Press "Enter" to skip to content

உணவு பாக்கெட் லேபிளை படிப்பது அவசியம் ஏன்? சரியானதை தேர்வு செய்வது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், பாயல் புயான்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

நீங்கள் வாங்கும் உணவு பாக்கெட்டுகளின் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிள்களை படிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள்? ஒரு சிப்ஸ் பாக்கெட்டில் இருந்து நீங்கள் சாப்பிடும் சிப்ஸில், எவ்வளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களிடம் பதிலிருக்க வாய்ப்பில்லை.

சந்தைகளில் பதப்படுத்தப்பட்ட மற்றும் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவில் இருக்கின்றன. அப்படி பல பொருட்கள் விற்கப்படும் இடத்திலிருந்து சரியான ஒரு பொருளை தேர்ந்தெடுப்பது எந்த ஒரு நபருக்கும் எளிதான விஷயம் அல்ல.

பிரபலமான மருத்துவ இதழான லான்செட் அறிக்கையின்படி, நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் நுகரப்படும் மொத்த கலோரிகளில் சராசரியாக 10 சதவீதம் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மூலம் வருகிறது.

இது பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நகர்ப்புற குடும்பங்களில் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் சில்லறை சந்தை 2021ம் ஆண்டில் ரூபாய் 2535 பில்லியனை எட்டியுள்ளது.

ஒரு உணவை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை படிப்பதன் அவசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஒரு உணவை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை படிப்பதன் அவசியம் என்ன?

அதே சமயம், சந்தை ஆராய்ச்சி நிறுவனமான யூரோமானிட்டர்(Euromonitor) இன் தரவுத்தளத்தின்படி, இந்தியாவில் தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விற்பனையில் சிறு மளிகை கடை விற்பனையாளர்களே முன்னணி வகிக்கின்றனர்.

2021ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரங்களின்படி, அதிகப்படியான உப்பு நிறைந்த தின்பண்டங்கள் சிறிய மளிகைக்கடைக்காரர்கள் வழியாகவே விற்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த இருபது ஆண்டுகளில் உடல் எடை பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறுகிறார், உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் அமைந்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் சமூக மற்றும் குடும்ப மருத்துவத் துறையின் கூடுதல் பேராசிரியர் மருத்துவர் பிரதீப் அகர்வால். இதற்குக் காரணம் நகரத்தை போல கிராமப்புறங்களிலும் அதிகரித்துள்ள பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்ணும் பழக்கம் தான் என்கிறார் அவர்.

“கடந்த பல ஆண்டுகளாகவே மக்களின் வாழ்வியல் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காலங்கள் மாற மாற, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. இந்த உணவுகள் உங்களுக்கு உடனடியான ஆற்றலைத் தந்தாலும், அதில் ஊட்டச்சத்துக்கள் இல்லை. இந்த பொருட்கள் அதிக அளவிலான இனிப்பு, உப்பு மற்றும் வெற்றுக் கலோரிகளையே கொண்டுள்ளன” என்கிறார் அவர்.

இந்த வெற்றுக் கலோரிகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள உணவுகளில் காணப்படுகின்றன.

ஒரு உணவை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை படிப்பதன் அவசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

உணவு பாக்கெட் லேபிள்களை படிப்பது அவசியம் ஏன்?

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விதி 2011இன் படி, இந்தியாவில் விற்கப்படும் ஒவ்வொரு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டிலும், அதன் ஊட்டச்சத்து விவரங்கள் குறித்த தகவல்கள் இருக்க வேண்டும்.

இந்த தகவல்கள் எந்த ஒரு உணவு பாக்கெட்டையும் வாங்குவதற்கு முன்பு அதில் என்ன உள்ளது, நாம் எதை வாங்குகிறோம் என்று நுகர்வோர் அறிந்து கொள்ள உதவும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நம்புகிறது.

ஆனால் உண்மையில், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுத் தொழில் செய்வோர் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை விற்பதாக குற்றம்சாட்டப்படுவதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேள்வி என்னவென்றால், உணவுப்பொருள் குறித்த தகவலை பின்புறத்தில் கொடுக்கும்போது, முன் பக்கத்தில் எழுத வேண்டிய அவசியம் என்ன?

உண்மையில், இந்தியாவின் பெரும்பகுதி மக்கள்தொகை ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளதை படிக்க தெரியாதவர்கள்.

மேலும், பலரும் உணவு பாக்கெட்டுகளில் எழுதப்பட்டுள்ள விவரங்கள் மிகவும் சிறிய எழுத்துக்களில் இருப்பதாக புகார் கூறுகின்றனர்.

இதனால், அது கண்ணுக்கே தெரிவதில்லை. எனவே, படிக்க தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் அனைவருக்கும் புரியும் வகையில் ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

ஒரு உணவை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை படிப்பதன் அவசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

முன்பக்க லேபிளில் என்ன இருக்கிறது?

நீண்ட நாட்களாகவே பேக்கேஜின் முன்பக்க லேபிள் வழக்கத்தை ஊக்குவிப்பது குறித்தான விவாதம் நடந்து வருகிறது. அதனால், வாடிக்கையாளர்கள் எளிதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தேர்வு செய்ய முடியும்.

ஒரு சிகரெட் பாக்கெட்டை எடுத்து கொள்ளுங்கள். அதன் முன்புறம் வாடிக்கையாளர்கள் அதை வாங்குவதற்கு முன் சிந்திக்கும் வகையில் எச்சரிக்கை படம் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்கு பிறகு அதை வாங்குவதும், வாங்காமல் போவதும் அந்த வாடிக்கையாளரின் முடிவு.

உலக சுகாதார நிறுவனத்தின்படி, “ முன்பக்க லேபிளிங் நுகர்வோருக்கு தெளிவாக தெரியும் வகையிலும், எளிமையாக புரியும் வகையிலும் மற்றும் வரைபடமாகவும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.” அதில் உள்ள தகவல்கள், பின்பக்கம் என்ன தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளதோ அதோடு பொருந்த வேண்டும்.

2014 ஆம் ஆண்டு, ஏற்கனவே உள்ள விதிகளை மேலும் சீராக்கும் வகையில், உணவுப் பாக்கெட்டுகளில் லேபிளிங் முறையை முன்மொழிந்தது FSSAI. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் இந்த பரிந்துரை செய்யப்பட்டது.

பல ஆண்டுகளாகவே இது தொடர்பான் ஆலோசனைகள் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றது. பாக்கெட் உணவுத் தொழில் துறையினர் இதற்கு ஒப்புக் கொள்ளாத நிலையில், சுகாதார நிபுணர்கள் கடுமையான விதிமுறைகளைக் கோருகின்றனர்.

ஒரு உணவை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை படிப்பதன் அவசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்திய ஊட்டச்சத்து மதிப்பீடு

செப்டம்பர் 2022இல், FSSAI ‘பேக்கின் முன்பக்க லேபிளிங் ‘ என்ற வரைவை வழங்கியது.

இந்த வரைவில், இந்திய ஊட்டச்சத்து மதிப்பீட்டு மாதிரியை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவு வைக்கப்பட்டது. அதன்படி, ஒரு உணவில் அதிகமான சத்துக்கள் இருந்தால் அது 5 விண்மீன் மதிப்பீடுகை பெறும்.

ஊட்டச்சத்தில் குறை இருந்தால் மதிப்பீடு குறையும். ஆனால், அரை ஸ்டாருக்கு கீழ் எந்த உணவிற்கும் மதிப்பெண் வழங்க முடியாது. இந்த வரைவு ஐஐஎம்(Indian Institute of Management) அஹமதாபாத்தால் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

“விண்மீன் மதிப்பீடுகுகளுக்கு பதிலாக தெளிவான எச்சரிக்கை லேபிள்களையே நாங்கள் கேட்கிறோம்” என்கிறார் நுகர்வோர் உரிமை ஆர்வலரும், குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழுவின் நிர்வாக இயக்குநருமான சரோஜா.

“எல்லோரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் பாக்கெட்டுகளில் லேபிள்கள் இருக்க வேண்டும்” என்று கூறுகிறார் அவர். அவர்களுக்கு படிக்கத் தெரியுமோ தெரியாதோ, அவர் ஆங்கிலம் பேசுபவரோ அல்லது ஹிந்தி பேசுபவரோ யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அது புரிய வேண்டும் . அதை மிகவும் எளிமையாக வழங்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.

“முன்பக்க பேக் லேபிளிங் குறித்தான FSSAI கூட்டத்தில் விண்மீன் மதிப்பீடு பற்றி பேசப்பட்டது. அதில் அரை நட்சத்திரம் முதல் 5 நட்சத்திரங்கள் வரை சொல்லப்பட்டது. அதாவது, ஒரு உணவு 5 நட்சத்திரங்கள் பெற்றிருந்தால் அது ஆரோக்கியமான உணவு, அதுவே ஒரு உணவுக்கு அரை நட்சத்திரம் கிடைத்தால் அது ஆரோக்கியம் குறைந்த உணவு” என்கிறார் அவர்.

“ஆனால், இந்த மதிப்பீடு முறையில் நாங்கள் கண்டறிந்த பிரச்சனை என்னவென்றால், அரை நட்சத்திரத்திற்கு கீழ் எந்த உணவுக்கும் நீங்கள் மதிப்பீடு வழங்க முடியாது. நட்சத்திரம் இருப்பதன் அர்த்தம் ஏதோ ஒரு நல்ல விஷயம் அதில் இருக்கிறது என்பதே. ஆனால் அது உண்மையல்ல.

இந்த வரைவை அரசின் முன் சமர்பிப்பதற்கு முன்பு, பொதுமக்களின் கருத்தை தெரிந்து கொள்ள விரும்பியது எப்எஸ்எஸ்ஏஐ. அதற்காக நவம்பர் 2022இல் இந்த வரைவு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது. இந்த வரைவின் மீது ஏரளாமான விவாதங்கள் தொடங்கின.

இது பொது சுகாதார வல்லுநர்களால் பரவலாக விமர்சிக்கப்பட்டது. இந்திய ஊட்டச்சத்து மதிப்பீடுகில் விடுபட்டிருந்த கல்விசார் கூறுகளைச் சேர்க்க அவர்கள் வலியுறுத்தினார்கள்.

“சராசரியாக ஒருவர் உணவுப் பாக்கெட்டை வாங்குவதற்கு முன்பு 7 முதல் 8 வினாடிகள் வரை செலவிடுகிறார்கள். இந்த 7 முதல் 8 வினாடிகளில் படிக்கக்கூடிய மற்றும் அந்த பொருளை நாம் வாங்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று தெளிவாக விளக்க கூடிய ஒரு பேக் லேபிளை நாம் உருவாக்க வேண்டும்,” என்கிறார் மருத்துவர் பிரதீப் அகர்வால்.

”இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலில் அது எளிதாகப் புரிந்து கொள்ள கூடியதாக இருக்க வேண்டும், இரண்டாவது அது சைகை மொழியிலும் இருக்க வேண்டும். நம் நாட்டின் பன்முகத்தன்மையை நினைவில் கொண்டு பேக் லேபிளிங்கை நாம் தேர்வு செய்ய வேண்டும்.”

ஆனால் பல நிபுணர்கள் குழுவின் பரிந்துரைகள் மற்றும் வரைவு விதிமுறைகள் இருந்தும் கூட, இந்தியா இன்னும் தெளிவான முன்பக்க பேக் லேபிளிங் முறைக்கு உடன்படவில்லை.

ஒரு உணவை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை படிப்பதன் அவசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

எந்த நாடுகளில் முன்பக்க பேக் லேபிளிங் முறை உள்ளது?

லான்செட்டில் வெளியாகியுள்ள கட்டுரையின்படி, முன்பக்க பேக் லேபிள்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.

  • ‘நோர்டிக் கீஹோல் லோகோ’ மற்றும் ‘ஹெல்த் சாய்ஸ் லோகோ’
  • எச்சரிக்கை லேபிள்கள்
  • ஸ்பெக்ட்ரம் லோகோ

‘நோர்டிக் கீஹோல் லோகோக்கள்’ வடக்கு ஐரோப்பிய நாடுகளில் செல்லும். ‘ஹெல்த்கேர் சாய்ஸ் லோகோக்கள்’ சிங்கப்பூரில் செல்லும். இந்த இரண்டு வகையான லோகோக்களும் உணவுத் தொழிலுக்கு மிகவும் உகந்தவை. ஏனெனில் அவை உணவிற்கு நேர்மறையான வெளிச்சத்தை தருகிறது.

இந்த வகை பாக்கெட்டுகளில் உள்ள உணவு சத்துள்ளதா அல்லது இல்லையா என்பதை இந்த லேபிளிங் நுகர்வோருக்கு தெளிவாகக் கூறுவதில்லை.

முன்பக்க பேக் லேபிள்களின் இரண்டாவது வகை, எச்சரிக்கை லேபிள்களாகும். இந்த லேபிளிங் முறை சிலி மற்றும் மெக்சிகோவில் செல்லுகின்றன. இந்த எச்சரிக்கை லேபிள்கள் பாக்கெட்டில் உள்ள உணவுப் பொருட்கள் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை மீறியவை என்றும், தொடர்ந்து உட்கொள்ள தகுந்தவை அல்ல என்பதையும் தெளிவாக உணர்த்துகின்றன.

மூன்றாவது வகையானது ஸ்பெக்ட்ரம் லேபிள், இதில் ஊட்டச்சத்து மதிப்பெண் போன்ற சுகாதார விண்மீன் மதிப்பீடு மற்றும் ட்ராஃபிக் லைட் சிக்னல் உள்ளிட்டவை இருக்கும். ஊட்டச்சத்து மதிப்பெண் ஐரோப்பிய நாடுகளில் அனுமதிக்கப்படுபவை, பல ட்ராஃபிக் லைட்டுகள் பிரிட்டனில் மற்றும் ஹெல்த் விண்மீன் மதிப்பீடு நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அனுமதிக்கப்படுகின்றன.

பல வகையான லேபிளிங் அமைப்புகளில், மற்றதை விட சிறந்தது என ஒன்று உள்ளதா?

இதுகுறித்து பேசும் எஸ்.சரோஜா, ​​“சிலி மற்றும் இஸ்ரேலில் எச்சரிக்கை லேபிள்கள் பயன்படுத்தப்படுகின்றன. மக்கள் படிப்படியாக உப்பு, சர்க்கரை அல்லது கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைத்து வருவதாக பல ஆய்வுகளும் கூட தெரிவிக்கின்றன. மேலும், இந்த உணவு பாக்கெட்டுகளை தயாரிக்கும் நிறுவனங்களே அவர்கள் தங்கள் தயாரிப்புகளை உருவாக்கும் முறையையும் மாற்ற வேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார்.

ஒரு உணவை வாங்குவதற்கு முன்பு அதன் லேபிளை படிப்பதன் அவசியம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

சரியானதை தேர்வு செய்வது எப்படி?

‘பின்பக்க பேக் லேபிளிங் என்பது ஒன்றுமே இல்லை மற்றும் முன்பக்க லேபிளிங் அமைப்பே தீர்வு’ என்று நம்புகிறார் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குழந்தை மருத்துவ உட்சுரப்பியல் நிபுணரும், ‘சுகர் தி பிட்டர் ட்ரூத்’ ஆசிரியருமான புகழ்பெற்ற அமெரிக்க மருத்துவர். ராபர்ட் லஸ்டிங்.

“மிகச் சிலரே பின்னால் உள்ள லேபிளை படிக்கிறார்கள்,” என்று கூறுகிறார் அவர். மற்றொன்று , குறிப்பிட்ட நிறுவனம் உங்களுக்கு சரியான தகவலை வழங்குவது இல்லை. சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாத வார்த்தைகளையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதை நாம் ‘தெளிவான பார்வையை மறைத்தல்’ என்று அழைக்கிறோம், அதாவது விஷயங்களை மறைப்பது.”

“உண்மையில் பிரச்னை அந்த உணவுப்பொருளில் இல்லை, மாறாக அதில் இவர்கள் என்ன செய்து வைத்துள்ளார்கள் என்பதே பிரச்னை. எனது கருத்தின்படி , தற்போது உலகளவில் காணப்படும் முன்பக்க லேபிளிங்கே பிரச்னைதான். இதற்கு தீர்வே கிடையாது.”

பாக்கெட் உணவுகளை வாங்கும்போது நினைவில் கொள்ள வேண்டியவை என்ன? இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் ராபர்ட் லஸ்டிங் , மூன்று விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள சொல்கிறார்.

  • உங்களது குடல், கல்லீரல் ஆகிய உறுப்புகளை பாதுகாக்கும், மூளைக்கு வலு சேர்க்க கூடிய உணவாக இருக்க வேண்டும்.
  • குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நீங்கள் உண்ணும் உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் இருக்க வேண்டும்.
  • சர்க்கரை மற்றும் காட்மியத்திலிருந்து உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க வேண்டும். சர்க்கரை உள்ள பொருட்கள் உங்கள் கல்லீரலை பாதிக்கிறது. இப்போதெல்லாம் பலருக்கும் கல்லீரல் கொழுப்பு (fatty liver) பிரச்சனை இருப்பதை நாம் பார்க்கிறோம்.
  • ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளைக்கு மிகவும் அவசியம், இதுவும் அதில் இருக்க வேண்டும்.

இறுதியாக “இந்த மூன்றும் இல்லாத பொருட்களை வாங்க வேண்டாம் என்பதல்ல எனது அறிவுரை” என்று கூறுகிறார் மருத்துவர் ராபர்ட்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »