Press "Enter" to skip to content

ராமர் கோவில் குடமுழுக்கு நெருங்கும் நேரம் அயோத்தி இஸ்லாமியர்களின் மனநிலை என்ன?

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு வருகின்ற ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது, இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்கிறார்.

ராமர் கோவிலின் கட்டுமானங்களை முன்நின்று செய்துவரும் அதன் நிர்வாகக்குழு 7,000 துறவிகளைத் தாண்டி மேலும் 4,000 நபர்களுக்கு இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கிடையில், 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ராமர் கோவில் வளாகத்திற்குப் பின்னால் உள்ள கத்ரா என்ற பகுதியில், சிறிய வீட்டில் வசித்து வரும் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று கும்பாபிஷேக தேதி நெருங்கி வருவதால் இரவும் பகலுமாக வேலை செய்து வருகிறது.

இந்த வீட்டில் தான் அவர்கள் பல தலைமுறைகளாக இனிப்பு பலகாரங்களுக்கான டப்பாக்களை தயார் செய்து வருகின்றனர். இங்கிருந்து பிரசாதங்கள் வழங்கப்படும் இனிப்பு கடைகளுக்கு இவற்றை அனுப்பி வைக்கின்றனர்.

டப்பா தயாரிப்பாளரான ஃபூல் ஜஹானுக்கு டிசம்பர் 7, 1992 அன்று, 9 வயதே ஆகியிருந்தது. அன்று ஆக்ரோஷமான கும்பல் ஒன்று அவரது வீட்டைத் தாக்கி அவரின் தந்தை ஃபதே முகமதுவைக் கொன்றுவிட்டது.

அந்த நாளை இன்று நினைவுகூர்கையிலும், ஃபூல் ஜஹான் உணர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறார்.

அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் தற்போதைய மனநிலை என்ன?

சமூகங்களுக்கு இடையே இடைவெளி உருவானது எப்படி?

“எங்கள் தந்தை கோயில்களுக்கு இனிப்பு பலகார டப்பாக்களை தயாரித்து கொடுக்கும் ஒரு எளிய மனிதர். அவர் கொல்லப்பட்ட பிறகு நாங்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாக நேர்ந்தது,” என்று கூறுகிறார் ஃபூல் ஜஹான்.

“தற்போது, அயோத்தியில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம், எந்த பிரச்னைகளும் கிடையாது. இவ்வளவு பெரிய மைல்கல்லை நாம் கடக்கும் வேளையில், எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பது பார்க்கப்படும். அயோத்தியில் ஏதாவது நடந்து விடுமோ என்ற பயம் இருக்கும், ஆனால் தற்போது எல்லாம் சரியாகிவிட்டது,” என்கிறார்.

பூல்ஜஹானின் வீட்டில் இருந்து 50 மீட்டர் தொலைவில் வசித்து வருகிறார் ஹபீஸ்-உர்-ரஹ்மான். 31 வருடங்களுக்கு முன் நடந்த கலவரத்தில் ஒரு இந்து குடும்பத்தின் உதவியோடு இவரது உயிரை பூல்ஜஹான் தான் காப்பாற்றினார். அன்று நடந்த கலவரத்தில் ஹபீஸ்-உர்-ரஹ்மான் தனது மாமா மற்றும் மூத்த சகோதரரை இழந்து விட்டார்.

அவரது கூற்றுப்படி, “அந்த சம்பவத்திற்கு பிறகு இங்கு அமைதி நிலவி வருகிறது. ஆனால் எப்போதெல்லாம் அயோத்தியில் பெரிய நிகழ்ச்சிகள் நடந்து லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்களோ அப்போதெல்லாம் நாங்கள் பயத்தில் இருப்போம்.” என்கிறார்.

இந்த முறையும் கூட அவர் பயத்தில் தான் இருந்தார். ஆனால், அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவரிடம் உள்ளது.

16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாபர் மசூதியின் மீது பல ஆண்டுகளாகவே சர்ச்சை நிலவி வந்தது. மேலும் 1992-ஆம் ஆண்டு அது இடிக்கப்பட்டது.

அதற்கு பின்னால், அயோத்தி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் நடந்த கலவரத்தில் 2000 பேர் கொல்லப்பட்டனர்.

அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் தற்போதைய மனநிலை என்ன?

சட்டப் போராட்டம்

முதலில் அலகாபாத் நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என இந்து மற்றும் இஸ்லாமிய தரப்புகளுக்கு இடையில் இந்த பிரச்னையில் நீண்ட சட்ட போராட்டம் நடைப்பெற்றுள்ளது.

பாபர் மசூதி என்பது உண்மையில் ராமர் பிறந்த இடம் என்றும், அங்கிருந்த கோவில் இடிக்கப்பட்டு அங்கு மசூதி கட்டப்பட்டுள்ளதாக நம்புகின்றனர் இந்து அமைப்பினர்.

இதன் உச்சகட்டமாக 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் (ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு) வழங்கிய வரலாற்று தீர்ப்பில், ‘பாபர் மசூதி சட்டத்திற்கு புறம்பாக இடிக்கப்பட்டது’ என்று கூறியிருந்தது. மேலும் சர்ச்சைக்குரிய அந்த நிலத்தில் கோவில் அமைக்கப்படும் என்று முடிவை அறிவித்தது.

அதே போல் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது போல, புதிய மசூதி அமைப்பதற்கான நிலமும் கூட அயோத்தியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஒரு உண்மை என்னவெனில் ராமர் கோவிலைச் சுற்றி டஜன் கணக்கான மசூதிகள், பள்ளிவாசல்கள் மற்றும் கல்லறைகள் அமைந்துள்ளன. இங்கு நூற்றாண்டுகளாக ஒரே நேரத்தில் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைப்பெற்று வருகின்றன.

அவற்றில் முக்கியமானவை தெஹ்ரிபஜார் ஜோகி கி மஸ்ஜித், கான்காஹே முசாஃபரியா, மஸ்ஜித் டோராஹி குவான், மஸ்ஜித் காசியானா, மஸ்ஜித் பதர் பன்ஜிடோலா, மஸ்ஜித் மதர் ஷா மற்றும் மஸ்ஜித் இமாம்பரா உள்ளிட்ட மசூதிகள் ஆகும்.

அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் தற்போதைய மனநிலை என்ன?

அயோத்தியின் முஸ்லிம்கள்

சுமார் 30 லட்சம் மக்கள்தொகை கொண்ட அயோத்தி மாவட்டத்தில் 5 லட்சம் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சுமார் 5,000 பேர் புதிய ராமர் கோயிலைச் சுற்றி வசிக்கின்றனர்.

கோவில் திறக்கப்பட்டவுடன், ஒவ்வொரு மாதமும் ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 25 முதல் 30 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த சிலரின் மனதில் பழைய இழப்புகளை நினைத்துக் கவலையும் உள்ளது.

அயோத்தியை ஒட்டியுள்ள ஃபைசாபாத் நகரில் முகமது காலிக் கானின் ஸ்டேஷனரி கடை உள்ளது. அவரது குடும்பம் தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றது.

“எட்டு-பத்து நாட்களுக்கு முன்பு, அயோத்தியில் இருந்து தட்ஷா மசூதிக்கு வந்த சிலர் , அயோத்தியில் பெரிய கூட்டம் இருக்கும் என்பதால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறோம் என்று சொன்னார்கள். ஆனால், இங்குள்ள உலமாக்கள் தாங்கள் அதிகாரிகளிடம் பேசிவருவதாகவும், எனவே வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, சில காவல்துறையினரும் அவர்களை தடுத்து நிறுத்தி, அயோத்தியை விட்டு வெளியேற வேண்டாம், நாங்கள் பாதுகாப்பு அளிக்கிறோம்,” என்று கூறியதாக தெரிவிக்கிறார் அவர்.

“நடக்கவிருக்கும் கோவில் திறப்புக்குச் சில நாட்களுக்கு முன் அயோத்தியின் பல முஸ்லீம் குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்,” என்ற செய்தி பரவி வரும் நிலையில், இந்த நிகழ்வுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் உள்ளாட்சி நிர்வாகமும், மாநில அரசும் தெரிவித்துள்ளன.

அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் தற்போதைய மனநிலை என்ன?

பா.ஜ.க எம்பியின் உத்திரவாதம்

ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அயோத்தி நாடாளுமன்ற உறுப்பினரான லல்லு சிங், “அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும், சிறுபான்மை சமூக மக்கள் பயமோ, கவலையோ கொள்ள வேண்டாம்,” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

“அவர்களும் அயோத்தியின் மற்ற குடிமக்களைப் போலவே வாழ்ந்து வருகிறார்கள், நாங்கள் பரஸ்பர சகோதரத்துவத்தைப் கடைபிடித்து வருகிறோம். நமது பிரதமர் எந்த வளர்ச்சிப் பணிகளைச் செய்தாலும் அதை அனைவருக்கும் சேர்த்துதான் செய்து வருகிறார். அதில் இந்த மதத்திற்கு அதிகம் கிடைக்கிறது, அந்த மதத்திற்கு குறைவாக கிடைக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. அனைவரும் இந்திய குடிமக்கள் என்ற அடிப்படையில், யாரிடமும் இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று அமைப்பு எங்களிடம் கூறவில்லை,” என்று தெரிவித்துள்ளார் அவர்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ராமர் கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள பெரிய மதரஸா ஒன்றுக்கு சென்றிருந்தோம், அங்கு ஹாஜி ஹபீஸ் சையத் எக்லாக்குடன் பேசினோம். அப்போது அவர், “இந்த வளாகத்தைச் சுற்றி சிறுபான்மை சமூக மக்களின் பல நிலங்கள் உள்ளன, அவர்கள் எவ்வளவு காலம் இங்கு வாழ்வது என்பதில் சிலர் குழப்பத்தில் உள்ளனர்,” என்றார்.

மீண்டும் வியாழனன்று நாங்கள் அவரைச் சந்திக்கச் சென்றபோது, அவர் எங்களுடன் பேச மறுத்துவிட்டார், மேலும் வாசலில் இருந்த எங்களிடம் அவருடைய ஊழியர் ஒருவர், “ஹாஜி சாஹேப் ஊடகங்களுடன் பேச மாட்டார்” என்று கூறிவிட்டார்.

அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் தற்போதைய மனநிலை என்ன?

கங்கா – ஜமுனி கலாச்சாரம்

இந்நிலையில் அயோத்தியில் சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் தலைவர் முகமது ஆசம் காத்ரியை நாங்கள் சந்தித்தோம், அவர், “அயோத்தியில் சிறுபான்மையினர் தங்களது குரல் குறைவாகவே கேட்கப்படுவதாக உணர்கிறார்கள்,” என்று கருத்து தெரிவித்தார்.

“இதே எங்களது வழிபாட்டுத் தலங்களும் புனரமைக்கப்பட்டிருந்தால், நாங்களும் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். ஆம், பிரதமர் அனைத்து சமூகத்தினருக்கும் சொந்தமானவர், ஒரு சமூகத்திற்கு மட்டுமல்ல என்று கூறி இந்த கங்கா-ஜமுனி கலாச்சாரத்தை மேம்படுத்தியிருப்போம்,” என்றார் அவர்.

“இங்கு எங்களது சமூகம் எந்த அரசியலிலும் ஈடுபட விரும்பவில்லை, எந்த வகையிலும் அரசியலின் ஒரு பகுதியாக கூட இருக்க விரும்பவில்லை. எனவே இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் சண்டை ஏற்படாமல் இருக்கவும், எங்களை வைத்து யாரும் அரசியல் செய்யாமல் இருப்பதற்கும் எங்களால் வேலை செய்ய முடியும். இந்நிலையில் இங்குள்ள சிறுபான்மையினரின் உடமைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதைத்தான் மக்களும் விரும்புகிறார்கள்,” என்றார்.

கோவில் திறக்கப்பட்ட பிறகு, ராமர் கோவில் முழுமையாக தயாராவதற்கு இரண்டு ஆண்டுகள் பிடிக்கும்.

அதற்காக 24 மணி நேரமும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் பக்தர்கள் வருகையும் அதிகரித்து வருகிறது.

சௌக் இமாம்பரா அருகே வசிக்கும் ஹமீத் ஜாஃபர் மீசம், அயோத்தியின் ஷியா வக்ஃப் குழுயின் தலைவராக உள்ளார். “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தபோது, அதில் எந்த வித சர்ச்சையும் இருக்கவில்லை. தன்னிப்பூரில் மசூதி கட்டப்பட்டு வருகிறது, கோவிலும் கூட கட்டப்பட்டு வருகிறது. இதில் முஸ்லிம்களுக்கு எந்த இடத்திலும் ஆட்சேபனையும் இல்லை,” என்கிறார் அவர்.

“ஆனால் ஜனவரி 22 அன்று என்ன செய்வீர்கள் என்று சில ஊடகவியலாளர்கள் இங்குள்ள இஸ்லாமியர்களிடம் கேட்பது சரியல்ல. அவர்கள் 21-ஆம் தேதி என்ன செய்வார்களோ, அதையேதான் 22-ஆம் தேதியும் செய்வார்கள்,” என்றார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »