Press "Enter" to skip to content

நிர்மலா சீதாராமன் கூறுவதுபோல் தமிழ்நாடு கூடுதல் நிதியை மத்திய அரசிடம் பெறுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டிடம் இருந்து 2014-2023 காலகட்டத்தில் மத்திய அரசுக்கு 6.23 லட்சம் கோடி வரியாகச் சென்ற நிலையில், மத்திய அரசிடம் இருந்து ரூ. 6.69 லட்சம் கோடி நிதி திருப்பி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிடம் இருந்து வரி வருவாயாக 2014-2023 காலகட்டத்தில் மத்திய அரசுக்கு 6.23 லட்சம் கோடி ரூபாய் கிடைத்த நிலையில், 6.69 லட்சம் கோடி நிதி மாநிலத்திற்குத் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

மத்திய நிதித் தொகுப்புக்கு தமிழ்நாட்டிடம் இருந்து அதிக வரி வருவாய் கிடைக்கும் நிலையிலும் தமிழ்நாட்டிற்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியின் அளவு குறைவாகவே இருப்பதாக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கூறி வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் வங்கிகள் மூலம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுப் பேசினார்.

அதில் பேசும்போது, “தமிழ்நாட்டிற்கு எந்த விதமான உதவிகளும் மத்திய அரசு செய்வதில்லை எனப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், 2014-2023 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு பெற்ற வரி வருவாய் ரூ. 6.23 லட்சம் கோடி. ஆனால், தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.6.96 லட்சம் கோடி.

அதாவது நிதிக் குழு பகிர்வின் மூலம் 2.88 லட்சம் கோடியும், மானியங்களாக 2.58 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் உள்கட்டமைப்பு முதலீட்டிற்கான வட்டியில்லாக் கடனாக 6,412 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ்நாட்டிடம் இருந்து பெற்ற வரியைவிடக் கூடுதலாக நிதியை மாநிலத்திற்குக் கொடுத்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

நிதிப் பகிர்வில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மத்திய அரசுக்கு அளிக்கப்படும் வரியைவிட குறைவாகவே திரும்பக் கிடைப்பதாக குரல்கள் எழுந்து வரும் நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

மத்திய – மாநில அரசுகளுக்கு நடுவே நிதிப் பகிர்வு எப்படி செய்யப்படுகிறது?

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான வரி பிரச்சனை

பட மூலாதாரம், Getty Images

மாநிலங்களிடம் இருந்து மத்திய அரசுக்கு வரும் வரிகள் அனைத்தும் மூன்று விதங்களில் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. முதலாவதாக, நிதிக் கமிஷன் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையிலான பகிர்வு. இரண்டாவதாக விருப்புரிமைப் பகிர்வு. பேரிடர்கள் நேரும்போது மத்திய அரசு அளிக்கும் நிதி போன்றவை. மூன்றாவதாக, மத்திய அரசுடைய திட்டங்களின் மூலமாக மாநிலங்களில் கிடைக்கும் நிதி.

இதில் நிதி கமிஷன் மூலமான பகிர்வைப் பொறுத்தவரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, மாநிலங்களுடன் எப்படி நிதிப் பகிர்வைச் செய்வது என்பது குறித்து, நிதி கமிஷன் பரிந்துரைகளை அளிக்கும். தற்போது 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகள் அமலில் உள்ளன.

அதன்படி, மொத்த வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. நிதிக் குழுவின் சமீபத்திய பரிந்துரையில் மக்கள் தொகைக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் இழப்பைச் சந்திப்பதாக ஏற்கெனவே புகார்கள் உள்ளன.

“சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இந்த நிதிப் பகிர்வில் 7 முதல் 8 சதவீதம் வரை தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும். ஆனால், தற்போது இது 4 சதவீதமாகக் குறைந்துவிட்டது. வேறு சில மாநிலங்களுக்கு 10 – 15 சதவீதம் அளவுக்கு நிதி பகிரப்படுகிறது.

தமிழ்நாடு மத்திய அரசுக்கு வரியாக ஒரு ரூபாய் அளித்தால், 29 பைசாதான் திரும்பக் கிடைக்கும். ஆனால், உத்தர பிரதேசத்திற்கு 2 ரூபாய்க்கு மேல் கிடைக்கும். அப்படியிருக்கும்போது தமிழ்நாட்டில் இருந்து வசூலித்ததைவிட, அதிக நிதி எப்படிக் கிடைக்கும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் பொருளாதாரப் பேராசிரியரும் மாநில திட்டக் குழுவின் உறுப்பினருமான ஜோதி சிவஞானம்.

மாநில நிதியமைச்சர் என்ன சொல்கிறார்?

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான வரி பிரச்சனை

பட மூலாதாரம், ThangamThenarasu/X

மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவும் இதைக் கருத்தையே எதிரொலிக்கிறார். நிதிப் பகிர்வு தொடர்பாகப் பல்வேறு புள்ளி விவரங்களைச் சுட்டிக்காட்டும் அவர், மாநிலத்தில் இருந்து வரியாக 6.23 லட்சம் கோடி ரூபாய் சென்றிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து 4.75 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

“மத்திய அரசு 2024 – 15 முதல் தற்போது வரை 4.75 லட்சம் கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது. இதில் 2.46 லட்சம் கோடி ரூபாய் வரிப் பகிர்வாகவும் 2.28 லட்சம் கோடி ரூபாய் மானியங்களாகவும் உதவித் தொகையாகவும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், அதே நேரம் நேரடி வரி வருவாயாக 6.23 லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்குச் சென்றிருக்கிறது. மறைமுக வரி வருவாய் எவ்வளவு என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை. தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசுக்குச் செல்லக்கூடிய ஒவ்வொரு ரூபாயில் இருந்தும் 29 பைசாவைத்தான் திரும்பப் பெறுகிறோம்,” என்கிறார் தங்கம் தென்னரசு.

அதேபோல, நிதிக் குழு பரிந்துரைகளின் மூலம் மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய நிதியும் குறைந்து வருவதாகக் கூறுகிறார் அவர்.

“பன்னிரண்டாவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் அமலில் இருந்தபோது மொத்த நிதியில் 5.3 சதவீதம் நிதி திரும்பக் கிடைத்தது. இப்போது அது 4.079 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்தியாவின் மக்கள் தொகையில் 6.124 சதவீத மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் மாநிலத்திற்கு, 4.079 சதவீத நிதிதான் கிடைக்கிறது. அதேபோல, மத்திய அரசு சிறப்பு வரிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தச் சிறப்பு வரிகள் 2011இல் 10.4 சதவீதமாக இருந்தது தற்போது 28.1 சதவீதமாக அதிகரித்துவிட்டது,” என்கிறார் தங்கம் தென்னரசு.

தங்கம் தென்னரசு குறிப்பிடுவதைப் போல மத்திய அரசு தனக்குக் கிடைக்கும் வரி வருவாயில் Cess & Surcharge எனப்படும் சிறப்பு வரிகள் மூலம் கிடைக்கும் தொகையை மாநிலங்களுடன் நேரடியாகப் பகிர்வதில்லை. ஆகவே இந்த சிறப்பு வரிகள் அதிகரிக்க மாநிலங்களுடன் பகிரப்படும் தொகையின் அளவு குறையும்.

இந்த சிறப்பு வரிகள் 28.1 சதவீதமாக உள்ளது. ஆகவே, வசூலிக்கப்படும் நிதியில், சுமார் 72 சதவீத நிதிதான் பகிர்வுக்காக வரும். அந்த 72 சதவீதத்தில் 41 சதவீதம்தான் மாநிலங்களுக்கு இடையில் பகிரப்படுகிறது.

ஆனால், இந்தச் சிறப்பு வரிகளின் மூலம் சாலைகள், பள்ளிக் கட்டங்கள் என கடந்த பத்தாண்டுகளில் 57,000 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்தமாக வசூலான சிறப்பு வரிகள் எவ்வளவு, அதில் பிற மாநிலங்களுக்குப் பகிரப்பட்ட சதவீதம் எவ்வளவு என்ற தகவல் கூறப்படவில்லை.

‘பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதிலும் பாரபட்சம்’

தமிழ்நாடு செலுத்திய வரியைவிட கூடுதல் வரியை மத்திய அரசிடமிருந்து பெறுகிறதா?

பட மூலாதாரம், Getty Images

இதுபோக, பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதிலும் தமிழ்நாட்டின் மீது பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறுகிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

“சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு 63,246 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசும் மாநில அரசும் 50-50 சதவீதம் என பங்களிப்பு செய்கின்றன. இருந்தபோதும் போதுமான நிதி தற்போது வரை அளிக்கப்படவில்லை. இரண்டாம் கட்டத்திற்கு 3,273 கோடி ரூபாய்தான் அளிக்கப்பட்டுள்ளது.

அதே காலகட்டத்தில் மகாராஷ்டிராவிற்கு 28,493 கோடி ரூபாய், கர்நாடகத்திற்கு 17,532 கோடி ரூபாய், டெல்லி – உத்தர பிரதேசத்திற்கு 16,189 கோடி ரூபாய், டெல்லி – உத்தர பிரதேசம் – ஹரியானாவுக்கு 13,424 கோடி ரூபாய், குஜராத்திற்கு 12,867 கோடி ரூபாய், உத்தர பிரதேசத்திற்கு 11,565 கோடி ரூபாய் என நிதி பகிரப்பட்டிருக்கிறது,” என்கிறார் தங்கம் தென்னரசு.

தமிழ்நாட்டிற்கு நிதிக் குழுவின் மூலம் கிடைக்கும் நிதியும் குறைந்திருக்கிறது, விருப்புரிமை நிதியும் குறைந்திக்கும் நிலையில், தமிழ்நாடு செலுத்திய வரியைவிடக் கூடுதல் நிதி எப்படி திருப்பி அளிக்கப்பட்டிருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகிறார் ஜோதி சிவஞானம். புள்ளிவிவர நிபுணரான ஆர்.எஸ்.நீலகண்டன், நிதிப் பகிர்வை வேறு விதமாகப் பார்க்க வேண்டும் என்கிறார்.

“நிதிப் பகிர்வு குறித்துப் பேசும்போது, மறைமுக வரி வருவாயும் சேர்த்து இந்திய அரசுக்கு எவ்வளவு நிதி கிடைக்கிறது, அதில் எத்தனை சதவீதம் மாநிலங்களுடன் பகிரப்படுகிறது என்றுதான் விவாதிக்க முடியும். வெறும் நேரடி வரி வருவாயை மட்டும் பேச முடியாது. அதேபோல, ஒரு மாநிலத்திற்கு இத்தனை லட்சம் கோடி அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் பேச முடியாது. சதவீதங்களின் அடிப்படையில்தான் இதை விவாதிக்க முடியும். தமிழ்நாடு ஒட்டுமொத்தமாகச் செலுத்திய வரியைவிட, கூடுதல் வரி மாநிலத்திற்குக் கிடைக்க வாய்ப்பே இல்லை,” என்கிறார் அவர்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான வரி பிரச்சனை

பட மூலாதாரம், FACEBOOK/NARAYANAN THIRUPATHY

ஆனால், இதுபோலப் பேசுவதெல்லாம் மலினமான அரசியல் என்கிறார் பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி.

“எப்போது பார்த்தாலும் ஒரு ரூபாய் வரி செலுத்தினால், 29 காசுதான் திரும்ப வருகிறது என்று பேசுவது மிக மிக மலினமான அரசியல்.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் உற்பத்தி அதிகமுள்ள மாநிலம். தேர் போன்ற ஆட்டோமொபைல் உற்பத்தி அதிகம். இதற்கான கட்டமைப்பை யார் செய்து கொடுத்தது? மத்திய அரசுதான் செய்து கொடுத்தது.

நிதிப் பகிர்வில் நிதிக் கமிஷனின் பரிந்துரைகள் மீறப்பட்டிருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். அதை மீறி மத்திய அரசு என்ன செய்ய முடியும்? தொடர்ந்து இதுபோலப் பேசுவது மலினமான அரசியலே தவிர வேறில்லை,” என்கிறார் நாராயணன் திருப்பதி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »