Press "Enter" to skip to content

மோதியின் பணமா, ஸ்டாலினின் பணமா? தமிழ்நாட்டில் திட்டங்களை நிறைவேற்றுவது யார்?

பட மூலாதாரம், TN PIB

திருச்சியில் நடைபெற்ற பன்னாட்டு விமான நிலைய முனையத்தின் திறப்பு விழாவில் பிரதமர் மோதிக்கு முன்பாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போதுமான நிதியை ஒதுக்கித் தர வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார். அப்போது அரங்கமே மோதி மோதி என்று அதிர்ந்துகொண்டிருந்தது.

அவருக்கு பின்னர் பேசிய பிரதமர் மோதி, இதுவரை இல்லாத அளவில் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கியது பாஜக அரசாங்கம்தான் என்று விவரங்களை அடுக்கினார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களில் அதிகம் பங்கு செலுத்துவது மத்திய அரசா? மாநில அரசா? என்ற விவாதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்துக்கான நிவாரணத் தொகையாக ரூ. 21 ஆயிரம் கோடியை மாநில அரசு கேட்கிறது. திருச்சி பன்னாட்டு விமான நிலைய முனையத்தை நேரில் வந்து திறந்து வைத்த பிரதமர் மோதியிடம் இந்த கோரிக்கையை நேரடியாக முன் வைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தவறவில்லை.

விழா மேடையில் பேசிய முதல்வர் சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட வெள்ளத்துக்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும், சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டத்துக்கு மத்திய அரசு தனது பங்கை தர வேண்டும் என்றும் கோரினார்.

பின்னர் இதே நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இது வரை இல்லாத அளவில் “தமிழ்நாட்டுக்கு செய்யப்படும் செலவு 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என்றார். 2014 ஆம் ஆண்டுக்கு முன் மாநிலங்களுக்கு 30 லட்சம் கோடி தான் வழங்கப்பட்டது, ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் 120 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு தற்காலிக நிவாரணத் தொகையாக, ரூ.7033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ.12,659 கோடியும் கேட்டுள்ளது தமிழக அரசு.

அதே போன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்துக்கான அவசர நிவாரணத் தொகையாக 2 ஆயிரம் கோடி ரூபாயும் கேட்டுள்ளது.

இந்த நிவாரணத்தொகையில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தரவில்லை என திமுக குற்றம்சாட்டும் வேளையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரூ.900 கோடி தமிழகத்துக்கு கொடுத்து விட்டதாகவும், வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்த பிறகு வேறு தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

யாருடைய பணம்?

மாநில திட்டக்குழுத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் பிபிசி தமிழிடம் பேசும் போது, “மாநில பேரிடர் நிதியும் தேசிய பேரிடர் நிதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஆகும். மாநில பேரிடர் நிதிக்கு ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் வழக்கமான தொகை வழங்கப்படும். அந்த நிதியால் கையாள முடியாத பெரிய பாதிப்பாக இருந்தால், தேசிய பேரிடர் நிதியிலிருந்து பணம் பெற விண்ணப்பிக்கலாம்.”

“தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் ரூ.900 கோடி நிதி, மாநில பேரிடர் நிதியின் ஒரு பகுதியாகும். ஆனால், இந்த நிதியை வைத்துக் கொண்டு தமிழக அரசு நினைத்ததை எல்லாம் செய்ய முடியாது. இந்த நிதியை எப்படி செலவு செய்ய வேண்டும் என 14 பக்க விரிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. ஒரு வீட்டில் துணிகள் சேதமடைந்திருந்தால் ரூ.2500, ஒருவர் இறந்தால் ரூ.4 லட்சம், மீட்புப் பணி வீரர் ஒருவர் இறந்தால் ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என பல விதிகள் உள்ளன” என்றார்.

தேசிய பேரிடர் நிதியிலிருந்து தொகை ஒதுக்குவதற்கு முன்பாக நடத்தப்பட வேண்டிய சேத மதிப்பீட்டு ஆய்வை மத்தியக் குழுக்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் மேற்கொண்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வசிப்பவருக்கு ரூ.6000 நிவாரணத் தொகையை மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த தொகையும் மத்திய அரசின் நிதியிலிருந்தே எடுக்கப்படுவதாக பாஜகவின் வாதம் அமைந்துள்ளது. எனினும் திமுக இதை மறுக்கிறது.

பிரதமர் மோதி தமிழகம் வரும் தினத்தில் திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் , “24 லட்சம் குடும்பங்களுக்கு கொடுங்கள் என்று ரூ.1,486 கோடியை ஒன்றிய அரசு கொடுத்திருந்தால்தான் அது மோதி பணம். தமிழ்நாடு அரசு தனது கருவூலத்தில் இருந்து எடுத்துத் தரும் பணம் எப்படி மோதி பணம் ஆகும்?” என்று கேள்வி எழுப்பப்படுகிறது.

யாருடைய பணம்?

“2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிகமாக மற்றும் நிரந்தரமாக சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய மொத்த தொகை ரூ.1,27,655.80 கோடி. ஒன்றிய அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட்டுமே ஆகும்.” என்றும் முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணம் யாருடையது என்பதை தாண்டி பணம் எப்படி வழங்கப்படுகிறது என்பதும் சர்ச்சையாகிறது. திமுக வழங்கிய நிவாரணத் தொகை மக்களிடம் காசாக வழங்கப்பட்டது. இந்த பணத்தை ஏன் மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தாமல், கையில் கொடுக்கிறது தமிழக அரசு என விமர்சிக்கிறது பாஜக.

மிக் ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில் வெள்ள மேலாண்மை பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இந்த பணம் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக கொடுக்கப்பட்டது அல்ல என்பதை கூற தமிழக அரசு தவறவில்லை.

தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா, 15வது நிதி ஆணையத்தில் சென்னைக்கான வெள்ள தடுப்பு திட்டம் பரிந்துரைக்கப்பட்டு, அதற்கான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு வழங்கியதாகவும், அதன் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய நிதி, தற்போது வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகள் ரூ.63,246 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 118.9 கி.மீ நீளமுள்ள தொடர் வண்டிபாதை திட்டத்துக்கான செலவுகளை தமிழக அரசே ஏற்று தொடங்கியுள்ளதாக மாநில அரசு கூறுகிறது. திருச்சியில் பேசிய முதல்வர் மு க ஸ்டாலின், “சென்னை பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) இரண்டாம் கட்டப் பணிகளுக்கான தனது பங்கை மத்திய அரசு அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

யாருடைய பணம்?

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த வாதங்களை மறுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு தேவையான நிதியையும் திட்டங்களையும் தொடர்ந்து வழங்கி வருவதாக கூறுகிறது. திருச்சி விமான முனைய திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “2014ம் ஆண்டுக்கு முன், மாநிலங்களுக்கு 30 லட்சம் கோடி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் 120 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 2.5 மடங்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்புக்கு மூன்று மடங்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது. தொடர்வண்டித் துறை துறைக்கு 2.5 மடங்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது” என்றார்.

அதே போன்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி குறித்தும் முரண்பாடான கருத்துகள் இருக்கின்றன. இந்த திட்டத்துக்கு ரூ. 2,696.77 கோடி மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அக்டோபர் மாதம் தமிழ்நாடு முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு தாமதப்படுத்தியதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூறுவது தவறானது என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் நவம்பர் முதல் வாரத்தில் தெரிவித்தார் .

தமிழ்நாடு அரசு 1,178 கோடி ரூபாய் கேட்டது எனவும், மத்திய அரசு 1,361 கோடி ரூபாய் ஒதுக்கியதாகவும், அவர் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 246 கோடி ரூபாய் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், அவற்றில் 1.85 கோடி ரூபாய் மட்டுமே இது வரை மீட்க முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் ஜெயரஞ்சன், “தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் எப்படி கேட்டதை விட கூடுதலாக பணம் கொடுக்க முடியும்? வேலை பார்த்த மக்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் பாக்கி உள்ளது. இந்தியா முழுவதிலும் ரூ.20ஆயிரம் கோடி ரூபாய் உழைத்த மக்களுக்கு கூலி பாக்கி உள்ளது. எனவே பல இடங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகள் நிலுவையில் உள்ளன” என்று தெரிவித்தார்.

யாருடைய பணம்?

பட மூலாதாரம், Getty Images

மாநிலங்களுக்கான வரி பங்கீட்டு முறையில் மத்திய அரசு, தமிழ்நாட்டிடம் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

நேரடி வரி வருவாயில் தமிழ்நாடு அதிகம் பங்களித்திருந்தாலும் உரிய வரி பங்கீடு கிடைப்பதில்லை என்பது தமிழ்நாட்டின் குற்றச்சாட்டாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் தகவல்கள் படி, தமிழ்நாடு பங்களித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே பெற்றது. ஆனால், உத்தர பிரதேசம் 2.73 ரூபாய் பெற்றுள்ளது. 2014-15ம் ஆண்டு மற்றும் 2021-22ம் ஆண்டுக்கும் இடையிலான காலக்கட்டத்தில், தமிழ்நாட்டின் நேரடி வரி ரூ.5.16 லட்சம் கோடியாக இருந்தது. எனினும், தமிழ்நாடுக்கு 2.08 லட்சம் கோடி மட்டுமே வரி பங்கீட்டின் மூலம் கிடைத்தது. ஆனால், 2.24 லட்சம் கோடி பங்களித்திருந்த உத்தரப் பிரதேசம், 9.04 லட்சம் கோடி பெற்றது.

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துக் கொள்ளக் கூடாது என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் டி. ஜெயக்குமார்.

“வடக்கு தெற்கு என்ற பாகுபாடு இல்லாமல் நியாயமான, மனிதாபிமானத்துடன் மத்திய அரசு நடந்துக் கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சிக் காலத்திலும் மத்திய அரசு இப்படி தான் நடந்துக் கொண்டது. நடந்திருப்பது பேரிடர் தானே. அதற்கான தொகையை தேசிய பேரிடர் நிதியிலிருந்து வழங்க வேண்டும். மாநில பேரிடர் நிதியிலிருந்தே சமாளித்துக் கொள்ள சொல்வது சரியல்ல. இதே போன்ற சூழல்கள் அதிமுகவுக்கு ஏற்பட்ட போது, அரசு கருவூலத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம். திமுக அரசு, நிதியை கேட்டு பெறுவதிலோ, மக்களுக்கு நிவாரணம் தருவதிலோ கவனம் செலுத்துவதில்லை. 2014ம் ஆண்டுக்கு முன், திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் மத்தியில் ஆண்ட போதும் இதே நிலை தான். அப்போது திமுக தமிழ்நாட்டுக்கு நிதியை கேட்டு பெற்று தரவில்லையே” என்றார்.

யாருடைய பணம்?

பட மூலாதாரம், டி. ஜெயக்குமார்

தமிழ்நாடு அரசு ஜி எஸ் டி வரி விதிப்பு முறை காரணமாக மாநிலத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருமான இழப்பு ஏற்படுவதாக கூறுகிறது. 2021ம் ஆண்டில் தமிழ்நாட்டின் கடன் 5 லட்சம் கோடியாக இருந்தது. ஜி எஸ் டி வரி வருவாயில் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய பங்கை மத்திய அரசு தராததும், வெள்ள நிவாரண நிதியை முழுமையாக தராததும் இதற்கு காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.

வளர்ந்த மாநிலங்களை விட பின் தங்கிய மாநிலங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்குவதை மாற்றான் தாய் மனப்பான்மையாக பார்க்கக் கூடாது என்று பாஜகவும் சில பொருளாதார நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வளர்ந்த மாநிலங்களுக்கு புதிய சவால்கள் இருக்கின்றன என சுட்டிக்காட்டும் ஜெயரஞ்சன். “ கிட்டத்தட்ட 50% பகுதி நகரமயமாகியுள்ள மாநிலம் தமிழ்நாடு. நகரமயமாக்கலுக்கான கட்டமைப்பு செலவுகள் இருக்க தானே செய்யும். குடிநீர், வீடு, சாலை என பல செலவுகள் உள்ளன. அதற்கு எல்லாம் அந்த பட்டியலில் இடமே இல்லை. ” என்கிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »