Press "Enter" to skip to content

மிக்ஜாம் புயல் மீட்பு பணியில் தமிழ்நாடு அரசு அலட்சியமாக செயல்பட்டதா? மக்களின் கோபம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
  • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் வங்கக் கடலில் உருவான புயலுக்கு மிக்ஜாம் என பெயரிடப்பட்டது.

மிக்ஜாம் புயல் கரையைக் கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி சென்னையில் 400 மி.மீ-க்கும் அதிகமாக மழை பெய்தது. இதனால் சென்னை நகரமே வெள்ளக் காடாக மாறியது.

இதில், குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை அதேபோல் நகரப் பகுதிகளாக வட சென்னை, சைதாப்பேட்டை, அரும்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளைச் சுற்றியும் 6 முதல் 8 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது.

தமிழ்நாடு அரசின் சார்பில் மழை வெள்ள மீட்பு நடவடிக்கை பணிகளுக்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக அரசு அறிவித்தது.

ஆனால், புயல், மழை ஓய்ந்து 4 நாட்களுக்குப் பிறகும் 6 அடியில் வெள்ள நீர் சூழந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மின்சாரம், பால்,குடிநீர், உணவு, இயற்கை உபாதைகளைக் கழிக்க நீர் இன்றி அரசின் உதவி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளுக்குப் போதிய மீட்புக் குழுவினர் வரவில்லை என மக்கள் அரசின் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழக அரசு மிக்ஜாம் புயலை அலட்சியமாகக் கையாண்டதே மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்க காரணமா?

அரசின் அறிவிப்புகள் களத்தில் பிரதிபலிக்காதது ஏன்?

தொடர்ந்து பாதிக்கப்படும் சென்னை

ஒவ்வொரு பெருமழையின் போது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு முன் அறிவிப்பு இன்றி செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டது. இதனால், சென்னை பெரும் வெள்ளத்தைச் சந்தித்தது.

இந்த ஆண்டு வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும், அது சென்னை வழியாக ஆந்திராவில் கரையைக் கடக்கும் என ஒரு வாரத்திற்கு முன்பே வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மிக்ஜாம் புயல் டிசம்பர் 4-ஆம் தேதி சென்னை வழியாக கரையைக் கடக்கும் சமயம் அதி அடைமழை (கனமழை) பெய்யும், காற்றின் வேகம் மணிக்கு 55 கி.மீ இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு அரசின் புயல் அறிவிப்பு

புயலுக்காக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுக்கப்பட்ட பின் புயலால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க 23,000-க்கும் அதிகமான பணியாளர்கள், 900 மின் மோட்டர்கள், 250 படகுகள் தயார் நிலையில் இருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து புயலுக்கு முன்பு குறுஞ்செய்தி வாயிலாக அனைவரின் சென்போனுக்கும் புயலால் பாதிப்பு உள்ளது, எனவே வீட்டை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என அதில் தெரிவித்தது.

மக்களுக்கு அரசு கொடுத்த நம்பிக்கை

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 4,000 கோடி ரூபாய் செலவு செய்து சென்னை பெருநகர் முழுவதும் மழை நீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டு இருப்பதால் 20 செ.மீ மழை பெய்தாலும் மழைநீர் தேங்காது என அமைச்சர்கள் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இது மக்கள் மத்தியில் மழையால் பாதிப்பு ஏற்படாது என்ற நம்பிக்கையை உண்டாக்கியது.

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

மழையில் சிக்கிய மக்களுக்கு அரசு உதவி கிடைத்ததா?

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி புயல் சென்னை வழியாகக் கரையை கடந்த போது 24 மணி நேரத்தில் 40 செ.மீ மழை பதிவானது. இதில் சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவானது. இந்த புயல், மழையால் சென்னை நகரமே வெள்ளக் காடாக மாறிப் போனது. வேளச்சேரி, முடிச்சூர், ஈஞ்சம்பாக்கம், பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம் போன்ற சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு ஆள் அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியது.

அரசு மீட்புப் பணிகளுக்குத் தேவையான குழுவினர் தயாராக இருப்பதாக கொடுத்த அறிவிப்பால் மீட்புக் குழுவினர் மீட்க வருவார்கள் என மக்கள் காத்திருந்தனர்.

ஆனால், வேளச்சேரி, முடிச்சூர், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் 2 நாட்களை கடந்து மீட்பு குழுவை சேர்ந்த யாரும் வரவில்லை. இதனால் மக்கள் தண்ணீர், பால், உணவு இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அவசர உதவி எண்கள் செயல்பட்டதா?

மதுரையைச் சேர்ந்த சிவா திரைத்துறையில் உதவி இயக்குனராக உள்ளார். அவர் புயலில் வெள்ளத்தில் சிக்கி தப்பியது குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.

“எனது நண்பரைச் சந்திக்க ஈஞ்சம்பாக்கம் பகுதிக்குச் சென்ற போது மிக்ஜாம் புயலில் சிக்கினேன். ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பெய்த அடைமழை (கனமழை)யால் 8 அடி உயரத்திற்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்ததால் எங்களால் வெளியே செல்ல இயலவில்லை. அரசு தரப்பில் மீட்புக் குழுவினர் வந்து உதவுவார்கள் என காத்திருந்தோம். ஆனால், யாருமே எங்களை மீட்க வரவில்லை,” என்றார்.

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் செல்போனில் சிக்னல் இல்லை, எங்களால் அவசர உதவி எண்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.

4 நாட்கள் காத்திருந்தும் உணவு,நீர்,பால் போன்ற அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை.

இதனால் பிழைத்தால் போதும் என நானும் எனது இரண்டு நண்பர்களும் மார்பளவு வெள்ள நீரில் உடைமைகளை தலையில் சுமந்தபடி அச்சத்துடனே வெள்ள நீரை கடந்து பேருந்து பிடித்து மதுரையை வந்து சேர்ந்தோம்

எனது இருசக்கர வாகனம் வெள்ள நீரில் மூழ்கி உள்ளது, தற்போதும் அந்த பகுதியில் தொலைத்தொடர்பு வசதி, மின்சாரம் இல்லை, வெள்ள நீர் முழுவதும் வடிந்த பிறகே வாகனத்தின் நிலைமையை தெரியும்,” என குறிப்பிட்டார் .

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

‘வெள்ள நீரை காய்ச்சி குழந்தைக்குக் கொடுத்தேன்’

வேளச்சேரி பகுதியில் பிபிசி செய்தியாளர்கள் கள ஆய்வு செய்த போது மக்கள் தண்ணீர், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்தது தெரியவந்தது.

அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர், “கடந்த 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கித் தவித்தோம். எங்களை மீட்க அரசு தரப்பில் யாரும் வரவில்லை. எங்களது குடியிருப்பைச் சேர்ந்த நபரே மார்பளவு நீரில் இறங்கி வெளியே சென்று எங்களுக்குக் குடிக்க நீர் கொண்டு வந்தார்.

ஆனால், அரசு சார்பில் யாரும் இப்போது வரை வரவில்லை. ஒரு கட்டத்தில் குடிநீர் இல்லாததால் வெள்ள நீரை எடுத்து சூடு செய்து குடித்து குழந்தைக்கும் கொடுத்தோம்.

நாங்கள் 3 நாட்களாக உடல் உபாதைகளை கூட கழிக்க முடியவில்லை இங்கே பாதுகாப்பு இல்லாதால் மயிலாப்பூரில் இருக்கும் உறவினர் வீட்டிக்கு செல்கிறேன்”, எனக் கூறினார்.

அதேபோல் மற்றொரு பெண், “42 கோடி செலவு செய்து ‘வாய்ப்பாடு ஒன்’ தேர் பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யும் அரசு வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்க ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லை?”எனக் கேட்டார்.

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம், Jayaraman

‘வெள்ள மீட்புப் பணியில் அரசு இயந்திரம் தோல்வியடைந்தது’

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்கும் திட்டமிடலில் அரசு நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது, என்கிறார் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன்.

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களை மீட்க, அத்தியாவசிய உதவி செய்ய அரசு தரப்பில் ஆட்கள் யாருமே செல்லவில்லை,” என்றார் அவர்.

மேலும், தொடர்ந்து, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகளில் குடியிருப்புகள், சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றது என்றார்.

ஆலோசகர் இல்லாமல் 40% வடிகால் பணி நிறைவா?

புயல் நீர் மேலாண்மை ஆலோசகர் இல்லாமலேயே சென்னை பெருநகர் வடிகால் பணிகள் 40% நிறைவடைந்து இருக்கின்றன என்று கூறுகிறார் ஜெயராமன்.

“அப்படியென்றால் பணிகளை ஒப்பந்ததாரர் எந்த அளவுக்கு உறுதியாக செய்து இருப்பாரா என பார்க்க வேண்டி இருக்கிறது. அதேபோல், மேலாண்மை ஆலோசகரைச் சேர்ந்த 20 நாட்களில் 80% பணிகள் முடிவடைந்ததாக கூறினார்.

20 நாட்களில் 40% பணிகளில் நிறைவடைந்தால் அதன் பணிகள் எந்த அளவு பணியை செய்து இருப்பார்கள்?”என்றும் கேள்வி எழுப்புகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 2015-ஆம் ஆண்டு மழை வெள்ளம் தேங்கிய அதே பகுதிகளில் இந்த ஆண்டும் மழை நீர் தேங்கி இருக்கிறது. நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே பாதிப்பைத் தவிர்க்க முடியும்,” என்றார்.

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம், Ponnaiyyan

‘மீட்புப் பணிகளில் களப்பணியாளர்கள் ஒத்துழைக்கவில்லை’

மீட்பு பணியில் களப்பணியாளர்கள் ஒத்துழைப்பு அளிக்காததே மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்க காரணம் என்கிறார் முன்னாள் அமைச்சர் பொன்னையன்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் “பெரும் மழைக்காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டுக் கடலில் சேரும். ஆனால், இந்த முறை காலதாமதமாக அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம் போன்ற சென்னையின் மத்தியில் செல்லக் கூடியக் கூவம் நதியின் கிளை ஆறுகள் வழியாக ஏரியிலிருந்து நீர் திறந்து விடப்பட்டதே நகருக்குள் நீர் புகுந்து வெள்ளம் சூழக் காரணம் அமைந்தது,” என்றார்.

மேலும், “அண்ணா நகர் பகுதியில் கடந்த மூன்று தினமாக வெள்ள நீர் வடியாததால் மின்சாரம் இன்றி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்,” என்றார் அவர்.

மேலும் பேசிய அவர், அரசு சிறப்பாக செயல்படுவது போல தோற்றத்தை உருவாக்கி வருகிறது, ஆனால், கள எதார்த்தத்தில் மக்கள் அடிப்படையான பால், தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர், என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் குடிநீர் இல்லாமல் தாகத்தால் தவிக்கும் நிலையைக் காண முடிந்தது, என்றார்.

சென்னை வெள்ள பாதிப்பு அதிகம்: அண்ணாமலை

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளிடம் பேசும் பொழுது, சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு அரசு தோல்வி அடைந்து இருப்பதையே காண்பிக்கிறது, என்றார்.

“மூத்த அமைச்சர்கள் உட்பட அனைவரும் 98% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்ததாக கூறுகின்றனர். ஆனால், மழை நின்று மூன்று நாட்களைக் கடந்தும் புதிதாக பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இருப்பது மக்களை அவதிக்கு உள்ளாக்கி இருக்கிறது,” என்றார்.

மேலும், “சென்னை முன்பை விட அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, வரும் காலங்களில் இந்த பாதிப்பை குறைக்க அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்,” என கூறினார்.

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம், Radhakrishnan

‘பணிகள் நடைபெற்று வருகின்றன’

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பெருநகர் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீர் அமைப்பு பணிகள் முடிந்து 90% இடங்களுக்கு மின்சார வழங்கப்பட்டு இருக்கிறது என்றார்.

தற்போது, வேளச்சேரி,மணலி, வியாசர்பாடி, புளியந்தோப்பு, பூண்டி, பள்ளிக்கரணை போன்றப் பகுதிகளில் குடிநீர்,பால், உணவு பொருட்கள் வழங்குவது, வெள்ளநீரை வெளியேற்றுதல், தண்ணீர் சூழ்ந்த பகுதியில் சிக்கிய மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“சென்னையில் மொத்தமாக 750 தாழ்வான பகுதிகள் மழைநீர் தேங்கி இருந்தது அதில் 350க்கும் மேற்பட்டப் பகுதியில் இருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டு உள்ளது,” என்றார்.

மேலும், “தற்போது 369 இடங்களில் தேங்கி இருக்கும் வெள்ள நீரை அகற்றும் பணிகளை களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்,” என கூறினார்.

வெள்ள மீட்புப் பணியில் ஆட்கள் பற்றாக்குறையா?

வெள்ள மீட்புப் பணிக்காக 23,000 களப் பணியாளர்கள் அதிகாரிகளின் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர், வார்டுக்கு 20 பேர் வீதம் மாநகராட்சி பகுதிகளில் பணியை மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.

“தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வெள்ள மீட்பு பணிகளுக்காகக் கூடுதலாக 2,370 களப் பணியாளர்கள் அழைக்கப்பட்டு சீரணைப்பு பணிகளைச் செய்து வருகின்றனர்,” என்றார்.

குறிப்பாக வெள்ள நீர் சூழந்த பகுதியில் நீரை வெளியேற்ற 1000 க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் வைக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது”, என்றார்.

மிக்ஜாம் புயல், சென்னை வெள்ளம்

பட மூலாதாரம், Radhakrishnan

பேரிடர்களை ஒப்பிடலாமா?

மேலும், பேரிடர்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுவது தவறான அணுகுமுறையாக அமைந்து விடும், என்றார்.

“கடந்த 2015-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சென்னை பெரு வெள்ளத்தில் 190க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த புயலால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழப்புகளை அரசு தவிர்த்து இருக்கிறது. மக்கள் அச்சத்தால் சிலர் அதிகாரிகள் வரவில்லை என கூறி வருகின்றனர். மக்களின் குறைகளைக் கேட்டு அந்தப் பகுதிகளுக்கு அதிகாரிகளை அனுப்பி மீட்புப் பணியை களத்தில் நின்று நானே நேரடியாக சீர் செய்து வருகிறேன்,” என்றார்.

“தற்பொழுது வரை 3,800-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு அவர்களின் பலர் மீண்டும் தண்ணீர் வடிந்ததால் வீட்டுக்குத் திரும்பி இருக்கின்றனர்,” எனத் தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »