Press "Enter" to skip to content

அந்த 17 நாட்கள்: உத்தராகண்ட் சுரங்க விபத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் சொன்னது என்ன?

பட மூலாதாரம், UTTARAKHAND GOVERNMENT

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டப்பட்டுவந்த சுரங்கப் பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பெரும் போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தீபாவளி நாளன்று (நவம்பர் 12) ஏற்பட்டது. தற்போது சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் 17 நாட்கள் கழித்து மீட்கப்பட்ட நிலையில், இப்போதுதான் அவர்களது வீடுகள் உண்மையான தீபாவளிக் கோலம் பூண்டுள்ளன.

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவுடன் 41 தொழிலாளர்களும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். தேவையான மருத்துவ பரிசோதனைகள் முடிவுற்ற பிறகு அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்ப படவுள்ளனர்.

இந்நிலையில் சுரங்கத்திற்குள் என்ன நிலை இருந்தது, என்ன மாதிரியான பிரச்னைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது உள்ளிட்ட தகவல்களை உள்ளிருந்து வெளியே வந்த தொழிலாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் என்ன கூறினர்?

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம், ANI

‘முதல் 24 மணிநேரம் மிகவும் கடினமாக இருந்தது’

சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களில் 15 பேர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள், எட்டு பேர் உத்தரப்பிரதேசத்தையும், பீகார் மற்றும் ஒடிசாவிலிருந்து தலா 5 பேரும், அசாம் மற்றும் உத்தரகாண்ட் பகுதிகளில் இருந்து தலா இரண்டு பேரும், ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபோத் குமார் வர்மா கூறுகையில், சுரங்க விபத்து நடந்த முதல் 24 மணிநேரம் மிக கடினமானதாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளியில் பேசியுள்ள அவர், “காற்றுப் மற்றும் உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் முதல் 24 மணிநேரம் மட்டுமே நாங்கள் சிரமத்திற்கு ஆளானோம். அதற்குப் பிறகு முந்திரி , திராட்சை உள்ளிட்ட உணவு பொருட்கள் எங்களுக்கு நிறுவனத்தால் அனுப்பப்பட்டன. 10 நாட்களுக்குப் பிறகு ரொட்டி, சாப்பாடு மற்றும் பருப்பு வகைகளும் அனுப்பப்பட்டன,” என்று அவர் கூறுகிறார்.

மேலும், “தற்போது நான் பரிபூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், எந்த விதமான பிரச்னைகளும் இல்லை எனவும் கூறியுள்ள அவர், உங்கள் அனைவரின் கடின உழைப்பு மற்றும் வேண்டுதல்கள், மத்திய அரசின் தீவிர முயற்சியால் மட்டுமே தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளோம், இல்லையென்றால் என்ன ஆகி இருக்கும் என்று எனக்கு மட்டுமே தெரியும்,” என்கிறார்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம், PHOTO BY SAJJAD HUSSAIN/AFP VIA GETTY IMAGES

‘குடும்பத்துடன் பேசியதும் தைரியமாக உணர்ந்தோம்’

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வஜித் குமாரும் மீட்கப்பட்ட தொழிலாளர்களுள் ஒருவர். இவர் கம்ப்ரஸர் இயந்திரத்தை இயக்குபவர். “இந்த உலகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்து விட முடியும் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது,” என்று கூறுகிறார் இவர்.

ஏஎன்ஐ நிறுவனத்திடம் பேசிய விஸ்வஜித், “நானும் இதர தொழிலாளர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், பாதுகாப்பாக உணர்கிறோம். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். சுரங்கத்தின் வாயிலுக்கு அருகில் விபத்து ஏற்பட்டு இடிபாடுகள் விழுந்த போது நான் மற்றொரு வாயிலுக்கு அருகில் இருந்தேன். இதற்கிடையில் இரண்டரை கிலோமீட்டர் வரை இடம் காலியாக இருந்தது. நாட்களை கடத்துவதற்கு இந்த இடத்தில் தான் நாங்கள் உலவி கொண்டிருந்தோம்,” என்று தெரிவித்துள்ளார்.

விஸ்வஜித்தும் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட முதல் சில மணிநேரங்கள் மிக கடினமானதாக இருந்தது என்கிறார். “ஆரம்பத்தில் பயம் இருந்தாலும், தண்ணீர் மற்றும் உணவு கிடைத்து, எங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும் பேச வாய்ப்பு கிடைத்த பிறகு எங்களது மனவுறுதி கூடி விட்டது. விரைவில் நாங்கள் மீட்கப்பட்டு வெளியுலகத்தை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் கிடைத்தது,” என்கிறார் அவர்.

“சுரங்கத்திற்குள் இடிபாடுகள் சரிந்த உடனேயே, வெளியே செல்வதற்கான வழி அடைத்து விட்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். பிறகு உணவு, தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை பைப் வழியாக தரப்பட்டன. இடிபாடுகளை தோண்டும் இயந்திரமும் வெளியே இருந்து கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டன,” என்று கூறுகிறார் விஸ்வஜித் குமார்.

குடும்ப உறுப்பினர்களோடு பேச முடிந்தது அவர்களுக்குப் பேராதரவாக இருந்தது என்று கூறும் அவர், “இதற்காக ஒரு மைக் பொறுத்தப்பட்டு எங்களது குடும்ப உறுப்பினர்களோடு நாங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்,” என்றார்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம், PMO

அனைவரும் பாராட்டும் அந்த ஒரு நபர் யார்?

இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்திலும் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் பெயர் ‘கப்பர் சிங் நேகி’. இவர்தான் கட்டப்பட்டுவந்த சுரங்கத்தின் மேற்பார்வையாளர்.

விபத்தில் உள்ளே மாட்டிக்கொண்ட 41 தொழிலாளர்களில் இவரும் ஒருவர். மீட்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களும் இவர்தான் தங்களின் மன உறுதியை அதிகரித்து கொண்டே இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களோடு பேசிய பிரதமர் நரேந்திர மோதியும் கப்பர் சிங் நேகியை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அவரின் சிறந்த தலைமைப் பண்பிற்காக அவரை வாழ்த்திய பிரதமர் மோதி, ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிக்கலான சூழலில் தன் தலைமைப் பண்பின் மூலம் தன்னுடைய அணிக்கு உதவி செய்துள்ளார் என்பதை எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிரதமருக்கு நன்றி தெரிவித்த கப்பர் சிங் அனைவரும் தங்களுக்கு ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சியளித்ததாக தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசு, மாநில அரசு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில மீட்புக் குழு என அனைவரின் தொடர் ஊக்கமும், கவனிப்புமே எங்களை காப்பாற்றியுள்ளது. நாங்கள் உள்ளே ஒரு குடும்பத்தை போல செயல்பட்டோம். உள்ளே சிக்கிக் கொண்ட போதும் பொறுமையோடு நாங்கள் சொன்னதை கேட்டு, நம்பிக்கை இழக்காமல் இருந்த என்னுடைய அணியினருக்கும் நன்றி,” என்று கூறியுள்ளார் நேகி.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம், RAVI PRAKASH

ஜார்கண்ட் கிராமங்களில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

41 தொழிலாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்ட பிறகு இந்தியாவில் உள்ள பல பகுதிகளில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் படங்கள் மற்றும் காணொளிக்களை பார்க்க முடிந்தது.

பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்த தொழிலாளர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களும் தங்கள் மகிழ்ச்சி மற்றும் நிம்மதி உணர்வை வெளிப்படுத்தினர்.

41 தொழிலாளர்களில் 15 பேர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் ராஞ்சி ஒரமஞ்சியில் உள்ள கீரபேடா கிராமத்திற்கு 17 நாட்கள் கழித்து இப்போதுதான் மகிழ்ச்சி திரும்பியிருக்கிறது.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர பேடியா, அனில் பேடியா மற்றும் சுக்ராம் பேடியா ஆகிய மூன்று இளைஞர்களும் உத்தரகாசி சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட செய்தி வந்ததிலிருந்து கிராமாவாசிகள் நிம்மதியாக உள்ளனர். தற்போது அவர்கள் கிராமத்திற்கு திரும்புவதற்காக கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.

சுரங்கத்திலிருந்து தொழிலாளர்கள் பாதுகாப்பாக செவ்வாய் இரவு 8 மணிக்கு வெளியே வரும் தகவல் கிராம மக்களுக்கு கிடைத்த உடனே கொண்டாட்டத்தைத் தொடங்கி விட்டதாகத் தெரிவிக்கிறார் பிபிசி செய்தியாளர் ரவி பிரகாஷ். இரவு மற்றும் காலையிலும் அவர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி இந்த வெற்றியை கொண்டாடியுள்ளனர்.

இந்த மூன்று இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களும் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று கடும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அனில் பேடியாவின் அத்தை இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்து வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஆனால், தொழிலாளர்கள் மீட்கப்பட்ட செய்தி கிடைத்த அடுத்த நொடியே பரபரப்பாய் வீட்டை பூஜை பொருட்களால் அலங்கரித்து தயாராகி விட்டார்.

இந்த மூவரும் படித்த பள்ளியிலும் கூட இவர்களின் மீட்பு கொண்டாடப்பட்டது. அங்கிருந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேளம் அடித்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம், Getty Images

ஏற்கனேவே ஒரு மகனை இழந்த தாய்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம் பைரம்பூர் கிராமத்தை சேர்ந்த மஞ்ஜீத்தும் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்களில் ஒருவர்.

அவரது தாய் பேசும்போது “இந்த 17 நாட்களும் மிகக் கடினமானதாக இருந்தது. இன்று வந்து விடுவான், நாளை வந்து விடுவான் என்று சொல்லிக்கொண்டே 17 நாட்கள் கடந்துவிட்டன. இன்றுதான் நாங்கள் தீபாவளியே கொண்டாடினோம். எங்கள் மகன் பாதுகாப்பாய் வந்து விட்டான். இனிமேல் இது போன்ற ஆபத்தான பணிக்கு அவனை அனுப்ப மாட்டோம்,” என்று கூறியுள்ளார்.

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள லக்கிம்பூர் கேரி மாவட்டத்தின் துத்வா புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பைரம்பூர் கிராமம். இங்குள்ள மஞ்ஜீத்தின் வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தொடர்ந்து நிகழ்வுகள் நடந்து கொண்டே இருந்ததாகவும், பத்திரிகையாளர்கள் மற்றும் அண்டை வீட்டார்கள் என பலரும் வந்து செல்வதாகவும் கூறுகிறார் பிபிசி செய்தியாளர் பிரசாந்த் பாண்டே.

மஞ்ஜீத்தின் பெற்றோர்களைத் தாண்டி, அவரது இரண்டு தங்கைகளும் அவரது வீட்டில் உள்ளனர். மஞ்ஜீத் சில்க்யாரா சுரங்கத்தில் சிக்கி கொண்ட செய்தி வந்த உடனேயே நகைகளை விற்றுவிட்டு சம்பவ இடத்திற்கு சென்று விட்டார் அவரின் தந்தை.

மஞ்ஜீத் பாதுகாப்பாக வெளியே வந்த உடனே அவரது தந்தை அவருக்கு முத்தமிடும் படங்களை சமூக வலைத்தளங்களில் காண முடிந்தது.

மஞ்ஜீத்தின் அண்ணன் தீபு ஒரு வருடத்திற்கு முன்புதான் மும்பையில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். “நாங்கள் எங்கள் மூத்த மகனை இழந்து விட்டோம், அதனாலேயே மஞ்ஜீத் மீது அக்கறை அதிகமாக இருந்தது. இந்த 17 நாட்களே 17 வருடங்கள் போல இருந்தது,” என்று கூறியுள்ளார் மஞ்ஜீத்தின் தாய்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம், ANI

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியைச் சேர்ந்த ராம் மிலனும் சுரங்க விபத்தில் மாட்டிக்கொண்டார். அவரது மகன் சந்தீப் குமார் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசும்போது, “நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். எங்களது உறவினர்கள் தந்தையை அழைத்து வருவதற்காக உத்தரகாண்ட் சென்றுள்ளனர். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் என் நன்றியை கூறிக்கொள்ள விரும்புகிறேன்,” என்று கூறியுள்ளார்.

மற்றுமொரு தொழிலாளர் சந்தோஷ் குமாரும் ஷ்ரவஸ்தியைச் சேர்ந்தவர். அவரது அத்தை ஷமிதா தேவி, தங்கள் பகுதியை சேர்ந்த 8 பேர் இந்த சுரங்கத்திற்குள் சிக்கியிருந்ததாகக் கூறுகிறார். சந்தோஷின் தாயார் தன்னுடைய மகனுடன் பேசியதாகவும், அவர் விரைவில் வீட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இப்போது தான் எங்களுடன் சேர்ந்து ஒட்டுமொத்த கிராமமும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளது.” என்று கூறியுள்ளார் அவர்.

ஒடிஷா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்த திரன் நாயக்கின் தாயார் அனைத்து மீட்பு பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். இதேபோல், சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராம் பிரசாத் நர்ஜாரியின் குடும்ப உறுப்பினர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அவரின் வயதான தந்தை, “என் மகனிடம் பேசியது என்னால் வார்த்தையால் வெளிப்படுத்த முடியாத மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட அரசு மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி,” என்று கூறியுள்ளார்.

உத்தராகண்ட் சுரங்கப்பாதை விபத்து

பட மூலாதாரம், PHOTO BY ARUN SANKAR/AFP VIA GETTY IMAGES

‘இது ஒரு அதிசயம் தான்’

இடிபாடுகளுக்குள் துளையிட்டு மீட்புக்கான வழி உருவாக்கப்பட்ட உடனேயே, அந்த துளை வழியாக உள்ளே சென்று தொழிலாளர்களை அடைந்த முதல் நபர் தேசிய பேரிடர் மீட்பு படையின் வீரர் மன்மோகன் சிங்.

“நான் உள்ளே சென்றவுடன், தொழிலாளர்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சியை என்னால் பார்க்க முடிந்தது. ஏற்கனவே அவர்கள் விரைவில் மீட்கப்பட்டு விடுவார்கள் என்று நாங்கள் கொடுத்திருந்த உறுதி, அவர்களது மனநிலையை சீராக வைத்திருக்க உதவியது,” என்று தெரிவித்துள்ளார் அவர்.

உத்தரகாசி சுரங்க மீட்புப் பணியில் ஆலோசகராக இருந்து உதவி செய்த சர்வதேசச் சுரங்க நிபுணரான அர்னால்ட் டிக்ஸ், இந்த மீட்புப் பணியில் உதவி செய்ய முடிந்ததற்கு பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

“நானும் ஒரு தந்தை தான். வெளியே நின்று கொண்டிருக்கும் குழந்தைகளின் தந்தைகளான சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியே அனுப்ப உதவியதில் எனக்குப் பெருமை. இந்த 41 தொழிலாளர்களும் கிறிஸ்துமசுக்கு முன்பே வீட்டிற்குச் சென்று விடுவார்கள் என்று நான் முன்னால் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கும். இந்த முறை கிறிஸ்துமஸ் முன்னதாகவே வந்து விட்டது,” என்று கூறியுள்ளார் அவர்.

மீட்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், சுரங்கத்திற்கு வெளியே அமைந்துள்ள சிறு கோவிலில் அர்னால்ட் டிக்ஸ் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை அனைவரும் பார்த்தோம்.

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் பேசிய அவர், “நான் எனக்காக எதுவுமே வேண்டிக் கொள்ளவில்லை, உள்ளே சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்யும் பணியாளர்களுக்காகவே பிரார்த்தனை செய்தேன். யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை,” என்று கூறியுள்ளார்.

“நாங்கள் பொறுமையாக இருந்தோம் அதே சமயம் என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரிந்திருந்தது. ஒரு சிறந்த குழுவாக நாங்கள் பணியாற்றினோம். இந்தியா சிறந்த பொறியாளர்களை கொண்டிருக்கிறது. இது போன்ற முகாமில் பணியாற்றியதற்கு மகிழ்ச்சி,” என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

“இப்போது நான் கோயிலுக்கு சென்றாக வேண்டும், ஏனெனில் நன்றி சொல்ல வருவதாக நான் சத்தியம் செய்துள்ளேன். நீங்கள் பார்த்தீர்களா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால், நாங்கள் அதிசயத்தை பார்த்துள்ளோம்,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »