Press "Enter" to skip to content

காங்கிஸை விமர்சிக்கும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள்: 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகின்றன?

பட மூலாதாரம், Getty Images

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி குறித்துப் பல கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன.

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் இணையாமல் இந்தத் தேர்தல்களில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்திருந்தது. மூன்று மாநிலங்களில் தோல்வியடைந்த பிறகு, ’இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளை காங்கிரஸ் புறக்கணிப்பதாக அக்கட்சிகள் குற்றம் சாட்டின.

கூட்டணிக் கட்சிகளின் கோபத்தையும் அவர்களின் தேவைகளையும் அறிந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயும் டிசம்பர் 6ஆம் தேதி அக்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், கூட்டணியின் உள்ள முக்கியத் தலைவர்கள் பலரும் பல்வேறு காரணங்களால் இந்தக் கூட்டத்திற்கு வர மறுத்துவிட்டனர். இதில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் அடங்குவர்.

கூட்டத்தில் பங்கேற்க கடுமையான மொழியைப் பயன்படுத்தி மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். தற்போது, ​​இந்தக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், டிசம்பர் 6ஆம் தேதி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் ‘இந்தியா’ கூட்டணியின் பெரும்பாலான கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் கூடியிருந்தனர். இதில், ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் வியூகம் மற்றும் எதிர்கால அரசியல் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கலந்து கொண்டார்.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், ANI

மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் கூறுகையில், “பாஜக அல்லது நரேந்திர மோதியை எதிர்த்து இணைந்து போட்டியிட வேண்டும் என்பதற்காகவே ’இந்தியா’ கூட்டணி உருவாக்கப்பட்டது. மாநில கட்சிகள் இணைந்து சுமார் 150 இடங்களைக் கைப்பற்றும் திறன் கொண்டவை” என்கிறார்.

“ஆனால், மீதமுள்ள 200 இடங்களில் பாஜகவைவிட காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மூன்று மாநிலங்களில் காங்கிரசின் செயல்பாட்டால் ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. இப்போது ஒன்றாக இணைந்து பாஜகவை எதிர்த்து நிற்க முடியுமா, இல்லையா என்று அக்கட்சிகள் யோசித்து வருகின்றன,” என்றார்.

மௌனம் கலைத்த நிதிஷ் குமார்

‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவும், கூட்டணிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என காங்கிரஸும் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் பல தலைவர்களும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களில் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் அடங்குவார். ’இந்தியா’ கூட்டணி குறித்து காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என கடந்த மாதம் நிதிஷ் குமார் குற்றம்சாட்டியிருந்தார்.

மேற்கு வங்கம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் மொத்தம் 82 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மேலும், இந்த மாநிலங்கள் ‘இந்தியா’ கூட்டணிக்கு மிகவும் முக்கியமானவை.

இருப்பினும், மம்தா பானர்ஜியின் அணுகுமுறை கடந்த புதன்கிழமை நிச்சயமாக கொஞ்சம் மென்மையாகிவிட்டது. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் விரைவில் நடைபெறும் என அவர் தெரிவித்தார். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்து, காங்கிரஸுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளார் நிதிஷ்குமார்.

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், RAHUL GANDHI ‘X’

புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “காய்ச்சல், சளி, இருமல் காரணமாக ஐந்து நாட்களாக அனைவரிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டேன். இப்போது நேரம் இல்லை. ஒன்றாக உட்கார்ந்து எல்லாவற்றையும் விரைவாக முடிவு செய்வோம் என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்,” எனத் தெரிவித்தார்.

நிதிஷ் குமார் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை இங்கே குறிப்பிடுகிறார்.

விரைவில் இடங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்கள் பலர், கூட்டணி தொடர்பாக தாராள அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு காங்கிரஸை கேட்டுக்கொண்டனர்.

மூத்த பத்திரிகையாளர் கன்ஹையா பெலாரி கூறுகையில், ‘‘நிதிஷ் குமாரை ’இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக விரைவில் நியமிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதெல்லாம் நடக்கிறது. வேறு எந்த நோக்கமும் இல்லை” எனத் தெரிவித்தார்.

“ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரஸுக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை. பாஜகவைவிட காங்கிரஸ் சுமார் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கூறுகின்றன,” என்றார் அவர்.

ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வரும் காலங்களில் ‘இந்தியா’ கூட்டணி வலுவடையும் என்று கூறினார்.

“பொதுமக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், இது பாஜகவுக்கு கவலையளிக்கும் விஷயம். நாட்டு மக்கள் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற விரும்புகிறார்கள். மத்திய பிரதேசத்தில் கூட்டணி இருந்திருந்தால், முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கும்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் கூறுகையில், ”எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடப்பதற்கான காரணம், டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகள்தான். இந்த முடிவுகளுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களின் உற்சாகம் குறைந்துள்ளது,” என்றார்.

பாட்னா, பெங்களூரு அல்லது மும்பையில் நடந்த கூட்டங்களின்போது கூட்டணிக் கட்சிகளிடையே காணப்பட்ட உற்சாகம், ஒத்துழைப்பு, நம்பிக்கை குறைந்துள்ளது என்கிறார் அவர்.

மத்திய பிரதேசத்தில் கூட்டணி அமைக்காததால் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டதாக அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விஷயத்தில் அகிலேஷ் கடுமையாக விமர்சிக்கவில்லை என்றாலும், தோல்விக்குப் பிறகு, ‘இந்தியா’ தலைவர்களின் பேச்சுகள் இக்கூட்டணியின் ஒற்றுமை மற்றும் அதன் எதிர்காலம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

வார்த்தைப் போர்

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், ANI

வரவுள்ள 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் நரேந்திர மோதி அரசை தோற்கடிக்க பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், ‘இந்தியா’ கூட்டணியில் அல்லாமல் பாஜகவுக்கு நேரடியாகவே சவால் விட்டது காங்கிரஸ். மக்களவை தேர்தலும் சட்டமன்ற தேர்தலும் வெவ்வேறானவை என காங்கிரஸ் கூறியது.

இதன் காரணமாக, பிகாரில் ‘இந்தியா’ கூட்டணிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு, முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைக்காக ஓராண்டுக்கு மேலாக முயன்று வருவதால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி தலைவர்களிடையே இதுகுறித்து கடும் பேச்சு எழுந்துள்ளது.

இந்த தோல்வி ‘இந்தியா’ கூட்டணியின் தோல்வி அல்ல, இது காங்கிரஸின் தோல்வி என, லாலு பிரசாத் யாதவின் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் தெரிவித்தது.

கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகளுக்கு சிறந்த ஒத்துழைப்பையும், சரியான இடத்தையும் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த அறிவுரையை வழங்கியதில் ஐக்கிய ஜனதா தள எம்.பி. லாலன் சிங், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மனோஜ் ஜா போன்ற பெரிய தலைவர்களும் அடங்குவர்.

இந்த விவகாரத்தில், பிகார் மாநிலம் நவாடாவின் ஹிசுவா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நீது குமாரி, காங்கிரசுக்கு பெரும் அடி கொடுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நீது குமாரி, 2024 மக்களவைத் தேர்தலை ‘பிகார் மாதிரி’யில் நிதிஷ் குமார் தலைமையில் நடத்த வேண்டும் என்றார்.

இருப்பினும், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பாஜகவை எதிர்க்கும் தலைவர்கள் பலரும் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.

இதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதும் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இதுபோன்ற தேர்தல் முடிவுகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தோல்வி பற்றி கருத்து வேறுபாடுகள்

இந்தியா கூட்டணி

பட மூலாதாரம், ANI

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளருமான கமல்நாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உங்களுக்கும் சூழல் என்னவென்று தெரியும். பாஜக வேட்பாளர்கள் பலரும் தங்கள் கிராமங்களில் 50 வாக்குகளைக்கூட பெறவில்லை. அப்படியிருக்கையில், இது எப்படி நடந்தது?” எனக் கேள்வி எழுப்பினார்.

மத்திய பிரதேசத்தில் ‘இந்தியா’ கூட்டணியை கமல்நாத் புறக்கணித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தேர்தலின்போது போபாலில் நடந்த ‘இந்தியா’ பேரணியை ரத்து செய்ததற்கும், சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்காததற்கும் கமல்நாத்தின் பங்கு இருப்பதாகக் கருதப்படுகிறது.

மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங்கும் தேர்தல் முடிவுகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“பட்டனை அழுத்தினோம், ஆனால் ஓட்டு எங்கே போனது என்று தெரியவில்லை. ஏன் கையில் விவிபாட் ஒப்புகை சீட்டு (யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் சீட்டு) கிடைக்கவில்லை? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ’சிப்’ பொருத்தப்பட்ட இயந்திரம் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அந்த இயந்திரம் ஹேக் செய்யப்பட வாய்ப்புண்டு,” என திக்விஜய் சிங் தெரிவித்தார்.

உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, வாக்களிப்பதில் காங்கிரஸ் தலைவர்கள் பலரின் சந்தேகங்களுக்கு ஒரு விதத்தில் ஆதரவு வழங்கியுள்ளார். தேர்தல் முடிவுகள் மர்மம் நிறைந்தவை என மாயாவதி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்பு மத்திய பிரதேசத்தில் கடும் போட்டி நிலவியதாக அவர் கூறுகிறார்.

மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் கூறும்போது, ​​”இந்தியா கூட்டணியின் கட்சிகள் பல்வேறு அரசியல், சமூக மற்றும் பொருளாதார சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகள். 2024இல் பாஜக மற்றும் நரேந்திர மோதியை ஒன்றாக எதிர்க்கும் ஒரே நோக்கத்துடன் அவை ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால், டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகளுக்குப் பிறகு அவர்களது நம்பிக்கை குலைந்துவிட்டது,” என்றார்.

2004ஆம் ஆண்டின் ‘இந்தியா ஒளிர்கிறது’

பாஜக

பட மூலாதாரம், PIB

ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி கூறுகையில், ”இந்த மாநிலங்களில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் ஏமாற்றமளிக்கவில்லை. எனவே, மக்களவைத் தேர்தலில் வித்தியாசமான சூழலை நாம் பார்ப்போம்,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “எங்கெல்லாம் மாநில கட்சிகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் சரியான கூட்டணி அமைந்தால், பாஜகவின் இடங்கள் குறையும். இரண்டு பெரிய கட்சிகள் இணைந்தால் பெரும்பான்மை கூடும் என்பது பிகாரில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. இங்கு ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் ஒன்றாக உள்ளன,” என்றார்.

ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகள், சட்டமன்ற தேர்தல் போல் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 2018ஆம் ஆண்டு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களை எடுத்துக்கொண்டால், மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

ஆனால், இந்த வெற்றிக்குப் பிறகும், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதிலும் அல்லது இந்த மூன்று மாநிலங்களிலும் இந்த வெற்றியால் காங்கிரஸுக்கு பலன் கிடைக்கவில்லை. 2019ஆம் ஆண்டில், மத்திய பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் 28 இடங்களில் பாஜக வென்றது.

அதேநேரம், சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 11 இடங்களில் 9 இடங்கள் பாஜகவுக்கு கிடைத்தன. ராஜஸ்தானின் 25 இடங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றது. அதில் பாஜக 24 இடங்களைப் பெற்றது.

கடந்த 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் தலைநகர் டெல்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. ஆனால், 2015 மற்றும் 2020இல் நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்தது.

மூத்த பத்திரிகையாளர் கன்ஹையா பெலாரி கூறுகையில், “2024இல் மத்தியில் ’ஹேட்ரிக்’ சாதனை படைக்கும் என்பதை வாக்காளர்கள் மனதில் பதிய வைக்க பாஜக விரும்புகிறது. தெலங்கானாவில் நரேந்திர மோதியும் நிறைய பரப்புரை செய்தார். ஆனால் அதன் விளைவு என்ன?” என்று அவர் கேட்கிறார்.

“முன்பு, கர்நாடகாவிலும் ஹனுமன் குறித்துப் பேசப்பட்டது. தற்போது காங்கிரஸ் மூன்று மாநிலங்களில் நிச்சயமாகத் தோல்வியடைந்துள்ளது. ஆனால், அது அகற்றப்படவில்லை,” என்கிறார்.

கடந்த 2003இல் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது. ஆனால், 2004 தேர்தலில், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தின் கீழ், பாஜக தோல்வியடைந்து, மத்தியில் இருந்து அதன் ஆட்சி அகற்றப்பட்டது,” என கன்ஹையா பெலாரி கூறுகிறார்.

உண்மையில், 2003இல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு, பாஜக மிகவும் உற்சாகமாக இருந்தது. ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தையும் அந்தக் காலக்கட்டத்தில் பாஜக வழங்கியது.

அப்போது, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை சுமார் 6 மாதங்களுக்கு முன்னதாக நடத்த முடிவு செய்தது. ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக மக்களவைத் தேர்தலில் பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »