Press "Enter" to skip to content

அயோத்தி ராமர் கோவில் விழா: சோனியா காந்திக்கு அழைப்பு – பா.ஜ.க.வின் அரசியல் சதிராட்டமா?

பட மூலாதாரம், Getty Images

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான சோனியா காந்தி கலந்து கொள்வாரா, இல்லையா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

முன்னதாக இந்த விழாவில் சோனியா காந்தி பங்கேற்பார் என்று செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் விழாவில் பங்கேற்பது குறித்த அறிவிப்பு சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்று கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் தெளிவுபடுத்தியது.

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் பெரிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் கலந்து கொள்ள சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்தார்.

விஎச்பி தலைவர் கூறுகையில், “அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே போல் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்” என்றார்.

சோனியா காந்திக்கு அழைப்பு:

பட மூலாதாரம், ANI

காங்கிரசில் நீடிக்கும் சந்தேகம்

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து காங்கிரஸ் வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு, கட்சியின் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, உண்மையான பிரச்னை ராமர் கோயிலா அல்லது வேலையின்மையா என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்தும் ஜெய்ராம் ரமேஷ், சாம் பிட்ரோடாவின் அறிக்கை காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கை அல்ல என்றும் அவர் காங்கிரஸ் சார்பாக பேசவில்லை என்றும் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து, தி ஹிந்து நாளிதழ் தனது செய்தியில், சோனியா காந்தி மற்றும் கார்கே ஆகியோர் விழாவிற்கு அழைக்கப்பட்டதை அடுத்து, இதில் அவர்களின் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது என்று தெரிவித்துள்ளது.

சோனியா, கார்கே தவிர, ப.சிதம்பரம், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரிடமும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

திக்விஜய் சிங் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை எந்தக் கட்சிக்கும் சொந்தமானது அல்ல. அங்கு செல்வதற்கும் எந்த ஆட்சேபனையும் இருக்காது. சோனியாஜி அங்கு செல்லத் தயாராகவே இருக்கிறார், அவரோ அல்லது எங்கள் கட்சிப் பிரதிநிதிகளோ அங்கு செல்வார்கள்,” என்று கூறியிருந்தார்.

இருப்பினும், இந்த விழாவில் கலந்து கொள்ள வேறு எந்த தலைவரின் பெயரையும் காங்கிரஸ் முடிவு செய்யவில்லை. ஏனெனில் இந்த விழாவிற்கான அழைப்பை வேறு யாருக்கும் மாற்ற முடியாது.

சோனியா காந்திக்கு அழைப்பு:

பட மூலாதாரம், Getty Images

இந்தியா கூட்டணியில் முரண்பாடு

இந்த விழாவுக்குச் செல்வதா, வேண்டாமா என்பது எதிர்க்கட்சிகளுக்கு சிக்கலான ஒன்றாகவே தெரிகிறது.

கேரளாவில் காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) காங்கிரஸ் கட்சி இந்த விழாவில் கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணியில் கூட இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எதுவும் இல்லை. இந்த விழாவுக்கான அழைப்பை சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நிராகரித்துள்ளார்.

நவம்பர் 9, 2019 அன்று, ராமர் கோவில் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த போது, ​​காங்கிரஸ் காரியக் குழு (CWC) ஒரு அறிக்கையை வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

வெள்ளிக்கிழமையன்று, காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினரும் எம்.பி.யுமான சசி தரூர் தமது சமூக ஊடகப் பதிவில், “ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் என்ன ஆனது? பொருளாதார முன்னேற்றம் என்ன ஆயின?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டிசம்பர் 28ஆம் தேதி சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில், “மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம் என்றும், அதை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கவோ, அரசியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தவோ கூடாது என்றும் நான் நம்புகிறேன். ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்பட்ட அனைத்து மக்களும் தங்கள் விருப்பப்படி செல்லலாமா வேண்டாமா என்பதைத் தேர்வு செய்யும் சுதந்திரத்துடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். போகாதவர்களை இந்து விரோதிகள் என்று சொல்ல மாட்டார்கள் என்றும், போகிறவர்கள் பிஜேபியின் சாதனைகளை ஏற்றுக்கொண்டனர் என்றும் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன்,” என எழுதினார்.

மேலும், “ஓர் இந்துவாக இருப்பதால், கோவில் என்பது நாம் கடவுளுக்காக தியானம் செய்யும் இடமாகும். அதை அரசியல் மேடையாக மாற்றக்கூடாது என்று நான் நம்புகிறேன். நான் ஒரு நாள் ராமர் கோவிலுக்கு செல்ல விரும்புகிறேன். ஆனால் குடமுழுக்கு என்ற பெயரில் அரசியல் அதிகாரம் காட்டப்படும் நாளில் அல்ல. தேர்தலுக்கு முன் கூட செல்ல மாட்டேன். எனது விலகலை எந்த அரசியல் அடையாளமாகவும் பார்க்கக் கூடாது,” என்றும் பேசியிருந்தார்.

சோனியா காந்திக்கு அழைப்பு:

பட மூலாதாரம், Getty Images

சோனியா காந்திக்கு அழைப்பு – பா.ஜ.க.வின் அரசியல் சதிராட்டமா?

நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸ், மென்மையான இந்துத்துவா கட்சி என்று தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸை நெருக்கமாக அறிந்த மூத்த பத்திரிக்கையாளர் ரஷித் கித்வாய், “இந்தியா டுடேயில் எழுதிய கட்டுரையில், சோனியா காந்திக்கு இந்து மதம் ஒன்றும் புதிதல்ல. ஏனெனில் அவரது கணவர் (ராஜீவ் காந்தி) மற்றும் அவரது மாமியார் (இந்திரா காந்தி) ஆகியோர் இந்து மதத்தைப் பின்பற்றியவர்கள் தான்,” என்று கூறினார்.

கடந்த 1998-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பிராமி ரெட்டி, சோனியா காந்தி திருப்பதி கோவிலில் பார்வை செய்ய வைத்தார். இது பலத்த எதிர்ப்பை சந்தித்தது.

1998 பொதுத் தேர்தலின் போது சோனியா காந்தி திருப்பதி கோயிலுக்குச் சென்றதாகவும், அப்போது அவர் காங்கிரஸ் தலைவராக இருந்ததாகவும் கித்வாய் எழுதுகிறார். கணவர் மற்றும் மாமியார் மதத்தை பின்பற்றுவதாக கோவில் டைரியில் அவர் எழுதியிருந்தார்.

சோனியா காந்தி திருப்பதி சென்றதற்குப் பிறகு, காங்கிரஸ் காரியக் குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் ‘இந்தியாவில் மத சார்பின்மைக்கு இந்து மதம் மிகவும் பயனுள்ள உத்தரவாதம் அளிக்கும்’ என்று நம்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

சோனியா காந்தியின் வெளிநாட்டு வம்சாவளி, கிறிஸ்தவ மதப் பின்னணி போன்ற பிரச்னைகளை பாஜக எப்போதும் எழுப்பி வருகிறது. 1999 பொதுத் தேர்தலின் போது, ​​சங்பரிவார் நாடு தழுவிய இதுபோன்ற பிரசாரத்தை மேற்கொண்டது என்று கித்வாய் கூறுகிறார்.

இதற்குப் பிறகு, ரோமன் கத்தோலிக்க சங்கம் இதுகுறித்து முன்னெப்போதும் இல்லாத நிலைப்பாட்டை எடுத்தது என்பதுடன் சோனியா காந்தி கிறிஸ்தவ கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றுகிறார் என்ற உண்மையை நிராகரித்தது.

சோனியா காந்திக்கு அழைப்பு:

பட மூலாதாரம், Getty Images

ராஜீவ் காந்தியும், ராமர் கோவிலும்

1986 ஆம் ஆண்டில், ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, பாபர் மசூதியின் பூட்டு திறக்கப்பட்டது. பின்னர் அங்கே ராமர் சிலை வைக்கப்பட்டது.

ராஜீவ் காந்தியின் அரசு (அப்போது உத்தரபிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது) பாபர் மசூதியைத் திறந்தது என்று நம்பப்படுகிறது. ஏனெனில் முஸ்லிம் பெண்ணான ஷா பானோவின் விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ராஜீவ்காந்தியின் அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியதால் தான் காங்கிரஸ் கட்சி பாபர் மசூதியைத் திறக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

ஷா பானோ மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் பெண். அவரது விவாகரத்து வழக்கில் அவருக்கு இழப்பீடு ஜீவனாம்சம் அளிக்க அவரது கணவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் ராஜீவ் காந்தி இந்தத் தீர்ப்பை நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்தார். ஷா பானோ வழக்கில் ராஜீவ் காந்தி முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் சரணடைந்ததாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

31 ஜனவரி 1986 அன்று பாபர் மசூதியின் பூட்டைத் திறக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது, அதற்கு அடுத்த நாளே அதாவது 1986 பிப்ரவரி 1 அன்று, கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பாபர் மசூதியின் கதவுகளைத் திறக்க மாவட்ட ஆட்சியர் கே.எம்.பாண்டே உத்தரவிட்டார்.

பல தசாப்தங்களாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இத்தகைய உயர்மட்ட வழக்கில், மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தாலொழிய, பைசாபாத் நிர்வாகம் இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி சட்டவிரோதமாக சிலை வைக்கப்பட்டதால் மசூதி பூட்டப்பட்டது. மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது.

சோனியா காந்திக்கு அழைப்பு:

பட மூலாதாரம், Getty Images

திருமணத்திற்குப் பிறகு, ராஜீவ் காந்தி எந்த கோவிலுக்கோ, மத தலத்திற்கோ சென்றாலும், அவரது மனைவி சோனியா காந்தி எப்போதும் அவருடன் இருப்பார். அவர் தலையில் முக்காடு அணிந்துகொண்டு, அவரும் பூஜை செய்வார்.

ரஷித் கித்வாய் தமது எழுத்துகளில், “ராஜீவ் காந்தி 1989 இல் நேபாளத்திற்குச் சென்றபோது, ​​வரலாற்றுச் சிறப்புமிக்க பசுபதிநாத் கோயிலுக்குச் செல்ல முடிவு செய்தார். ஆனால் திருப்பதி மற்றும் பூரி போன்று பசுபதிநாதர் கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை உள்ளது.

சோனியா தன்னுடன் வர வேண்டும் என்று ராஜீவ் விரும்பினார். ஆனால் அர்ச்சகர்கள் அவரை அனுமதிக்கவில்லை. மன்னர் பிரேந்திராவால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. ராஜீவ் காந்தி அதை ஒரு தனிப்பட்ட பிரச்னையாகக் கருதிக் கொண்டு பசுபதிநாதரை வணங்காமல் திரும்பினார்,” என எழுதியுள்ளார்.

இதற்குப் பிறகு, இந்தியா-நேபாள உறவுகளும் மோசமடைந்து, இந்தியாவும் பொருளாதாரத் தடைகளை விதித்தது. பின்னர், அப்போதைய வெளியுறவுச் செயலர் நட்வர் சிங் இரு நாடுகளுக்கும் இடையே இயல்பான உறவை அறிவித்தார்.

2001 ஆம் ஆண்டு கும்பமேளாவின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடினார். இருப்பினும், அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வருகைக்கு முன்னதாக அவர் அலகாபாத் சென்றிருந்ததால் இந்த விஷயமும் விவாதப் பொருளாக மாறியது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »