Press "Enter" to skip to content

சிறாவயல் மஞ்சுவிரட்டு: விதிகளை மீறுவதே விபத்துகளுக்கு காரணம் என ஆட்சியர் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் பிரபலமான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட மஞ்சுவிரட்டு நடைபெறும். இந்நிலையில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15, 16 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அலங்காநல்லூர், பாலமேடு, சிறாவயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் மாடுபிடிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ஆயிரக்கணக்கான மாடுகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

அதேநேரம் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மாடுபிடி நிகழ்வுகளில் வீரர்கள், மாடுகள், பார்வையாளர்கள் எனப் பலர் காயமடைந்த சம்பவங்களும் நேர்ந்துள்ளன. அதில் சிறாவயல் மஞ்சுவிரட்டில் 12 வயது சிறுவன் மற்றும் 32 வயது இளைஞர் ஒருவரும் மாடு முட்டி இறந்துள்ள சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே போல் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற சிறாவயல் மஞ்சுவிரட்டில் 52 வயதான பூமிநாதன் எனபவர் மாடு மோதியதில் உயிரிழந்தார்.

சிறாவயல் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் நடப்பதற்குக் காரணம் என்ன? சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டுக்கும், இதர பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கும் வேறுபாடு என்ன? எதனால் சிராவயலில் இருவர் இறக்க நேர்ந்தது?

மஞ்சுவிரட்டு என்றால் என்ன?

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?

பொதுவாகவே நம்மில் பலரும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, ஏறு தழுவுதல் எல்லாம் ஒன்றுதான் என்றே இத்தனை நாளாய் நம்பி வந்திருப்போம். ஆனால், என்னதான் இவற்றின் அர்த்தம் ஒன்று என்றாலும் அது நடைபெறும் விதமும், இடமும் ஒன்றல்ல. அதை வரலாற்றுப் பார்வையில் அணுகினால் மட்டுமே அதன் பரிணாம வளர்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதற்காக மஞ்சுவிரட்டு என்றால் என்ன என்ற கேள்வியை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவரும், இலக்கிய செயற்பாட்டாளருமான அ. ராமசாமியிடம் கேட்டபோது ‘மந்தை விரட்டு என்பதே மஞ்சுவிரட்டு என்று மருவி விட்டதாகவும், மந்தையில் மாடுகளை விரட்டுவதே மஞ்சு விரட்டு’ என்று அழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மாடு பிடிக்கும் நிகழ்வின் மூன்றாவது கட்டம்தான் ஜல்லிக்கட்டு. “இதன் முதல் கட்டம் என்பது ஏறு தழுவுதல். சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல்களில் காணப்படும் வார்த்தை இதுதான். அதற்குப் பிறகு வந்தது மஞ்சுவிரட்டு, அதற்குப் பின்பு மூன்றாவது கட்டமாக வந்ததுதான் இந்த ஜல்லிக்கட்டு.”

தனது சிறு வயதுகளில் பெரும்பாலான கிராமங்களில் ஏறு தழுவுதல் நடந்து வந்ததாகவும், பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டதாகவும் கூறுகிறார் இவர். அதற்குக் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் வேளாண் முறையில் ஏற்பட்ட மாற்றம், மாடுகளின் தேவை குறைப்பு, இயந்திர உபயோகம் ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

தமிழ்நாட்டில் முந்தைய காலத்தில் ஏறு தழுவதல் என்று அழைக்கப்பட்ட மாடுபிடிக்கும் கொண்டாட்டமே தற்போது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் சில இடங்களில் மட்டும் இன்னமும் மஞ்சுவிரட்டு முறை இருக்கிறது. அதில் முக்கியமான இடங்களாக சிறாவயல், பொன்னமராவதி ஆகிய இடங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டு பிரபலமாக உள்ளது.

மஞ்சுவிரட்டுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?

ஜல்லிக்கட்டை போல மஞ்சுவிரட்டில் வாடிக்கட்டி அதன் வழியே மாடுகளை ஒவ்வொன்றாக அனுப்பும் வழக்கம் கிடையாது. ஆனால், தற்போது நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி, மஞ்சுவிரட்டிலும் ஜல்லிக்கட்டை போல வாடி கட்டுதல், விதிமுறைகளைப் பின்பற்றுதல் போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன.

“மஞ்சுவிரட்டில் மாடுகளை பெரிய மைதானத்தில் விரட்டி விடுவார்கள். அதற்குள் மாடுகளும் இருக்கும், மனிதர்களும் இருப்பார்கள். அவர்கள் மாடுகளை விரட்டிக் கொண்டே சென்று அதை அணைய முயல்வார்கள். அப்படியான ஒழுங்கமைக்கப்படாத ஒரு முறைதான் அது,” என்கிறார் அ.ராமசாமி.

ஆனால், ஜல்லிக்கட்டு போலன்றி, மஞ்சுவிரட்டில் தொழுவம் போல வாடி அமைக்கப்பட்டிருக்கும் என்கிறார் ஜல்லிக்கட்டு பேரவையின் மாநிலத்தலைவர் பி . ராஜசேகரன். “மஞ்சுவிரட்டு தொழுவில் அறை அறையாக இருக்கும். அதில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட மாடுகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும். நிகழ்ச்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு தொழுவாக அவிழ்க்கப்படும். வாடிவாசலின் அருகில் இருந்து இந்த மாடுகளைப் பிடிக்காமல் கொஞ்ச தூரம் ஓடவிட்டு விரட்டிப் பிடிப்பார்கள்.

பிடிக்கும் நபருக்கு பரிசுகள் எதுவும் கொடுக்கப்படாது. மாடு கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் சலங்கை மணி அல்லது துணியை வீரர்கள் அவிழ்த்துக் கொள்வார்கள். அதுதான் வெற்றிச் சின்னம். பின்னர் அந்த மாட்டுக்காரரே வந்து ஏதாவது பணம் கொடுத்து அந்த மணியை வாங்கிக் கொள்வார்,” என்று மஞ்சுவிரட்டின் அமைவு குறித்து விளக்குகிறார் ராஜசேகரன்.

ஏறுதழுவலில் இருந்து ஜல்லிக்கட்டு வரை

எப்போதுமே ஒரு சிறிய விஷயத்தில் இருந்து ஒரு பழக்கம் தொடங்கும்போது பெரிய ஒழுங்கமைக்கப்படாத (Unorganized) நிலைக்குச் சென்று, பின்னர் ஒழுங்கமைக்கப்பட்ட (Organized) நிலையை அடையும் என்கிறார் அ. ராமசாமி.

“முதலில் ஒவ்வொரு வீட்டிலும் ஏறுகளை(மாடு) வளர்த்து அதைக் கொண்டாடும் விதமாக கிராமங்களில் ஏறு தழுவுதல் எழுந்தது. இது ஒவ்வொரு ஊரிலும் தனித்தனி கொண்டாட்டமாக நடைப்பெறும்.

பின்னர் பெரிய கொண்டாட்டமாக ஒரு ஊர் மட்டுமில்லாமல், பல ஊர்கள் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வாக மஞ்சுவிரட்டு உருவானது. இதில் ஊர்களின் சார்பாக மாடுகள் கலந்துகொள்ளும். குறிப்பிட்ட மாட்டை தனிநபர் வளர்த்திருந்தால்கூட அந்த ஊரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்தான் மாடு களத்திற்குள் அறிவிப்போடு இறக்கப்படும். இதில் பரிசுகள் எதுவும் வழங்கப்படாது,” என்கிறார் அவர்.

ஜல்லிக்கட்டு உருவான காலம்

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?

அடுத்தடுத்து வந்த சமூக வளர்ச்சியில் 16, 17ஆம் நூற்றாண்டுகளில் இருந்த நிலக்கிழார்கள் மற்றும் பெரும் நிலவுடைமைதாரர்களான ஜமீன்தாரர்கள், பாளையக்காரர்கள் மாடுகளை வளர்த்து தங்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகளை அடக்கும் போட்டிகளை நடத்தியதாகக் குறிப்பிடுகிறார் அ. ராமசாமி.

அப்போதுதான் பரிசுகள் வழங்கும் வழக்கமும் உருவானதாகக் கூறுகிறோர் அவர். இந்த சமயத்தில்தான் ‘ஜ’ என்ற சமஸ்கிருத வார்த்தையுடன் கூடிய ஜல்லிக்கட்டு என்ற வார்த்தை பெரியளவில் உருவானது என்றும் அவர் தெரிவிக்கிறார்.

“சோழர் மற்றும் பாண்டிய மன்னர் காலகட்டங்களிலேயே அரசர்களின் நிலங்களை நிர்வகித்து வந்த மண்டலாதிபதிகளின் தலைமையில் ஏறு தழுவுதல் நடைபெற்றது. ஆனால், அது வேளாண்மைக்குப் பயன்படுத்தும் மாடுகளைக் கொண்டாடவும், பொழுதுபோக்காகவும் மட்டுமே நடத்தப்பட்டது.

ஆனால் தற்போது, மதுரை மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான ஜல்லிக்கட்டு உருவாக்கத்திற்குப் பின்னால் அந்தப் பகுதியில் இருந்த ஜமீன்களின் பாத்திரம் முக்கியமானதாக இருந்துள்ளது. அவர்கள்தான் பரிசுகள் கொடுத்துள்ளனர். இவர்களுடைய மாடுதான் பெரும்பாலும் முதலில் வாடியில் விடப்படும். அதை யாரும் தொட மாட்டார்கள். அப்படியான பாரம்பரியம் இருந்துள்ளது. அதன் பின்னர் பெரிய நிலக்கிழார்கள், பணக்காரர்கள் இந்த மாடுகளை வளர்த்துள்ளனர்,” என்கிறார் அவர்.

இப்படித்தான் ஏறுதழுவலில் தொடங்கி மஞ்சுவிரட்டாகி ஜல்லிக்கட்டாக பரிணாம வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் மஞ்சுவிரட்டின் விதிகள் குறித்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிராவயல் மஞ்சுவிரட்டு

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?

சிறாவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுபினர் எஸ்.மாங்குடி அவர்கள் முன்னிலையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டைத் துவக்கி வைத்தார். இதில் 271 காளைகள் மற்றும் 81 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு நடைபெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பிரபலமான ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை சில வீரர்கள் மற்றும் மாடுகள் மட்டுமே காயம் பட்டிருந்தனர்.

ஆனால், சிறாவயல் மஞ்சுவிரட்டில் பார்வையாளர்களாக வந்திருந்த 6ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது ராகுல் என்ற அரசுப்பள்ளி மாணவனும், 32 வயது இளைஞர் முத்துமணி என்பவரும் மாடு மோதியதில் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு முதலமைச்சர் நிதியிலிருந்து தலா 3 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்திடம் கேட்டபோது, “சிறாவயல் மஞ்சுவிரட்டைப் பொறுத்தவரை பெரிய அளவிலான பரப்பளவில் மைதானம் அமைத்து வாடிவாசல் வழியாகவே மாடுகள் வெளியே அனுப்பப்பட்டன. மற்றபடி மாடுகளுக்கான மருத்துவ தகுதிகள், பாதுகாப்பு அம்சங்கள், மாடுகளுக்கான பதிவு, வீரர்களுக்கான பதிவு என அனைத்துமே ஜல்லிக்கட்டு விதிகளை ஒத்தது போலத்தான் பின்பற்றப்பட்டன.

எனவே, வாடிவாசல் மைதானத்திற்குள் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஒரு சில மாடுபிடி வீரர்கள் மட்டுமே சிறிய அளவு காயமடைந்தனர். ஆனால், இது பெரிய மைதானம் என்பதால் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வெளியில் சிலர் விதிகளை மீறி மாடுகளை அவிழ்த்து விட்டுள்ளனர். இதனால், அங்கு நின்று கொண்டிருந்த மக்கள் சிலர் விபத்திற்கு ஆளாகியுள்ளனர்,” என்று கூறியுள்ளார்.

இந்த முறை மூன்று அடுக்கு செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு பதிவுகளோடு வரும் மாடுகள் மட்டுமே அந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தது. மேலும் பாதுகாப்புப் பணியில் 800 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேநேரம் 1 லட்சம் பார்வையாளர்கள் மஞ்சுவிரட்டைக் காண வந்திருந்தனர். இவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தும்கூட சிலர் இதைத் தாண்டி விதிகளை மீறி தங்களது கட்டுமாடுகளை கூட்டத்திற்குள் அவிழ்த்து விட்டதால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர்.

மாடுபிடி வீரர்கள் கூறுவது என்ன?

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?

சிறாவயல் மஞ்சுவிரட்டில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாடு விட்டு வருபவர் செந்தில்குமார். எதனால் வாடியில் மாடுகளை விடாமல் மக்கள் கூடியுள்ள திறந்த வெளியில் மாடுகளை விடுகிறீர்கள் என்று கேட்டபோது, “முன்பெல்லாம் இதுபோன்ற வாடி முறைகள் கிடையாது. திறந்த வெளியில்தான் மாடுகள் அவிழ்த்து விடப்படும். அதுதான் பாரம்பரியமான வழக்கம். ஆனால், கடந்த பத்து வருடங்களாகத்தான் வாடி முறையைப் பின்பற்றுகிறார்கள். அதிலும் கடந்த 3 ஆண்டுகளாகவே டோக்கன் முறையில் நடத்தப்படுகிறது,” என்றார்.

மேலும், மஞ்சுவிரட்டுக்காக ரூ. 30,000 முதல் ரூ. 60,000 வரை செலவு செய்து இரண்டு மாதங்கள் மாட்டைத் தயார் செய்வதாகவும், அரசு விதிகளை மதித்து இணையத்தில் பதிவு செய்தாலும்கூட பலருக்கும் டோக்கன் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார் அவர்.

அதே நேரம் பெரும்பாலும் முக்கியஸ்தர்களின் மாடுகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

“இதுபோன்ற சூழலில்தான் நாங்கள் மாடுகளை வாடிக்கு வெளியில் திறந்த வெளியில் அவிழ்க்க வேண்டியிருக்கிறது. எனவே அனைவருக்கும் எளிய முறையில் அனுமதி வழங்கினால் நாங்களும் வாடி வழியாகவே மாடுகளை அவிழ்ப்போம்,” என்று உறுதியாகக் கூறுகிறார்.

ஆனால், “அப்படி முக்கியஸ்தர்கள் மாடுகள் என்று பார்த்தெல்லாம் யாருக்கும் டோக்கன் வழங்குவதில்லை. இந்த முறை விண்ணப்பம் செய்திருந்த 270க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது,” என்றார் ஆஷா அஜித்.

“மாடுகளுக்கான தகுதியாக அதன் மருத்துவ சான்றிதழ் மட்டுமே பார்க்கப்படும். அதைத் தாண்டி அந்த மாடு மருத்துவ ரீதியாகத் தகுதியில்லை என்றால் மட்டுமே அவை நிராகரிக்கப்படும். எனவே இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல,” என்று பிபிசி தமிழிடம் கூறியுள்ளார் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்.

மஞ்சுவிரட்டின் எதிர்காலம் என்ன?

ஜல்லிக்கட்டுக்கும் மஞ்சுவிரட்டுக்கும் என்ன வித்தியாசம்?

சிவகங்கை பகுதியில் மட்டுமே அதிகமாக மஞ்சுவிரட்டு பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே பெரும்பான்மையாக ஜல்லிக்கட்டு விதிகள் மஞ்சுவிரட்டிலும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், முழுமையாக மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டாக மாறும் வாய்ப்புள்ளதா என்ற கேள்வியை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தோம்.

இதற்குப் பதிலளித்த அவர், “எதிர்காலத்தில் மஞ்சுவிரட்டில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசியுள்ளோம். அது குறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும். மஞ்சுவிரட்டும் தற்போது ஜல்லிக்கட்டு போலவே நடத்தப்படுகிறது. வாடியின் அமைப்பும், மைதானத்தின் அளவும் மட்டுமே வேறுபடுகிறது.

ஆகையால் ஏற்கெனவே ஜல்லிக்கட்டு விதிகளைப் போலவே இதிலும் பின்பற்றப்படுகிறது. விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது வழக்குகளும் போடப்படுகிறது. அதைத் தாண்டியும் ஒரு சிலர் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார் ஆஷா அஜித்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »