Press "Enter" to skip to content

மாலத்தீவு இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கைகோர்க்கிறதா? சீனாவின் வியூகம் என்ன?

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு தனது சீனப் பயணத்தை முடித்து வந்துள்ளார்.

இப்பயணத்தின் போது சீனா – மாலத்தீவு இடையே 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மாலத்தீவின் எந்தவொரு புதிய அதிபரும் எப்போதும் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவிற்கே மேற்கொள்ளும் பாரம்பரியத்தை முய்சு உடைத்துள்ளார்.

முய்சு முதலில் துருக்கி, பின்னர் ஐக்கிய அரபு அமீரகம், அதன் தொடர்ச்சியாக தற்போது சீனாவில் சுற்றுப்பயணத்தை முடித்துள்ளார்.

இந்த அதிபர் தேர்தலில், முய்சு ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டார்.

சீனாவிலிருந்து திரும்பிய பின்னர், மாலத்தீவில் நிலை கொண்டுள்ள 88 இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

மாலத்தீவில் வெளிநாட்டுப் படைகள் இருப்பது அந்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்று முய்சு கருதுகிறார்.

மாலத்தீவு – சீனா ஒப்பந்தம்

இந்தியா vs மாலத்தீவு

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

சீனாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களில், சுற்றுலாத் துறை ஒத்துழைப்பு, இயற்கை பேரிடர் மேலாண்மை, கடல்சார் பொருளாதாரம் மற்றும் கணினி மயமான பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ‘பெல்ட் அண்ட் ரோடு இன்ஷியேட்டிவ்’ திட்டத்தின் ஒத்துழைப்பு விதிமுறைகளும் அடங்கும்.

மாலத்தீவில் வீடு கட்டும் திட்டம், மீன்வளப் பொருட்களை பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் தலைநகர் மாலேவை சீரமைக்கும் திட்டத்திலும் சீனா ஒத்துழைப்புத் தரும்.

சுற்றுலா மற்றும் உள் கட்டமைப்பு துறை மேம்பாட்டில் சீனாவிடமிருந்து அதிக ஒத்துழைப்பு பெற மாலத்தீவு விரும்புகிறது. மாலத்தீவின் பொருளாதாரத்திற்கு சுற்றுலாத் துறையே மூன்றில் ஒரு பங்கை அளிக்கிறது.

மாலத்தீவு சீனாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும் ஆனால் சீனாவுடன் கடனில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருப்பதாகவும் சில ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஊடகங்களில், மாலத்தீவுக்கு சீனா 130 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், ஒப்பந்த அறிவிப்பில் இதுகுறித்து குறிப்பிடப்படவில்லை.

மாலத்தீவு சீனாவுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்வதன் மூலம் முய்சு அடைய விரும்புவதென்ன?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்ள, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள கிழக்கு ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் ஏலேரியிடம் பிபிசி ஹிந்தி பேசியது.

சீனா வியூகம்

இந்தியா vs மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவில் சுற்றுலாத் துறை மிகப்பெரிது என்பதால், சீனாவின் ரிசார்ட் நிறுவனங்கள் நீண்ட காலமாக அங்கு செயல்பட்டு வருவதாக ஏலேரி விளக்குகிறார்.

கொரோனா காலத்தில், பெரும்பாலான நாடுகள் மாலத்தீவின் சுற்றுலாத் துறையில் தங்கள் வேலையை நிறுத்திய போதும் கூட ​​சீனா நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்தன.

ஆனால் சீன நிறுவனங்கள் முதலீடு செய்த இப்பணம் சந்தையிலிருந்து வசூலிக்கப்படவில்லை. இது சீனாவின் அரசு வங்கிகளுக்குச் சொந்தமான, சீன அரசாங்கத்தின் நேரடியான பணம்.

“முய்சு வந்த பிறகு, இந்த பணம் முடக்கப்பட்டுள்ளது”, என்று ஏலேரி கூறுகிறார். அதாவது இதுவரை முறைசாரா முறையில் வந்து கொண்டிருந்த பணம் இனி முறைப்படி வரும். இதனால் எதிர்காலத்தில் சீன முதலீடு தொடர்பாக ஏதேனும் சர்ச்சை ஏற்பட்டால், இந்த விவகாரம் சீன நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மாலத்தீவு அரசாங்கம் நஷ்டஈடு செலுத்த வேண்டியதிருக்கும்.

“இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாலத்தீவு அரசை சீனா தனது நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் மாலத்தீவில் வேறொரு அரசு ஆட்சிக்கு வந்தாலும், இந்த ஒப்பந்தம் அந்த அரசாங்கத்தையும் கட்டுப்படுத்தும்.

மாலத்தீவு இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கைகோர்க்கிறதா?

இந்தியா vs மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

ஆனால், சீனாவின் உத்திகளை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மாலத்தீவு ஒரு அனுபவமற்ற நாடக இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

குறிப்பாக இலங்கை உட்பட பல நாடுகளுக்கு சீனா கடனுதவி செய்து தமது சொந்த நிபந்தனைகளை விதிப்பதாக குற்றம் சாட்டியும் வருகின்றன.

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ‘நெல்சன் மண்டேலா அமைதி மற்றும் சண்டை’ மையத்தின் உதவி பேராசிரியர் பிரேமானந்த் மிஸ்ரா, “இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையே சிறிய நாடுகள் ‘ஊஞ்சல்’ போல நிலைப்பாடு இல்லாமல்தான் நடக்கின்றன”, என்று கூறினார்.

அவர்கள் தங்களுக்கு அதிக அளவில் நன்மை பயக்கும் நாடுகளுடன் தான் சாதகமாக இருந்து உறவுகளை பேணி வருகிறார்கள்.

“முய்சுவின் கட்சி சீனாவுக்கு ஆதரவாக உள்ளது. இது உள்நாட்டு அரசியலின் ஒரு பகுதியாகவும் இருக்கிறது. பல நேரங்களில் உள்நாட்டு அரசியலின் தாக்கம் சர்வதேச அரசியலில் தெரியும். முய்சுவின் அரசாங்கம் பழைய நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொண்டு, சீனாவிற்கு அதிக விருப்பம் காட்டி வருகிறது” என்று அவர் கூறுகிறார்.

அவர் கூறுகையில், “இரண்டாவது முக்கியமான அம்சம் என்னவென்றால், மாலத்தீவிற்கு சீனா கொடுத்த கடன் மிக அதிகமாக உள்ளது. அதை முய்சு அரசாங்கத்தால் திருப்பிச் செலுத்துவது சாத்தியமில்லை என்றும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், மாலத்தீவு சீனாவிடம் காட்டும் அணுகுமுறை குறித்த முடிவுகளில் பிரதிபலிக்கிறது.

சீனாவின் பொருளாதார பலமும் மாலத்தீவின் ஈர்ப்பும்

இந்தியா vs மாலத்தீவு

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

பிரேமானந்த் மிஸ்ரா “ராஜ தந்திரத்தில் பக்குவம் இருக்க வேண்டும்” என்கிறார். “இதை ஒரு இழப்பில்லாத ஆட்டமாக கருதக்கூடாது. அதாவது ஒருவருடைய இழப்பு இன்னொருவருக்கு நன்மையாக இருக்க முடியாது. மாலத்தீவு தொடர்பான ராஜதந்திரத்தில் இந்தியா முழு பக்குவத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று இந்தியா மற்றும் மாலத்தீவு அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இந்தியப் படைகள் திரும்பப்பெற பெறுவதால் ஏற்பட்டுள்ள நிலைமைகளை தீர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சந்திப்புகள் அதிகமாக இருக்கக் கூடும்.வெளியுறவுக் கொள்கையின் விதிமுறைகள் வெறும் கதைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை” என்றும் அவர் கூறுகிறார்.

இந்தியாவில் மாலத்தீவு விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பிரச்சனைகள் இருந்தாலும், இதுகுறித்து இந்தியா தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில், முதன்முறையாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கண்டிப்பான அறிக்கை வெளிவந்தது.

அதில் அவர், “அரசியல் என்பது அரசியல். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நாடும், எங்களை ஆதரிப்பார்கள் அல்லது எங்களுடன் உடன்படுவார்கள் என்று என்னால் உறுதி அளிக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளோம். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் வலுவான தொடர்புகளையே ஏற்படுத்தியுள்ளோம்.”

“அரசியலில் பிரச்னைகள் நிலவி வந்தாலும் அந்நாட்டு மக்கள் இந்திய நாட்டைப் பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டுள்ளனர், மேலும் இந்தியாவுடனான நல்லுறவின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரியும்.”

“செல்வாக்கு மிகுந்த பெரிய நாடுகள் மூன்று விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன. அது எவ்வளவு மரியாதைக்குரியது, எவ்வளவு பொறுப்பானது, எவ்வளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடாக இருக்கிறது என்பது தான். ஒரு பக்குவமான நாடு ஒருபோதும் மற்றொரு நாட்டை கொடுமைப்படுத்தாது” என்று பிரேமானந்த் மிஸ்ரா கூறுகிறார்

“தீவிர தேசியவாதம் நமது சக்திக்கு தீங்கு விளைவிக்கும். நாம் ஒரு மரியாதைக்குரிய, பொறுப்பான மற்றும் பிறர் ஏற்புக்குரிய சக்தியாக மாற விரும்பினால், நாம் ஒரு பக்குவமான நாட்டையே நாட வேண்டியிருக்கும், இதைத்தான் இந்தியா செய்து வருகிறது”. என்கிறார் அவர்.

மாலத்தீவு மீதான இந்திய அணுகுமுறை என்ன உணர்த்துகிறது?

இந்தியா vs மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவுகள் மீதான இந்தியாவின் அணுகுமுறைக்கான காரணத்தை விளக்கும் அரவிந்த் ஏலேரி, “இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் சீனாவிடம் கடன் வாங்குவதன் ஆபத்தை புரிந்து கொண்டுள்ளதாக கூறுகிறார். ஆனால் மாலத்தீவுக்கு இது இன்னும் விளங்கவில்லை.

முய்சு அரசாங்கம் இப்போது சீனாவை அதிகம் சார்ந்து இருக்கலாம், ஆனால் சீனாவின் பொருளாதார உதவி பெறுவதன் ஆபத்துகளை அது புரிந்துகொள்ளும் காலம் வரும். கடந்த பத்து ஆண்டுகளில், இந்தியா ஒருபோதும் முன் வந்து அதன் அண்டை நாடுகளின் விஷயங்களில் தலையிடவில்லை” என்று அவர் கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், “சீனாவின் அச்சுறுத்தலை மாலத்தீவு மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்” என்றார்.

இந்தியா முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் சீனா தனது நாட்டிலிருக்கும் முஸ்லிம்களை என்ன செய்கிறது என்பதை உலகமே கவனித்து வருகிறது என்று லட்சத்தீவு குறித்து கருத்து தெரிவித்ததற்காக நீக்கப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் கூறியுள்ளார்.

அண்டை நாடுகளுடனான சச்சரவுகளின் போதும் ‘பிராகிரஸிவ் டிஸ்கனெக்ட்” என்ற கொள்கையை இந்தியா கடைப்பிடித்திருப்பதிலிருந்து இந்தியாவின் பக்குவம் புரிகிறது. இந்தியா அதிலிருந்து விலகி இருக்கலாம் ஆனால் உறவுகளை முறித்துக் கொள்ளவில்லை.

இந்தக் கொள்கையின் காரணமாக, மாலத்தீவில் இருக்கும் 88 வீரர்களை, இந்தியா திரும்பப் பெறத் தயாராக உள்ளது. ஆனால் இது பரஸ்பர உறவுகள் பிரச்னையாக மாறுவதற்கு பதிலாக, இதை தீர்க்க மாலத்தீவுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராக உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக இரு நாட்டு உயர் அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டம் நடந்துள்ளதுடன், இன்னும் சில சந்திப்புகளும் நடைபெற உள்ளன.

மாலத்தீவில் இந்திய வீரர்கள் ஏன் இருக்கிறார்கள்?

மாலத்தீவில் இந்திய படை வீரர்கள் 88 பேர் மட்டுமே உள்ளனர். மாலத்தீவு வீரர்களுக்கு போர், உளவு மற்றும் மீட்பு திட்டங்களுக்காக பயிற்சி அளிக்க இந்திய வீரர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அனுப்பப்பட்டுள்ளனர்.

மிக குறைவான எண்ணிக்கையில் இந்திய வீரர்கள் இருந்த போதிலும், சில அரசியல் கட்சிகளும் மாலத்தீவு மக்களும் இது தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக நம்புகிறார்கள்.

இந்தியாவும் மாலத்தீவுகளும் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. நவம்பர் 1988 இல், அப்போதைய அதிபர் மாமுன் அப்துல் கயூமின் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி நடந்தபோது, ​​இந்திய வீரர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து அதனை முறியடித்து அவர்களை கைது செய்தனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »