Press "Enter" to skip to content

அயோத்தி: காங்கிரஸ் முடிவால் கட்சிக்குள் அதிருப்தி – தேர்தலில் வட, தென் மாநிலங்களில் எப்படி எதிரொலிக்கும்?

பட மூலாதாரம், NOAH SEELAM/AFP VIA GETTY IMAGES

ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அழைப்பு வந்தது. நீண்ட யோசனைக்குப் பிறகு, “பாதி மட்டுமே கட்டப்பட்ட கோயில் தேர்தல் ஆதாயங்களுக்காக மட்டுமே திறக்கப்படுகிறது” என்று காங்கிரஸ் கூறியது.

ஆனால் இந்த விஷயம் தொடர்பாக காங்கிரஸை பாஜக சாடியது. குடமுழுக்கு அழைப்பை நிராகரித்தது காங்கிரஸின் சனாதனத்திற்கு எதிரான மனநிலையை காட்டுகிறது என்று சில பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது என்பது பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக கோவிலை திறப்பதன் மூலம் பாகஜவுக்கு தேர்தல் ஆதாயம் கிடைக்கக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்த நிலையில் அடுத்த தேர்தலில் பாஜக இதனால் பலன் பெறுமா என்றும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காததன் விளைவை காங்கிரஸ் சந்திக்க நேரிடுமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

காங்கிரஸ் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், KABIR JHANGIANI/NURPHOTO VIA GETTY IMAGES

காங்கிரஸ் கூறியது என்ன?

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கர்கே மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என்று ஜனவரி 10 ஆம் தேதி காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு சென்ற மாதம் அழைப்பு வந்ததாக அக்கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பதா வேண்டாமா என்பது குறித்து கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த முடிவை மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸும், மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரசும் பற்றி நிற்பதாகத் தெரிகிறது.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதா வேண்டாமா என்பது தனிப்பட்ட முடிவு என்று தேசியவாத காங்கிரஸ் கூறியுள்ள நிலையில், “இந்த விஷயத்தில் பாஜக அரசியல் செய்கிறது” என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியது.

“மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால் பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்த விஷயத்தை நீண்ட காலமாக அரசியலாக்கி வருகின்றன. தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே பாதி கட்டப்பட்ட கோவிலுக்கு திறப்பு விழா நடத்தப்படுகிறது,” என்று காங்கிரஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

“2019 ஆம் ஆண்டின் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி மற்றும் ஆதிர் ரஞ்சன் செளத்ரி ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்காக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விடுத்த அழைப்பை மரியாதைப்பூர்வமாக நிராகரிக்கின்றனர்.”

இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா,” நாங்கள் ராமர் கோயிலுக்கு எதிரானவர்கள் அல்ல. எங்கள் கிராமங்களில் கட்டப்பட்ட ராமர் கோயில்களுக்கு நாங்கள் செல்கிறோம். அவர்கள் ராமர் கோயிலை கட்டியதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் இந்த விவகாரத்தை அரசியலாக்க்குகின்றனர். இந்த அரசியலாக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.” என்று தெரிவித்தார்.

“மக்களை பிரிப்பதை தவிர அவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. முதலில் அவர்கள் மதத்தின் பெயரால் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களை பிரித்தனர். இப்போது அவர்கள் பகவான் ராமரை பிரிக்க முயற்சிக்கின்றனர்,” என்று காங்கிரஸின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறினார்.

“எத்தனை பேர் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்? எந்த பிரபல மதத் தலைவர்களும் இந்த அழைப்புக் கடிதத்தை ஏற்கவில்லை. அவர்களும் கேள்விகளை எழுப்பியுள்ளார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“முழுமையாக கட்டப்படாத கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்ய முடியாது என்று மத நூல்களில் கூறப்பட்டுள்ளது. அது அசுபமாக கருதப்படுகிறது. பாபர் மசூதியை இடித்ததில் முக்கிய பங்கு வகித்த சிவசேனையும் இதில் கலந்துகொள்ள மறுத்துவிட்டது. ராமர் அனைவருக்கும் சொந்தமானவர். கோவில் வேலைகள் முழுமையாக முடிந்ததும் நாங்கள் நிச்சயமாக அங்கு செல்வோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

காங்கிரஸின் சிலரிடையே நிலவும் அதிருப்தி

ஆனால் காங்கிரஸின் இந்த முடிவால் சில காங்கிரஸ் தலைவர்கள் கோபத்தில் உள்ளனர்.

“ராமர் கோவிலும், பகவான் ராமரும் அனைவருக்கும் சொந்தம். ராமர் கோவில், பாஜக, ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளத்திற்கு சொந்தமானது என்று கருதுவது துரதிர்ஷ்டவசமானது,” என்று காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் கூறினார்.

“காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான கட்சியோ அல்லது ராமருக்கு எதிரான கட்சியோ அல்ல என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதுபோன்ற முடிவை எடுத்ததில் சிலரின் பங்கு உள்ளது. இந்த முடிவால் நான் மனம் உடைந்துள்ளேன். ராமர் மீது அபிமானம் கொண்டுள்ள கோடிக்கணக்கான தொண்டர்களின் இதயமும் இந்த முடிவால் உடைந்துள்ளது”.

“ராஜீவ் காந்திதான் ராமர் கோவிலுக்கு அடித்தளம் அமைத்தவர். கோவில் பூட்டை உடைக்கும் பணியை செய்த கட்சி காங்கிரஸ். ஆனால் திறப்பு விழாவின் அழைப்பை ஏற்காதது மிகவும் வருத்தம் அளிக்கிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோட்வாடியா இந்த முடிவு குறித்து சமூக வலைதளங்களில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

“இது நாட்டு மக்களின் நம்பிக்கை தொடர்பான விஷயம். இதுபோன்ற அரசியல் முடிவுகளை எடுப்பதில் இருந்து காங்கிரஸ் தலைமை விலகியிருந்திருக்க வேண்டும்,”என்று அவர் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், KABIR JHANGIANI/NURPHOTO VIA GETTY IMAGES

சங்கராச்சாரியார்களும் பங்கேற்க மறுப்பு

ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் திறப்பு விழா நிகழ்ச்சியில் நாட்டின் நான்கு சங்கராச்சாரியார்களும் பங்கேற்க மாட்டார்கள் என்று ஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

ராமர் கோவில் கும்பிஷேக விழா சாஸ்திரங்களின்படி ஏற்பாடு செய்யப்படவில்லை என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறினார்.

“இது ராமானந்தர் சம்பிரதாயத்தின்படியான கோவிலாக இருந்தால், சம்பத் ராய் அங்கு என்ன செய்கிறார்? அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும். அவர்கள் ஒதுங்கி கொண்டு ராமானந்த் பிரிவினரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். நாங்கள் மோதிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் இறையியலுக்கு எதிரானவர்களாக இருக்க விரும்பவில்லை,” என்று இந்த காணொளியில், சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் தெரிவித்தார்.

“எந்த சாஸ்திரத்தில் இருந்து ராமரை தெரிந்து கொண்டோமோ, அதே சாஸ்திரத்தில் இருந்து குடமுழுக்கு பற்றியும் தெரிந்து கொண்டுள்ளோம். அதனால்தான் எந்த சங்கராச்சாரியாரும் அங்கு செல்லப்போவதில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

ராமர் கோவில் ராமானந்தர் பிரிவினருடையது என்று ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் சமீபத்தில் கூறியிருந்தார்.

“இப்போது சாஸ்திரப்படி குடமுழுக்கு நடைபெறவில்லை, எனவே நான் அங்கு செல்வது பொருத்தமில்லை,” என்று கோவர்தன் மடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் நிச்சலானந்த் ஸ்வாமி ஒரு சேனலிடம் கூறினார்.

வேதங்கள், சாஸ்திரங்கள் மற்றும் மதத்தின் கண்ணியத்தைப் பின்பற்றி கும்பாபிஷேக விழா நடத்தப்பட வேண்டும் என்று பூரி சாரதாபீடத்தின் சங்கராச்சாரியார் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளார்.

காங்கிரஸ் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், NOAH SEELAM / AFP) (PHOTO BY NOAH SEELAM/AFP VIA GETTY IMAGES

இருப்பினும் துவாரகா மடத்தின் சங்கராச்சாரியார் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பாரா இல்லையா என்பது இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு காங்கிரஸ் கூறிய காரணத்தில், “பாதி கட்டப்பட்ட கோவில்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸின் இந்த முடிவு குறித்து பாஜக தலைவர்கள் காங்கிரஸை சாடியுள்ளனர். ராமர் விரோத கட்சி என்று காங்கிரஸை சில பாஜக தலைவர்கள் வர்ணித்துள்ளனர். சிலர் அதை வரவிருக்கும் மக்களவை தேர்தலுடன் இணைத்து கேலி செய்துள்ளனர்.

அடுத்த தேர்தலில் காங்கிரஸுக்கு மோசமான தோல்வி ஏற்படும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில் நாட்டை ஆண்டது. ஆனால் இன்று அது தற்போதைய நிலைக்குச் சுருங்கி விட்டது. எதிர்காலத்தில் தேர்தல் நடந்தால் அவர்களின் நிலை மேலும் மோசமாகும். இது சங் பரிவாரின் நிகழ்ச்சி என்று காங்கிரஸ் நினைக்கிறதா என்ன? இது முழு நாட்டின் நிகழ்ச்சி. உலகமே இதற்காக காத்திருந்தது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வரும் தேர்தலில் மக்கள் காங்கிரஸை புறக்கணிப்பார்கள் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

”ராமர் கோவில் திறப்பு விழாவை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்தால், வரவிருக்கும் (மக்களவை) தேர்தலில் மக்களும் அக்கட்சியை புறக்கணிப்பார்கள்,” என்றார் அவர்.

இது நேருவின் காங்கிரஸ் அல்ல, காந்தியின் காங்கிரஸ் அல்ல என்று பாஜக தலைவர் சுதான்ஷு திரிவேதி கூறினார்.

காங்கிரஸை சந்தர்ப்பவாதி என்று வர்ணித்த பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், தேர்த்தல் விஷயத்தில் அவர்கள் மென்மையான இந்துக்களாக மாற முயற்சிக்கிறார்கள் என்று கூறினார்.

“இவர்கள் பருவகால இந்துக்கள். வாக்குகளைப் பெற வேண்டும் என்று நினைக்கும் போது, ​​அவர்கள் மென்மையான இந்துக்களாக மாற முயற்சிக்கிறார்கள். ஜவஹர்லால் நேருவிலிருந்து இப்போதுள்ள தலைவர்கள் வரை காங்கிரஸில் இருந்து யாருமே இதுவரை அயோத்திக்குச் சென்றதில்லை,” என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், DEEPAK GUPTA/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

தேர்தலில் வட, தென் மாநிலங்களில் எப்படி எதிரொலிக்கும்?

காங்கிரஸில் ஒருமித்த கருத்து இல்லாததால் இந்த முடிவு சவாலானது என்றும் சோனியா காந்தி இந்த முடிவை கட்சிக்கே விட்டுவிட்டார் என்றும் அரசியல் ஆய்வாளர் ரஷீத் கித்வாய் கூறுகிறார்.

​​“காங்கிரஸின் பெரும்பாலான இடங்கள் தென்மாநிலங்களில் இருந்து வரப் போகிறது, அங்கு காங்கிரஸ் தனது ஆதரவை இழக்கக் கூடாது என்று தென்னகத் தலைவர்கள் கருதினர். மறுபுறம் வட இந்தியாவில் 2014 மற்றும் 2019 இல் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைக்கவில்லை. அதனால் கட்சி நன்கு யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளது.”

“மறுபுறம், கட்சியின் சித்தாந்த நிலை குறித்து பேசுவதற்கு இதுவே நல்ல நேரம் என்று ராகுல் காந்தியின் முகாமில் இருந்து கூறப்பட்டது. இருப்பினும் வட இந்திய காங்கிரஸ் தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினர்.”

”சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டன. காங்கிரஸும் ’இண்டியா’ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை ஆதரிக்க விரும்புகிறது. ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சியாகவும் இந்த முடிவை பார்க்கலாம்,” என்று ரஷீத் கித்வாய் தெரிவித்தார்.

‘‘நிறைய நேரம் செலவழித்து, கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து காங்கிரஸ் இந்த முடிவை எடுத்துள்ளது,” என்று அரசியல் ஆய்வாளர் வினோத் ஷர்மா கூறினார்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்துடன் தொடர்புடைய பல கேள்விகள் உள்ளன. மாநில முதல்வர்கள் (ஒரு சிலரைத் தவிர) இதற்கு அழைக்கப்படவில்லை. இதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக சங்கராச்சாரியாரின் கருத்துக்களை குறிப்பிட்ட அவர், ”குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருப்பதை ராமர் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் கொள்ளக் கூடாது,” என்றார்.

“இந்து மதத்துடன் தொடர்புடைய முக்கிய முகங்களான நான்கு சங்கராச்சாரியார்களும் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவில்லை, எனவே அவர்களுக்கு நம்பிக்கை குறைவாக உள்ளது என்று சொல்ல முடியுமா,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், CENTRAL PRESS/GETTY IMAGES

தேர்தலில் தாக்கம் ஏற்படுமா?

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கலந்து கொள்ளாதது குறித்து சில பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்தபோது, ​​இந்த விவகாரத்தை பாஜக நிச்சயம் தேர்தலின்போது எழுப்பும் என்றும் கூறினர். அதன் தாக்கத்தை வரும் தேர்தலில் பார்க்கலாம் என்று பாஜக மூத்த தலைவர்கள் உறுதிபடத்தெரிவித்தனர்.

“1980 இல் பாஜகவின் எழுச்சி மற்றும் 2014 க்கு பிறகு மோதி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றபிறகு, மதம், நம்பிக்கை மற்றும் அரசியலை வெளிப்படையாக கலப்பதில் இருந்த தயக்கத்தை நீக்கியுள்ளார். அடல் பிஹாரி வாஜ்பாய் காலத்துக்கும் தற்போதைய காலத்திற்கும் இடையில் இது பெரிய வேறுபாடு,” என்று ரஷித் கித்வாய் குறிப்பிட்டார்.

“கட்சி பெரும்பான்மையினர் நலன் பற்றிப் பேசுகிறது. ​​இந்து நலன்கள் மற்றும் தேர்தல்கள் பற்றி கட்சி பேசும்போது ​​காங்கிரஸுக்கு ஒரு இக்கட்டான நிலை ஏற்படுகிறது. ஏனெனில் அது பெரும்பான்மையினருக்கு ஆதரவாக இல்லை. காங்கிரஸால் அதற்கு தீர்வு காணவும் முடியவில்லை.”

“​​காங்கிரஸுக்குள்ளேயே கருத்து வேறுபாடு இருப்பதால் இதுபோன்ற உணர்ச்சிகரமான விஷயம் வரும்போது அக்கட்சியால் கருத்து தெரிவிக்க முடியவில்லை. ஆனால் இதுகுறித்து பாஜக எப்போதுமே தெளிவாக உள்ளது,” என்றார் ரஷீத் கித்வாய்.

‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்வோம்’ என்று 2014 இல் பாஜக தனது தேர்தல் அறிக்கையில், கூறியிருந்தது. 2019 ஆம் ஆண்டில், பாஜக தனது வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை எடுத்துரைத்தது.

2024 மே மாதம் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக சொல்லிக்கொண்டு மக்களிடம் செல்லும். காங்கிரஸுக்கு சிரமம் ஏற்படுவது இயல்புதான்.

“இந்த விஷயத்தை பாஜக அரசியலாக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம். வெறும் அறிக்கையை வெளியிட்டு காங்கிரஸ் அமைதியாக இருக்கக் கூடாது” என்று வினோத் ஷர்மா குறிப்பிட்டார்.

காங்கிரஸ் பொது மக்களிடம் சென்று இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் அவர்.

“இந்த விஷயத்தை ஆளுங்கட்சி மிகவும் சிக்கலாக்கியுள்ளது. இப்போது இந்த விஷயத்தின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்து அதை மக்கள் முன் வைக்கும் பொறுப்பு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடம் உள்ளது. தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது இதில் உள்ள பிரச்சனை அல்ல,” என்று வினோத் ஷர்மா கூறினார்.

காங்கிரஸ் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

பட மூலாதாரம், SHUKDEV BHACHECH/DIPAM BHACHECH/GETTY IMAGES

காங்கிரஸ், ராமர் கோவில் மற்றும் மதம்

மத விஷயத்தில் காங்கிரஸில் சித்தாந்த வேறுபாடுகள் இருப்பதாகவும், ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் இருந்து வந்துள்ளது என்றும் ரஷீத் கித்வாய் கூறுகிறார்.

உலக வாழ்வில் மதத்தின் பங்களிப்பு அதிகம் என்றும், அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்க முடியாது என்றும் மகாத்மா காந்தி கூறியிருந்தார். மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் ஒருபோதும் தீமை செய்ய மாட்டார் என்றும் அவர் கூறுவார்.

அதேசமயம் ஜவஹர்லால் நேருவின் பார்வை வேறுபட்டது. அரசியலையும் மதத்தையும் பிரித்துவைக்க வேண்டும் என்று அவர் கூறி வந்தார்.

மதத்தை அரசியலில் கொண்டுவந்தால் பெரும்பான்மைவாதம் பரவி ஜனநாயகத்துக்கு ஆபத்தாகிவிடும். ஏனெனில் மத நம்பிக்கையின் அடிப்படையில் அரசுகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனநாயகம் செயல்படாது என்று அவர் கூறுவார்.

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ​​நரசிம்மராவ் பிரதமராக இருந்தார்.

பாபர் மசூதி இடிப்பிற்கு பாஜக மற்றும் உத்தரபிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் மீது நரசிம்ம ராவ் பின்னர் தான் எழுதிய புத்தகத்தில் குற்றம் சாட்டினார். அதே நேரம் அவர் காங்கிரஸ் மீதும் குற்றம் சுமத்தினார். “இதற்கு ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று கட்சி ஏற்கனவே முடிவு செய்துவிட்டது. கட்சி என்னை முன்னே நிறுத்தியது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் எழுதினார்.

1985 இல் ராமர் கோவிலின் பூட்டு திறக்கப்பட்ட போது ராஜீவ் காந்தி ஆட்சியில் இருந்தார்.

ராம ஜென்மபூமியின் பூட்டை முதலில் திறந்தவர் ராஜீவ் காந்தி என்றும் இந்தப் பெருமையை வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது என்றும் கட்சித் தலைவர் கமல்நாத் முன்பும் கூறியுள்ளார்.

1989 இல் ராஜீவ் காந்தி தனது தேர்தல் அறிக்கையை சரயூ நதிக்கரையில் ஒரு கூட்டத்தில் வெளியிட்டார். அதில் அவர் ‘ராம ராஜ்யம்’ பற்றி பேசினார்.

அப்போது அவரது பேச்சு காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “மக்கள் ராமரை உண்மையான அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெற விரும்பவில்லை. 1989 இல் முன்மொழியப்பட்ட கோவிலில் சிலையை நிறுவ விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு அவர் அனுமதி அளித்தார்,” என்று ஒரு அறிக்கையில் பிரபல பத்திரிகையாளரும் தலைவருமான ஆர் விஜய் தர்தா எழுதினார்.

1999 இல் காங்கிரஸ் காரியக் குழு இந்துத்துவாவை நாட்டின் மத சார்பின்மைக்கு மிகவும் பயனுள்ள உத்தரவாதம் என்று கூறியது. இந்துத்துவா இந்தியாவை மத சார்பற்றதாக்குகிறது, ஆனால் சங்பரிவார் அதன் செய்தியை திரித்துக்கூறிவருகிறது என்று சோனியா காந்தி கூறினார்.

சமீபத்தில் நடந்த மத்தியப் பிரதேச தேர்தலின்போது கமல்நாத் தன்னை ஒரு ஹனுமான் பக்தன் என்று சொல்லிக் கொண்டார். பிரியங்கா காந்தி வாத்ரா கோவில்களுக்குச் சென்று வழிபட்டதையும் காண முடிந்தது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »