Press "Enter" to skip to content

உத்தராகண்ட் சுரங்கப் பாதை கட்டுமானத்தில் குறைபாடு இருந்ததா? நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் என்ன கூறுகிறார்?

பட மூலாதாரம், Getty Images

உத்தராகண்ட் சுரங்கப்பாதை கட்டுமானத்தில் 41 தொழிலாளர்கள் 17 நாட்களாக சிக்கிக் கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பேசுபொருளாக இருந்து வந்தது. தொழிலாளர்கள் மீட்கப்படுவார்களா இல்லையா என்ற பதற்றம், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், இந்த செய்தியை பார்த்து வந்த அனைவருக்குமே இருந்தது.

இந்த சிக்கலான மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய அரசு சுரங்கக் கட்டுமான நிபுணர் அர்னால்ட் டிக்ஸை வரவழைத்திருந்தது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர், ஒரு பொறியாளர், ஒரு புவியியலாளர் மேலும் வழக்கறிஞரும் ஆவார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தடி பாதுகாப்பு குறித்து பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

டிக்ஸ் சர்வதேச சுரங்கங்கள் மற்றும் நிலத்தடி வெளிகளுக்கான அமைப்பின் தலைவர் ஆவார். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த அவர், உத்தராகண்டில், ஒவ்வொரு நாளும் சுரங்கத்தின் உள்ளே சென்று, மீட்புப் பணிகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்கி வந்தார்.

இந்த சுரங்கப்பாதை விபத்து எதனால் ஏற்பட்டது, இது தவிர்த்திருக்க முடியுமா என்று அர்னால்ட் டிக்ஸ் பிபிசியிடம் விரிவாக பேசினார்.

சுரங்க கட்டுமான நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் என்ன கூறுகிறார்?

பட மூலாதாரம், Getty Images

வெளியேறும் பாதை கட்ட வேண்டியது அவசியமா?

பொதுவாக சுரங்கம் அமைக்கும் போது, ஏதாவது ஒரு காரணத்தால் தப்பித்து வெளியே செல்ல வேண்டும் என்றால், ஒரு வெளியேறும் பாதை அமைக்கப்படும். இந்த சுரங்கத்தில் அந்த பாதை அமைக்கப்பட்டுள்ளதா, சுரங்க கட்டுமானத்தில் எப்போது அது அமைக்கப்படும் என்று விளக்குகிறார் அர்னால்ட் டிக்ஸ்.

“சுரங்க கட்டுமானத்தின் இந்த நிலையில், வெளியேறு பாதை கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் கட்டுமானத்தின் இந்த நிலையில், சுரங்கம் சரிந்து விழும் என யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்” என்றார் டிக்ஸ்.

“உலகம் முழுவதிலும் ,சுரங்கங்கள் இடிந்து விழும் என எதிர்பார்த்து நாம் சுரங்கங்களை கட்டுவதில்லை. பிரதான சுரங்கம் கட்டி முடிக்கப்பட்ட பிறகே வெளியேறும் பாதை கட்டப்படும்” என்கிறார் டிக்ஸ்.

இந்த திட்டத்தில் வெளியேறும் பாதை கட்டுவதற்கான திட்டம் இருந்ததா என கேட்டதற்கு, “எனக்கு தெரிந்தவரை, வெளியேறும் பாதை கட்டுவது என்பது இறுதி கட்ட திட்டமாகும். ஆனால் பிரதான சுரங்கம் கட்டும் போது வெளியேறும் பாதை கட்டுவது வழக்கமல்ல. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், பிரதான சுரங்கப்பாதை கட்டும் போது, ஒரு அணுகு சுரங்கப்பாதை கட்டப்படும். அந்த சுரங்கப்பாதை மூலம் தப்பித்து வெளியேறலாம், ஆனால் அந்த சுரங்கத்தின் முக்கிய பயன் அதுவல்ல” என்றார்.

சிக்கிமில் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கும் சுரங்கப்பாதையில் வெளியேறும் பாதை கட்டப்பட்டுள்ளது. இது குறித்து கேட்ட போது, “இந்தியாவின் சிக்கலான நிலப்பரப்பில் வெளியேறும் பாதை முதலிலேயே கட்டுவது அவசியமாக இருக்கலாம்” என்றார்.

சுரங்க கட்டுமான நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் என்ன கூறுகிறார்?

பட மூலாதாரம், Getty Images

சுரங்கம் இடிந்ததற்கான காரணம் விசாரணை செய்யப்படுகிறதா?

உலகம் முழுவதும் இந்த சம்பவத்தை உற்று நோக்கிக் கொண்டிருப்பதால், இந்த சம்பவம் குறித்த விரிவான விரிவான விசாரணை தேவை என்று அர்னால்ட் டிக்ஸ் கூறுகிறார்.

“நாம் இந்த சம்பவத்திலிருந்து எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், என்ன பயன்? இவ்வளவு பணம் செலவு செய்து என்ன பெற்றுள்ளோம்? இந்த சம்பவத்தால் மக்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே கண்டிப்பாக இந்த சம்பவத்துக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இந்த பணிகளில், விசாரணைக் குழு முதல் நாளிலிருந்தே ஈடுபட்டு வருகிறார்கள்” என்றார்.

வேறு ஏதாவது தொழில்நுட்பம் பயன்படுத்தியிருக்க வேண்டுமா?

பொதுவாக பாறையின் கட்டமைப்பு மற்றும் தன்மையை பொறுத்தே அதை தாங்குவதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்படும். இரும்பு துண்டுகள் மற்றும் கட்டுமானத்துக்கு வலுவூட்டும் எஃகு பயன்படுத்தப்பட்டிருந்தால், அது ஐயர்ன் கிர்டர் என்ற இரும்பு கட்டுமானச் சட்டம் ஆகும்.

மேலும் லாடிஸ் கிர்டர் என்பது, பொதுவாக பாலங்களுக்கு ஆதாரமாக இருக்கும் பின்னல் வடிவிலான கட்டுமானச் சட்டமாகும்.

இந்த இரு வகையான கட்டுமானச் சட்டங்களும் சுரங்கம் இடிந்து விழுந்துவதில் இருந்து பாதுகாப்பதற்காகவே.

சுரங்க கட்டுமான நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் என்ன கூறுகிறார்?

பட மூலாதாரம், Getty Images

எந்த கட்டுமானச் சட்டம் சிறந்தது?

பொதுவாக பாறையின் தன்மை பொருத்தே எந்த கட்டுமானச் சட்டம் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்படும் என்கிறார் அர்னால்ட் டிக்ஸ். “ஆனால் இமாலயப் பகுதிகளில், வழக்கத்துக்கு மாறான சூழல் இருப்பதாக கருதுகிறேன். இங்கு பாறையின் தன்மை மாறிக் கொண்டே இருக்கிறது. இந்த சம்பவத்தில் தீவிர விசாரணை கண்டிப்பாக தேவை, ஏனென்றால் தற்போது இடிந்து விழுந்த பகுதி இதற்கு முன்பு எப்போதும் இடிந்ததில்லை, மேலும், இடிந்து விழக்கூடும் என்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்த சுரங்கத்தில் வெளியேறும் பாதை இருந்ததா?

இப்படி ஒரு சம்பவம் நடைபெறுவதற்கு இந்த மலைகள் எப்படிப்பட்டவை என்று ஆராய வேண்டும் என்றும் சுரங்கத்தின் கட்டுமானம் ஏன் தேவைப்படும் அளவு உறுதியாக இல்லை என்பதையும் ஆராய வேண்டும் என்றும் வலிறுத்துகிறார் டிக்ஸ்.

பாறைகளில் உள்ள விரிசல்களை சீர் செய்யும் போது அந்த பகுதியை தாண்டி பணியாளர்கள் மேலும் உள்ளே செல்லக் கூடாதா என்று அவரிடம் கேட்ட போது, “பொதுவாக சுரங்கத்தின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான பணிகள் நடைபெறும். எனது அனுபவத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதியில் ஒரு வேலை நடக்கும் போது, மற்றொரு பகுதிக்கு செல்லக்கூடாது என்ற தடை கிடையாது” என்கிறார் அவர்.

சுரங்க கட்டுமான நிபுணர் அர்னால்ட் டிக்ஸ் என்ன கூறுகிறார்?

பட மூலாதாரம், Getty Images

திட்ட மதிப்பு அதிகரிப்பு

இத்திட்டம் குறித்த வரைவு ஆவணம் என்ன கூறுகிறது என அரசு இணையதளமான infracon.in-ல் இத்திட்டம் குறித்த விவரங்களை திரட்டியது பிபிசி.

2018ம் ஆண்டு ஜூன் மாதம் தயாரிக்கப்பட்ட சில்கியாரா திட்டத்தின் வரைவு ஆவணத்தை பார்த்த போது, தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான வளர்ச்சி கார்ப்பரேஷன் எந்த மாதிரியான சுரங்கத்தை கட்ட நினைத்தது என்று தெரிந்து கொண்டோம்.

இந்த திட்டத்தின் நோக்கம், சில்கியாரா வளைவில் பார்கோட்டில், இரு வழி சுரங்கப்பாதை கட்ட வேண்டும் என்பது. தேசிய நெஞ்சாலை 134-ல் 25.4 கி.மீக்கும் 51 கி.மீக்கு இடையில், தரசு யமுனோத்ரி பிரிவில் சுரங்கப்பாதையின் இயக்கம் மற்றும் பராமரிப்பை மேற்கொள்வதும் இத்திட்டத்தில் அடக்கம்.

2018ம் ஆண்டு கொடுக்கப்பட்ட மதிப்பீடுகள் படி, இந்த திட்டம் 48 மாதங்களில் 853 கோடியே 79 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையின் படி, இந்த திட்டத்தின் செலவு 2021-ல் 1383 கோடியே 78 லட்சமாக உயர்ந்து விட்டது. மேலும் இந்த சுரங்கத்துக்கான வெளியேறும் பாதை மற்றும் அணுகு சாலைகள் 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில் கட்டி முடிக்கப்படும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை மற்றும் கட்டுமான வளர்ச்சி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அஹ்மதிடம், இந்த சுரங்கத்துக்கான வெளியேறும் பாதை கட்டப்பட்டதா என்று கேட்ட போது, “இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை வெளிவரும் போது அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும்” என்றார். இந்த குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளதா என கேட்டதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »