Press "Enter" to skip to content

பாகிஸ்தான் விவகாரத்தில் இரானின் தாக்குதலை இந்தியா ஆதரிப்பதன் பின்னணி

பட மூலாதாரம், @DRSJAISHANKAR

கடந்த செவ்வாயன்று மேற்கு பாகிஸ்தான் மீது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் இரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களை உறுதி செய்த பாகிஸ்தான் அரசு, அதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்தது.

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இரானிய வெளியுறவு அமைச்சர் அமீர் அப்துல்லாஹியன், “ஜெய்ஷ் உல்-அட்ல் என்ற ஆயுதக்குழுவின் பதுங்கு குழிகள்தான் எங்கள் இலக்காக இருந்தது. இது இரானிய பயங்கரவாதக் குழு, பாகிஸ்தானில் இருந்து கொண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது” என்று கூறியிருந்தார்.

மேலும், “பாகிஸ்தான் குடிமக்கள் யாரும் குறிவைக்கப்படவில்லை, பாகிஸ்தானின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை இரான் மதிக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரிடம் உறுதியளித்துள்ளோம்,” என்று அவர் டாவோஸ் நகரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரானின் இந்தத் தாக்குதலால் கோபமடைந்த பாகிஸ்தான், தெஹ்ரானில் இருக்கும் தனது தூதரைத் திரும்ப அழைத்தது. மேலும் இரான் தூதரை இஸ்லாமாபாத்துக்கு திரும்ப பாகிஸ்தான் தடை விதித்தது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் ஏவுகணைத் தாக்குதலை நடத்திய அதே நாளில் இராக் மற்றும் சிரியா மீதும் தாக்குதல் நடத்தியது இரான்.

இந்தத் தாக்குதல் சட்டவிரோதமானது என்றும், கடுமையான விளைவுகளை இது ஏற்படுத்தும் என்றும், பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கும் உரிமை உண்டு எனவும் இரானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தாக்குதல் நடந்த இரண்டு நாட்கள் கழித்து வியாழக்கிழமை (ஜனவரி 18) இரான் பகுதியில் தனது பதிலடி தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான்.

இரானின் தென்கிழக்குப் பகுதியின், சிஸ்தான்-பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள “பயங்கரவாதிகளின் மறைவிடங்களை” தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது. பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் மற்றும் பலூசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகிய தீவிரவாத அமைப்புகளின் பதுங்கிடங்கள், ட்ரோன்கள், ராக்கெட்டுகள், ஆயுதங்கள் மூலம் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

இதில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், ஆனால் அவர்கள் இரானியர்கள் அல்ல என்றும், இந்தத் தாக்குதலைக் கண்டிப்பதாகவும் இரான் அரசு கூறியுள்ளது.

இரான்- பாகிஸ்தான் இடையிலான மோதல்

பாகிஸ்தான் மீதான இரானின் ஏவுகணைத் தாக்குதல், இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம், @DRSJAISHANKAR

காஸாவில் இஸ்ரேலுக்கும் பாலத்தீனியர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இரான்- பாகிஸ்தான் இடையே மோதல் வலுத்துள்ளது.

பாகிஸ்தானில் இரான் நடத்திய தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முயன்றாலும் அது வெற்றி பெறவில்லை என்று அங்குள்ள உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இரானின் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான், சிரியா மற்றும் இராக் ஆகிய நாடுகளின் மீதான இரானின் தாக்குதல்கள் கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் புதன்கிழமை அன்று தெரிவித்தார்.

“இந்தத் தாக்குதல்களை தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று இரான் விவரித்ததா?” என்று செய்தியாளர் கூட்டத்தில் மேத்யூ மில்லரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தத் தாக்குதல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த சில நாட்களில் இரான் தனது மூன்று அண்டை நாடுகளின் எல்லைகளை மீறியதை நாம் பார்த்தோம். ஒருபுறம், பிராந்தியத்தின் பயங்கரவாதம் மற்றும் பதற்ற நிலைக்கு நிதியளிக்கும் இரான், மறுபுறம் பயங்கரவாதத்தைச் சமாளிக்க இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது,” என்றார்.

இந்த முழு விவகாரத்திலும் இந்தியாவின் எதிர்வினை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதலை இந்தியா ஆதரித்துள்ளது. இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் இந்தியா தெரிவித்தது.

பலுசிஸ்தானில் இரானின் ஏவுகணைத் தாக்குதல் நடந்து ஒரு நாள் கழித்து, அதாவது ஜனவரி 17 அன்று, இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், “இந்த பிரச்னை இரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு பிரச்னை. இருப்பினும் பயங்கரவாதம் என்று வரும்போது இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ள முடியாது,” என்று கூறியது. ஆனால் நேற்று இரான் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் குறித்து இந்தியா கருத்து எதுவும் கூறவில்லை.

இந்தியா ஏன் இரானுக்கு ஆதரவளித்தது?

பாகிஸ்தான் மீதான இரானின் ஏவுகணைத் தாக்குதல், இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இராக்கின் குர்திஷ் பகுதியிலும் சிரியாவிலும் இரான் நடத்திய தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் எதுவும் கூறவில்லை. மூன்று தாக்குதல்களும் ஒரே நாளில் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் புதன்கிழமை கூறுகையில், “இது இரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான விவகாரம். ஆனால், பயங்கரவாதம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை. தற்காப்புக்காக நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாம் அறிவோம்,” என்றார்.

ஜனவரி 16 அன்று பாகிஸ்தான் மீது இரான் தாக்குதல் நடத்தியது. அதற்கு ஒருநாள் முன்னதாக, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இரான் சென்றடைந்தார். இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இரான் வெளியுறவு அமைச்சர் ஆகியோரை சந்தித்தார் எஸ்.ஜெய்சங்கர்.

ஜனவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உகாண்டாவில் நடைபெறும் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் இரான் வெளியுறவு அமைச்சருடன் கலந்தாலோசிக்க உள்ளார் ஜெய்சங்கர்.

இரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரும் விரைவில் இந்தியா வர உள்ளதாகவும், அவர் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்திக்க உள்ளதாகவும் ஆங்கில செய்தித்தாளான தி இந்து தெரிவித்துள்ளது. இரானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ராஜதந்திர சந்திப்புகள் அதிகரித்து வருவதை இது சுட்டிக்காட்டுகிறது.

காஸாவில் இஸ்ரேலின் போர், ஏமனில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் செங்கடல் தாக்குதல் ஆகியவற்றால் மேற்கு ஆசியப் பகுதியில் இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் இந்த வேளையில், ​​இந்தியா இரானுக்கு ஆதரவளித்துள்ளது.

இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் அப்துல் பாசித், “முஸ்லீம் உலக நாடுகள் இடையே பிளவு ஏற்பட இரான் ஒரு பெரிய காரணம். அதைத் தனிமைப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானால் எதையும் சாதிக்க முடியாது,” என ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா- இரான் கூட்டணி

பாகிஸ்தான் மீதான இரானின் ஏவுகணைத் தாக்குதல், இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் செய்தி சேனலான ஏபிஎன் உடன் பேசிய அப்துல் பாசித், “இந்தத் தாக்குதலை இரானின் புரட்சிகர காவலர் படைகள் தன்னிச்சையாக நடத்தினார்களா அல்லது இரானிய அரசின் முடிவா என்பதை நாம் பார்க்க வேண்டும். எந்த அதிகார அளவில் முடிவு எடுக்கப்பட்டது என்பதை இரான் சொல்ல வேண்டும். தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்று கூறியிருந்தார்.

இந்தியாவின் பதிலை ரீட்வீட் செய்து, திங்க் டேங்க் ராண்ட் கார்ப்பரேஷனின் (Think tank Rand Corporation) மூத்த நிபுணர் டெரெக் கிராஸ்மேன், “தற்காப்புக்காக நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கின்றன என்ற கடைசி வரியை இந்தியா தனது அறிக்கையில் சேர்க்கத் தேவையில்லை. இருப்பினும் இதை இந்தியா கூறியுள்ளது. நிச்சயமாக, இந்தியாவின் இலக்கு பாகிஸ்தான்தான். பயங்கரவாத சக்திகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தானை விமர்சிக்க இந்த வரியைச் சேர்த்துள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தியாவும் 2019இல் பாலகோட்டில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. எல்லையைத் தாண்டி, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழித்ததாகக் கூறியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை இந்தியா தாண்டியதை பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டது, ஆனால் பயங்கரவாத முகாம்களை அழித்ததை அந்நாடு ஏற்கவில்லை.

பாகிஸ்தான் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை ஆதரிப்பதன் மூலம், பாலகோட் வான்வழித் தாக்குதலை நியாயப்படுத்த இந்தியா முயல்வதாகக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் முடிவுக்கு வந்தன.

இஸ்ரேல், இரான் இரண்டுமே இந்தியாவுக்கு தேவை

பாகிஸ்தான் மீதான இரானின் ஏவுகணைத் தாக்குதல், இந்தியாவின் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இரானுடன் தனிப்பட்ட பிரச்னைகள் இருக்கலாம், ஆனால் இந்தியாவுக்கும் இரானுக்கும் இடையில் எந்தப் பிரச்னையும் இல்லை.

இந்தியாவின் பாரம்பரிய நட்பு நாடான ரஷ்யாவுடன் இரான் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இரான் ஷியா முஸ்லீம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு மற்றும் இரானுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஷியா முஸ்லிம்கள் உள்ளனர்.

ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான மோதலில், இரானும் இந்தியாவும் ஆர்மீனியாவுக்கு ஆதரவாக உள்ளன.

புதுதில்லி ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India-Middle East-Europe Economic Corridor- ஐஎம்இசி) குறித்து அறிவிக்கப்பட்டபோது, ​​இந்தியா இரானிடமிருந்து விலகிச் செல்கிறது என்று நம்பப்பட்டது. ஆனால் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காஸாவில் நடந்த போருக்குப் பிறகு, ஐஎம்இசி திட்டத்தின் எதிர்காலம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஐஎம்இசி திட்டத்தில் இஸ்ரேலும் ஈடுபட்டுள்ளது. காஸாவில் நடந்து வரும் போரால் வளைகுடா இஸ்லாமிய நாடுகள் கோபத்தில் உள்ளன. இஸ்லாமிய வளைகுடா நாடுகளில் இஸ்ரேல் நாட்டிற்கான ஆதரவு எந்த அளவிற்கு அதிகரிக்கிறது என்பதைப் பொறுத்துதான் ஐஎம்இசி திட்டத்தின் வெற்றி தீர்மானிக்கப்படும். இந்நிலையில்தான் இரானில் உள்ள சபஹர் துறைமுகம் மீண்டும் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

கடந்த 1991இல் பனிப்போர் முடிவுக்கு வந்து, சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்தபோது உலகம் ஒரு புதிய முடிவை எடுத்தது. இந்தியா அமெரிக்காவுடன் நட்புறவை ஏற்படுத்தியபோது, ​​அந்த உறவு இரானுடன் இந்தியாவை நெருங்கவிடாமல் தடுத்தது. இராக் உடனான போருக்குப் பிறகு, தனது இராணுவத்தைப் பலப்படுத்தத் தொடங்கியது இரான்.

அப்போதிருந்து, அணுகுண்டு தயாரிக்க விரும்பி, அணுசக்தி திட்டத்தையும் தொடங்கியது இரான். எந்த சூழ்நிலையிலும் இரான் ஒரு அணுசக்தி நாடாக மாறுவதையும், மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கு அதிகரிப்பதையும் அமெரிக்கா விரும்பவில்லை. இத்தகைய சூழ்நிலையில், உலக நாடுகள் இரானுடனான உறவுகளைத் தொடரக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியது.

இஸ்ரேலுடன் இந்தியா நெருக்கமாக இருக்கலாம். ஆனால் அதற்காக இஸ்ரேல் அனைத்து விஷயங்களிலும் – குறிப்பாக இரான் விஷயத்தில் – இந்தியாவை ஆதரிக்காது என்று கூறப்படுகிறது.

பிராந்திய விவகாரங்களில், இந்தியா தனது நலன்களுக்கு ஏற்ப இஸ்ரேலுக்கும் இரானுக்கும் ஆதரவளிக்கிறது. இரானுடனான உறவில் இஸ்ரேல் ஒரு தடையாக இருக்கக்கூடாது, இஸ்ரேலுடனான உறவில் இரான் தடையாக இருக்கக்கூடாது என்பதே இந்தியாவின் கொள்கை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »