Press "Enter" to skip to content

ராமர் கோவில்: ‘இந்து’ என நிரூபிக்கப் போராடும் எதிர்க்கட்சிகள் – இது பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், Getty Images

ராமர் கோவில் திறப்பு விழாவை முழுமூச்சுடன் முன்னெடுத்து வருகிறது பாஜக. எதிர்க்கட்சிகள் இந்த விழாவை தவிர்ப்பதாகவும், புறக்கணிப்பதாகவும் அறிவித்துவிட்டாலும் இந்த எதிர்ப்பு இந்துக்களை நோக்கியது அல்ல என்று பிரித்துக் காட்டுவதற்காக சில கட்சிகள் குழப்பமான நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். இந்த போக்கு யாருக்கு லாபம் தரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோவிலை முன்னிறுத்தி ரத யாத்திரை, கரசேவை என்று தீவிரமாக அரசியலை முன்னெடுத்த பாஜக, பாபர் மசூதி இடிப்பும் அதைத் தொடர்ந்த எல்லா அரசியல் நிகழ்வுப் போக்குகளிலும் ஒரே சார்பான நிலைப்பாட்டை முன்னெடுத்து அதன் வழியாக மதச்சார்பான வாக்கு வங்கியை உருவாக்கி, அரசியல் செல்வாக்கை உயர்த்திக்கொண்டது.

இப்போது அதே நிலத்தில் ராமர் கோவில் திறக்கப்படுவதை தன்னுடைய சாதனையாகவே பாஜக முன்னிறுத்தி வருகிறது. தன்னுடைய அரசியலை எதிர்க்கும் கட்சிகளை, இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக நிறுத்துவதற்குத் தொடர்ந்து முயல்கிறது.

இப்படியான சூழலில், நாங்கள் பாஜகவின் அரசியலுக்கு எதிராக நிற்கிறோம், இந்துக்களுக்கு எதிராக அல்ல என்று காட்டுவதற்காக எதிர்க் கட்சிகள் கடுமையாக முயன்று வருகிறார்கள்.

குறிப்பாக, கடந்த காலங்களைப் போல் அல்லாமல் பாஜகவினர் தங்களுடைய இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை வெளிப்படையாக முன்னெடுக்கும் சூழலில் இந்த நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.

ராமர் கோவில்: 'இந்து' என நிரூபிக்கப் போராடும் எதிர்க்கட்சிகள் - இது பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், PTI

இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் ராமர் கோவில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த சூழல் பல்வேறு கட்சிகளுக்கும் தர்ம சங்கடத்தையே ஏற்படுத்திருக்கிறது.

இடதுசாரி கட்சிகளான சி.பி.ஐ(எம்) மற்றும் சி.பி.ஐ உள்ளிட்டவை இந்த விழாவை ஏற்கமாட்டோம், மதத்தை அரசியலில் கலக்கக்கூடாது என்று தெரிவித்துவிட்டன. ஆனால் மற்ற கட்சிகள் அப்படி உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

பிஹாரின் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்லவில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். 1990இல் பாஜக தலைவர் எல் கே அத்வானி, அயோத்தி நோக்கி நடத்திய ரத யாத்திரையை பிஹாரில் தடுத்து நிறுத்தி, கரசேவைக்கு ஆள் சேர்த்த அத்வானியை கைது செய்தவர் லாலு பிரசாத் யாதவ். இப்போதும் தனது நிலைப்பாட்டை குழப்பமின்றி வெளிப்படுத்தியுள்ளார்.

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்லவில்லை என்ற தங்கள் நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி சற்று தாமதமாகவே வெளிப்படுத்தியது. அந்த கட்சியின் சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஊசலாட்டமாக கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.

பாஜகவின் ராமர் அரசியலை நிராகரிக்கும் மம்தா பானர்ஜி

ராமர் கோவில்: 'இந்து' என நிரூபிக்கப் போராடும் எதிர்க்கட்சிகள் - இது பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், X/AITCofficial

பாஜகவின் அரசியலையும் ராமர் கோவிலையும் நிராகரிக்கும் திரிணாமுல் காங்கிரஸ், அதே நாளில் மேற்கு வங்கத்தில் மற்றொரு நிகழ்வை நடத்துகிறது. அதில் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள காளி கோவிலுக்குச் சென்று தனிப்பட்ட முறையில் வழிபட்டு, பின் திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக நடத்தப்படும் ‘சர்ப தர்மா’ (அனைத்து மத) பேரணியில் பங்கேற்கிறார்.

‘தர்மா ஜர் ஜர், உத்சவ் சோபர்’ (மதம் தனிப்பட்டது, விழா அனைவருக்குமானது) என்று கூறுகிறார் மம்தா. பெரும்பாலான மேற்கு வங்க இந்துக்கள் வணங்கக்கூடிய கடவுளாக காளி உள்ளது.

“கடவுள் ராமரின் சிலையை பிரதிஷ்டை செய்வது நமது வேலை அல்ல. அது மதகுருமார்களின் வேலை. ஒரு அரசியல்வாதியாக மக்களுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவதே என் பணி, நான் அதைச் செய்வேன்,” என்றும் மம்தா தெரிவித்திருந்தார்.

மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சிகளில் ஒன்றான பாஜக இந்த முன்னெடுப்புகளைக் கண்டித்துள்ளது. இந்து உணர்வுகளை மதிக்காத மம்தா பானர்ஜியின் போக்கு இது என்று விமர்சித்ததுடன், பாஜக ஐ.டி பிரிவு தலைவர் அமித் மால்வியா “இது வகுப்புவாத மோதல்களுக்கு களத்தை உருவாக்கிக் கொடுக்கும் செயல். ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் அதற்கு அவர் மட்டுமே முழு பொறுப்பாவார்,” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க பாஜகவினர் ராமர் கோவில் விழாவை மாநிலம் முழுவதும் பெரிய திரைகள் அமைத்து நேரலை செய்யத் திட்டமிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் போக்கு, மென் இந்துத்துவா போக்குதான் என்று விமர்சித்துள்ளது SUCI கட்சி.

ஆம் ஆத்மி கட்சியின் சிறப்புக் குழு

ராமர் கோவில்: 'இந்து' என நிரூபிக்கப் போராடும் எதிர்க்கட்சிகள் - இது பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், Getty Images

ஆம் ஆத்மி கட்சி ராமர் கோவில் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறினாலும் “ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்று அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நான் என் குடும்பத்தினருடன் ராமரை பார்வை செய்ய விரும்புகிறேன், எனவே இன்னொரு நாளில் ராமர் கோவிலுக்குச் செல்வேன்,” என்று அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு அடுத்த நாளான ஜனவரி 23ஆம் தேதி, டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும், 2600 இடங்களில் சுந்தரகாண்டம் மற்றும் அனுமன் சலிசா பாடும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய, ஆம் ஆத்மி கட்சியில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்த கெஜ்ரிவால், டெல்லி திரும்பியவுடன், முதல்வர் புனித யாத்திரை திட்டத்தில், அயோத்தி பயணத்தையும் சேர்த்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கூட்டணியில் உள்ள, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், ராமர் கோவில் திறப்பு விழாவுக்குச் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.

“ராமரின் பக்தர்கள் ராமர் கோவிலுக்குச் செல்ல உற்சாகமாக உள்ளனர். அவர்களின் மூலம் இந்நிகழ்வின் மகிழ்ச்சி என்னை வந்தடையும். இந்நிகழ்வுக்குப் பிறகு, ராமரை வழிபடுவது எளிதாக இருக்கும். அப்போது, ராமர் கோவிலும் முழுதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும். அப்போது நான் செல்வேன்,” என்று கூறியுள்ளார்.

பாஜக பாணியில் நவீன் பட்நாயக்

ராமர் கோவில்: 'இந்து' என நிரூபிக்கப் போராடும் எதிர்க்கட்சிகள் - இது பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், Getty Images

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமார் ராமர் கோவில் திறப்பு விழாவுக்குச் செல்வாரா இல்லையா எனத் தெளிவுபடுத்தவில்லை.

எந்த அணியிலும் இல்லாத பிஜு ஜனதா தளம் கட்சி ஒடிசாவில் பூரி ஜகன்நாதர் கோவில் நோக்கிய நீண்ட சாலையை அடுத்த வாரம் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது.

மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகவுக்கு எதிரான அஸ்திரமாக இந்த ஆன்மீக சாலை திட்டத்தை பிஜு ஜனதா தள தலைவரும் ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் பார்க்கிறார்.

கிட்டத்தட்ட பாஜகவின் பாணியிலேயே இந்த கோவில் விழாவும் திட்டமிடப்பட்டுள்ளது. 800 கோடி ரூபாயில் கட்டப்படும் இந்த சாலைத் திட்டம் குறித்து, விளம்பரப்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது ஒடிசா அரசு.

வீடு வீடாகச் சென்று கைப்பிடி அரிசி மற்றும் பாக்கு சேகரிக்கப்பட்டுள்ளது. பரிக்ரமா ப்ரகல்பா என்ற இந்நிகழ்வு பிஜு ஜனதா தள கட்சி நிகழ்வாக நடைபெறுவதால், இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பாஜக கூறியுள்ளது.

துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வழங்கியதில் அரசியலா?

ராமர் கோவில்: 'இந்து' என நிரூபிக்கப் போராடும் எதிர்க்கட்சிகள் - இது பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், PTI

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் பாஜகவின் அரசியலை எதிர்ப்பதில் திமுக தயக்கம் காட்டவில்லை. அதேநேரம் ராமர் கோவிலுக்காக நிதி கொடுப்பதில் தொடங்கி, விழாவிற்கு பக்தர்களை அனுப்புவது வரை சில அமைச்சர்களின் கருத்துகள் சர்ச்சையாகின.

முதலமைச்சரின் மனைவிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்ட நிகழ்வையும்கூட விமர்சனத்திற்குரிய ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.

“தமிழக முதல்வரின் மனைவிக்கு ராமர் கோவில் திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொள்வதற்கும், அங்கே செல்வதற்கும் அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், அந்தப் புகைப்படத்தை ஏன் வெளியிட வேண்டும்?

முதல்வரின் ஒப்புதல் இல்லாமலா அந்தப் புகைப்படம் வெளிவந்திருக்கும்? இதன் மூலம் என்ன செய்தி சொல்லப்படுகிறது? இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அயோத்திக்கு தமிழ்நாட்டு பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்று கூறுகிறார். ஆட்சி ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்று சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது,” என்றார் அவர்.

ஆனால் திமுகவின் டி.கே.எஸ்.இளங்கோவன் அவ்வாறு நிரூபிக்கும் கட்டாயம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்று மறுக்கிறார்.

“முதல்வர் மனைவிக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போது எடுத்த புகைப்படத்தை வெளியிட்டது திமுக அல்ல, அவர்கள்தான். இதை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என நினைப்பது அவர்கள்தான்,” என்று விளக்கினார்.

மேலும், “எதிர்க்கட்சிகள் இத்தனை ஆண்டுகளாகச் செய்தது எல்லாமே இந்துகளுக்காகத்தான். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் கொண்டுவந்தார்.

இந்துக்களில் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உண்டு. வி பி சிங் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார். திராவிட இயக்கங்கள் பேசியது எல்லாமே பட்டியலினத்தவருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும்தான். இவர்கள் எல்லாரும் இந்துக்கள்தானே. கடவுளை அரசியலுக்காக பயன்படுத்தும்போது, அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அரசியல் தரகராக கடவுளை பாஜக பயன்படுத்துகிறது,” என்று காட்டமாக விமர்சித்தார்.

ராமர் அரசியல் தென்னிந்தியாவில் எடுபடுமா?

ராமர் கோவில்: 'இந்து' என நிரூபிக்கப் போராடும் எதிர்க்கட்சிகள் - இது பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், Getty Images

வட இந்தியாவில்தான் இந்த பிரச்னை முக்கியமாக உள்ளது என்கிறார் பத்திரிக்கையாளர் மணி.

“ராமர் கோவில் வட இந்திய மக்களிடம் அதிகம் எடுபடும். எனவே வட இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு அதிக நிர்பந்தம் உள்ளது. நெஞ்சைக் கிழித்துக் கொண்டு நாங்கள் இந்துக்கள் என்று கூற வேண்டியுள்ளது. ஆனால், இவை தென்னிந்தியாவில் எடுபடாது. இடதுசாரிகள் பாஜகவை நேரடியாக எதிர்த்தாலும் அவர்களின் குரல் மிகவும் நலிந்துவிட்டது,” என்றார்.

மதமும் சாதியுமே இந்திய தேர்தல்களில் முக்கிய பங்காற்றுகின்றன என்றார் அரசியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன், “பாஜகவை உள்ளே விடாத பிஹார் சாதி ரீதியாக வாக்களிக்கிறது. மகாராஷ்ட்ராவும் குஜராத்தும் வகுப்புவாத மாநிலங்களாக, இந்து வாக்குகளை ஒன்றிணைக்கக் கூடியதாக இருக்கிறது,” என்றார்.

பாஜக கால் பதிக்க முடியாத தென்னிந்திய மாநிலங்களில் ஒன்று கேரளா. அங்கும் பாஜக, தொடர்ந்து களப் பணியாற்றி வருகிறது. சமீபத்தில் கேரளா சென்ற பிரதமர் நரேந்திர மோதி குருவாயூர் கோவிலில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தை நடத்தி வைத்து, அந்த கோவிலில் இருந்த அனைத்து திருமண தம்பதிகளுக்கும் ராமர் கோவில் அட்சதை வழங்கினார்.

எதிர்க்கட்சிகளால் இந்துக்களை ஈர்க்க முடியாதா?

ராமர் கோவில்: 'இந்து' என நிரூபிக்கப் போராடும் எதிர்க்கட்சிகள் - இது பாஜகவின் வெற்றியா?

பட மூலாதாரம், Getty Images

பிரதமரின் செயல்பாட்டில் அரசியல் இல்லை என்று மறுக்கிறார் கேரள பாஜகவை சேர்ந்த ஷோபா சுரேந்திரன். “பிரதமர் மோதி கேரளா வந்தபோது ராமர் கோவில் அட்சதயை அனைவருக்கும் கொடுத்தார். இடதுசாரி அரசுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகர் மம்முட்டிக்கும் கொடுத்தார், அவரும் அதை பெற்றுக் கொண்டார்,” என்றார்.

மேலும், “ராமரின் கோவிலை ஒரு புனித தலமாகப் பார்க்க வேண்டும். எப்படி கிறித்தவர்களுக்கு யேசு பிறந்த இடம் புனிதமானதோ, இஸ்லாமியர்களுக்கு மெக்கா, மெதினா புனித தலங்களோ அதுபோல நமது நாட்டின் புனித தலம் அயோத்தி,” என்றார்.

பாஜவின் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் வினையாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார் அரசியல் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

“பாஜக பேசும் மொழியையே எதிர்க்கட்சிகளையும் பேச வைத்திருப்பது பாஜகவின் வெற்றி. எதிர்க்கட்சிகள் எவ்வளவு முயன்றாலும், அவர்கள் இந்துக்களுக்கு ஆதரவானவர்களாக என்றைக்கும் பார்க்கப்பட மாட்டார்கள்.

அவர்களின் முயற்சிகள் பாஜகவின் வாதம் உண்மையல்ல என்று கூறுவதற்கு மட்டுமே உதவும். தலைவர்கள் அனைவரும் மத நம்பிக்கை கொண்டவர்கள்தான். இந்துக்கள்தான். முலாயம் சிங், மமதா பானர்ஜி, கெஜ்ரிவால் ஆகியோர் பாஜகவினரைவிட மதப்பற்று கொண்டவர்களாக இருக்கலாம். ஆனால், மதத்தை அரசியலுக்குள் நுழைக்கும்போது எதிர்க்கட்சிகள் பின்னடைவை எதிர்கொள்கிறார்கள்,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »