Press "Enter" to skip to content

தேர்தல் நெருக்கத்தில் ராகுல் காந்தி யாத்திரை செல்வதால் ‘இந்தியா’ கூட்டணியில் சிக்கல் வருமா?

பட மூலாதாரம், CONGRESS

நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை 6,700 கிலோமீட்டருக்கும் அதிகமான பாரத் ஜோடோ நியாய் யாத்திரையை தொடங்கியுள்ளார்.

15 மாநிலங்களில் 100 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 337 சட்டமன்றத் தொகுதிகள் வழியாக பேருந்து மற்றும் நடைபயணமாக இந்த 66 நாள் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

முன்னதாக, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செப்டம்பர் 2022 முதல் ஜனவரி 2023 வரை ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை ராகுல் காந்தி மேற்கொண்டார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு அருகில் உள்ள தௌபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “மணிப்பூர் அனுபவித்த வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அமைதி, அன்பு, ஒற்றுமையை மீண்டும் கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறோம்”, என்றார்.

மணிப்பூர், எட்டு மாதங்களுக்கும் மேலாக மெய்தேய் – குக்கி மோதலால் வன்முறையின் பிடியில் உள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யாத்திரை குறித்து மக்கள் என்ன நினைக்கின்றனர்?

ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை

மணிப்பூர் நிலைமைக்கு பாஜகவும், பிரதமர் மோதியும்தான் காரணம் என்று காங்கிரஸ் கூறி வருகிறது.

பிபிசியிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “எட்டு மாதங்களாக பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார்? ஒரு முறை கூட அவர் இம்பாலுக்கு வரவில்லை” என்று கூறினார்.

எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக மோதி அரசு குற்றம் சாட்டியுள்ளது.

யாத்திரை தொடங்குவதற்கு சற்று முன்பாக மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்கட்சியின் மூத்த தலைவர் மிலிந்த் தியோரா ராஜினாமா செய்திருந்தார். இந்த ராஜினாமாவால் யாத்திரையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று காங்கிரஸ் கூறியது. ராகுல் காந்தி இந்த யாத்திரையை மும்பையில் முடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான முதல் யாத்திரை ராகுல் காந்தியின் இமேஜை மேம்படுத்தி அவரது அரசியல் அந்தஸ்தை உயர்த்தியதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இரண்டாம் கட்ட யாத்திரைக்கு திட்டமிடப்பட்டதாக நம்பப்படுகிறது.

ராகுல் காந்தியின் பேச்சைக் கேட்க வந்த காங்கிரஸ் தொண்டர் மைபம் ஷர்தா லைமா, “எங்கள் மணிப்பூர் பற்றி எரிகிறது. எங்கள் பிரச்னைகளை ராகுல் காந்தி அறிந்து, கவனித்து பேசுவார் என்று நம்புகிறோம்” என்றார்.

அவருடன் நின்ற வைகோம் இபேமா தேவி, “இங்கு வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. சில நேரங்களில் நிவாரண முகாம்களுக்குச் செல்லும் போதெல்லாம், மக்களின் நிலையை பார்த்து வருத்தமாக இருக்கிறது,” என்றார்.

தொடர்ந்து மக்களிடம் பேசிய போது, ​​மணிப்பூரின் இந்த நிலைமைக்கு அனைத்து தலைவர்களும் தான் பொறுப்பு என்று அவர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

”ராகுலின் இந்த வருகை மணிப்பூரில் நிலைமையை மேம்படுத்தும் என்று தான் நம்பவில்லை,” என்று பிபிசியிடம் ஒருவர் கூறினார்.

இந்த பயணத்தின் போது பலதரப்பட்ட மக்களையும், தலைவர்களையும் ராகுல் காந்தி சந்திப்பார் என்று நம்பப்படுகிறது.

யாத்திரை தொடங்கியது ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் பெரும் கூட்டம் கூடியிருந்தது. தெருக்களில் நின்றிருந்த பலர் கைகளில் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி காத்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

அரசியல் ரீதியாக காங்கிரஸ் பலன் பெறுமா?

ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை

காங்கிரஸ் ஆதரவாளரான தெஹ்சீன் பூனாவாலா கூறுகையில், ” கிழக்கு பகுதிக்கு வந்துள்ள ராகுலின் பயணம் கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மந்தமானவர்கள், சோம்பேறிகள் என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்த நிலையில், இன்று கட்சி அமைப்பிலும் தீவிர மாற்றம் ஏற்பட்டுள்ளது.”

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நீரஜா சவுத்ரி கூறுகையில், “அரசியல்வாதிகள் தங்களிடம் வந்து கோரிக்கைகளை, பிரச்னைகளை கேட்பது மக்களுக்கு பிடிக்கும். ஆனால், அது தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக மக்களை வர வைக்குமா என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்புகளை உருவாக்குமா என்பதும் விவாதித்து முடிவுக்கு வர வேண்டிய விஷயம். இதில் உறுதியான கருத்தை வெளிப்படுத்த இயலாது.”

அரசியலில் தீவிரம் காட்டாத அரசியல்வாதியாக ராகுல் காந்தியை நீண்ட காலமாக சித்தரித்து வரும் ஆளும் பாரதிய ஜனதா, “ராகுல் காந்தியை நம் நாட்டில் மக்கள் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை” என்று கூறியது.

மக்களுக்கான பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நீதியை நிலைநிறுத்த வலியுறுத்தியே காங்கிரஸ் இந்த யாத்திரையை முன்னெடுத்து இருக்கிறது. இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதால் அதை காப்பாற்றுவதற்காக இந்த யாத்திரையை நாங்கள் தொடங்குகிறோம் என்று காங்கிரஸ் கூறுகிறது.

ராகுல் பயணத்தின் முக்கியத்துவம்

ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் பொதுத்தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக வெற்றி பெறக்கூடாது என்று எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயலாற்றி வரும் நிலையில், ராகுல் காந்தியின் இந்த யாத்திரை தொடங்கியுள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின் படி நாட்டின் மிகப் பிரபலமான தலைவராக பிரதமர் மோதி அறியப்படுகிறார்.

அமெரிக்க ஆய்வு நிறுவனமான கார்னேஜின் மூத்த ஆய்வாளரான மிலன் வைஷ்ணவ்வின் ஆய்வு முடிவுகள், 2024ஆம் ஆண்டிற்கான தேர்தல் போட்டி தொடங்கியுள்ள நிலையில், அதில் பாஜக முன்னிலையில் உள்ளது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்று கூறுகிறது.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ள நிலையில், 28 மாநிலங்களில் 12ல் பாஜகவும், நான்கு மாநிலங்களில் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியில் உள்ளன.

தெலங்கானாவில் பெற்ற சமீபத்திய வெற்றி உட்பட மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.

“பிரதமர் மோதி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா பலவீனமடைந்துள்ளது. ஜனநாயக உரிமைகள், அரசு நிறுவனங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு எதிரான வெறுப்பும் வன்முறையும் அதிகரித்துள்ளது” எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மறுபுறம், பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியல் சாசனம் ஆபத்தில் இருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பிரதமர் மோதியின் ஆட்சிக் காலத்தில் இந்திய வளர்ச்சி உலகில் முத்திரை பதித்துள்ளதாகவும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாஜக மற்றும் மத்திய அரசு கூறுகிறது.

சமீபத்தில், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் விளக்கம் கேட்டு போராடியதற்காக சுமார் 150 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் பதற்றமடைந்தன.

ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கே.சி. தியாகி கூறுகையில், ”பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கோ, மத சார்பின்மைக்கோ, சோசலிசத்திற்கோ, ஜனநாயகத்துக்கோ, இந்திய எதிர்க்கட்சிகளுக்கோ எதிர்காலம் இல்லை.”

இந்தியக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலேவின் வாதம் வேறாக இருக்கிறது.

“நீங்கள் உங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இதில் பயப்பட என்ன இருக்கிறது. இது ஜனநாயகம். நீங்கள் உங்கள் பங்கை விடாமுயற்சியுடன் செய்ய வேண்டும்.” என்கிறார் அவர்.

28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள ’இந்தியா’ கூட்டணியின் தலைவர்கள் இடையே தொகுதி பங்கீடு, கூட்டணியின் முகம், தலைமை யார் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ராகுலின் இந்த யாத்திரை நடக்கிறது.

ஆய்வாளர் மிலன் வைஷ்ணவ் கூற்றின்படி, ’இந்தியா’ கூட்டணி பொதுவான தளத்தில் உடன்படுவது முக்கியம். நரேந்திர மோதியுடன் ஒப்பிடுகையில் ’இந்தியா’ கூட்டணி எந்த முகத்தையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார். தொகுதி பங்கீடுகளில் இந்த கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லாததையும் அவர் சுட்டிக் காட்டினார்.

‘தேர்தல் நோக்கமல்ல’

ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை

பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பயணம் நடக்கிறது. ஆனால் இது தேர்தலுக்கான பரப்புரை பயணம் அல்ல, கருத்தியல் பயணம் என்கிறது காங்கிரஸ். இதற்கும் தேர்தல் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் காங்கிரஸ் கூறுகிறது.

இது தொடர்பாக பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளின் அரசியல் ஆசிரியர் வினோத் ஷர்மாவின் கூற்றுப்படி, பொதுவெளியில் இப்படியான கருத்தை காங்கிரஸ் கூறுவதன் மூலம் பொது நோக்கம் என்று கட்டமைக்க முயல்கிறது என்கிறார்.

அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜாவின் கூற்றுப்படி, கட்சி ’தவறு’ செய்கிறது, மேலும் இதுபோன்ற வார்த்தைகள் ’குழப்பத்தை’ பரப்பும்.

“நாங்கள் சமூக நீதிக்காக போராடுகிறோம். இது எங்களுக்கு அதிகாரத்தை அளிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சமூக நீதியைக் கொண்டு வருவோம் என்று மக்களிடம் நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கூறுகிறார் சஞ்சய் ஜா.

இது குறித்து பிபிசியிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பும் பாரத் ஜோடோ நியாய் யாத்திரையில் ஈடுபடவில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ, என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். ஆனால் இது 2024 தேர்தலில் எதிரொலிக்குமா என்று என்னால் கூற முடியாது,” என்றார்.

வினோத் சர்மாவின் கூற்றுப்படி, இந்த யாத்திரையின் போது, ​​ராகுல் காந்திக்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர் மக்களை தன் பக்கம் திருப்ப ஒரு முக்கிய கதை அல்லது பிரச்னையை அடையாளம் காண வேண்டும் என்றார்.

“இந்த கதை ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல், அரசாங்கத்தின் எதேச்சதிகாரம் என்று கூறும் வழக்கமான அம்சங்களை தாண்டி முக்கியமானதாக இருக்க வேண்டும்.”

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதில் சிக்கல் வருமா?

ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை

பட மூலாதாரம், Getty Images

இந்த பயணம் குறித்து ’இந்தியா’ கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யாத்திரையில் கலந்து கொள்வதால், ராகுல் காந்தி டெல்லிக்கு வர முடியாது. இது ’இந்தியா’ கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கே.சி.தியாகி கவலைப்படுகிறார்.

“இவ்வளவு பெரிய தலைவர், தலைநகர் டெல்லியில் இவ்வளவு நாள் இல்லாமல் இருப்பது எங்களுக்கு சரியானதாக இருக்காது. அவர் இங்கேயே தங்கி, தொகுதி பங்கீடு, பிரசார குழு, பூத் குழுகளை அமைப்பது உள்ளிட்ட வேலைகளில் கவனம் செலுத்த வேண்டும். பாஜகவை தோற்கடிக்கும் நாளில் காங்கிரஸ் தானாகவே வலுவடையும்.”

“மார்ச் இறுதியில் தேர்தல் நடந்தால் என்ன நடக்கும்? ஆச்சரியங்களை அளிப்பதில் மோதி வல்லவர் என்பதை நாம் அறிவோம். நீங்கள் ஒரு நாளைக்கு 20-25 கிலோமீட்டர்கள் நடப்பீர்கள். ஒரு மக்களவை தொகுதியை சுற்றி வருவீர்கள். இதையே உலங்கூர்தியில் சென்றால் ஒரே நாளில் 10 தொகுதிக்கு செல்ல முடியும். இவ்வளவு பெரிய தலைவர் ஏன் நேரத்தை விரயம் செய்ய வேண்டும்,” என்று கே.சி, தியாகி கேள்வி எழுப்புகிறார்.

“இந்த ஒற்றுமை பயணத்திற்கு இது சரியான நேரம் இல்லை என்று நான் சொல்கிறேன். நீங்கள் தேசிய ஒருமைப்பாட்டில் மிகவும் தீவிரமானவராக இருந்தால், தேர்தலுக்கு பிறகு ஜூன் முதல் ஜூலை வரை பயணம் செய்யுங்கள். மேலும் நாட்டில் இருக்கும் ஐந்து லட்சம் கிராமங்களுக்கும் செல்லுங்கள்.”

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இருப்பதால், எந்த பிரச்னையும் இல்லை என்றும், தேவைப்பட்டால் ராகுல் காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே கருதுகிறார்.

“இந்தியா கூட்டணி மிகவும் நல்ல நிலையில் உள்ளது. ராகுல் காந்தி மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். அவர் அனைவரையும் அன்பு, சேவை, கருணையுடன் இணைக்க விரும்புகிறார், இது தான் தலைமை என்று அழைக்கப்படுகிறது.”

”இந்த யாத்திரை ‘இந்தியா’ கூட்டணியின் பயணமாக இருந்தால் நன்றாக இருக்கும். உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் அவருடன் வருவார். ஆனால் பிகாரில் லாலுவின் மகனும், நிதிஷ் குமாரும் அவருடன் வந்தால் அங்கு நிலைமை எப்படி இருக்கும்,” என்று கே.சி. தியாகி கேள்வி எழுப்புகிறார்.

மறுபுறம், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்த சுப்ரியா சுலே, “கூட்டணிக் கட்சி தலைவர்கள் இப்படி செய்ய நினைத்தால் என்ன தவறு இருக்கிறது?”, என்கிறார்.

ஒரு விஷயத்தை செய்யும் போது எப்போது பத்து கேள்விகள் எழுகின்றன. ஆனால் அதை செய்பவர்கள் மிகக் குறைவு. பலர் கேள்விகளை மட்டுமே எழுப்புகின்றனர், என்கிறார் ஜெய்ராம் ரமேஷ்.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்கள் ஆயுதங்கள் கீழே போட்டுவிட்டனர். அவர்கள் அனைவரும் தங்களின் சொந்த கட்சியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்துகின்றனர். நாம் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுவதை விட, நாம் ஒன்றாக இணைந்து போராட வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் இல்லை, என்கிறார், நீரஜா சௌத்ரி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »