Press "Enter" to skip to content

மேலவளவு 7 பேர் படுகொலை: இந்தியாவையே உலுக்கிய சாதிவெறியின் உச்சம்

பிப்ரவரி 1997.

அதுவரையிலும் ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படாத முருகேசன், முதல் முறையாக, அந்த பஞ்சாயத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஊருக்குள் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் சென்றார்.

அது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராம ஊராட்சி அலுவலகம். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி, சுழற்சி முறையில், மேலவளவு கிராம ஊராட்சிக்கான தலைவர் மற்றும் இதர பதவிகள் பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டது.

அப்போது அந்த கிராம ஊராட்சியில், பிற்படுத்தப்பட்ட சாதியினரின் அச்சுறுத்தல் மற்றும் இடையூறுகளால், பட்டியல் சமூகத்தில் இருந்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. பல முறை அந்த கிராம ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

பின்னர், 1996ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, மேலவளவு கிராமத்தில் அப்போதைய காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான முருகேசனும், அவரது தம்பி ராஜா உட்படப் பலர் கிராம ஊராட்சியில் உள்ள தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

“எங்கள் தலைமுறையிலேயே பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் செல்லும் முதல் நபர் நான் தான். இதுவே முதல்முறை. இனி, எல்லாம் நன்றாக நடக்க வேண்டும்.” இப்படித்தான் ஊராட்சி தலைவர் பொறுப்பெற்றது குறித்துத் தன் மனைவி மணிமேகலையிடம் பகிர்ந்துள்ளார் முருகேசன்.

“ஆனால், இந்த ஊருதான் என்னையும், என் தங்கச்சியையும் வாழ விடலையே. ஒருத்தர், இரண்டு பேரு இல்ல. அன்னைக்கு அவங்களுக்கு இருந்த சாதி வெறியில், ஏழு பேர கொன்னுட்டாங்க,” என தன் கணவன் கொலை செய்யப்பட்டது குறித்துக் கூறினார் முருகேசனின் மனைவி மணிமேகலை.

ஆம், கிராம ஊராட்சியின் பொறுப்புகளுக்குத் தேர்வாகியிருந்த முருகேசன், அவரது தம்பி ராஜா உட்பட ஏழு பேர், 1997ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.

என்ன நடந்தது?

மேலவளவு முருகேசன் படுகொலை

ஜூலை 30, 1997.

தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு பட்டியல் சமூகத்தினர் தேர்வாகி ஆறு மாதங்கள் ஆகியிருந்தது. ஆனால், பொறுப்பேற்ற பிறகு, பஞ்சாயத்து அலுவலகத்திற்குச் செல்வதில் தொடங்கி, அன்றாடப் பணிகள் வரை அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் இடையூறும், அச்சுறுத்தலும் இருப்பதால், முருகேசனும், மற்ற உறுப்பினர்களும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முடிவு செய்தனர்.

திட்டமிட்டபடியே, முருகேசனும் மற்றவர்களும் மேலவளவில் இருந்து சுமார் 35 கிலோமீட்டரில் உள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். மனுவைத் தயார் செய்து மாவட்ட ஆட்சியரை மதியம் மூன்று மணிக்கு மேல் சந்தித்த அவர்கள், அதைத் தொடர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர்.

பிறகு, ஆறு மணிக்கு மேல், மதுரையில் இருந்து மேலூர் சென்று, ஏழு மணிக்கு மேல் மேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து மேலவளவு சென்றுகொண்டிருந்தனர். அப்போது, மேலவளவு செல்வதற்கு சில கிலோமீட்டருக்கு முன், சென்னகரம்பட்டி பகுதியில் பேருந்து மறிக்கப்பட, என்ன நடக்கிறது என முருகேசன் உள்ளிட்டோர் எட்டிப் பார்த்துள்ளனர்.

அப்போது, சாலையில் இருந்து பேருந்துக்குள் ஏறிய நபர்கள், முருகேசன், ராஜா உள்ளிட்டோரை அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில், ஏழு பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்கள்.

தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதில், கொலை செய்யப்பட்ட முருகேசனின் தலையை மட்டும் அப்போது காணவில்லை. பின்னர், மேலவளவின் ஊர் எல்லையில் உள்ள ஏரிக்கு அருகில் கண்டெடுத்தனர்.

“அப்போதெல்லாம் செல்போன் வசதி இல்லை. பேருந்தில் வந்தவர்கள் ஓடி வந்து ஊரில் தகவல் சொல்லவே, நாங்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்றோம். நாங்கள் அங்கு செல்வதற்குள்ளேயே குற்றவாளிகள் தப்பிவிட்டனர். முருகேசன் உட்பட ஏழு பேரும் இறந்துவிட்டனர்,” என அன்று நடந்ததைப் பகிர்ந்தார் முருகேசனின் மற்றொரு தம்பி காஞ்சிவனம்.

“அன்று நானும் அவர்களுடன்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால், மாவட்ட ஆட்சியரைச் சந்திப்பதால், நிர்வாகிகள் மட்டும் சென்றால் போதும் எனக் கூறினார்கள். மேலும், அன்று வயல் வேலையும் இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில், அன்றாடம் வயலில் வேலை செய்தால் தான், உணவு கிடைக்கும்,” என்றார் காஞ்சிவனம்.

மதுரையில் தங்கியிருந்தால்….

மேலவளவு முருகேசன் படுகொலை

ஏழு பேர் கொலை செய்யப்பட்ட அன்று அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு, மதுரையிலேயே தங்கிவிட்டு, மறுநாள்தான் ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்ததாகக் கூறினார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன்.

கடந்த 1997ஆம் ஆண்டு மதுரையில் பணியாற்றிய இளங்கோவன், முருகேசன் உள்ளிட்டோரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். “அன்று அவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துவிட்டு மாலை 4 மணிக்கு மேல்தான் வெளியே வந்தார்கள். அவர்களிடம் மனு நகலைப் பெற்றேன். மாவட்ட ஆட்சியர் பாதுகாப்பு அளிக்க உறுதியளித்ததாகக் கூறினார்கள்.

நான் அவர்களிடம் மறுநாள் ஊருக்கு நேரில் வந்து, விசாரித்து, மக்களிடம் பேசிவிட்டு, செய்தியாக்குவதாகக் கூறியிருந்தேன். ஆனால், இப்படி நடந்த பிறகு அவர்களைப் பார்ப்பேன் என நினைக்கவில்லை,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “அவர்கள் அங்கிருந்து கிளம்பும்போதே பொழுது இருட்டியிருந்தது. பாதுகாப்பு கருதி மறுநாள் அதிகாலைதான் ஊருக்குச் செல்வதாகக் கூறினர். ஆனால், ஏன் இரவே சென்றார்கள் எனத் தெரியவில்லை,” என்றார்.

மேலும், சம்பவம் தொடர்பாக இரவு 9 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் கூறிய இளங்கோவன், மறுநாள் காலையில் ஊருக்குச் சென்றதாகக் கூறினார். “அங்கு மக்கள் நீண்ட காலமாகப் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் வயல்களிலும், வீடுகளிலும் வேலை பார்த்துள்ளனர். அவர்கள் இந்த மக்கள் பொறுப்புகளுக்கு வருவதை அச்சுறுத்தலாகப் பார்த்துள்ளனர்.

அரசியல் ரீதியாக, மேலவளவில் தொடங்கிய பிரச்னைதான், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி போன்ற கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான காரணங்களாக அமைந்தன,” என்றார்.

அன்றைய காலத்தில் இதுபோன்ற கொடூர சாதிக் கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வந்ததாகக் கூறிய இளங்கோவன், “முருகேசன் கொலைதான் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் இந்தக் கொலைகள் பேசப்பட்டன.

இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்றும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால், இதுபோன்ற சம்பவங்கள் 2000க்கு பிறகு பெரிதாக நடக்கவில்லை,” என்றார் அவர்.

வழக்கு என்ன ஆனது?

மேலவளவு முருகேசன் படுகொலை

அந்தக் கொலை வழக்கில், மேலவளவு கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 44 பேர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 17 பேரை குற்றவாளி என 2001ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட சின்ன ஓடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், ராமர், சர்க்கரை மூர்த்தி, ஆண்டிசாமி உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, உயர்நீதிமன்றமும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது.

ஆனால், 17 பேரில், மூவருக்கு மட்டும் தண்டனையைக் குறைத்தது. அவர்கள் அந்த ஆண்டே தண்டனைக் காலம் முடிந்து, சிறையிலிருந்து வெளியே வந்தனர். பின், மீதமுள்ள 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களில் ஒருவர், உடல்நலம் காரணமாக உயிரிழந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் அவர்களைக் குற்றவாளி என உறுதி செய்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி, எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நன்னடத்தையின் அடிப்படையில், இந்த வழக்கில் சிறையில் இருந்த 13 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

அவர்களது விடுதலையை எதிர்த்து, முருகேசனின் மனைவி மணிமேகலை உட்பட இறந்தவர்களின் குடும்பத்தினர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.

ஆனால், வழக்கை விசாரித்த உயர்நீதின்றம், “சிறையில் இருந்து வெளியே வந்துள்ள 13 பேரும், பரோலில் வெளியே வந்தபோது எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை. அதேபோல, முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டபோதும், கிராமத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படவில்லை.

எனவே, 13 பேரின் முன்விடுதலை குறித்து உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அனைத்து தரப்புச் சூழலையும் பரிசீலனை செய்த பிறகே தமிழக அரசு அரசாணையைப் பிறப்பித்துள்ளது. ஆகையால், இதில் தலையிட விரும்பவில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன,” என உத்தரவிட்டது.

‘எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க, ஆனால், நாங்க தான்…’

மேலவளவு முருகேசன் படுகொலை

தற்போது ஊரில் உள்ள நிலைமை குறித்துப் பேசிய முருகேசனின் மனைவி மணிமேகலை, “அவர் இறந்ததற்குப் பிறகு, எனக்கு வேறு வழியில்லை. அரசாங்கம் அப்போது கொடுத்த பணத்தில், நிலுவையில் இருந்த கடனை கட்டினேன்.

பின், பஞ்சாயத்தில் வேலை கொடுத்தார்கள். கொஞ்ச காலம் அதைச் செய்து, எனது மூன்று மகள்களையும், கடைசி மகனையும் படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்தேன். என் குழந்தைகள்தான் தற்போது வேலையில்லாமல் கஷ்டப்படுகிறார்கள்,” என்றார்.

ஏழு பேர் படுகொலைக்குப் பிறகு, பட்டியல் சமூகத்தினரும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் சுமூகமாக இருப்பதாகக் கூறும் மணிமேகலை, தங்களால்தான் யாரிடமும் போய் வேலை பார்க்க முடியவில்லை என்றார்.

“எங்கள் உறவினர்களே சிலர் தற்போது பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்களின் வயல்களில் வேலை செய்கிறார்கள், சிலர் நிலம் வாங்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு அது எல்லாம் சரியாக இருக்கும். என் வாழ்க்கையையும், என் குழந்தைகள் வாழ்க்கையையும் இப்படிச் செய்தவர்களிடம் நானோ எனது குழந்தைகளோ ஒரு நாளும் வேலை செய்ய முடியாது,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »