Press "Enter" to skip to content

சென்னை எண்ணூரில் எங்கு பார்த்தாலும் எண்ணெய் படலம் – எங்கிருந்து கசிந்தது? பிபிசி கள ஆய்வு

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெரும் மழையினால் நகரின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்கு உள்ளாயின என்றால், எண்ணூர் பகுதி மக்கள் சந்தித்த பிரச்னை விபரீதமானதாக இருந்தது.

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நிறைய இடங்களில் மழை நீர் தேங்கியது மட்டுமில்லாமல் பலரின் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் தங்களது உடமைகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய எண்ணெய் கலந்தது மிகப் பெரிய மாசுபாட்டு பிரச்னையை உருவாக்கியிருக்கிறது. இந்த எண்ணெய் கலந்த நீர் மழை நீருடன் கலந்து வீடுகளுக்குள்ளும் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்

சென்னை எண்ணூரில் எங்கு பார்த்தாலும் எண்ணெய் படலம்

கடுமையாக மழை பெய்த திங்கள் கிழமையன்று, மழை நீர் வீடுகளுக்குள் வந்தது. அடுத்த நாளில் இருந்து எண்ணெய் கலந்த தண்ணீர் வீடுகளுக்குள் புக ஆரம்பித்தது. எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி, பங்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர் பகுதிகளில் உள்ள வீடுகள் அனைத்திலும் இந்த எண்ணெ மிதக்கும் தண்ணீர் உள்ளே புகுந்தது.

இது தவிர, தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளிலும் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.

சென்னையின் பிற பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததால், ஆரம்பத்தில் இதை எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதென்றே அந்தப் பகுதி மக்களுக்குத் தெரியவில்லை.

“முதல்ல சாதாரணமான மழை நீர்தான் வீட்டிற்குள் வந்தது. பிறகு தண்ணீர் எண்ணையோடு கலந்து வீட்டிற்குள் வர ஆரம்பித்தது. இந்த எண்ணெய் கலந்த தண்ணீரில் மூழ்கி பொருட்கள் எல்லாம் நாசமாகிவிட்டன. பாதி வீடு வரை எண்ணெய் தேங்கிவிட்டது. நாங்கள் கூலி வேலை செய்கிறோம். இதை எப்படி தாங்க முடியும்” என்கிறார் எர்ணாவூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குப்புராணி.

இது தவிர, தாழங்குப்பம், காட்டுக்குப்பம், நெட்டுக்குப்பம் பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளிலும் எண்ணெய் மிதக்க ஆரம்பித்தது.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்

“தாங்க முடியாத அளவிற்கு வீசும் டீசல் வாசம்”

எர்ணாவூரில் இருக்கும் ஆதி திராவிடர் காலனிக்குள் நுழையவே முடியாத அளவுக்கு எண்ணையும் தண்ணீரும் கலந்த சேறு கிடக்கிறது. அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் அனைத்திலும் எண்ணெயும் தண்ணீரும் புகுந்த நாசம் செய்திருக்கிறது.

“எண்ணெய் கலந்து வந்ததால் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்ஜ், வாஷிங் மிஷின், குழந்தைகளின் பள்ளிக்கூட புத்தகங்கள் என எல்லாமே போய்விட்டன. நான் ஆட்டோ ஓட்டுகிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மீண்டும் ஒரு முறை இதுபோல பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் எர்ணாவூரின் ஆதி திராவிடர் காலனி பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான கோபி.

துணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எல்லாவற்றின் மீதும் எண்ணெய் படிந்திருப்பதால், அவை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுவிட்டன.

“வீட்டிற்குள் எண்ணெய் புகுந்ததால் உள்ளே கால் கூட வைக்க முடியவில்லை. எந்தப் பொருளையும் இனிமேல் பயன்படுத்த முடியாது. எண்ணெயில்லாமல் தண்ணீர் மட்டும் வந்திருந்தால், துணிகளைக் பிழிந்து, காய வைத்து மீண்டும் பயன்படுத்தலாம். இப்போது அந்தத் துணிகளை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு புதிதாகத்தான் வாங்க வேண்டும். நாங்கள் தினமும் 300 -400 ரூபாய் சம்பாதித்து தினக்கூலியாக வாழ்கிறோம். எங்களிடம் அதற்கு பணம் ஏது” என்கிறார் அந்தப் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார்.

இப்படி வீடுகளுக்குள் எண்ணெயும் தண்ணீரும் புகுந்தது ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இந்த எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் வழியாக கொசஸ்தலை ஆற்றில் கலந்ததால், அதில் மீன்கள் செத்து மிதக்கத் துவங்கின. அந்த ஆறு கடலில் வந்து கலக்கும் முகத்துவாரப் பகுதியிலும் எண்ணெய் மிதந்துகொண்டிருக்கிறது. அதனால், அந்தப் பகுதி முழுக்கவே நிற்க முடியாத அளவுக்கு டீசல் நெடி வீசிக்கொண்டிருக்கிறது.

“மூச்சு விட முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. நெடியைத் தாங்க முடியாமல், குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதில்லை” என்கிறார் கொசஸ்தலை ஆறும் கடலும் சேரும் பகுதியில் வசிக்கும் சித்ரா.

எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய்

எண்ணெய் எங்கிருந்து கசிந்தது?

இது தொடர்பான செய்திகள் வெளியானதும், மிகத் தாமதமாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த விவகாரம் குறித்து ஆராய ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிக்கையில் “இந்த எண்ணெய் மணலி தொழிற்பேட்டை பகுதியிலிருந்து பக்கிங்காம் கால்வாயில் கலந்திருக்க வேண்டும். இந்த எண்ணெய் எங்கிருந்து வருகிறது என தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் குழு ஆராய்ந்தது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் தெற்கு வாயில் அருகே உள்ள மழை நீர் வெளியேறும் பகுதிக்கு அருகில் எண்ணெயுடன் தண்ணீர் கலந்து தேங்கியிருந்தது. இதிலிருந்து இந்த எண்ணெய் வந்திருக்கலாம். ஆனால், நாங்கள் ஆய்வு நடத்தியபோது அங்கிருந்து வந்த மழை நீரில் எண்ணெய் படலம் ஏதும் இல்லை.

வளாகத்திற்குள் தேங்கியிருந்த மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டபோது, தரையில் படிந்திருந்த எண்ணெயும் அந்த தண்ணீருடன் சேர்ந்து வெளியேறியிருக்கலாம். பிறகு மெதுமெதுவாக பங்கிங்கம் கால்வாயில் கலந்திருக்கலாம். இப்படி எண்ணெய் மிதப்பதை அகற்றும்படி சிபிசிஎல்லுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. மழை நீர் கால்வாயுடன் கலக்கும் இடத்தில் உறிஞ்சிகளை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், சிபிசிஎல்லுக்கு மேலே உள்ள கால்வாய் பகுதிகளிலும் எண்ணெய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், சி.பி.சி.எல். நிறுவனம் தங்கள் ஆலையிலிருந்து எண்ணெய் வெளியேறியதாகச் சொல்வதை ஏற்கவில்லை. அந்த நிறுவனம் X சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த விளக்கத்தில், “சி.பி.சி.எல். மணலி சுத்திகரிப்பு நிலையத்தின் எந்தக் குழாயிலும் கசிவு ஏதும் இல்லை. மிக்ஜாம் புயலின் காரணமாக ஏற்பட்ட இடைவிடாத மழையால், சுத்திகரிப்பு நிலையத்திற்குள் வரலாறு காணாத அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மணலியின் பிற தொழிற்சாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சி.பி.சி.எல். நிலைமையை புரிந்துகொண்டு தடையற்ற வகையில் ஆலையை இயக்கி, தமிழகத்துக்கு எரிபொருட்கள் வழங்குவதை உறுதி செய்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. இப்போது நீர் மட்டம் குறைந்திருக்கிறது. நாங்கள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு, வழக்குப் பதிவுசெய்தது. இந்த வழக்கில் சனிக்கிழமையன்று பதிலளித்த சி.பி.சி.எல்., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் வழக்கறிஞர், இது துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்றும் இந்த எண்ணெய் தங்களுடைய ஆலையிலிருந்து வெளியேறவில்லையென்றும் கூறியிருக்கிறார்.

சிமென்ட் ஆலைகள், சுத்திகரிப்பு ஆலைகள், அனல் மின் நிலையங்கள் என ஏற்கனவே மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் எண்ணூருக்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக வந்திருக்கிறது இந்த எண்ணெய்க் கசிவு.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »