Press "Enter" to skip to content

அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்?

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது தன்னிபூர் கிராமம். மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத இந்தக் கிராமத்தில் தென்படுவதெல்லாம் சிறிய வீடுகள், சில சிறிய கடைகள், ஒருசில மசூதிகள், ஒரு மதரஸா, இவ்வளவுதான்.

அமைதியின் வடிவமாகத் திகழும் இக்கிராமத்திற்குள் நுழையும் சாலையின் துவக்கத்திலேயே ஒரு பெரிய காலி நிலம் இருக்கிறது. சில இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடியபடியும், ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டும் இருந்த அந்த நிலம் சாதாரணமானதுபோலத் தோன்றலாம். ஆனால் அதன்முன் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பலகை அதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.

அப்பலகையில் ‘இந்தோ-இஸ்லாமிக் கல்ச்சுரல் ஃபவுண்டேஷன்’ என்று எழுதப்பட்டு ஒரு கட்டிடத்தின் படம் இருக்கிறது.

கடந்த 2019-ஆம் ஆண்டு அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய இடத்தை ஒரு அறக்கட்டளைக்கு அளித்து அதில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தது. அதேபோல உத்தரப்பிரதேச சுன்னி வக்பு வாரியத்திடம் 5 ஏக்கர் நிலத்தை ஒப்படைத்து அதில் ஒரு மசூதி கட்டிக் கொள்ளலாம் என்று கூறியது.

அதுதான் இந்த நிலம். மசூதி கட்டுவதற்காக வக்பு வாரியம் உருவாக்கிய அமைப்புதான் ‘இந்தோ-இஸ்லாமிக் கல்ச்சுரல் ஃபவுண்டேஷன்’.

அயோத்தி, பாபர் மசூதி, இஸ்லாமியர்கள், மசூதி
அயோத்தி, பாபர் மசூதி, இஸ்லாமியர்கள், மசூதி

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட ‘ராமஜென்ம பூமி தீர்த்தக்ஷேத்திர அறக்கட்டளை’ மிக மும்முரமாகப் பணிசெய்து கோவிலின் முதற்கட்டத்தைக் கட்டிமுடிக்கவிருக்கும் சமயம், மசூதி கட்டப்படக் கொடுக்கப்பட்ட நிலத்தில் எந்தவொரு பணியும் தொடங்கப்படவே இல்லை.

அந்த நிலத்தில் ஏற்கனவே இருந்த ஒரு பழைய தர்கா புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு படத்தில், கட்டப்படவிருக்கும் மசூதியின் புதுப்பிக்கப்பட்ட வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘மஸ்ஜித் முகமது பின் அப்துல்லா’ என்று வரவிருக்கும் மசூதியின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி தன்னிபூர் கிராமத்திற்குச் சென்ற போது அங்கிருந்தவர்கள் மசூதியின் இடத்தைப் பற்றியோ, ஊரின் நிலைமையைப் பற்றியோ பேச முன்வரவில்லை. ஊடகத்தினர் என்று தெரிந்தவுடன் வெளியில் இருந்த சில மக்களும் வீட்டுக்குள் சென்றுவிட்டனர்.

அயோத்தி, பாபர் மசூதி, இஸ்லாமியர்கள், மசூதி
அயோத்தி, பாபர் மசூதி, இஸ்லாமியர்கள், மசூதி

மசூதி கட்ட 5 ஏக்கர் ஒதுக்கியும் பணிகள் தொடங்காதது ஏன்?

அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலத்தின் சர்ச்சை குறித்த வழக்கில் வழக்காடுபவராக இருந்தவர் இக்பால் அன்சாரி. அவரது தந்தை ஹஷிம் அன்சாரி அந்த வழக்கில் மிக மூத்த வழக்காடுபவராக இருந்தவர். கடந்த 2016-ஆம் ஆண்டு அவர் காலமானதும், இக்பால் அந்த வழக்கைத் தொடர்ந்தார்.

தற்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு மிக அருகில் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார் இக்பால். அவருக்கு இப்போது ஆயுதம் ஏந்திய காவல் துறையினர் இருவர் பாதுகாப்புக்காக உடனிருக்கிறார்கள்.

அவரது வீட்டின் வரவேற்பறையின் சுவர்களில் அவரது தந்தையின் படமும் பாபர் மசூதியின் படமும் நம்மை வரவேற்கின்றன.

ஊடகங்கள் அவரை மொய்த்த வண்ணம் உள்ளன. ஒரு பேட்டியை முடித்துவிட்டு நம்மிடம் பேசத் துவங்கிய அவர் கிடைத்த நிலத்தில் மசூதி கட்டப்பட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து விரக்தியான தொனியில் பேசினார்.

“வக்பு வாரியத்திறகு நிலம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு மசூதி கட்டுவது அவர்கள் பொறுப்பு. அதற்காக ஒரு அறக்கடளை நிறுவினார்கள். ஆனால் அதன்பின் எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை. இந்தியாவின் இஸ்லாமியர்களும் அதைப் பற்றி எந்த கேள்வியும் கேட்பதில்லை,” என்றார்.

பாபர் மசூதி இருந்தவரை தன் தந்தை அதை கவனித்துக் கொண்டதாகக் கூறும் அன்சாரி, பேசாமல் அந்த நிலத்தில் விவசாயம் செய்து, அதில் விளைபவற்றை இந்துக்கள், இஸ்லாமியர்கள் என அனைவருக்கும் பகிர்ந்து அளித்துவிடலாம் என்று கூறினார்.

அங்கிருக்கும் இஸ்லாமியர்களுக்கு போதுமான மசூதிகள் உள்ளன என்பதால் அவர்கள் புதிய மசூதியைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை என்றார்.

அயோத்தி, பாபர் மசூதி, இஸ்லாமியர்கள், மசூதி

‘ஒரு மசூதிக்கு மாற்று என்பது கிடையாது’

இந்த வழக்கில் இஸ்லாமியர் தரப்பைச் சேர்ந்த மற்றொரு பிரதிநிதியும், இந்த வழக்கை உன்னிப்பாக தொடர்ந்து வந்தவருமான அயோத்தியைச் சேர்ந்த காலிக் அகமது கானும் இஸ்லாமியர்களுக்கு புதிய மசூதி கட்டப்படுவதில் அதிக ஆர்வம் இல்லை என்றார்.

இஸ்லாமிய ஷரியா சட்டம் மற்றும் வக்பு வாரிய விதிகளின்படி “ஓரிடத்தில் இருந்த மசூதியை இன்னொரு இடத்திற்கு மாற்ற முடியாது, அதேபோல் ஒரு மசூதிக்கு மாற்றாக இன்னொரு மசூதியைக் கொண்டுவர முடியாது” என்றார்.

“இஸ்லாமியச் சட்டங்களின்படி, ஒரு மசூதியின் இடத்தை மாற்றவோ, ஒரு மசூதியை அடமானம் வைக்கவோ, ஒரு மசூதிக்கு பதிலாக மற்றொன்றையோ கட்டமுடியாது. அதன்படி பாபர் மசூதிக்கு மாற்றாக மற்றொரு மசூதியைக் கட்ட முடியாது. இதனால் இஸ்லாமியர்கள் கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்ட புதிய மசூதியின் மீது அதிக அக்கறை காட்டவில்லை,” என்றார்.

ஆனால், கட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய மசூதிக்கு யாரும் எதிராக இல்லை என்றார்.

அயோத்தி, பாபர் மசூதி, இஸ்லாமியர்கள், மசூதி

மசூதி கட்டும் பணி தொடங்குவது எப்போது?

மசூதி கட்டப்படுவதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படாமல் இருப்பதைப் பற்றி, உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னௌவில் வசிக்கும் மசூதி அறக்கட்டளையின் செயலாளரான அத்தர் உசேனைச் சந்தித்துப் பேசினோம்.

போதுமான நிதி திரட்டப்படாததுதான் கால தாமதத்திற்கான முக்கியக் காரணம் என்று கூறுகிறார் அவர்.

வக்பு வாரியத்திற்கு அளிகப்பட்ட நிலத்தில், மசூதி மட்டுமின்றி, ஒரு இலவச புற்றுநோய் மருத்துவமனை, ஒரு சமூக உணவுக்கூடம் மற்றும் 1857-இல் நடந்த முதல் சுதந்திரப் போரின் நினைவாக ஒரு அருங்காட்சியகம் அகியவற்றை அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறினார்.

“ஆனால் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நிதி வரவில்லை. அதனால் நிதி திரட்டும் முறையைச் சற்றுத் துரிதப்படுத்தும் வகையில் மாற்றியிருக்கிறோம்,” என்றார் உசேன். முதலில் திட்டமிடப்பட்ட மசூதியின் வடிவத்தையும், அறக்கட்டளை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து புதிதாக மாற்றியிருப்பதாகவும் கூறினார்.

அடுத்த இரண்டு-மூன்று மாதங்களில் திட்டங்கள் முழுமை பெற்று மசூதி கட்டும் பணி துவங்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

அயோத்தி, பாபர் மசூதி, இஸ்லாமியர்கள், மசூதி

‘இது பாபர் மசூதிக்கு மாற்று அல்ல’

ஒரு மசூதிக்கு மாற்றாக இன்னொரு மசூதி வர முடியாது என்ற கருத்தைப் பற்றிக் கேட்டபோது புதிதாக வரவிருக்கும் மசூதி பாபர் மசூதிக்கு மாற்று இல்லை என்று தெளிவாகக் கூறினார்.

இஸ்லாமிய நீதித்துறையான ஃபிக்க (Fiqh) எப்படி புரிந்துகொள்ளப் படுகிறது என்பதில் பல சிந்தனைப் பள்ளிகள் உள்ளன என்று கூறிய உசேன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கொடுக்கப்படும் 5 ஏக்கர் நிலம் பாபர் மசூதிக்கு மாற்று என்று குறிப்பிடப்படவில்லை என்றார்.

இஸ்லாமியர்கள் மத்தியில் புதிய மசூதி கட்டுவதற்கான ஆர்வம் இல்லை என்ற கூற்றுக்கு பதிலளித்த அவர், ஆரம்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்ததாகவும், ஆனால் தற்போது புதிய மசூதி மற்றும் அதைச்சுற்றிய வளர்ச்சிப்பணிகளுக்கான ஏற்பும் ஆர்வமும் அதிகரித்து வருவதாகக் கூறினார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »