Press "Enter" to skip to content

அமோனியா வாயுக் கசிவால் மூச்சுத் திணறும் எண்ணூர்: தொடர் பாதிப்புகளால் தவிக்கும் மக்கள்

மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் சென்னை நகரின் வடக்கு முனையில் அமைந்திருக்கும் எண்ணூர் உண்மையாகவே மூச்சுவிடச் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் கலந்து வந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூர் மீனவக் கிராமங்கள் உட்பட, குடியிருப்புப் பகுதிகளையும் நாசம் செய்து ஒரு மாதம் கடந்துவிட்டது.

அதன் சுவடு மறைவதற்குள் டிசம்பர் 26 நள்ளிரவு கோரமண்டல் உரத் தொழிற்சாலை அம்மோனியா குழாயிலிருந்து கசிந்த அம்மோனியா வாயு எண்ணூரையே கலங்கடித்தது.

இந்தப் பிரச்னை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், “தற்காலிகமாக கோரமண்டல் நிறுவனத்தை மூடி வைத்துள்ளதாகவும் அதுகுறித்த ஆய்வறிக்கை அடிப்படையில் விரைவில் முடிவு எடுக்கப்படும்,” என்றும் தெரிவித்தார்.

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து காற்றிலும், நீரிலும் பெரும் அழிவைச் சந்தித்த எண்ணூர் மக்களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய களத்திற்குச் சென்றது பிபிசி தமிழ்.

நெஞ்சை கிழிக்கும் எண்ணூர்

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

சூரியகாந்தி பாட்டிக்கு 70 வயதாகிறது. தினமும் மீன் விற்பது அவர் தொழில். அவருக்கு இரண்டு மகள்கள், இருவருமே திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் இருக்கிறார்கள்.கோரமண்டல் நிறுவனத்தின் சுவர்களை ஒட்டியுள்ள பெரியகுப்பம் 1வது தெருவைச் சேர்ந்தவர் இவர்.

கடந்த 26.12.2023 அன்று நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த சூரியகாந்தி வெளியே சத்தம் கேட்டு ஓடி வந்திருக்கிறார். காற்றில் கந்தக நெடி மூக்கைத் துளைக்க, சுவாசிக்க சிரமப்பட்டு மற்ற மக்கள் ஓடும் திசைநோக்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளார்.

சூரியகாந்திக்கு நீண்ட நாட்களாக சர்க்கரை நோயும் இருந்திருக்கிறது. இந்நிலையில் அம்மோனியா புகையும் சேர்ந்துகொள்ள நெஞ்சடைப்பு மற்றும் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு அன்றிரவே திருவொற்றியூரில் உள்ள ஆகாஷ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

அங்கே ஊசி மற்றும் மாத்திரை கொடுத்து அவரை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அங்கிருந்து வந்த மறுநாளே மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு கை, கால், வாய் என அனைத்து இடங்களும் காயமடைந்தன. இந்நிலையில் 28.12.23 அன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சூரியகாந்தி.

இந்த முறை அவருக்கு இதயத்தில் கோளாறு என்று கூறிய மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து அன்றிலிருந்து 4.1.2024 வரை அவரை மருத்துவமனையில் வைத்திருந்தனர்.

இந்நிலையில் பிபிசி குழு அவரைச் சந்தித்தபோது தனக்கு இன்னமும் படபடப்பு, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாகவும் தன்னால் வீட்டிற்குச் செல்ல முடியாது என்றும் கூறினார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் தங்களை இன்றே வீட்டிற்குச் செல்லச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டினார். நாம் அவரைச் சந்தித்துவிட்டு வந்த சில மணிநேரங்களில் மருத்துவமனை நிர்வாகம் அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது.

தொடரும் ஆஞ்சியோக்கள்

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

பெரியகுப்பம் கிராமத்தில் சூரியகாந்தி வசிக்கும் அதே தெருவில் வசிக்கும் மற்றொருவர் 57 வயதாகும் தேசராணி. 26.12.23 ஆண்டு நள்ளிரவில் கழிவறை செல்ல எழுந்து வந்தவர் அம்மோனியா புகையின் நெடி தாங்காமல் தூங்கிக் கொண்டிருந்த தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் எழுப்பி காப்பாற்றியுள்ளார்.

ஆனால், இவரும் சூரியகாந்தி பாட்டியைப் போலவே நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரைப் போல இவருக்கும் முதல் நாளில் மாத்திரை ஊசிகள் வழங்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வந்த பின்னர் ஒரு நாள் கழித்து மீண்டும் மயக்கம், மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கும் ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது.

தேசராணிக்கு இதற்கு முன்னரே சர்க்கரை நோய் மற்றும் லேசான இதய கோளாறு இருந்துள்ளது. ஆனால், அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட பிறகுதான் இதயத்தின் நிலை முன்பைவிட மோசமாகியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் அவர்.

இவருக்கும் இன்னமும் பதற்றம், உடல் நடுக்கம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. ஆனால், இவரும் நாம் சந்தித்து வந்த அடுத்த சில மணிநேரங்களில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இவர்களோடு சேர்த்து 48 பேர் எண்ணூரில் வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. இவர்கள் யாரிடமும் பணம் பெறக்கூடாது என்று முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் எம்எல்ஏ கே.பி.சங்கர் ஆகியோர் கூறியிருந்தனர். அதன் அடிப்படையில் இந்த மக்கள் யாரிடமும் ஆகாஷ் மருத்துவமனையில் பணம் வாங்கவில்லை.

அம்மோனியா வாயு ஆஞ்சியோவுக்கு காரணமாகுமா?

அம்மோனியா வாயுவால் ஆஞ்சியோ செய்ய வேண்டிய தேவை இருக்குமா என்று தெரிந்துகொள்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர் அணுரத்னா அவர்களிடம் பேசினோம்.

“இதுபோன்ற வாயு சார்ந்த பிரச்னைகள் நுரையீரலைத் தாக்கும். அதனால், மூச்சுத் திணறல், மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும்.

அதற்காக 50 பேர் போகும்போது முதலில் அவர்களுக்கு ஆக்சிஜன் வழங்கும் சிகிச்சை அளிக்கப்படும். அதில் 48 பேர் சரியாகி, இருவர் குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு வேறு ஏதும் பிரச்னைகள் இருக்கிறதா என்று பார்ப்பார்கள்.

அதில் முதலில் பார்ப்பது பரிசோதிக்கப்படுவது இதயம்தான். அதில் பிரச்னை உள்ளது தெரியவந்த பின் ஆஞ்சியாவை பரிந்துரைப்பார்கள்,” என்கிறார் அவர்.

எண்ணூர் எப்படி இருக்கிறது?

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

அடுத்தடுத்து எண்ணெய் மற்றும் வாயுக் கசிவால் எண்ணூர் மூச்சுவிட முடியாமல் திணறி கொண்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் மீன்கள் இறந்து மிதந்ததை தொடர்ந்து, பங்குனி ஆமைகளும் செத்து கரை ஒதுங்கியுள்ளன. எண்ணெய்க் கழிவுகளால் பாதிக்கப்பட்ட முகத்துவாரக்குப்பம், எண்ணூர்குப்பம் மற்றும் அதை ஒட்டியுள்ள ஆற்றோரப் பகுதிகளின் கரைகளில் இன்னமும் எண்ணெய்க் கழிவுகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

இதனால், தங்கள் படகுகள் மற்றும் மோட்டார்கள் சேதமடைந்த மக்கள் அவற்றை அரசு கொடுத்த நிவாரண நிதியோடு மேலும் கடன் வாங்கி சரி செய்யும் பணிகளில் இறங்கியுள்ளனர்.

“என்னதான் சரி செய்தாலும் மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 6 மாதம் முதல் 1 வருடமாவது தேவைப்படும்” என்கிறார் எண்ணூர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர் எம். ராமன்.

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

அப்படியே சிறிது தூரமாகச் சென்று மீன்பிடித்து விட்டு வந்தாலும், எண்ணூர் பகுதியில் இருந்து வரும் மீன்களை காசிமேட்டில் யாரும் வாங்க முன்வருவதில்லை என்றும், அங்கிருக்கும் மீனவர்களே இவர்களை விற்க வேண்டாம் என்று சொல்வதாகவும் கூறுகிறார் மீனவர் ராமன்.

கடந்த 1990களில் நன்னீர் ஆறாக இருந்த இந்த இடம் அதற்குப் பின் பெருகிய நிறுவனங்களால் கொஞ்சம் கொஞ்சமாகப் பாழாகி விட்டதாகக் குறிப்பிடும் அவர், “மொத்தமா நாங்க அழிஞ்சி போயிட்டாக்கூட இன்னொரு பிறப்பு பிறந்து வாழலாம். ஆனால் இப்படியொரு வாழ்க்கை வாழவே கூடாது” என்று நொந்து கொண்டே தெரிவித்தார்.

எண்ணூரின் மூச்சை நிறுத்தும் வாயு

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

எண்ணூரில் 26.12.23 அன்று ஏற்பட்ட அம்மோனியா கசிவு விபத்துக்குப் பிறகு ஒரு சில காட்சிகள் மாறியுள்ளன. கோரமண்டல் நிறுவனத்தின் அம்மோனியா குழாய் கடலுக்குள் செல்லும் இடத்தில் புதிதாக ‘இது தடை செய்யப்பட்ட பகுதி’ என்ற எச்சரிக்கை போர்டு முளைத்துள்ளது. அதைச் சுற்றி எப்போதும் இரு காவலர்கள் இருக்கின்றனர்.

எண்ணூரில் இன்று நேற்றல்ல நீண்ட காலமாகவே மழைக் காலங்களில் அம்மோனியா வாயு திறந்து விடப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழையோடு மழையாகத் திறந்து விடப்படுவதால் ஒன்றும் தெரியாது என்று கூறும் அவர்கள், தற்போது திடீர் குழாய் விபத்து எண்ணூரையே நிலைகுலையச் செய்துவிட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.

இதனால் அந்த கோரமண்டல் ஆலையை மூட வேண்டும் என்று கூறி எண்ணூர் பாதுகாப்புக் குழு என்ற ஒருங்கிணைப்பு அமைப்பை உருவாக்கி 11 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில் ஈடுபட்டிருந்த மக்களிடம் பேசும்போது, இன்னமும் தாங்கள் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருவதாகக் கூறுகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு அதிகமாக தோல்சார் நோய்களும், சளி போன்ற நோய்களும் எப்போதுமே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதற்காக மருத்துவர்களிடம் சென்றாலும், முதலில் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுங்கள், அப்போதுதான் இந்தப் பிரச்னைகள் சரியாகும் என்று எச்சரிப்பதாகவும் எண்ணூர் மக்கள் கூறுகின்றனர்.

எண்ணூர் மருத்துவர்கள் கூறுவது என்ன?

எண்ணூர்

எண்ணூர் பகுதி சென்னையில் இருந்தாலும்கூட இன்னும் 33 கிராமங்களாகவே இயங்கி வருகிறது. இதில் 8 மீனவ கிராமங்களும் அடங்கும். இந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் நுரையீரல் தொடர்பான நோய்களாலும், தோல் நோய்களாலும் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கிறார் இதே பகுதியில் 30 வருடங்களாகப் பணியாற்றி வரும் மருத்துவர் உஷாதேவி.

பெரிய குப்பம், சின்னக்குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், சத்யவாணி முத்துநகர், உலகநாதபுரம், தாளாங்குப்பம், நெட்டுக்குப்பம், சிவன்படை வீதி உள்ளிட்ட எண்ணூரை சுற்றியுள்ள மக்கள் பலரும் இவரிடம் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்காக வருகின்றனர்.

அவர்களில் பலரும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், ஒவ்வாமை, தோல் நோய்கள், கண், தொண்டை, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்னைகளுக்காக வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

இதில் பலருக்கும் நீண்டகாலப் பிரச்னைகளாக ஆஸ்துமா, புற்றுநோய் உள்ளிட்டவையும் இருப்பதாகக் கூறுகிறார். அதில் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் பாதிக்கப்பட்ட அதிகமான மக்கள் வருவதாகக் குறிப்பிடுகிறார் மருத்துவர் உஷாதேவி. மேலும் இந்தப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் அதிகமாக நிம்மோனியா, சளி மற்றும் பிற நுரையீரல் சார் பிரச்னைகளுக்கு அதிகம் அவரிடம் வருவதாக நம்மிடம் தெரிவிக்கிறார்.

குறிப்பாக இந்த மக்கள் ஆண்டுதோறும் படை உள்ளிட்ட தோல் நோய்களுக்காக அதிகம் செலவு செய்வதாகத் தெரிவிக்கும் இவர் இதற்குக் காரணமாக இந்தப் பகுதியின் தொழிற்சாலை மாசுவை முன்வைக்கிறார்.

“இன்று நேற்றல்ல பல காலமாக இந்த வாயுக்களை திறந்துவிடும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. காற்று எந்தத் திசையில் போகிறதோ அந்தத் திசையில் உள்ள மக்களை அது மெதுவாக தாக்கிக் கொண்டேதான் இருக்கிறது,” என்கிறார் அவர்.

“சமீபத்தில் வந்த எண்ணெய்க் கழிவுகளை அகற்றுவதற்குக்கூட மீனவ கிராம மக்களையே தினக் கூலியாகப் பயன்படுத்தினார்கள். அவர்களும் அதன் ஆபத்து தெரியாமல் அந்த எண்ணெயில் இறங்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால், அது மேலும் அவர்களுக்கு மோசமான நோய்களையே ஏற்படுத்தும் என்பது அந்த மக்களுக்குத் தெரிவதில்லை,” என்று கூறுகிறார் மருத்துவர் உஷாதேவி.

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

எண்ணூர் பாதுகாப்புக் குழு

பல ஆண்டுகளாகவே எண்ணூரில் செயல்பட்டு வரும் நிறுவனங்களை ஒழுங்குமுறை படுத்தக் கோரியும், சில நிறுவனங்களை அகற்றக் கோரியும் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், இந்த முறை கடந்த 11 நாட்களாக கோரமண்டல் நிறுவனத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து எண்ணூரை சேர்ந்த 33 கிராம மக்களும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்களில் ஒருவரான மானுடவியல் ஆய்வாளர் முனைவர். அ.பகத் சிங்கிடம் பேசினோம்.

“எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் வந்து ஒரு மாதம் ஆகிறது. அம்மோனியா வாயு கசிந்து 10 நாட்கள் கடந்து விட்டது. ஆனால், மக்களிடம் முறையாக அதிகாரிகள் பேசுவதோ அல்லது அவர்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோ நடக்கவில்லை.

இதுவே அடையாறு, அண்ணா நகரில் இதுபோன்று நடந்திருந்தால் தமிழ்நாடே ஆடிப் போயிருக்கும். ஆனால், இது எண்ணூர் என்பதால் அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கே மெத்தனப் போக்கு இருப்பதாகத் தெரிவிக்கிறார் அவர்.”

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

பட மூலாதாரம், BAGATH VEERA ARUN

இத்தனை நாட்கள் கழித்து சமீபத்தில்தான் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டமே நடந்தது என்று குறிப்பிடும் அவர் அதனால் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை என்கிறார். “இதுவரை கோரமண்டல் நிறுவனத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, வழக்குகள் பதியப்பட்டுள்ளதா, என்று எந்த விவரங்களும் இந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், போராடும் மக்கள் மீது மட்டும் வழக்கு போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார் பகத் சிங்.

இந்த போராட்டக்குழுவைச் சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 353, 294B , 506 / 2 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் பகத்.

இதை காவல்துறையும் உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து இணை ஆணையாளர் விஜயகுமார் அவர்களிடம் பேசியபோது, “முதல்நாள் மறியல் செய்ததற்காக மக்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாக” தெரிவித்தோர். ஆனால், என்ன பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பதை விசாரணை காரணங்களுக்காகச் சொல்ல மறுத்துவிட்டார்.

மேற்கொண்டு பேசிய முனைவர் பகத் சிங், “இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட துறைகளான தொழில் துறை, சுற்றுச்சூழல் துறை, கடல்சார் துறை மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு ஆகிய துறைகள் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இன்று வரை அதெல்லாம் நடந்ததா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை. எது எப்படியோ, இந்த முறை கோரமண்டல் நிறுவனத்தை மூடும் வரை இந்த மக்களின் அறவழி போராட்டம் தொடரும் என்று முடித்தார் பகத் சிங்.

கோரமண்டல் நிறுவனம் மீது நடவடிக்கை?

இதுவரை கோரமண்டல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை அல்லது வழக்குகள் பதியப்பட்டுள்ளதா என்ற கேள்வியை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் கேட்டோம்.

“ஜனவரி 8ஆம் தேதியே இறுதி அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தத் தொழிற்சாலை மூடப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகள்

கோரமண்டல் ஆலையில் இருந்து அம்மோனியா வாயு கசிந்ததை அடுத்து அந்நிறுவனம் 27ம் தேதி தனது முதல் அறிக்கையை வெளியிட்டது. பின்னர் இரு நாட்கள் கழித்து 29.12.23 அன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அதில் அரசுக்குழு நிறுவனம் சோதனை செய்து அறிக்கை சமர்ப்பித்து விட்டதாகவும், பாதுகாப்பு சோதனைகளைச் செய்த பிறகு இயங்க அந்நிறுவனம் அனுமதி கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அடுத்த நாளே (30.12.2023) தங்களது முந்தைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அரசு சார்ந்த விஷயங்களை மறுத்து ஓர் அறிக்கையை வெளியிட்டது கோரமண்டல் நிறுவனம்.

மேலும், 29.12.23 தேதியிட்ட அறிக்கையிலேயே அம்மோனியா வாயுவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மேற்சொன்ன சூரியகாந்தி மற்றும் தேசராணி ஆகிய இருவரும் 4.1.2024 அன்றே மருத்துவமனையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி இந்த இருவருக்குமே உடல்நிலை மோசமடைந்து ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எண்ணூர் மக்களின் கேள்விகள்

மூச்சுத்திணறல் முதல் ஆஞ்சியோ வரை, எண்ணூரில் மறைக்கப்படும் உண்மைகள்

சூரியகாந்தி, தேசராணி ஆகிய இரு பெண்களும் அம்மோனியா வாயுக்கசிவால் பாதிக்கப்படவில்லை என்றும் இதயம் சார்ந்த பிரச்னைக்காகவே அனுமதிக்கப்பட்டனர் என்றும் ஆகாஷ் மருத்துவமனை நிர்வாகம் பிபிசி தமிழிடம் தெரிவித்தது. ஆனால், அம்மோனியா பாதிப்புக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட மற்ற 46 எண்ணூர்வாசிகளை போலவே சூரியகாந்தி, தேசராணி ஆகிய இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட இதயம் தொடர்பான சிகிச்சைக்கும் பணம் வசூலிக்கப்படவில்லை.

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அதனுடன் தொடர்பில்லை என மருத்துவமனை தரப்பிலிருந்து கூறப்படும் இரு பெண்களுக்கும் அதே வகைப்பாட்டில் கட்டணம் வசூலிக்காமல் சிகிச்சை அளித்தது ஏன் எனக் கேட்டபோது, மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து பதில் கிடைக்கவில்லை.

மேலும், சில விடை கிடைக்காத வினாக்களை எண்ணூர் மக்கள் முன்வைக்கின்றனர்.

  • இந்த வாயுக்கசிவு எவ்வளவு தீவிரமாக எண்ணூர் மக்களைப் பாதித்துள்ளது?
  • கோரமண்டல் நிறுவனம் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் அங்கு நடத்தப்படும் சோதனைகள் பற்றி இதுவரை அப்பகுதி மக்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாதது ஏன்?

சுகாதாரத் துறை செயலர் கூறுவது என்ன?

எண்ணூர்

மக்களின் உடல்நிலையை இந்த வாயுக்கசிவு எந்த அளவுக்குப் பாதித்துள்ளது என்பது குறித்து சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, “ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும், மீதமுள்ளவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். எங்களுக்குக் கிடைத்த கடைசி அறிக்கையின்படி, அவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள். இந்தப் பகுதி மாநகராட்சி எல்லைக்குள் வருவதால் அந்த அதிகாரிகளை விழிப்போடு இருக்க அறிவுறுத்தியுள்ளோம். ஆனால், இதுவரை புதிய தீவிரமான சுகாதார புகார்கள் எதுவும் வரவில்லை,” என்று கூறினார்.

இந்த மக்களுக்கு ஏதேனும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பகுதிக்கு பிரத்யேகமான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுமா என்று கேட்டபோது, மாநகராட்சி அதிகாரிகளிடம் இருந்து இறுதி அறிக்கை வந்த பின்பே அதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ‘டிஸ்சார்ஜ் சம்மரி’ கொடுக்கப்படாததன் காரணத்தைக் கேட்டபோது, ‘அது தனியார் மருத்துவமனை எனக்குத் தெரியாது” என்று கூறிவிட்டார் ககன்தீப் சிங் பேடி.

சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் பதில் என்ன?

“தற்காலிகமாக கோரமண்டல் நிறுவனத்தை மூடி வைத்துள்ளோம். தொழிற்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம் சோதனை செய்து அந்த நிறுவனம் இயங்கலாம் என்று கூறிய பிறகே அந்நிறுவனத்தை மீண்டும் இயக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்,” என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழக அரசின் குழு கோரமண்டல் நிறுவனத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து விட்டதாகவும், விரைவில் அதுகுறித்த தகவல் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »