Press "Enter" to skip to content

இந்தியாவில் ஐந்து ஆண்டுகளில் 203 சாதி ஆணவக்கொலைகள் – என்னதான் தீர்வு? தனிச்சட்டம் சாத்தியமாகுமா?

பட மூலாதாரம், Getty Images

நீங்கள் என்ன தப்பு செய்தீர்கள் எனத் தெரியுமா, உங்களை ஏன் கைது செய்திருக்கிறார்கள் எனத் தெரியுமா என நீதித்துறை நடுவர் கேட்க, “தெரியுமே, என் மகளை நான் தான் கழுத்தில் கயிற்றை இறுக்கி, மரத்தில் கட்டி, கொலை செய்தேன்,” என கூறியுள்ளார் தன் 19-வயது பெண்ணை ஆணவக்கொலை செய்த அந்தத் தந்தை.

சமீபத்தில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்த 19-வயது ஐஸ்வர்யாவை தூக்கிலிட்டு, பின் கழுத்தை நெரித்து கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் எரித்த குற்றத்திற்காக பெண்ணின் பெற்றோர் பெருமாள், ரோஜா மற்றும் ஆறு உறவினர்கள் கைது செய்யப்பட்டனர்.

”முதலில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பெருமாளிடம் நீதிபதி கேட்டதற்குத்தான் அவர் இப்படி கூறினார். ஒரு அப்பாவால் எப்படி அப்படி நீதிமன்றத்தில் பேச முடிந்தது என்பது எங்களுக்கு இப்போது வரை புரியவில்லை. அவர்களுக்குள் அவ்வளவு சாதிய வன்மம் உள்ளது,” என நீதிமன்றத்திற்கு பெருமாளையும், ரோஜாவையும் அழைத்துச் சென்ற போலீசார் பிபிசியிடம் கூறினர்.

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள மாநிலங்களில், காதலித்து மாற்று சாதியில் திருமணம் செய்யும் தம்பதிகளை ஆணவக்கொலை செய்வது தொடர்கதையாகி வருகிறது. இது சமீப காலங்களில் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் சாதிய எதிர்ப்பாளர்கள் கூறினாலும், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 203 ஆணவக்கொலைகள் நடந்துள்ளன.

இதுவே, தமிழ்நாட்டில், கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மொத்தம் 23 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாக தமிழ்நாடு அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதுபோன்ற சாதியக்கொலைகளை தடுப்பதற்கு தன்னார்வ அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும், ஆணவக்கொலைகளுக்கான தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாதி ஆணவக்கொலைகளுக்கு தனிச்சட்டம் இயற்றினால் போதுமா?

சாதி ஆணவக்கொலைகள் உண்மையில் அதிகரித்துள்ளனவா?

சாதி ஆணவக்கொலைகளை தடுக்க என்ன வழி?

‘பட்டியல்சாதியினரும் பெண்களுமே பாதிக்கப்படுகின்றனர்’

ஆணவக்கொலைகள்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து வரும் ஆணவக்கொலைகள் குறித்து பிபிசி சார்பில் மூத்த பத்திரிகையாளரும், ‘சாதியின் பெயரால்’ என்ற நூலின் ஆசிரியருமான இளங்கோவன் ராஜசேகரிடம் பேசினோம்.

தற்போது எதிர்மறையான சமூக மாற்றம் மிக வேகமாக நடந்து வருவதாகக் கூறிய இளங்கோவன், அது 2000-ஆம் ஆண்டுக்கு முன்பிற்கும் இப்போது நடைபெறும் சாதியக் கொடுமைகளுக்கும் நிறைய வித்யாசம் இருப்பதாகக் கூறினார்.

“இது 90களின் கடைசியில், பட்டியல் சாதியைச் சேர்ந்த ஆணும், பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்தால், அதில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஆணைக் கொலை செய்துவிட்டு, பெண்ணை அழைத்து வந்துவிடுவார்கள். அது சில வருடங்களில், தம்பதியினர் இருவரையும் கொலை செய்துவிட்டு அழைத்து வருவதாக மாறியது. தற்போது, மாற்று சாதியில் திருமணம் செய்யும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்களை கொலை செய்யும் போக்கை பார்க்க முடிகிறது,” என்றார் இளங்கோவன்.

மேலும், இந்த ஆணவக்கொலைகளில், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பட்டியல் சாதியினர்தான் முதலில் குறிவைக்கப்படுவதாகவும், பின் எந்த சமூகமாக இருந்தாலும், தம்பதியினரில் பெண்கள் குறிவைக்கப்படுவதாகவும் இளங்கோவன் கூறுகிறார்.

தற்போது வேகமாக எதிர்மறையாக மாறி வரும் சமூக மாற்றத்தில், ஒரே வகுப்பினருக்குள்ளேயே திருமணம் செய்தாலும், எதிர்ப்புகளும், அது ஆணவக்கொலை வரை செல்வதையும் பார்க்க முடிவதாக இளங்கோவன் கூறினார்.

“தூத்துக்குடியில் கடந்த வருடம் நடந்த ஆணவக்கொலையில், தம்பதியினர் இருவருமே ஒரே பிற்படுத்தப்பட்ட சாதியினர் தான். ஆனால், அதில் ஆண் தினக்கூலியாக இருக்கிறார், பெண்ணின் அப்பா நான்கு மாடுகள் வைத்திருக்கிறார்.

“இரண்டு தரப்பினருமே பெரிய பொருளாதார வசதிகள் இல்லை. இங்கு பிரச்னை சாதி மட்டுமல்ல, தங்களின் பெண் தாங்கள் கூறுவதை மீறி ஒரு முடிவை எடுக்கிறார் என்ற மனநிலை. இது பெண்களை சொத்துடைமையாகப் பார்க்கும் மனநிலை,” என்றார்.

இளங்கோவன் ராஜசேகரன்

பட மூலாதாரம், ELANGOVAN RAJASEKARAN

‘சாதிய இறுக்கம் அதிகரித்துள்ளது’

ஸ்டாலின் ராஜாங்கம்

சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ள சாதிய ஆணவக்கொலைகளுக்கு கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துள்ள சாதிய இறுக்கமும் ஒரு காரணம் என்றார் பேராசிரியரும் எழுத்தாளருமான ஸ்டாலின் ராஜாங்கம்.

“முன்பும் ஆணவக்கொலைகள் நடந்தது. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. ஏனென்றால், அப்போது, அது திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளின் குடும்பம் மற்றும் அவர்களுக்கு அருகில் இருக்கும் இரண்டு வீடுகளோடு அந்த விஷயம் முடிந்துவிடும். ஆனால், தற்போது, ஊர், சொந்தம், சாதிக்கார்கள், சாதிச்சங்கங்கள் என் இத்தனை பேர் அந்த திருமணத்திற்குள் வருகிறார்கள்.

“கடந்த 10 ஆண்டுகளாக உருவாகியிருக்கிற சாதிப் பெருமையால், இத்தனை பேரும் எதாவது சொல்வார்களோ, அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமோ என்ற எண்ணம் அனைவர் மத்தியிலும் உருவாகியுள்ளது. அதுதான், கொலை வரைக்கும் ஒருவரை தூண்டுகிறது,” என்றார்.

இந்த சாதிப் பெருமைகள், சாதி, மத, வர்க்க பேதமின்றி அனைவரது மத்தியிலும் மிக ஆழமாக இருப்பதாக அவர் கருதுகிறார்.

“பட்டுக்கோட்டை ஆணவக்கொலையில் ஐஸ்வர்யாவின் தந்தையும் கூலித்தொழிலாளிதான். அவர்தான், சாதிக்காக தன் மகளை கொலை செய்துள்ளார். சாதிப் பெருமை என்பது பட்டியல் சாதியினர் உட்பட அனைத்து சாதியினர் மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதேபோல, ஏழையாக இருந்தாலும், அவர்களக்கு சாதிப் பெருமை தேவைப்படுகிறது,” என்றார்.

அனைத்துத் தரப்பினருக்கும் சாதி தேவைப்படுவதற்கான காரணம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டபோது, “சாதி இங்கு வெறும் அடையாளமாகப் பார்க்கப்படுவதில்லை. அது எண்ணிக்கையாகப் பார்க்கப்படுகிறது. மக்களை சாதியாகத்தான் அணிதிரட்டுகிறார்கள், அப்படி அணித்திரட்டித்தான் அரசியல் அதிகாரம் கோருகிறார்கள். அதனால், இங்கு என்ன சாதி என்பதோ, என்ன பொருளாதார நிலை என்பதோ அவர்களுக்கு முக்கியமில்லை. தங்கள் பெருமையை காப்பாற்ற வேண்டும் என்பதே முக்கியமாக பார்க்கிறார்கள்,” என்றார்.

ஆனால், இப்படியாக ஆணவக்கொலைகளை தடுப்பதற்கு, நீண்டகாலத் தீர்வாக சமூக அரசியல் இயக்கங்களின் மூலம் சமூகத்தை கலாச்சார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் மாற்ற வேண்டும் எனக் கருதுகிறார் ஸ்டாலின்.

“இது ஒரு நாளில் நடந்துவிடாது. பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைப்போன்று ஒரு இயக்கம் வேண்டும். தற்போது, அப்படி எந்த இயக்கமும் இல்லை. தேர்தல் அரசியலில் இருப்பவர்களால், அந்த சாதி எண்ணிக்கையைத் தாண்டி ஒரு அரசியல் நிலைப்பாடு எடுப்பது அவ்வளவு எளிது அல்ல,” என்றார் ஸ்டாலின்.

ஆவணக்கொலைகளுக்கு தனிச்சட்டம் தீர்வாகுமா?

ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்

பட மூலாதாரம், Getty Images

ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குறையும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

மதுரையைச் சேர்ந்த எவிடன்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர் பிபிசியிடம் பேசுகையில், “ஆணவக்கொலைகளுக்காக தனிச்சட்டம் இயற்றினால், தான் குறைந்தபட்சம் ‘இப்படி ஒரு சட்டம் இருக்கிறது, நடவடிக்கை கடுமையாக இருக்கும்’ என்கிற விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படும். அப்போதாவது இது குறையும். ஆனால், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், அந்தச் சட்டத்தை கண்டுகொள்வதே இல்லை,” என வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டணைச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவற்றின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுக்கொடுக்கலாமே என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

இதற்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன், தனிச்சட்டம் ஆணவக்கொலைகளை தடுக்க உதவும் என நம்பவில்லை எனக் கூறினார். ஆனால், அந்தச் சட்டம் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பிற உதவிகள் வழங்குவதற்கும் உதவியாக இருக்கும், என்றார்.

எவிடன்ஸ் கதிர்

தனிச்சட்டத்திற்கான தேவை குறித்து விரிவாக பேசிய இளங்கோவன், “இரு வேறு சாதியைச் சேர்ந்த தம்பதியினர் திருமணம் செய்து, அதில், பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண்ணோ ஆணோ கொலை செய்யப்பட்டால், வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த பெண் அல்லது ஆணின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் மற்றும் கருணை அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

“ஆனால், இறந்த நபரைத் திருமணம் செய்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நபர் தன் சொந்த குடும்பத்தாலும் நிராகரிக்கப்படுவார், தன் கணவனின் குடும்பத்தாலும் ஏற்றுக்கொள்ளப்படும் முடியாத நிலையில் இருப்பார். தனிச்சட்டம் இயற்றப்பட்டு, அதில், நிவாரணம் தொடர்பான சரத்துகள் சேர்த்தால், அப்படி பாதிக்கப்படும் நபர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கும்,” என்றார் இளங்கோவன்.

ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன், தனிச்சட்டத்தால் ஆணவக்கொலைகளை தடுக்க முடியும் என நம்பவில்லை.

“முன்பைவிட, சாதி தற்போது மிக ஆழமாக உள்ளது. இந்தக்காலத்தில் இன்னும் சில ஊர்களில் உள்ள தெருக்களில் நாம் செல்ல முடிவதில்லை. அதனை காவல்துறையிருமே ஊக்குவிப்பதில்லை. அதனால், தனிச்சட்டம் என்பது ஒரு அழுத்தத்திற்காக உதவுமே தவிர, ஆணவக்கொலைகளை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ முடியும் எனத்தோன்றவில்லை.

“இதற்கு, நீண்ட காலத்திட்டம் தேவை. மேலும், இதனை பள்ளியில் இருந்தே மாணவர்களை தயார் செய்வதிலிருந்தே தொடங்க வேண்டும்,” என்றார் ஹரிப்பரந்தாமன்.

ஆனால், குறைந்தபட்சம் அழுத்தம் கொடுப்பதற்காகவாவது ஆணவக்கொலைக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என அனைவரும் ஒற்றைக் குரலில் கூறினர்.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »