Press "Enter" to skip to content

‘பாகிஸ்தான் – இரான் இடையிலான விரோதம் மேலும் அதிகரித்தால் பிராந்தியத்திற்கே ஆபத்து’

பட மூலாதாரம், GETTY IMAGES

பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தின் பஞ்கூர் பகுதியில், இரான் தாக்குதல் நடத்திய நிலையில், இரண்டு நாட்கள் கழித்து வியாழக்கிழமை (ஜன. 18) இரானில் பாகிஸ்தான் பதிலடி தாக்குதலைத் தொடங்கியது.

உளவு அடிப்படையிலான நடவடிக்கை வாயிலாக, பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் பலூசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகிய தீவிரவாத அமைப்புகளின் பதுங்கிடங்கள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள் மற்றும் ஆயுதங்கள் மூலம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு சில மணிநேரம் முன்னதாக, இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹ்யான் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசி வாயிலாக, இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு மற்றும் நெருக்கமான தொடர்பு தொடர்வதற்கான தேவை குறித்துப் பேசியுள்ளார். அப்போது, பாகிஸ்தான் தங்களின் நண்பர் என்றும் சகோதர நாடு என்றும் வர்ணித்துள்ளார் ஹொசைன்.

பாகிஸ்தானின் கிழக்கு, மேற்கு அண்டை நாடுகளான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் அதன் உறவு நெருக்கடியில் உள்ளது. மேலும், அந்நாட்டின் படைகள் பல்வேறு தீவிரவாத குழுக்கள் மற்றும் ஆயுதக் குழுக்களுடன் அதிதீவிரம் அல்லாத வகையில் போரிட்டு வருகின்றன. இந்தச் சூழலில், இரானின் தலையீடு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்திருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.

பாகிஸ்தானுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும்

இரான் - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Reuters

இரானுடனான பாகிஸ்தானின் உறவு, அந்நாடு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் கொண்டிருக்கும் உறவிலிருந்து வித்தியாசமானது என்கிறார், இஸ்லாமாபாத்தில் செயல்பட்டு வரும் ‘தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரீஜினல் ஸ்டடீஸ்` எனும் சிந்தனை மையத்தைச் சேர்ந்த இரானிய நிபுணர் ஃபராஸ் நக்வி.

பயங்கராவத முயற்சிகளை எதிர்கொள்வதில் இரான், பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் மிக விரிவான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கும் நிலையில், இரானின் இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

“இது தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் நம்பிக்கையில் போதாமையை ஏற்படுத்தியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் கூட்டுப் பயிற்சிக்காக பாகிஸ்தான் கடற்படையினர் இரானில் உள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. பாகிஸ்தானின் தொழில் பிரதிநிதிகள் குழு சப்ஹாருக்கு சென்றுள்ளது.

மேலும், இரானின் பாதுகாப்பு ஆலோசகர் இஸ்லாமாபாத்திற்கு சென்றிருக்கிறார். இந்தப் பின்னணியில், இந்தத் தாக்குதல்கள் பாகிஸ்தானுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

இஸ்லாமாபாத் தனது தடுப்பு நடவடிக்கைக்காக பதிலடி தாக்குதல்களைத் தவிர்க்க முடியாது என்று ஃபராஸ் கூறுகிறார். அதேவேளையில், பதிலடி தாக்குதலுக்குப் பின்னர் இப்போது இந்த நிலைமையை அமைதியான முறையிலும் நுட்பத்துடனும் கையாள வேண்டும் என்கிறார் அவர். எனினும், இந்தத் தாக்குதல்களுக்கு முன்பு இருநாட்டு உறவு எப்படி இருந்ததோ அதே நேர்மறையான பாதையில் உறவை மீட்டெடுப்பதற்கு இன்னும் சில காலமாகும் என்கிறார் அவர்.

மற்ற நாடுகள் என்ன சொல்கின்றன?

இரான் - பாகிஸ்தான்

பட மூலாதாரம், GETTY IMAGES

வெளியுறவு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து வரும் சலாம் ஜாவெத்தும் பாகிஸ்தானின் அணுகுமுறையைப் பாராட்டியுள்ளார். மேலும், பாகிஸ்தான் இவ்விவகாரத்தை புத்திசாலித்தனமாகக் கையாண்டுள்ளதாக அவர் நம்புகிறார்.

“பாகிஸ்தான் இந்த விஷயத்தில் எதையும் யோசிக்காமல் அதிரடியாக செயலாற்றவில்லை. திட்டமிட்டு எதிர்வினையாற்றியுள்ளது. பதிலடி தாக்குதல் கொடுப்பதற்கான முடிவு எடுப்பதற்கு பாகிஸ்தானுக்கு 32 மணிநேரம் இருந்திருக்கிறது. நட்பு நாடுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் தனது வான்வெளியில் தூண்டப்படாத அத்துமீறலுக்கு பதிலளிக்கும் உரிமையைக் கொண்டுள்ளது என்று தெஹ்ரானுக்கு தெரிவித்துள்ளது,” என்கிறார் அவர்.

பாகிஸ்தான் தனது தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, சர்வதேச நடைமுறையின்படி மற்றொரு நாட்டில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடத்தின் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்தியது என்கிறார் சலாம். ஆனால் இப்போது மற்ற உலக வல்லரசுகளும் இதில் இணைந்துள்ளன. சீனா, சௌதி அரேபியா, துருக்கி மற்றும் அமெரிக்கா போன்ற நட்பு நாடுகளும் நெருக்கடியை மட்டுப்படுத்தும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளன. எனவே, நிலைமை மேம்படும் என நம்பப்படுகிறது.

இரானும் பாகிஸ்தானும் “பதற்றத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையையும் தவிர்க்குமாறு” சீனா இருநாடுகளையும் அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இரானிய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இருநாடுகளிலும் துருக்கி அமைதியை வலியுறுத்தியுள்ளது. துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகான் ஃபிடான் இதுகுறித்து இருநாடுகளிடையேயும் பேசியுள்ளார்.

‘இரானின் விரோதம் மேலும் அதிகரிக்கும்’

இரான் - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆனால், இந்த விவகாரத்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் பாகிஸ்தானை மேலும் பாதுகாப்பற்றதாக ஆக்கியுள்ளதா?

அரசியல் ஆய்வாளர் மொஷரஃப் ஸைதி இதுதொடர்பாக “மிக ஆபத்தான மற்றும் முன்பே கணிக்கப்படாத நிலைமை ஏற்படலாம்,” என எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில், “பல ஆண்டுகளாக, பாகிஸ்தானை குறிவைக்கும் பயங்கரவாதிகளை இரான் தீவிரமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, பாகிஸ்தானின் பாதுகாப்பைக் குறைமதிப்புக்கு உட்படுத்துவதற்காக இரான் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறது. மேலோட்டமாகப் பார்த்தால், இந்தக் குழுக்களை பாகிஸ்தான் குறிவைப்பது முற்றிலும் பாதுகாப்பு நடவடிக்கையாகும்,” என்கிறார்.

“இரானுக்கு சண்டை தேவைப்படுகிறது. அது எங்கு என்றாலும் சரி. ஏனெனில் ஒரு புரட்சிகர ஆட்சி அதன் பரந்த இலக்குக்காகப் போராடாமல் வாழ முடியாது,” என்கிறார் ஸைதி.

பாகிஸ்தான் பதில் தாக்குதலை நிகழ்த்தியிருப்பதால், இரான் தரப்பிலிருந்து விரோதம் மேலும் அதிகரிப்பதற்கான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஸைதி கருதுகிறார்.

இரான் – பாகிஸ்தான் பலங்கள் என்ன?

இரான் - பாகிஸ்தான்

பஞ்கூரில் நடைபெற்ற தாக்குதல்கள் இரானின் புரட்சிகர காவல் படையின் (ஐ.ஆர்.ஜி.சி) செயலாக இருக்கலாம் என, பாகிஸ்தானில் உள்ள சில கருத்தாளர்களின் எண்ணமாக உள்ளது. இதை மத்திய கிழக்கில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலையுடன் அவர்கள் தொடர்புப்படுத்துகின்றனர்.

ஐ.ஆர்.ஜி.சி தளபதி பிரிகேடியர் ஜெனரல் கடார் ரஹீம்ஸாடே பாகிஸ்தானுக்கு அருகே இரானின் தென்கிழக்கு எல்லையில் பெரியளவிலான ராணுவ பயிற்சிகளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார் என அல்-ஜசீராவின் செய்தி அறிக்கை கூறுகிறது.

இரானிய பிரதேசத்தில் அபாடன் மற்றும் சபார் இடையிலான 400 கி.மீ. தொலைவை உள்ளடக்கி இந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளதாக அச்செய்தி தெரிவிக்கிறது. இந்த நடவடிக்கையில் ஆட்களைக் கொண்ட விமானங்களும் ஆளில்லா விமானங்களும் ஏவுகணை அமைப்புகளும் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இரானின் தாக்குதலை முறியடிக்க பாகிஸ்தானிடம் சமமான ராணுவ பலம் உள்ளதா?

இதுகுறித்து இரானிய நிபுணர் ஃபராஸ் நக்வி கூறுகையில், பாகிஸ்தானிடம் மேம்பட்ட ஏவுகணைகள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் உள்ளதாகவும் இரானுக்கும் சில அனுகூலங்கள் உள்ளதாகவும் கூறுகிறார்.

“பாகிஸ்தான் ஓர் அணுசக்தி நாடு. அதுதான் அதன் பாதுகாப்பு மற்றும் யுக்தி ஆதாரம். இரானைவிட பாகிஸ்தானின் ராணுவ ஆயுதக் கிடங்கு மேம்பட்டது. எனினும், தெஹ்ரானின் பிரதிநிதிகள் ராணுவத்தின் மிகப் பெரிய சொத்து. அதன் பிரதிநிதிகள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் முழுவதிலும் சிதறிக் கிடக்கின்றனர்.

எனவே ஆயுதங்களை ஒப்பிடுவது அல்ல விஷயம், இது திறன் சம்மந்தப்பட்டது. பாகிஸ்தான் அணுசக்தி நாடு என்றால், இரானிடம் மிகச் சிறந்த பிரதிநிதிகள் உலகெங்கிலும் உள்ளனர்,” என்றார் அவர்.

பாகிஸ்தான் இரானுடன் 900 கி.மீ. தொலைவுக்கு எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. சலாம் ஜாவெத்தின் கருத்துப்படி, பாகிஸ்தான் தன்னுடைய தென்மேற்கு எல்லையை முன்பைவிடத் தீவிரமாகப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்.

நிலைமை தணியுமா?

இரான் - பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

“பாகிஸ்தானின் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு எப்போதும் இந்தியாவை மையப்படுத்தியதாகவே உள்ளது. 2011ஆம் ஆண்டில் ஒசாமா பின்லேடனுக்கு எதிராக அமெரிக்காவின் கடல்வழி நடவடிக்கைக்குப் பின்னரே பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுடனான மேற்கு எல்லையில் வான்வழிப் பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இப்போதும் இரானுடனான தென்மேற்குப் பகுதியில் இந்த அமைப்பு இல்லை. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு நிலைமை மாறலாம்,” என்கிறார் ஜாவெத்.

இந்தப் பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் இரானின் சிக்கலான ராணுவ நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கு நாடுகளுடனான விரோதமான உறவுக்கு மத்தியில் எந்த நாடும் இரான் பிராந்தியத்தில் 1980களில் இரான் – இராக் போருக்குப் பிறகு தாக்குதல் நிகழ்த்தவில்லை. பாகிஸ்தானின் பதில் தாக்குதல்கள் இதை மாற்றியுள்ளது என சலாம் ஜாவெத் தெரிவித்தார்.

“இருநாடுகளும் நெருக்கடியின் தீவிரத்தைத் தணித்து, மற்ற நாடுகளும் தலையிடும் வகையிலான போருக்கு இடம் கொடுக்காது என நம்புகிறேன். அப்படி நடந்தால் இந்த பிராந்தியத்திற்குப் பேரழிவாக இருக்கும்,” என்றார் அவர்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை சிந்தனை மையமான வில்சன் சென்டரின் தெற்காசிய இயக்குநர் மைக்கேல் குகேல்மன் கூறுகையில், இரு தரப்பிலும் சமமாக இருப்பதால், இந்த நிலைமை மேலும் மோசமடையாது என்றார்.

“இரானின் முந்தையை தாக்குதலின் அளவுக்கேற்ப தான் பாகிஸ்தானின் பதிலடியும் இருப்பது போன்று உள்ளது. மேலும், கிளர்ச்சியாளர்களைத்தான் பாகிஸ்தான் குறிவைத்தது. இரானிய பாதுகாப்புப் படைகளை அல்ல.

எனவே, இருபுறமும் சமமாக இருப்பதால், அமைதியை உருவாக்குபவர்கள் முயற்சி எடுத்தால், தீவிர நிலையை மட்டுப்படுத்தும் சூழல் உள்ளது. எனினும் இது நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது,” என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »