Press "Enter" to skip to content

தமிழ்நாடு தனி வானிலை ஆய்வு மையம் அமைக்க வேண்டுமென வலுக்கும் கோரிக்கையின் பின்னணி

பட மூலாதாரம், Getty Images

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பில் துல்லியம் குறைவா? உண்மையில் புதிய மாடலுக்கான தேவை உள்ளதா?

இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் வானிலை முன்கணிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய வானிலை ஆய்வு மையம்தான் அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறது.

சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா, நாக்பூர், குவஹாத்தி ஆகிய ஆறு மண்டல வானிலை ஆய்வு மையங்கள் வாயிலாக முன் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையம், அமெரிக்கா உருவாக்கிய உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பு (Global Forecast System, GFS) என்ற மாடலை பின்பற்றி வானிலை அறிக்கை வெளியிட்டு வருகிறது.

இப்படியான நிலையில், கடந்த ஒரு வாரமாக சென்னையை வெள்ளக் காடாக்கிய மிக்ஜாம் புயலின் தாக்கம் குறித்தும், சென்னை வானிலை ஆய்வு மையம் தனது கணிப்பை அறிக்கையாக வெளியிட்டது.

ஆனால், ஆய்வு மையம் கணித்ததைவிட, மிக்ஜாம் புயலின் வேகம், நிலைகொண்ட நேரம் மற்றும் மழை அளவில் பெரும் மாறுபாடு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள். 2015 புயலில் சென்னை கடும் பாதிப்பைச் சந்தித்தபோதும் இதே வாதம் முன்வைக்கப்பட்டன.

சென்னை மற்றும் தமிழகத்துக்கான, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளில் துல்லியம் குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் வானிலை சார்ந்து இயங்கும் வல்லுநர்கள்.

கணிப்பின் துல்லியத்தன்மையை அதிகரிக்க தமிழகத்துக்கு தனி மாடல் உருவாக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

துல்லியத்தன்மை குறைவா?

சென்னை மழை அளவை துல்லியமாக கணிக்க முடியுமா

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழிடம் பேசிய சென்னை பொன்னேரி எல்.என் அரசுக் கல்லூரி இயற்பியல் துறையின் தலைவரும் இணைப் பேராசிரியருமான சாமுவேல் செல்வராஜ், ‘‘இந்தியா வெப்ப மண்டல (tropical region) நாடாக உள்ளதால் உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பு மாதிரியைப் பயன்படுத்தி எடுக்கப்படும் வானிலை கணிப்புகளில் துல்லியத்தன்மை வெகுவாகக் குறைகிறது,” என்று கூறினார்.

மேலும், மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் இங்கு கணிப்புகளை உருவாக்குவதே சவாலான ஒன்றாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“சென்னையைத் தாக்கிய மிக்ஜாம் புயல் மோசமானதற்கு, எல் நினோ, இந்தியப் பெருங்கடலில் நிகழும் இருதுருவ செயல்முறை (Indian Ocean Dipole), மேடன்-ஜூலியன் அலைவு (Madden-Julian Oscillation) மற்றும் பருவநிலை ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம்.

ஆனால், இதுபோன்ற மாற்றங்கள், புயலின் பாதை மற்றும் வேகத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் போன்றவை குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் முறையான மற்றும் முழுமையான படிப்புகளை மேற்கொள்வது இல்லை,” என்றும் சாமுவேல் செல்வராஜ் கூறினார்.

சொல்லப்போனால், “இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்குப் பருவமழை தொடர்பான தகவல்கள் உள்ளதே தவிர, வடகிழக்கு தொடர்பான ஆராய்ச்சிகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுவதே இல்லை,’’ என்கிறார் அவர்.

சென்னை மழை அளவை துல்லியமாக கணிக்க முடியுமா

பட மூலாதாரம், Getty Images

தனி மாடல் சாத்தியமா?

தமிழகத்துக்கான தனி வானிலை மாடல் ஒன்றை உருவாக்குவதும், அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதும் சாத்தியம் என்கிறார் இணைப் பேராசிரியர் சாமுவேல் செல்வராஜ்.

‘‘உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பின் (GFS) தரவுகளைப் பயன்படுத்தி டவுன்ஸ்கேலிங் என்ற முறையில் நமக்கு ஏற்றவாறு ஒரு தனி மாடலை உருவாக்க முடியும். தற்போது, வானிலை ஆய்வு மையம் சென்னை, செங்கல்பட்டு போன்ற மாவட்டம் அல்லது மண்டலம் வாரியாகத்தான் வானிலை முன் அறிவிப்பை வெளியிடுகிறது.

டவுன்ஸ்கேலிங் செய்தால், நாம் சென்னையை நான்காகப் பிரித்து பகுதிவாரியாகக்கூட எவ்வளவு மழை பொழியும், புயலின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பது போன்ற தகவல்களைக் கணிக்க முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மற்ற முறைகளைவிட இதில் துல்லியத்தன்மை அதிகமாக இருக்கும் என்கிறார் சாமுவேல் செல்வராஜ். “நான் பல ஆண்டுகளாக டவுன்ஸ்கேலிங் முறையைப் பின்பற்றி பல ஆய்வுகளைச் செய்துள்ளேன், ஆய்வு அறிக்கைகளையும் தயாரித்துள்ளேன். இதன்மூலம், மக்கள் பாதிப்பதற்கு முன்பே அரசு மிக விரைவில் திட்டமிட முடியும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தெரிவித்த இணை பேராசிரியர் சாமுவேல் செல்வராஜ், “தமிழ்நாட்டிற்கு என பிரத்யேக வானிலை ஆய்வு மையத்தை உருவாக்கி, தனி வானிலை மாடல் ஒன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். வல்லுநர்களை ஒருங்கிணைத்து தமிழக அரசு முயன்றால் இது சாத்தியமாகும். மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதைத் தடுக்க முடியும்,’’ என்றும் நம்பிக்கையுடன் கூறினார்.

டவுன்ஸ்கேலிங் முறையால் என்ன நன்மை?

தமிழ்நாடு வானிலை மாடல்

பிபிசி தமிழிடம் பேசிய ‘தமிழ்நாடு Weatherman’ என அழைக்கப்படும் பிரதீப் ஜான், ‘‘பிபிசி தமிழிடம் பேசிய சுயாதீன வானிலை முன்னறிவிப்பாளராக செயல்படும் பிரதீப் ஜான், “தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதி என்பதால், மீசோ ஸ்கேல் முறையை (Meso Scale Phenomena) பயன்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளன.

ஆனால், டவுன் ஸ்கேலிங் முறையை வைத்து நமக்கான தனி மாடலாக உருவாக்க முடியும்,” என்று கூறுகிறார்.

இதுவரை நாம் பின்பற்றும் மாடல்களைவிட அதிக துல்லியத்தன்மையுடன் கணிப்புகளை மேற்கொள்ள முடியும். தமிழகத்தில் சிலர் டவுன் ஸ்கேலிங் முறையை வெற்றிகரமாகச் செய்து வருகின்றனர் என்றும் பிரதீப் ஜான் கூறினார்.

தற்போது, “12 – 22 சதுர கி.மீ அளவில்தான் வானிலை குறித்த கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. டவுன் ஸ்கேலிங் முறையில் 12 சதுர கிலோ மீட்டருக்கும் குறைவான அளவிலேயே நம்மால் மழை, புயல் தாக்கம் குறித்து அறிய முடியும். சென்னையை சிறு சிறு மண்டலங்களாகப் பிரித்துக்கூட நம்மால் கணிப்பைக் கூற முடியும்.

ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, தமிழக அரசு தனி வானிலை ஆய்வு மையத்தை நிறுவினால், மழை, புயல் குறித்த கணிப்புகளை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியும். அதன் மூலம் பாதிப்புகளைக் குறைக்க முடியும்,’’ என்கிறார் அவர்.

தமிழ்நாடு வானிலை மாடல்

பட மூலாதாரம், RMC Chennai

‘அரசு கைவிட்ட திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்’

குறுகிய நிலப்பரப்பில் நிலவும் மாற்றங்களைக் கண்டறிந்து வானிலை முன்னறிவிப்பை உருவாக்கப் பயன்படும் மீசோ ஸ்கேலிங், டவுன்ஸ்கேலிங் மாதிரிகளைப் பயன்படுத்தி தமிழ்நாட்டிற்கு என பிரத்யேக வானிலை மாடலை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்படுகிறது என்கிறார் பூவலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன்.

“தமிழ்நாடு அரசு 2022 வரவு செலவுத் திட்டத்தில், பேரிடர் தாக்கும் முன் உரிய நேரத்தில் எச்சரிக்கையை வழங்குவதற்கு, புதிய தொழில்நுட்பங்கள் கொண்ட ஒரு வானிலை ஆய்வு மைய கட்டமைப்பை உருவாக்க 10 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவித்தது. ஆனால், இன்று வரை அது செயல்பாட்டிற்கே வரவில்லை,’’ என்கிறார் அவர்.

கைவிடப்பட்ட இந்தத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் எனக் கூறிய சுந்தர்ராஜன், “தமிழ்நாட்டிற்கென தனி வானிலை ஆய்வு மையத்தை உடனடியாக நிறுவி வானிலை ஆய்வாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், இது ஒரு சில நாட்களில் செய்து முடிக்கும் விஷயம் அல்ல. “தற்போது தொடங்கினால் 5 முதல் 10 ஆண்டுகளில் ஓரளவுக்குத் துல்லியமான வானிலை கணிப்பை மேற்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி, அதற்கேற்ப கட்டமைப்புகளை மேம்படுத்தி வெள்ளம் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இனியாவது அரசு விழித்துக்கொண்டு இதைச் செய்ய வேண்டும்,” என்றும் சுந்தர்ராஜன் கூறினார்.

‘கூட்டு முயற்சி இருந்தால்தான் பலன் தரும்’

பிபிசி தமிழிடம் பேசிய ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ (COMK) அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், ‘‘புதிய மாடலை உருவாக்குவதுடன் நிறுத்தாமல், பேரிடர்க் காலங்களில் உருவாக்கப்படும் வார் ரூமில் அந்தத் தகவல்களை வைத்து வெள்ள முன்னறிவிப்பைத் தயாரிக்க வேண்டும்,” என்கிறார்.

எந்தப் பகுதியில் எவ்வளவு மழை பெய்தால் எந்த அளவுக்கு வெள்ளம் வெளியேறும், மழைநீர் செல்லும் பாதைகள் என்ன அந்தப் பாதைகளில் உள்ள தடைகள் என்ன? அதைச் சரி செய்வது எப்படி?

“இவற்றை உடனடியாகக் கணிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மழைநீர் வழிந்தோடும் பகுதிகளில் சென்சார்களை பொறுத்தி நிகழ்நேர அவதானிப்புகளைச் (Real Time Observation) செய்து பார்க்க வேண்டும்.

இப்படிச் செய்தால் மட்டுமே, புதிய மாடலின் கணிப்பைப் பயனுள்ளதாக மாற்ற முடியும். புதிய மாடலை உருவாக்க முயலும்போது கூடவே இவற்றையும் மேற்கொள்ள அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செயல்பட வைக்க வேண்டும்,’’ என்றார் ஸ்ரீகாந்த்.

தமிழ்நாடு வானிலை மாடல்

பட மூலாதாரம், RMC Chennai

இந்திய வானிலை மையம் என்ன சொல்கிறது?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துல்லியம் குறைவா, புதிய மாடல் உருவாக்குவது பயன்தருமா என்ற கேள்விகளை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பாலசந்திரனிடம் முன்வைத்தோம்.

அதற்கு விளக்கமளித்த பாலசந்திரன், ‘‘இத்தனை ஆண்டுகளாக உலகளாவிய முன்னறிவிப்பு அமைப்பின் (GFS) தரவுகளை மேம்படுத்தி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால்தான் நாம் தற்போது இந்த அளவுக்காவது கணிப்புகளை வெளியிட முடிகிறது.

சிலர் இந்த முன்னறிவிப்பு அமைப்பு சரியில்லை, ஐரோப்பிய மாடல் நன்றாக இருக்கும் என்பது போன்றெல்லாம் கூறுகின்றனர். உண்மையில் மிகத் துல்லியமாக எந்த மாடலை கொண்டும் கூறிவிட முடியாது. எந்த மாடலாக இருந்தாலும் அதில் சில நேரங்களில் அறிவியல்ரீதியான தோல்விகள் (Scientific Failure) நடக்கும்,’’ என்கிறார் பாலசந்திரன்.

மேலும் தொடர்ந்த அவர், ‘‘மீசோ ஸ்கேல் முறை மற்றும் டவுன்ஸ்கேலிங் முறையிலான மாடல்களை பின்பற்றி இதுவரை செய்த முயற்சிகள் பெரிய அளவில் பயன் தரவில்லை. புதிது புதிதாக மாடல்களை உருவாக்கி நம்மால் துல்லியத்தன்மையை அதிகரிக்க முடியாது. ஒரு மாடலை மேம்படுத்த பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஓரிடத்தில் ஏரி இருந்திருக்கும், தற்போது அது கட்டடங்களாக மாறியிருக்கும். இதுபோன்ற ஒவ்வொரு விஷயமும் அந்த மாடலின் துல்லியத்தைப் பாதிக்கும்.

இருக்கின்ற வானிலை மாடலை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதை இன்னும் மேம்படுத்தினாலே போதும் துல்லியத்தன்மை அதிகரிக்கும்,’’ என்றார் பாலசந்திரன்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »