பாதிப்படையும், நீர் நிலைகள் இருந்தால் அவையும் பாதிக்கும்,’’ என்கிறார்.

டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி தெளிப்பு

பட மூலாதாரம், எஸ் ஏ அஜீஜ்

‘ரசாயன பூச்சிக்கொல்லியால் பறவைகளின் டி.என்.ஏ. மாறும்’

ரசாயன பூச்சிக்கொல்லிகளால் பறவைகளின் டி.என்.ஏ. மாறுவதை பதிவு செய்துள்ளதாக முனைவர் எஸ்.ஏ அஜீஜ் கூறுகிறார். .

‘‘ரசாயன பூச்சிக்கொல்லியால் மகரந்த சேர்க்கைக்கு உதவும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சி, குளவி போன்ற பூச்சியினங்களும், பறவைகளின் உணவான வண்டு, வெட்டுக்கிளி போன்றவை பாதிப்பதுடன், அவற்றை உட்கொள்ளும் பறவைகளும் அதிக பாதிப்பை சந்திக்கின்றன.

ரசாயனத்தால் பறவைகளின் டி.என்.ஏ. மாறுதலாகியுள்ளதை நாங்கள் பதிவு செய்துள்ளோம். பறவைகளின் இயற்கை இயல்பான வேட்டையாடுதல், பறத்தல், இனப்பெருக்கம் என, அனைத்துமே பாதிக்கப்பட்டதையும், மனிதர்களைப் போல பறவைகளும் ஊனமாக பிறப்பதையும் கண்டறிந்துள்ளோம். நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இத்தகைய அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன. ரசாயனம் தெளிப்பது சாதாரண செயல் போன்று தெரிந்தாலும், நீண்ட கால அடிப்படையில் அதன் பாதிப்பு மிகப்பெரியது,’’ என்றார் அஜீஜ்.

கேரளாவில் என்ன நடந்தது?

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த முந்திரி, காய்கறிகளில், 1970 ஆம் ஆண்டு வாக்கில் அதிக அளவு பழப்புழு, வண்டு, இலைப்புழு போன்ற பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் காணப்பட்டன.

விளைச்சல் குறைந்து பொருளாதார இழப்பு ஏற்பட்டதால், பாதிப்புகளை களைய அம்மாநில அரசின் கேரள தோட்டக்கழகம் ‘Plantation Corporation of Kerala – PCK’ கையிலெடுத்த ஆயுதம், உலங்கூர்தி வாயிலாக Endosulfan என்ற பூச்சிக்கொல்லியை தெளிப்பது.

1976ல் துவங்கி 20 ஆண்டுகள் தொடர்ச்சியாக, காசர்கோட்டின் 14க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் ஆண்டுக்கு மூன்று முறை, Endosulfan என்ற பூச்சிக்கொல்லியை உலங்கூர்தி மூலம் தெளித்தது கேரள தோட்டக்கழகம். ஆனால், இந்த பூச்சிக்கொல்லியால், அனுதினமும் இன்னலை சந்தித்து போராடி வாழ வேண்டிய நிலை உருவாகுமென தெரியவில்லை அந்த அப்பாவி மக்களுக்கு.

ஆண்டுகள் உருண்டோட வயிற்று வலி, தோல் நோய் என்று துவங்கி, குழந்தைகள் தொடர்ச்சியாக ஊனமாக பிறப்பது போன்ற தீவிர பாதிப்பு ஏற்பட்ட பின் தான் மக்களுக்கு தெரிந்தது, வானிலிருந்து தெளிக்கப்பட்ட என்டோசல்பான் பூச்சிக்கொல்லி, பூச்சிகள் மட்டுமின்றி தங்களின் வாழ்வையும் அழித்துவிட்டது என. அதன்பின் வெகுண்டெழுந்த மக்களின் பல போராட்டங்களுக்குப்பின், 2011ல் என்டோசல்பான் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

இது தொடர்பாக நடந்த ஆய்வுகளில், என்டோசல்பான் பூச்சிக்கொல்லியால் மனிதர்கள் மட்டுமின்றி, நீர் நிலைகள், விவசாயத்துக்கு அடிப்படையான தேனீக்கள் முதல் தவளை வரையில் அனைத்து உயிர்களும் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலே படுமோசமான நிலைக்கு தள்ளப்பட்டது கண்டறியப்பட்டது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »