Press "Enter" to skip to content

பாஜகவுடன் உறவை புதுப்பிக்கும் ஓ.பி.எஸ் – எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார்?

பட மூலாதாரம், Getty Images

பிரதமருடன் சந்திப்பு, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவது என தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு வலுவான கூட்டணியை அமைக்க முயல்கிறார். இதன் மூலம் எடப்பாடி கே. பழனிச்சாமியை எதிர்கொள்ள முடியுமா?

அ.தி.மு.க. பொதுக் குழு தொடர்பான வழக்குகளில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்து பின்னடைவுகளைச் சந்தித்தது. மேலும், அ.தி.மு.கவின் பெயர், கட்சி, கொடி ஆகியவற்றை அவரது தரப்பு பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இவையெல்லாம் சேர்ந்து ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது தரப்பையும் பெரும் சோர்வுக்கு உள்ளாக்கியிருந்தன.

இந்த நிலையில், திருச்சி வந்த பிரதமருடன் சந்திப்பு, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் கூட்டம் என மறுபடியும் சுறுசுறுப்பாகியிருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.

புத்துயிர் பெறும் ஓ பி எஸ்

பட மூலாதாரம், Instagram

டிசம்பர் 18ஆம் தேதியன்று சென்னையில் ‘அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டினார் ஓ. பன்னீர்செல்வம். புதிதாக கட்சி எதையும் ஆரம்பிக்கும் எண்ணமில்லை என அவர் தெரிவித்திருந்த நிலையில், இனி இந்தக் குழுவை முன்னிறுத்தித்தான் செயல்படப் போகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதே நாளில் கோயம்புத்தூரில் “தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’ கூட்டத்தை நடத்தினார் ஓ.பி.எஸ். அந்தக் கூட்டத்தில் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியை கடுமையாகத் தாக்கிப் பேசினார் அவர். வி.கே. சசிகலாவுக்கு எடப்பாடி கே. பழனிச்சாமி துரோகம் செய்ததாகவும் அவரது முறைகேடுகள் எல்லாம் தனக்குத் தெரியும் என்றும் தான் இதைப் பெற்றிப் பேச ஆரம்பித்தால், அவர் திஹார் சிறைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும் என்றெல்லாம் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தீர்ப்புகளால் அ.தி.மு.க. முழுமையாக எடப்பாடி கே. பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் வந்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் எதற்கும் எடப்பாடி கே. பழனிச்சாமி நேரடியாகப் பதிலளிக்காமல் இருந்துவந்தார். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தின் டிசம்பர் 26ஆம் தேதி பேச்சுக்கு யாரும் எதிர்பாராத விதத்தில் பதிலளித்தார் அவர். ஓ. பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருப்பதாகவும் அவர் விரைவில் சிறைக்குச் செல்வார் என்றும் முதலமைச்சராக இருந்த தனக்கு அவரைப் பற்றி எல்லாத் தகவல்களும் தெரியும் என்று பதில் தாக்குதல் நடத்தினார்.

நீண்ட காலமாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பைப் பற்றிப் பேசாமல் இருந்த எடப்பாடி கே. பழனிச்சாமி இப்படிப் பேசியதும், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உற்சாகமடைந்தது. இதனால், அடுத்தடுத்து இதே பாணியில் தாக்குதல்களைத் தொடுக்க ஆரம்பித்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம்.

பழனிசாமியை பதில் சொல்லத் தூண்டும் ஓ.பி.எஸ் – தேர்தல் உத்தியா?

இதற்கு அடுத்ததாக திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பன்னீர்செல்வம் மறுபடியும் எடப்பாடி கே. பழனிச்சாமி மீது தாக்குதல் தொடுத்தார். “எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு, ஜெயலலிதாதான் நிரந்தரப் பொதுச் செயலாளர் எனத் தீர்மானம் நிறைவேற்றும்வரை தர்ம யுத்தம் ஓயாது” என்று குறிப்பிட்டார்.

இதற்கு நடுவில், திருச்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோதியை வரவேற்கும் பிரமுகர்களின் பட்டியலில் அவருக்கும் இடமளிக்கப்பட்டது. இதிலும் உற்சாகமடைந்தார் ஓ.பி.எஸ்.

இந்த சந்திப்பு குறித்து பேசிய அவர், பிரதமரை மரியாதை நிமித்தமாக சந்திக்க வாய்ப்பளிக்கப்பட்டதாகவும் அப்போது அவரிடம் வாழ்த்துக் கடிதம் ஒன்றை அளித்ததாகவும் தெரிவித்தார். மேலும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தே தேர்தலைச் சந்திக்கப்போவதாகவும் பா.ஜ.கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சூழல் இருப்பதாகவும் தெரிவித்தார். வி.கே. சசிகலா தன்னைச் சந்திக்க விரும்பினால், நிச்சயம் அவரைச் சந்திப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஆகவே, பா.ஜ.க. மற்றும் டி.டி.வி. தினகரனுடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பது, முடிந்தால் வி.கே. சசிகலாவின் ஆதரவைப் பெறுவது, இதன் மூலம் எடப்பாடி கே. பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவை அந்தக் கூட்டணிக்குப் பெறுவது என்பது என நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகத்தை ஓ. பன்னீர்செல்வம் வகுத்துவிட்டதாகவே தெரிகிறது.

“நிச்சயமாக எல்லா சந்திப்புகளும் எல்லா முயற்சிகளும் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கித்தான் நடக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பைத் தோற்கடிப்பது என்பதுதான் ஒரே இலக்கு” என்கிறார் ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் கொள்கை பரப்புச் செயலாளரான மருது அழகுராஜ்.

புத்துயிர் பெறும் ஓ பி எஸ்

பட மூலாதாரம், X/@MaruthuAlaguraj

நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலமாகவே ஒரு கட்சியை கைப்பற்றவோ, நடத்தவோ முடியாது என்பதால்தான், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்திருப்பதாகக் கூறும் மருது அழகுராஜ், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு ஒரு மிகப் பெரிய கூட்டணியைக் கட்டி எழுப்பப்போவதாகக் கூறுகிறார்.

“ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பா.ஜ.க ஆகியோர் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திக்கப்போவது உறுதி. இந்தக் கூட்டணியில் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி ஆகியவையும் இடம்பெறக்கூடும். மேலும், பாட்டாளி மக்கள் கட்சியும் இந்தக் கூட்டணியில் இடம்பெறலாம். ஆகவே, தி.மு.கவை எதிர்க்கக்கூடிய வலுவான கூட்டணியாக இந்தக் கூட்டணியே அமையும். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தேசிய ஜனநாயகக் கூட்டணி Vs இந்தியா கூட்டணிதான். மோடியா, லேடியா என்று ஜெயலலிதா கேட்டதைப்போல எடப்பாடியால் கேட்க முடியாது. ஆகவே, இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான பலம் வாய்ந்த கூட்டணியாக எங்கள் கூட்டணியே இருக்கும். எடப்பாடியின் அ.தி.மு.க. நான்காவது இடத்தையே பெறும்” என்கிறார் மருது அழகுராஜ்.

ஓ. பன்னீர்செல்வத்தின் சமீபத்திய குற்றச்சாட்டுகளுக்கு எடப்பாடி விரும்பினால் பேசாமல் இருந்திருக்கலாம்; அச்சத்தின் காரணமாகவே அவர் பதிலளித்திருக்கிறார் என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு.

‘ஓ.பி.எஸ் தரப்பிடம் இருப்பது சிறு குழு மட்டுமே’

ஆனால், ஓ. பன்னீர்செல்வம் அவதூறுகளை வீசிக்கொண்டேயிருக்கும்போது அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே எடப்பாடி பதில் சொன்னார் என்கிறது அ.தி.மு.க. தரப்பு. “ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பது போன்ற குற்றச்சாட்டுகள் உட்பட தனிப்பட்ட முறையில் ஓ.பி.எஸ். சொல்லும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் எடப்பாடி கே. பழனிச்சாமி பதில் அளித்ததேயில்லை. ஆனால், ஒரு செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் கேட்கும்போது அதற்குப் பதில் சொல்லாமல் இருந்தால், ஏதோ இவர்கள் மீது தவறு இருக்கிறது என மக்கள் நினைத்துவிடக்கூடும் என்பதால்தான் அவர் பதிலளித்தார். மற்றபடி இதில் பெரிதாக ஏதுமில்லை” என்கிறார் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் இணைச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார்.

மேலும், ஓ. பன்னீர்செல்வத்திடம் தற்போது இருப்பது கட்சியோ, கட்சியின் ஒரு பிரிவோ அல்ல எனக் கூறும் அ.தி.மு.க. தரப்பு, ஓ.பி.எஸ்சின் ஒரு சிறிய குழு, வலுவான தேர்தல் கூட்டணியை அமைப்பதாகச் சொல்வது வேடிக்கையானது என்கிறது.

“நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, வேட்புமனு தாக்கல் செய்யும்வரை நேரம் இருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பே கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதில்லை. தகுந்த நேரம் வரும்போது ஒரு வலுவான கூட்டணியை அ.தி.மு.க. முன்வைக்கும்” என்கிறார் சி.டி.ஆர். நிர்மல்குமார்.

ஓ. பன்னீர்செல்வம் தரப்பைப் பொறுத்தவரை, வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அணியைவிட அதிக இடங்களை ஓ.பி.எஸ். – பா.ஜ.க. கூட்டணி பிடித்தால், அதனை வைத்து மீண்டும் அ.தி.மு.க. மீது உரிமை கோரலை வலுப்படுத்தலாம் என நினைக்கிறது.

புத்துயிர் பெறும் ஓ பி எஸ்

பட மூலாதாரம், Facebook

ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தின் இந்த முயற்சிகளுக்கு பெரிய அளவில் பலன் இருக்குமெனத் தோன்றவில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர். மணி. “ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை அவருக்கென தற்போது எந்த செல்வாக்கும் இல்லை. அதனால், பா.ஜ.க. பெரிய அளவில் அவரை நம்பப்போவதில்லை. அவரை நம்பியும் தனது வியூகத்தை வகுக்கப்போவதில்லை. தே.மு.தி.க. போன்ற கட்சிகளுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் எல்லாம் மிக மிக குறைவு. ஒரு சதவீதம்கூட இருக்காது. ஆகவே, ஓ. பன்னீர்செல்வத்தின் முயற்சி, தேர்தலுக்குப் பிந்தைய சூழல் குறித்த அவரது நம்பிக்கை ஆகிய எதற்கும் எந்தப் பலனும் இருக்காது” என்கிறார் அவர்.

இதில் பா.ஜ.கவின் நிலைப்பாடு, வியூகம் போன்றவை என்னவாக இருக்கும்? “அகில இந்திய அளவில் பா.ஜ.கவின் பொதுவான வியூகம் என்பது கட்சிகள் பிளவுபடும்போது அதனைப் பயன்படுத்திக்கொள்வதுதான். அல்லது அந்தக் கட்சியை தங்கள் கட்சியோடு இணைத்துக்கொள்வார்கள். திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர் அ.தி.மு.க விற்கு 2002ல் அதுதான் நடந்தது. இப்போது ஓ.பி.எஸ். விவகாரத்தைப் பொறுத்தவரை அவரை முடிந்தவரை பயன்படுத்தப் பார்ப்பார்கள். அவருக்கும் இதைத் தவிர வேறு வாய்ப்பில்லை. அதேபோல, தே.மு.தி.கவையும் கரைக்கப் பார்ப்பார்கள்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.

ஓ. பன்னீர்செல்வம் தரப்பு விரும்புவதைப் போல ஒரு கூட்டணி அமைந்தாலும் அது ஒரு வலுவான கூட்டணியாக இருக்காது என்கிறார் ஷ்யாம். “டிடிவி தினகரனுக்காவது ஒரு கட்சிக் கட்டமைப்பு இருக்கிறது. ஓ. பன்னீர்செல்வத்திடம் அப்படி எதுவுமே கிடையாது. அந்தக் கூட்டணியில் அவருக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்கள் கிடைக்கலாம். பா.ம.க. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றால் மட்டுமே இந்தக் கூட்டணி சற்றாவது வலுவாகக் காட்சியளிக்கும்” என்கிறார் அவர்.

பாஜகவுடனான உறவை புதுப்பிக்கும் ஓ.பி.எஸ்

ஓ. பன்னீர்செல்வம் தரப்பைப் பொறுத்தவரை, எப்போதுமே பா.ஜ.க. கூட்டணியை விரும்பியேவந்தது. எல்லா பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்கிறது என்றே சொல்வார். ஈரோடு இடைத்தேர்தலின்போதுகூட தானே கமலாலயத்திற்கு வலியச் சென்று ஆதரவளித்தார் ஓ. பன்னீர்செல்வம்.

நீண்ட காலமாகவே எடப்பாடி கே. பழனிச்சாமி – ஓ. பன்னீர்செல்வம் இரு தரப்பினரையும் ஒன்றாகவே நடத்தி வந்த பா.ஜ.க. தலைமை, ஒரு கட்டத்திற்குப் பிறகு முழுமையாக எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பின் பக்கம் சாய்ந்துவிட்டது.

குறிப்பாக, ஜூலை 18ஆம் தேதி தில்லியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நடந்தபோது, தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க.வின் சார்பில் எடப்பாடி கே. பழனிச்சாமிக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதோடு, அவர் பிரதமர் நரேந்திர மோதியின் அருகிலும் அமர வைக்கப்பட்டார். இதில் அதிர்ந்துபோன ஓ. பன்னீர்செல்வம், பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் துவக்க விழாவிற்குச் செல்லாமல் புறக்கணித்தார்.

இதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த புகழேந்தி, வெளிப்படையாகவே பா.ஜ.கவைத் தாக்கிப் பேட்டியளித்தார். செப்டம்பர் மாதத்தில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. வெளியேறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அமைதி காத்து வந்தது. ஆனால், தற்போது பிரதமரைச் சந்தித்தன் மூலம் மீண்டும் அந்த உறவைப் புதுப்பித்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »