Press "Enter" to skip to content

கர்நாடகாவை உலுக்கும் ‘கலாசார காவலர்கள்’ – கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் புகார்

பட மூலாதாரம், AFP

இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவில் சமீபகாலமாக நடந்து வந்த ஒரு வழக்கில் கலாசாரக் காவலர்கள் குறித்த புதிய புகாரால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு எதிராக குற்றங்களைச் செய்த, ‘கலாசாரக் காவலர்கள்’ என்று கூறிக் கொண்டவர்கள் தன்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் சிஆர்பிசி பிரிவு 164ன் கீழ் அந்த பெண், மாஜிஸ்திரேட் முன்பு தனது வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளார்.

ஹங்கல் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேற்று சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் விடுதியில் தங்கியிருந்ததால் ஏழு ஆண்கள் தன்னைத் துன்புறுத்தியதாக இந்த 28 வயது பெண் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தின் போது ஏழு இஸ்லாமியர்கள் தன்னை ஹோட்டலில் இருந்து கடத்திச் சென்றதாகவும், அந்த நபர்கள் தன்னை அருகிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு இழுத்துச் சென்று அடுத்த 24 மணி நேரத்திற்குள் பலமுறை வன்புணர்வு செய்ததாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் 7 பேர் மீது வேண்டுமென்றே பெண்ணின் நாகரீகத்தை மீறுதல், சட்டவிரோதமாக மிரட்டல் மற்றும் பலத்தை பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் கர்நாடக காவல்துறை முதலில் வழக்கு பதிவு செய்தது.

மேலும், சட்டவிரோதமாக கூடுதல், வன்முறை, அனுமதியின்றி வலுக்கட்டாயமாக ஒரு இடத்தில் நுழைந்து துன்புறுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஒரு முஸ்லிம் பெண்ணும், இந்து ஆணும் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மையில் என்ன நடந்தது?

இந்நிலையில், இந்த ஜோடியை வெவ்வேறு மதத்தை சேர்ந்த இருவர் தாக்கிய காணொளி மிகுதியாக பகிரப்பட்டு பரவி வருகிறது. இவர்கள் இருவரும் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள சிர்சியை சேர்ந்தவர்கள்.

இந்த இருவரும் ஹோட்டல் அறையில் இருந்தபோது, ​​ஹோட்டலின் குழாய்களை சரிசெய்வது பற்றி பேசிக்கொண்டு வெளியாட்கள் ஒரு குழுவாக வந்து வலுக்கட்டாயமாக அறைக்குள் நுழைந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இந்த ஜோடியைத் துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதற்குப் பிறகு, அந்த ஆண்கள் குழு அந்த பெண்ணை அறைக்கு வெளியே இழுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை காரில் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதன் பின், அந்த நபர்கள் அந்த பெண்ணை யாருமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதே சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள மற்றொரு காணொளியில், சில ஆண்கள் புதருக்குப் பின்னால் ஒரு பெண்ணை துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்குப் பிறகு, அதே சம்பவம் தொடர்பான மூன்றாவது காணொளிவும் வெளிவந்தது. அதில் பெண்ணை ஆண்கள் சிலர் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

காணொளியில், அந்த பெண், “நான் அவர்களிடம் கெஞ்சினேன். என்னை விடுவிக்குமாறு அவர்களிடம் பலமுறை கெஞ்சினேன். ஆனால் அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. நான் அவர்களது காலில் விழுந்து என்னை பாலியல் ரீதியாகத் தாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்,” என்று புகார் தெரிவிக்கிறார்.

கர்நாடகாவில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

காவல் துறை என்ன கூறியது?

கடந்த ஜனவரி 7ஆம் தேதி ஒரு முஸ்லிம் பெண்ணும், இந்து ஆணும் விடுதி அறையை வாடகைக்கு எடுத்ததாக ஓட்டல் ஊழியர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

ஹாவேரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷு குமார் பிபிசியிடம் பேசுகையில், “சிஆர்பிசியின் 164வது பிரிவின் கீழ் அந்த பெண், மாஜிஸ்திரேட் முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார், அதன் பிறகு இந்திய தண்டனைச் சட்டம் (கூட்டு பாலியல் வன்கொடுமை) பிரிவு 376 (டி) இன் கீழ் ஏழு பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

“காவல் நிலையத்தில் அந்தப் பெண் வாக்குமூலம் அளித்த போது, ​​கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைப் பற்றி தெரிவித்திருக்கிறார். ஆனால் கூட்டு வன்கொடுமை குறித்து எதுவும் கூறவில்லை.”

இந்த வழக்கில் இதுவரை 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 24 வயதான அஃப்தாப் மக்பூல் அஹமத் சந்தன்கட்டி, 23 வயதான மத்ரசாப் முகமது இஅதிர்ச்சி மண்டக்கி மற்றும் 23 வயதான சாஹியுல்லா லாலன்வார் ஆகியோர் அடங்குவர்.

இந்த வழக்கில் நான்காவது குற்றவாளி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சை பெறும் நிலையில், காவல் துறையினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த வழக்கில் இன்னும் 3 பேர் கைது செய்யப்பட உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்தின் மையமாக இருந்த பெண்ணுடன் ஹோட்டலில் இருந்த வேற்று மதத்தை சேர்ந்தவர் யார், அவருக்கும் அந்த பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தகவல் அளிக்க காவல் துறையினர் மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விவகாரம் விசாரணைக்கு உட்பட்டது என்று தெரிவித்தார்.

கர்நாடகாவில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Getty Images

இதேபோன்ற இன்னொரு சம்பவம்

இந்த சம்பவம் ஹங்கலில் நடந்த அதே நாளில், அங்கிருந்து 175 கி.மீ தொலைவில் உள்ள பெலகாவியில் உள்ள ஃபோர்ட் லேக்சைடு அருகே இரு வேறு சமூகத்தை சேர்ந்த ஒரு உறவினர் ஜோடியை ஒன்பது பேர் கொண்ட குழுவினர் துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த ஜோடியில் இருந்த ஆணின் நெற்றியில் திலகமும், பெண்ணின் தலையில் புர்காவும் அணிந்திருந்தனர். அவர்களைச் சித்ரவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேர் முதலில் இருவரிடமும் ‘ஏன் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் ஒன்றாக இருக்கிறீர்கள்’ என்று கேட்டு சித்ரவதை செய்துள்ளனர்.

இந்தப் பெண் உண்மையில் தனது அத்தை மகனுடன் தான் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அந்தப் பெண்ணின் அம்மா ஒரு முஸ்லீம் நபரை திருமணம் செய்து கொண்டார். அதனால் இந்தப் பெண்ணும் முஸ்லிம் பெண்ணாக வாழ்ந்துவருகிறார்.

வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பான கர்நாடக அரசின் திட்டமான யுவநிதிக்கு பதிவு செய்ய வந்த இருவரும், இணைய சர்வர்கள் வேலை செய்யாததால் ஏரிக்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஹங்கல் சம்பவத்தைப் போலவே, இந்தச் சம்பவத்திலும் சித்ரவதைக் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் முன்னாள் முதலமைச்சரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை “கலாசாரக் காவலர்கள்” என்று விமர்சித்ததை அடுத்து ஹங்கல் வழக்கில் ஒரு அரசியல் சார்ந்த திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் இதற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பசவராஜ் பொம்மை தமது சமூக ஊடப் பதிவில் கூறியுள்ளார்.

“அந்தச் சிறுமியுடன் தகராறு செய்த பிறகு, அவரை யாருமற்ற இடத்திற்கு இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்டுக்கடங்காத இது போன்ற கலாசாரக் காவலர்களால், மாநில அரசு செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்வியை எழுந்துள்ளது,” என அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.

‘கலாசாரக் காவலர்கள்’ குறித்து உரக்கப் பேசும் முதல்வர் சித்தராமையா இந்தச் சம்பவத்தில் மவுனம் காப்பது ஏன்? சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தச் சம்பவத்துக்குக் காரணமா? இந்தச் சம்பவம் தொடர்பாக சித்தராமையா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

கர்நாடகாவில் நடந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை

பட மூலாதாரம், Reuters

‘கலாசார காவலர்களின்’ குற்றச்செயல்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு, தட்சிண கன்னடா, மங்களூரு, உடுப்பி மற்றும் சிக்கமங்களூருவில் ‘ஒழுக்கம்’ தொடர்பான கலாச்சாரக் காவலர்களின் குற்றச்செயல்கள் குறித்த தகவல்கள் வெளிவரத் தொடங்கின. மேலும் சில சம்பவங்கள் குறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு கூட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஹேட் டிடக்டர் (Hate Detector) என்ற X பக்கத்தில், “கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து 256 கிமீ தொலைவில் உள்ள சிக்கமங்களூருவில் உள்ள முடிகெரேயில், ஒரு இந்துப் பெண்ணுடன் வந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களைத் தாக்கியதற்காக இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்,” என எழுதப்பட்டுள்ளது.

“தாக்குதல் நடத்தியவர்கள் ஒரு இந்துப் பெண்ணுடன் முஸ்லீம் இளைஞர்கள் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் கண்காணிப்பு தொலைக்காட்சி ஒளிக்கருவி (கேமரா)க்களில் பதிவாகியுள்ளது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்ய முடியும். தாக்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.”

புள்ளிவிவரங்களின்படி, 2023 ஆம் ஆண்டில் சில இளைஞர்கள் மீது குறைந்தது ஒரு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒன்றாக இருக்கும்போது அவர்களை வழிமறிப்பது, துன்புறுத்துவது, கேள்வி கேட்பது போன்ற வழக்குகளும் இதில் அடங்கும்.

வேலை முடிந்து மங்களூருவில் மோட்டார் சைக்கிளில் இருவரும் ஒன்றாகப் பயணித்தது அல்லது சிக்கமங்களூருவில் ஒரு முஸ்லிம் ஆண் தனது இந்து வகுப்பு தோழியிடம் பேசிக் கொண்டது போன்ற சம்பவங்களும் அடங்கும்.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலாவில் இந்து பெண்ணை இறக்கிவிட்டு வந்த ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கிடையில், மங்களூருவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் தனது மாணவர்களுடன் சென்றபோது, ​​​​அவரது பாதையை அடைத்து அவருக்கு துன்புறுத்தல் நடத்தப்பட்டது. ஏனெனில் அவருடன் சென்ற மாணவர்கள் குழுவில் முஸ்லிம் பெண்களும் இருந்தனர்.

கடந்த ஆண்டு ஆட்சி அமைத்த போது, ​​காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் இது போன்ற கலாசாரக் காவலர்கள் மீது முழு பலத்துடன் செயல்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »