Press "Enter" to skip to content

சிஏஏ போராட்டம்: உமர் காலித் பிணை மனுவை ஓராண்டில் ஒருமுறை கூட விசாரிக்காத உச்ச நீதிமன்றம் – பட்டியலிடுவதில் விதிமீறலா?

பட மூலாதாரம், Getty Images

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்தின் பிணை மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உமர் காலித்தின் பிணை மனு ஜனவரி 10ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்த நிலையில், தற்போது இந்த விசாரணை ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உமர் காலித்தின் வழக்கறிஞர் கபில் சிபல், அரசியல் சாசன பெஞ்சில் விசாரிக்கப்படும் பல்வேறு வழக்குகளில் அவர் வேலையாக இருப்பதாகவும், எனவே இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு இன்று வேலையாக இருப்பதாக அந்த கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேலா திரிவேதி, இனியும் இந்த வழக்கை ஒத்திவைக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.

2023-ம் ஆண்டு உமரின் மனு மீது ஒரு நாள் கூட விசாரணை நடத்தப்படவில்லை.

மாணவர் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித் செப்டம்பர் 2020 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிப்ரவரி 2020 இல் வடகிழக்கு டெல்லியில் வன்முறையைத் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது இரண்டு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வழக்கில் உமருக்கு ஏப்ரல் 2021 இல் பிணை கிடைத்தது. இரண்டாவது வழக்கில், அவர் மீது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் அவரது பிணை மனுவை இதுவரை இரண்டு நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன. அவரது பிணை மனு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 2023 முதல் நிலுவையில் உள்ளது.

உமர் காலித்துக்கு எதிரான ஆதாரங்கள் மிகவும் பலவீனமாக இருப்பதாக பல சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். எனவே அவருக்கு விரைவில் பிணை கிடைத்துவிடும். கடந்த சில மாதங்களாக வழக்கறிஞர்களின் ஒரு புகார் என்னவென்றால், காலித்தின் பிணை மனு, பட்டியல் விதிகளை மீறி ஒரு அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது தான்.

அவர் மீதான வழக்கின் விசாரணை 2020 முதல் தொடங்கவில்லை. அவர் மீது இன்னும் குற்றச்சாட்டுகள் கூட பதிவு செய்யப்படவில்லை.

உமர் காலித்

பட மூலாதாரம், Getty Images

உமர் காலித் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக 2019 டிசம்பரில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, முஸ்லிம்களைத் தவிர இந்துக்கள், ஜைனர்கள் போன்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பேசப்பட்டது. இந்தப் போராட்டங்களில் உமர் காலித் நேரடியாகப் பங்கேற்றார். ஆர்ப்பாட்டங்கள் சுமார் மூன்று மாதங்கள் நீடித்தன.

பிப்ரவரி 2020 இல், வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்களாக இருந்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட உமர் காலித் மற்றவர்களுடன் சதி செய்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதனால்தான் கலவரங்கள் நடந்தன என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.

உமர் காலித் மீது இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டன. எஃப்ஐஆர் எண் 101/2020, 24 பிப்ரவரி 2020 அன்று வடகிழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. இதில், உமர் மீது கலவரம், கல் வீச்சு மற்றும் வெடிகுண்டு வீச்சு, இரு சமூகத்தினரிடையே வெறுப்புணர்வை பரப்புதல், போலீசாரை தாக்குதல், அரசு சொத்துகளை சேதப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்த வழக்கில், ஆழ்ந்த சதியால்தான் டெல்லியில் கலவரம் நடந்ததாக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) க்கு எதிராக தவறான தகவல்களை பரப்பியதாகவும், சாலை மறியல் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்த சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை உமர் காலித் சந்தித்ததாக ஒரு சாட்சி அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.

கல்வீச்சு நடந்த நேரத்தில் காலித் அங்கு இல்லை என்று காலித்தின் வழக்கறிஞர் கூறுகிறார். உமர் காலித் கைது செய்யப்பட்டிருப்பது எதிர்ப்புக் குரலை நசுக்கும் அரசியல் சதி என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வன்முறையின் போது உமர் காலித் அங்கு இல்லை என்பதையும், வன்முறையில் அவர் ஈடுபட்டதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் அவருக்கு எதிராக இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.

பிணை வழங்கும் போது, ​​”இந்த வழக்கில், முழுமையடையாத விஷயங்களின் அடிப்படையில், உமர் காலித்தை சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாது” என்று நீதிமன்றம் கூறியது.

உமர் காலித்

பட மூலாதாரம், Getty Images

முதல் தகவல் அறிக்கை எண் 59

முதல் வழக்கில் பிணை கிடைத்தாலும், உமர் காலித் மீது இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதால், அவர் இன்னும் சிறையில் இருக்கிறார். உமர் காலித் மற்றும் பலர் FIR எண் 59/2020 -ன் மூலம் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

மற்ற பிரிவுகளைத் தவிர, உமர் காலித் மீது தீவிரவாதம், சதி, யுஏபிஏவின் கீழ் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளின் கீழ் கலவரத்தில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

பிஞ்ச்ரா டாட் (Pinjra Tod) மற்றும் ஸ்டூடன்ட் ஃபெடரேசன் ஆஃப் இந்தியா (Student Federation of India) போன்ற அமைப்புகள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) க்கு எதிராக போராட்டம் நடத்த சதி செய்து முட்டுக்கட்டையை உருவாக்கியதாக அரசாங்கம் கூறுகிறது. இதில் “காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் மீதான தாக்குதல்கள், வகுப்புவாத வன்முறைகள், முஸ்லிம் அல்லாதவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்,” ஆகியவை அடங்கும்.

கலவரத்திற்கு மூளையாக உமர் காலித்தை அரசு வர்ணித்து, அவரை கண்காணிப்பிலேயே வைத்திருந்துள்ளது. இதற்காக, அநாமதேய சாட்சிகளின் வாக்குமூலங்கள், உமர் காலித் தொடர்புடைய வாட்ஸ்அப் குழுக்களுக்கு செய்யப்பட்ட அழைப்புகள் மற்றும் போராட்டங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் அவர் முன்னிலையில் இருப்பது ஆகியவற்றை அரசாங்கம் அடிப்படையாகக் கொண்டு இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

இருப்பினும், கலவரம் நடந்தபோது அவர் டெல்லியில் இல்லை என்பது உமர் காலித் தரப்பில் முன்வைக்கப்படும் வாதமாக உள்ளது.

அவர் எந்த விதமான ஆத்திரமூட்டும் பேச்சும் அல்லது வன்முறையைத் தூண்டவும் இல்லை என்று வாதிடுகிறார். அரசு தரப்பு சாட்சியங்கள் எந்த குற்றத்தையும் நிரூபிக்கவில்லை என்று அவர் கூறுகிறார். ஜார்கண்டில் உள்ள பழங்குடியினர் நலன் குறித்து உமர் காலித் எழுதிய அவரது பிஎச்டி ஆய்வறிக்கையில் இருந்து அவரது எண்ணங்களை மதிப்பிட முடியும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

உமர் காலித்

பட மூலாதாரம், Getty Images

நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

டெல்லியின் கர்கார்டூமா நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் உமர் காலித்தின் பிணை மனுவை நிராகரித்துள்ளன. உமர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று இரு நீதிமன்றங்களும் தெரிவித்தன. மற்ற உண்மைகளுடன் நீதிமன்றம் பின்வரும் உண்மைகளை நம்பியுள்ளது:

  • உமர் காலித் பல வாட்ஸ்அப் குழுக்களில் செயல்பட்டு அவற்றின் ஒரு பகுதியாக இருந்தார். அந்த குழுக்களில் கலவரத்திற்குக் காரணமான சதிகாரர்கள் சாலைகளை மூடி போக்குவரத்தை முடக்குவது பற்றி விவாதித்தனர்.
  • கலவரம் தொடங்கிய பிறகு, மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் உமருக்கு பல அழைப்புகளைச் செய்தனர். இது அவர் கலவரத்தில் ஈடுபட்டதைக் காட்டுகிறது.
  • பல சாட்சிகள் அந்த சாட்சிகளில் யாருடைய அடையாளங்களும் வெளியிடப்படவில்லை என்ற நிலையில், அவர்கள் காலித் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். காலித் ‘போக்குவரத்து முடக்கத்தை’ ஆதரித்ததாகவும், அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுகோள் விடுத்ததாகவும், ஆவேசப் பேச்சுக்களைப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.
  • அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகாராஷ்டிரா வருகையைக் குறிப்பிட்டு காலித் உரை நிகழ்த்தினார். ஒரு சாட்சியின்படி, அவர் மக்களை சாலைகளுக்கு வந்து போராட அழைப்பு விடுத்தார்.

டெல்லி உயர்நீதிமன்றம், உமர் காலித் ஒரு புரட்சிக்கு அழைப்பு விடுத்தார் என்றும், அது பொதுமக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் நம்பினார் என்றும் ரத்தம் சிந்தித்தான் எதையும் சாதிக்க வேண்டும் என்பது சரியானதல்ல என்று அவர் நம்பினார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

உமர் காலித்

பட மூலாதாரம், Getty Images

பிணை அளிப்பது தொடர்பான விதிகள் என்ன?

குற்றம் சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கும் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவரிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டுமென்றால் அவரை அழைக்க முடியுமா, அவர் தலைமறைவாகச் சென்றுவிடும் ஆபத்து இருக்கிறதா, சாட்சியங்களை சிதைப்பது அல்லது சாட்சிகளை மிரட்டுவாரா ஆகிய மூன்று முக்கிய விஷயங்களை நீதிமன்றம் கவனிக்க வேண்டும்.

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்ட (UAPA) வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நீதிமன்றம் திருப்தி அடைய வேண்டும். எனவே, பெரும்பாலும் பிணை வழங்கும் போதே, வழக்கின் ஒரு சிறிய விசாரணை நடைபெறுகிறது, அங்கு குற்றம் சாட்டப்பட்டவர் முதன்மையான குற்றவாளியாகத் தோன்றுகிறாரா இல்லையா என்பதை நீதிமன்றம் பார்க்கிறது.

2019 ஆம் ஆண்டில், பிணை குறித்து தீர்மானிக்கும் போது நீதிமன்றத்தால் சாட்சியங்களை ஆராய முடியாது என்று உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. எனவே, நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஆதாரங்களை அரசுத் தரப்பு நம்பியிருந்தாலும், பிணை கோரும் நிலையில் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அடுத்தடுத்த தீர்ப்புகள் இதனைக் குறைத்து, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA-ன்) கீழ் பிணை பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது.

இருந்த போதிலும், உமர் காலித்துக்கு எதிரான ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்று பல சட்ட வல்லுநர்கள் வாதிடுகின்றனர். எனவே நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருக்க வேண்டும். அவருக்கு எதிரான ஆதாரங்கள் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தைப் (UAPA) பாய்ச்சுவதை நியாயப்படுத்தவில்லை என்றும் காலித்தின் வழக்கறிஞர் கூறுகிறார். வெறும் வாட்ஸ்அப் குழுவில் அங்கம் வகிப்பது மட்டுமே குற்றமல்ல என்றும், போக்குவரத்தை முடக்குவது என்பது அரசியல் கட்சிகளும் பயன்படுத்தும் ஒரு சாதாரண போராட்ட வடிவமாகும் என்றும் அவர் கூறுகிறார்.

வன்முறையைத் தூண்டும் வகையில் உமர் காலித் பேசவில்லை என்று சில சாட்சிகளின் வாக்குமூலங்கள் முரண்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில், வன்முறை வெடிப்பதற்கு முன்பு, பல பாஜக தலைவர்கள் ஆவேசமான பேச்சுகளைப் பேசியதாகவும் ஆனால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படவில்லை என்றும் பலர் கூறுகிறார்கள்.

உமர் காலித்

பட மூலாதாரம், Getty Images

வழக்கை பட்டியலிடுவதில் விதிமீறலா?

உமர் காலித்துக்கு பிணை வழங்காதது தவிர, அவரது மனு பட்டியலிடப்பட்ட விதமும் விமர்சிக்கப்பட்டது.

உமர் காலித்தின் மனு முதலில் உச்ச நீதிமன்றத்தில் 2023 மே மாதம் பட்டியலிடப்பட்டது. அதன் அடிப்படையில், அரசுக்கு அறிவிப்பு அனுப்பப்பட்டு பதில் கோரப்பட்டது. அதன்பிறகு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக டெல்லி காவல் துறையினர் கூடுதல் அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கிலிருந்து நீதிபதி விலகினார். இது தவிர, இருதரப்பு வழக்கறிஞர்களும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அரசியல் சாசன வழக்குகளில் பங்கேற்றதால், பல முறை இருதரப்பு வழக்கறிஞர்களும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

அக்டோபர் மாதம், உமர் காலித்தின் வழக்கறிஞர், காலித் எந்த குற்றமும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க 20 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்று கூறினார்.

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) சில பிரிவுகளின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானவை என்று கோரும் மனுக்களுடன் அவரது வழக்கு பின்னர் பட்டியலிடப்பட்டது.

இது குறித்து அவரது வழக்கறிஞர்கள் கூறுகையில், இந்த பிணை மனு மீதான விசாரணையை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) சில விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் இருந்து பிரிக்க வேண்டும் என்கின்றனர்.

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) அரசியல் சாசன வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களில் ஒருவரான பிரசாந்த் பூஷன், வழக்கைப் பட்டியலிட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

டிசம்பர் 6 ஆம் தேதி, மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், பட்டியல் விதிகளை மீறி சில வழக்குகள் சில அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், எந்த வழக்குகள் தவறாக ஒதுக்கப்பட்டன என்பதை தவே குறிப்பிடவில்லை.

உமர் காலித்தின் பிணை வழக்கு இப்போது நீதிபதி பேலா திரிவேதி தலைமையிலான அமர்வு முன் பட்டியலிடப்பட்டுள்ளது. முன்னதாக, நீதிபதி திரிவேதி, உமர் காலித்தின் பிணை மனுவை விசாரித்த ஜூனியர் நீதிபதியாக இருந்தார். மேலும் சில மூத்த நீதிபதிகள் அமர்வை வழிநடத்தினர். இப்போது அவர் இந்த அமர்வுக்கு தலைமை தாங்குகிறார்.

ஆர்ட்டிகிஸ் 14 என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையில், “இது வழக்குகளை பட்டியலிடுதற்கான உச்ச நீதிமன்றத்தின் விதிகளுக்கு முரணானது. மூத்த நீதிபதிக்குத்தான் இந்த வழக்கை ஒதுக்கியிருக்க வேண்டும். அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல வழக்குகள் குறிப்பிட்ட அந்த நீதிபதி தலைமையிலான அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அளித்த பேட்டியில் “அனைத்து வழக்குகளிலும் உச்ச நீதிமன்றத்தால் பட்டியல் செயல்முறை சரியாகப் பின்பற்றப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, உமர் காலித்துக்கு பிணை வழங்க மறுத்த விசாரணை நீதிமன்றம், குறைந்தபட்சம் மூன்று முறை தனது உத்தரவை வெளியிடுவதை ஒத்திவைத்தது. இது ஒரு அசாதாரண சம்பவம் என்பதே உண்மை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »