Press "Enter" to skip to content

கல்விக்காக 40 கி.மீ பயணிக்கும் அனகாபுத்தூர் மாணவர்கள்: அரசின் மறுகுடியமர்வால் கொந்தளிக்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருவெள்ளம் சென்னையையே புரட்டி போட்டது. அது தந்த இழப்புகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

விடுமுறையில் இருக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களும் ஓரிரு தினங்களில் வழக்கம்போல் கல்வி நிலையங்களுக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால், மறுகுடியமர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு எப்போது இயல்பு நிலை திரும்பும் என்று அரசுக்கே தெரியாத நிலைதான் உள்ளது.

கடந்த நவம்பர் 4ஆம் தேதி சென்னை பல்லாவரம் அனகாபுத்தூர் டோபிகானா தெருவைச் சேர்ந்த 81 குடும்பங்கள் அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, புறநகர்ப் பகுதியான அன்னை அஞ்சுகம் நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கட்டடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

அந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்லவேண்டிய தூரம் மிக அதிகமாகியுள்ளதாகவும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களில் தொடங்கி கல்லூரி முதுகலை படிக்கும் மாணவர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

சிலர் பள்ளிகளுக்கே போகாமல் ஒரு கல்வியாண்டையே இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எதனால் இந்தத் திடீர் மறுகுடியமர்வு? இதனால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் என்ன மாதிரியான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள நேரடியாக களத்திற்குச் சென்றோம்.

அனகாபுத்தூர் மக்களின் 7 வருட போராட்டம்

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

அனகாபுத்தூர் பகுதியில் வீடுகளை இடிப்பதற்கான செயல்பாடு புதிதாகத் தொடங்கியது அல்ல. கடந்த 7 ஆண்டுகளாகவே இந்த மக்களை அப்புறப்படுத்த அரசு அதிகாரிகள் முயன்று வருவதாகக் கூறுகிறார் சாந்தி நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் மாரி.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மூழ்கடித்தது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட அடையாற்றின் கரையோரம் வாழும் மக்களை மறுகுடியமர்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

அனகாபுத்தூர் மக்களை 2016ஆம் ஆண்டு முதன்முதலில் இது ஆற்றுப்பகுதி என்று கூறி வெளியேற அரசு உத்தரவிட்டதாகக் கூறும் மாரி, இதை ஏற்றுக்கொள்ளாத மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தது மட்டுமின்றி நீதிமன்றத்தை நாடி மறுகுடியமர்வுக்கு தடை பெற்றதாகவும் தெரிவிக்கிறார்.

“பின்னர் மீண்டும் 2018ஆம் ஆண்டு இது ஓடையின் ஒரு பகுதி என்று அறிவிப்பு வழங்கப்பட்டு இந்த மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி நடைப்பெற்றது. மீண்டும் நீதிமன்றம் வரை வழக்கு சென்று மறுஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.

“தற்போது 2023ஆம் ஆண்டு இது நீர்வளத்துறைக்குச் சொந்தமான பகுதி என்றும், இதில் அரசு திட்டங்கள் வரப் போகிறது என்றும், இந்தப் பகுதி மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலகட்ட நோட்டீசுக்கு பிறகு நவம்பர் 4ஆம் தேதி இந்த வீடுகள் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் உதவியோடு இடிக்கப்பட்டன,” என்று கூறுகிறார் அவர்.

வெகுதூரத்தில் மறுகுடியமர்வு

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

தற்போது அனகாபுத்தூரில் அப்புறப்படுத்தப்பட்ட மக்கள் 20 கி.மீ (பொதுப் போக்குவரத்து வழித்தடத்தின் படி) தாண்டி, செங்கல்பட்டு பகுதியில் இருக்கும் அன்னை அஞ்சுகம் நகரில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

பொதுவாகவே மறுகுடியமர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தில் தொடங்கி அவர்களின் வாழ்க்கை முறை வரை மாற்றத்தை ஏற்படுத்தும் கடினமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால், இதில் பலரும் கவனிக்கத் தவறுகிற விஷயம் மறுகுடியமர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் கல்வி. இங்கு மட்டுமின்றி மறுகுடியமர்வு செய்யப்பட்ட பல பகுதி மாணவர்களின் நிலையும் இதுவே ஆகும்.

40 கி.மீ பயணிக்கும் மாணவர்கள்

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு மறுகுடியமர்வு செய்யும்போது மக்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை தினசரி போக்குவரத்துதான். அப்படி தற்போது அனகாபுத்தூரில் இருந்து மறுகுடியமர்வு செய்யப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் கல்விக்காக 40 கி.மீ வரை தினசரி பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக அனகாபுத்தூரில் உள்ள அரசுப் பள்ளிக்கு அஞ்சுகம் நகரில் இருந்து ஒரு மாணவர் பேருந்து வழியாகப் பயணிக்க வேண்டுமென்றால் வீட்டிலிருந்து பேருந்து ஏறி தாம்பரம் சென்று அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் அனகாபுத்தூருக்குச் செல்ல வேண்டும்.

இவ்வளவு தூரம் சென்று படிக்க வேண்டியுள்ளதால் நான் பள்ளிக்குப் போவதையே நிறுத்தி விட்டேன் என்று கூறுகிறார் குரோம்பேட்டை தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் பரணிதரன். இத்தோடு அடுத்த கல்வியாண்டில்தான் பள்ளிக்கு செல்வேன் என்றும் கூறுகிறார் அவர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

மேற்குறிப்பிட்ட 81 குடும்பங்களில் 10க்கும் மேற்பட்ட 8ஆம் வகுப்புக்குக் கீழ் படிக்கும் மாணவர்களும், 10க்கும் மேற்பட்ட 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும், மேலும் சில கல்லூரி மாணவர்களும் இருப்பதாகக் கூறுகிறார் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் அருண்குமார்.

பிபிசி கள ஆய்வின்படி, 8க்கும் குறைவான வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் நவம்பர் மாதம் முழுவதும் பள்ளிக்குச் செல்லவில்லை.

இதில் 2வது, 4வது, 6வது படிக்கும் மூன்று குழந்தைகளைக் கொண்டுள்ள சுரேஷின் குடும்பமும் ஒன்று. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிலரோ ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் வழியாகவும், சிலர் பொதுப் போக்குவரத்து மூலமாகவும் பள்ளிக்குச் செல்கின்றனர்.

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல இவ்வளவு தூரம் பயணிப்பதால் என்ன மாதிரியான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது எனக் கேட்டபோது, ‘காலை 8 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறி மாலை 8 மணிக்கே வீடு வந்து சேர்வதாக’ கூறுகிறார் அடையாறு இசைக்கல்லூரியில் முதுகலை பயின்று வரும் மாணவர் ஜீவா.

இதற்காக அஞ்சுகம் நகரில் இருந்து பேருந்து மூலம் தாம்பரம் சென்று அங்கிருந்து தொடர் வண்டிவழியாக கிண்டி சென்று அங்கிருந்து அடையாருக்கு மீண்டும் பேருந்தில் செல்வதாக அவர் கூறுகிறார். இதுவே அனகாபுத்தூர் என்றால் நேரடியாக கல்லூரிக்குச் செல்லும் பேருந்தில் சென்றுவந்தாக அவர் தெரிவித்தார்.

அதேநேரம் இந்த ஆண்டு அனகாபுத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் தனது மகள் தீபிகாவை மாதம் 2,500 பணம் செலுத்தி ஆட்டோவில் அனுப்பி வைப்பதாகத் தெரிவிக்கிறார் கூலி வேலை பார்க்கும் பாண்டியன்.

“எங்களுக்கு மாத வருமானமே 15,000 முதல் 20,000 ரூபாய் தான் கிடைக்கும். இதில் ஆட்டோவுக்கு தனியாகப் பணம் ஒதுக்கினால் நாங்கள் எப்படிப் பிழைப்பது?” என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் சரண்யா, காலை 7 மணிக்கு கல்லூரிக்காக வீட்டிலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கே வீடு திரும்புவதாகத் தெரிவிக்கிறார்.

இது மனரீதியாகத் தங்களை மிகவும் பாதிப்பதாகத் தெரிவிக்கும் அவர், “எங்க வீட்டில் யாருமே படிக்கவில்லை. நாங்கள்தான் முதன்முதலில் படிக்கப் போகிறோம். என்ன கஷ்டம் வந்தாலும் படிப்போம்,” என்றும் உறுதியாகக் கூறுகிறார்.

உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மாணவர்கள்

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

பட மூலாதாரம், VANESSA PETER

“முன்பெல்லாம் பேருந்து வசதி வீட்டிற்கு அருகில் இருந்தது. சரியான நேரத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பி படிப்பது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோம். இப்போதெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குப் போகவே தாமதமாகிறது. ஆசிரியர்களோ அதெல்லாம் உங்கள் பிரச்னை, சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வர வேண்டும்,” என்று கூறுவதாகத் தெரிவிக்கிறார் சரண்யா.

மேலும், “பெண் குழந்தைகளுக்கு ஏற்கெனவே ரத்த சோகை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. இதில் இவ்வளவு தூரம் பயணம் செய்வது இன்னும் உடல்ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும்,” என்கிறார் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவிகளின் தாயார் அலமேலு.

இதுபோன்ற மறுகுடியமர்வுகள் மாணவர்களுக்கு மனரீதியாக நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கிறார் நகர்ப்புற எளிய மக்களுக்கான தகவல் மையம் (IRCDUC) அமைப்பைச் சேர்ந்த கொள்கை ஆய்வாளர் வெனசா பீட்டர்.

புதிய பள்ளிக்கு மாற்றமடைவது, இடமாற்றம், நீண்ட தூர பயணம், திடீர் அனுபவம், அதில் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தும் அந்தக் குழந்தைகளின் கவனத்தைச் சிதைத்து வாழ்நாள் அதிர்ச்சியாக (Trauma) மாறி விடுகிறது என்கிறார் அவர்.

‘கல்வி மட்டுமல்ல, கட்டமே பிரச்னைதான்’

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை க

மாவீரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேட்பது போல் “இந்த வீட்ல நீ தங்குவியா?” என்ற கேள்வியையே அன்னை அஞ்சுகம் நகர் மக்களும் தமிழ்நாடு அரசிடம் முன்வைக்கின்றனர்.

தொட்டாலே உதிரும் கட்டடம், அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம், நிரம்பி வழியும் கழிவுநீர் எனப் பல பிரச்னைகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர் அவர்கள். இதில் தற்போது வந்த பெருவெள்ளம் வேறு இந்தப் பகுதியைக் கடுமையோகப் பாதிப்படையச் செய்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் நகராட்சியைச் சேர்ந்த அன்னை அஞ்சுகம் நகரில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அன்னை அஞ்சுகம் நகர் திட்டப்பகுதி கட்டடங்களை கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதிதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார். ஆனால், அதற்குள் சின்ன அதிர்வுக்குக்கூட பெயர்த்து கொண்டு வருகின்றன இதன் சுவர்கள்.

இந்த கட்டடத்தில் இருந்து சரியாக 700 மீட்டரில் ஒரு பேருந்து நிறுத்தம் இருக்கிறது. ஆனாலும், அதில் தேவையான அளவுக்குப் பேருந்துகள் வருவதில்லை. பொதுவாகவே அங்கு ஒரு மணிநேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது என்கின்றனர் இந்த மக்கள்.

இதனால், அனகாபுத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் பணிபுரிந்து கொண்டிருந்த மக்கள் குறைந்தபட்சம் 3 மணிநேரம் பயணத்தில் மட்டுமே தங்களது அன்றாடத்தைக் கழிக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் அதே பேருந்து நிறுத்தத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையும் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

மாணவர்களின் கல்வி பாதுகாக்கப்படுமா?

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

நவம்பர் 4ஆம் தேதி இந்த மக்களை அப்புறப்படுத்தும் போதே அவர்களுக்கு உடனடியாக அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும், மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க நாங்களே ஏற்பாடு செய்வோம் என்று அதிகாரிகள் கூறியதாகத் தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், முதல்நாள் எங்களை அழைத்து வந்து விட்டதோடு சரி யாரும் பிறகு வந்து பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கெனவே ஒரு மாதம் முடிந்துவிட்ட நிலையில் தங்கள் குழந்தைகளின் ஓராண்டு கல்வியே வீணாய்ப் போகும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சொல்வது என்ன?

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகு மீனாளிடம் கேட்டபோது, முதற்கட்டமாக இங்கு வந்த மாணவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த பள்ளியிலேயே அட்மிசன் பெற்றுக் கொடுத்து விட்டோம். இரண்டாம் கட்டமாக வந்த குடும்பங்களில் 16 மாணவர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“பொதுவாகவே ஒரு குடும்பத்தை மறுகுடியமர்வு செய்யும்போது அவர்களின் ரேஷன் அட்டை உட்பட குடும்பத்தினர் விவரங்கள் வரை சேகரிக்கப்படும். இப்போது மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள அனகாபுத்தூர் குடும்பங்களில் 16 குழந்தைகள் உள்ளனர்.

அவர்களில் 14 பேர் அனகாபுத்தூர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இருவர் மட்டுமே வேறு பள்ளிகளில் படிக்கின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருவதால் அவர்கள் அங்கேயே படிக்கட்டும், பள்ளிக்குச் செல்வது சிரமமாக இல்லை என்று பெற்றோர்களே சொல்கின்றனர்,” என்கிறார் அழகு மீனாள்.

ஆனால், பிபிசி கள ஆய்வின்போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், பல கி.மீ. தாண்டி படிக்கச் செல்வது உடல் மற்றும் மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் “ஏற்கெனவே நாங்கள் மாவட்ட தலைமை கல்வி அதிகாரிக்கு கடிதம் தந்துவிட்டோம், அவர்களும் இந்த மாணவர்கள் அஞ்சுகம் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளில் அட்மிசன் பெறுவதற்கான அனுமதியை வழங்கிவிட்டார்.

தனியார் பள்ளிகளில் அட்மிசன் வேண்டுமென்றால்கூட சம்மந்தப்பட்ட பள்ளியிடம் பேசி அட்மிசன் வாங்கித் தர நாங்கள் தயார்,” என்று கூறுகிறார் மாநகராட்சி ஆணையர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நிலை?

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களாக இருந்தாலும் பள்ளிகள் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, “வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் பெற்றோர்கள் இங்கிருக்கும் பள்ளிக்குச் செல்வதற்கும், அங்கிருக்கும் பள்ளிக்குச் செல்வதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே உணர்கின்றனர்.

எனவே, பயணம் செய்து அங்கு போய் படித்துக் கொள்கிறோம் என்றே எங்களிடம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்கள் விருப்பப்பட்டால் பொதுத்தேர்வு எழுதும் குழந்தையைக்கூட அஞ்சுகம் நகர் பள்ளிகளுக்கு மாற்றி கொடுப்போம்,” என்று தெரிவிக்கிறார் அழகு மீனாள்.

ஆனால் கள நிலவரப்படி, பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் இந்த மாணவர்களில் சிலர் இந்த மறுகுடியமர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்கு வாரம் இரண்டு நாளாவது விடுப்பு எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாதது குறித்துக் கேள்வியெழுப்பிய போது, “அப்படி இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் அப்படி எதுவும் பட்டியல் இருந்தால் கொடுங்கள். எங்கள் வசம் இருக்கும் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்து விட்டு நேரடியாக நானே நடவடிக்கை எடுக்கிறேன்,” என்றார் தாம்பரம் மாநகராட்சி ஆணையர்.

பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?

இப்படி மறுகுடியமர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்து ஏதாவது தகவல்கள் அரசிடம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “ஆம் உள்ளது, அதை வைத்தே ஒவ்வொரு பகுதிகளிலும் மாணவர்களுக்கு உதவி வருகிறோம்,” என்று தெரிவிக்கிறார் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி.

மேலும் பேசிய அவர், “பிரதான பகுதியில் இருந்து மறுகுடியமர்வு செய்யப்பட்ட குழந்தைகள் பழைய பள்ளிகளில் இருந்து மாறுவதற்குத் தயாராக இல்லை. இருப்பினும் அவர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்கி விடுகிறோம்,” என்று கூறுகிறார்.

ஆசிரியர்கள் இந்தக் குழந்தைகளை அணுகும் விதம் குறித்துக் கேட்டபோது, “மாணவர்கள் நேரத்திற்கு வர வேண்டும். அதற்காக அவர்கள் விருப்பத்திற்குத் தாமதமாக வர முடியாது அல்லவா?

இதுபோன்ற சில இடங்களில் பிரச்னை உள்ளது. அதற்காகவே எங்களது இணை இயக்குநரை நோடல் அதிகாரியாக நியமித்து பயண தூரம் உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்து தீர்வு கண்டு வருகிறோம்,” என்று கூறுகிறார்.

முதல்வர் கூறியது ஒன்று, நடப்பது ஒன்றா?

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

பட மூலாதாரம், MK STALIN

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் சென்னை ஆர்.ஏ புரம் கோவிந்தசாமி நகர் மக்களை இதேபோல் அப்புறப்படுத்துவதை எதிர்த்து 58 வயதான கண்ணையன் என்பவர் உடலில் தீயிட்டு இறந்து போனார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “இனிமேல் வரும் மறுகுடியமர்வுகள் மக்களோடு கலந்தாலோசித்து அனைத்து முன் நடவடிக்கைகளையும் செய்து, பிறகு சுமூகமான முறையிலேயே நடைபெறும்,” என்று அறிவிப்பு வெளியிட்டார். மேலும், இதற்கு அனைவரது கருத்துகளையும் உள்ளடக்கிய கொள்கையும் வகுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அப்படி எந்தக் கொள்கையும் இதுவரை வகுக்கப்படவில்லை என்று கூறுகிறார் வெனசா.

கடந்த 2015 டிசம்பர் 15இல் தொடங்கி 2023 மார்ச் மாதம் வரை ஜாஃபர்கான் பேட்டை, அனகாபுத்தூர், கொளத்தூர் என நடைபெற்ற அனைத்து மறுகுடியமர்வுகளுமே கல்வியாண்டின் மத்திய பகுதி அல்லது தேர்வு நேரங்களில் நடைபெற்றுள்ளது.

இதில் 83 குடிசைப் பகுதிகளில் 19,000-க்கும் அதிகமான குடும்பங்களை மறுகுடியமர்வு செய்துள்ளனர். அதில் வெறும் 5 பகுதிகளில் மட்டுமே சமூக தாக்கங்கள் தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்.

‘அரசே விதிகளை மதிப்பதில்லை’

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

ஐ.நா.வின் வழிகாட்டுதல்படி வளர்ச்சி சார்ந்த மறுகுடியமர்வுகளை செய்வதற்கு முன்னால் என்ன செய்ய வேண்டும். பின்னால் என்ன செய்ய வேண்டும், மறுகுடியமர்வு நடக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.

அதன்படி, “ஐ.நா. 2007 வழிகாட்டுதலில் உள்ள பாரா 51இன் படி மறுகுடியமர்வை, மழை அல்லது குளிர் காலங்களில், இரவுகளில், திருவிழா மற்றும் மதரீதியான விடுமுறைகளில், தேர்தல் நேரங்களில், தேர்வுகளுக்கு முன்போ அல்லது தேர்வு நடக்கும்போதோ நடத்தக் கூடாது,” என்று விதிமுறைகள் உள்ளன.

ஆனால், இவை எதையும் பின்பற்றாமல் பொதுத்தேர்வு நடக்கும்போதே மறுகுடியமர்வு இங்கு நடத்தப்படுகிறது என்கிறார் வெனசா.

இடப்பெயர்வுக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

“ஐநா வழிகாட்டுதலின்படி, இடப்பெயர்வுக்குப் பின்னால் பின்பற்ற வேண்டிய முக்கிய அம்சங்களில் கல்வியும் ஒன்று. ஆனால், இன்று வரையிலும்கூட மறுகுடியமர்வு செய்யப்படும் மாணவர்கள் எத்தனை பேர், அவர்கள் எங்கு படிக்கிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்று எந்தத் தரவுகளுமே இல்லாத அரசு எப்படி அதை ஏற்படுத்தித் தர முடியும்?” இதனால் மாணவர்கள் பல துன்பங்களை எதிர்கொள்வதாக வெனசோ பீட்டர் குறிப்பிடுகிறார்.

உதாரணமாக சிலர் ஒரு நாள் கல்விக்கே 20கி.மீ. முதல் 30கி.மீ. வரை பயணம் செய்வதில் தொடங்கி மறுகுடியமர்வு செய்யப்படும் இடத்தில் தாங்கள் படித்த குரூப் கிடைக்காமல் அல்லது வெளியில் செல்ல வசதி இல்லாமல் கல்வியிலிருந்து இடைநிற்றல் ஏற்படுவது வரை அவர்கள் எதிர்கொள்ளும் பல சிக்கல்களை அடுக்குகிறார் வெனசா.

டெல்லி vs தமிழ்நாடு

அஞ்சுகம் நகர் முதல் அனகாபுத்தூர் வரை கல்விக்காக 40 கிலோமீட்டர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

“டெல்லி ஜே.ஜே. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக் கொள்கை 2015 அடிப்படையில் அரிதான நிலைகளில் மட்டுமே மறுகுடியமர்வு செய்ய வேண்டும்.

அதிலும் அவர்களின் பணியிடத்திற்கு அருகிலும், 5 கி.மீ எல்லைக்கு உள்ளும்தான் மறுகுடியமர்வு செய்ய வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அந்த எல்லையை குறைந்தபட்சமே 30 கி.மீ என்ற நிலையில் பின்பற்றி வருகிறோம்” என்று காட்டமாகக் கூறுகிறார் வெனசா.

“ஒருபுறம் அனைவருக்கும் கல்வி உரிமை என்ற சட்டத்தை வைத்துக்கொண்டு, மறுபுறம் அரசின் செயலே ஒரு குழந்தையின் கல்வியைப் பறிக்கும் என்றால் அது மனிதநேயத்திற்கே எதிரானது. எனவே, மனித மாண்புகளைக் காக்கும் கொள்கைகளை உருவாக்க வேண்டியது உடனடியாக அவசியம்,” என்கிறார் அவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »