Press "Enter" to skip to content

மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவுகளை முன்னிறுத்துவதில் உள்ள சிக்கல்களும் சவால்களும்

பட மூலாதாரம், NARENDRA MODI/TWITTER

இந்த மாதத்தின் தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவின் லட்சத்தீவுக்கு பயணம் செய்தபோது, அண்டை நாடான மாலத்தீவை சேர்ந்த சில பிரமுகர்கள் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துகளால், இருநாட்டு உறவில் விரிசல் உண்டாகி எதிர்பாராத சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிகழ்விற்குப் பிறகு லட்சத்தீவுகள் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. இந்தச் சிறிய தீவுக்கூட்டத்தை நோக்கி பெருமளவு சுற்றுலாப் பயணிகளின் பார்வை திடீரென திரும்பியது, சுற்றுச்சூழல் நிபுணர்கள் மற்றும் பல உள்ளூர்வாசிகளை கவலையடையச் செய்தது.

மாலத்தீவிற்கு வடக்கே, அரபிக்கடலில் அமைந்துள்ளது லட்சத்தீவு. இந்திய கூட்டாட்சி நிர்வாகத்தின் ஒரு பகுதியான லட்சத்தீவுக்கு பயணம் செய்தபோது, ​​பல வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தார் மோதி. அதன் கடற்கரைகளில் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார், புகைப்படங்களை சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்தார்.

அதைத் தொடர்ந்து மாலத்தீவின் மூன்று துணை அமைச்சர்கள் அவரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனர், இந்திய சமூக ஊடகங்களில் இது பெரும் எதிர்ப்பலையைத் தூண்டியது மற்றும் “மாலத்தீவுக்கு மாற்று லட்சத்தீவு” என்று பலரால் பேசப்பட்டது.

இதனால் செய்திகளில் அதிகம் இடம்பெறாத லட்சத்தீவுகள் குறித்த கூகுள் தேடல்கள் கடந்த வாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு விண்ணைத் தொட்டது. இந்தியாவின் மிகப்பெரிய கணினிமய பயண நிறுவனமான மேக்மைட்ரிப் (MakeMyTrip), மோதியின் பயணத்திற்குப் பிறகு அதன் தளத்தில் லட்சத்தீவுக்கான தேடல்கள் 3,400% அதிகரித்துள்ளதாகக் கூறியது.

லட்சத்தீவில் புதிய வளர்ச்சித் திட்டங்கள்

மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவு இருப்பதில் என்ன சிக்கல்? சுற்றுலா செல்ல எது சிறந்தது?

பட மூலாதாரம், LAKSHADWEEP.GOV.IN

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சர்ச்சைக்குரிய கொள்கைகளால் உள்ளூர் மக்களிடமிருந்து எதிர்ப்பைச் சம்பாதித்த, லட்சத்தீவின் அரசாங்க நிர்வாகியான பிரஃபுல் படேல் இந்தப் புதிய மாற்றத்தை வரவேற்றுள்ளார்.

“லட்சத்தீவின் இயற்கை அழகு, சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும் புதிய தங்கும் விடுதிகளை அமைப்பது உட்படப் பல முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது,” என்று அவர் செய்தி நிறுவனமான பிடிஐக்கு (Press Trust of India) தெரிவித்தார்.

டாடா குழுமம் 2026ஆம் ஆண்டிற்குள் லட்சத்தீவுக் கூட்டத்தின் இரண்டு தீவுகளில் இரண்டு “உலகத் தரம் வாய்ந்த” ரிசார்ட்டுகளை தொடங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது (இந்தத் தீவுக்கூட்டத்தில் 36 தீவுகள் உள்ளன. அவற்றில் 10இல் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். 32 சதுர கிமீ (12.3 சதுர மைல்கள்) பரப்பளவில் இத்தீவுகள் பரவியுள்ளன).

தற்போது லட்சத்தீவுக்கு விமான சேவையை வழங்கும் ஒரே விமான நிறுவனம் கூடுதல் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளது, மற்றொரு விமான நிறுவனம் விரைவில் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவு இருப்பதில் என்ன சிக்கல்? சுற்றுலா செல்ல எது சிறந்தது?

பட மூலாதாரம், ANI

ஆனால் வல்லுநர்கள் கூறுகையில், அழகிய கடற்கரைகள், தெளிவான நீல, நீர் மற்றும் பவளப்பாறை தீவுகளுக்குப் புகழ்பெற்ற லட்சத்தீவின் சிறிய பரப்பளவு மற்றும் பலவீனமான சூழலியல் காரணமாக மாலத்தீவு போன்ற ஒரு பெரிய சுற்றுலாத் தலமாக அதை உருவாக்க முடியாது என்கிறார்கள்.

பல உள்ளூர்வாசிகளும், லட்சத்தீவுக்கு தேவையானது ஒரு முறையான சுற்றுலா வணிகம்தான், பெரிய அளவிலான வளர்ச்சித் திட்டங்கள் அல்ல எனக் கருதுகின்றனர். மேலும் இத்தகைய சுற்றுலா எழுச்சி அவர்களின் வாழ்க்கை முறையை மாற்றிவிடும் என எண்ணுகிறார்கள்.

“மக்களின் முக்கியத் தொழில்கள், மீன்பிடித்தல், தென்னை சாகுபடி மற்றும் தென்னை நாரிலிருந்து கயிறு திரித்தல்” என்று ஒரு அரசாங்க இணையதளம் கூறுகிறது. மேலும் சுற்றுலாவை லட்சத்தீவில் “வளர்ந்து வரும் தொழில்துறை” என்று அழைக்கிறது.

கூடுதல் விமான சேவை தொடங்கும் வரை, தீவுக்கூட்டத்தை அடைய இரண்டு வழிகள் மட்டுமே உண்டு. அலையன்ஸ் ஏர் மூலம் இயக்கப்படும் 72 இருக்கைகள் கொண்ட விமானம், கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவின் அகட்டி தீவில் உள்ள ஒரே விமான நிலையத்திற்கு தினமும் இயக்கப்படுகிறது. மற்றொன்று நான்கு நாட்கள் பயணம் செய்து கப்பல் மூலம் செல்லுதல். நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள் மூலம் மட்டுமே லட்சத்தீவுக்குள் நுழைய முடியும்.

“போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்புகள் ஆகியவை (தீவுகளை மேம்படுத்துவதற்கு) ஒரு பெரிய இடையூறாக உள்ளன,” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிபி முகமது பைசல் கூறுகிறார். அவர்தான் லட்சத்தீவின் சுமார் 70,000 மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே எம்பி.

“பிரதமர் மோதி தங்கியிருந்த பங்காரம் தீவில் (சுற்றுலாப் பயணிகளுக்காக) 36 அறைகள் மட்டுமே உள்ளன,” என்று அவர் கூறுகிறார்.

மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவு இருப்பதில் என்ன சிக்கல்? சுற்றுலா செல்ல எது சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவுக்கு மாற்றா லட்சத்தீவு?

மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவு இருப்பதில் என்ன சிக்கல்? சுற்றுலா செல்ல எது சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

பிரதேசத்தின் தற்போதைய சுற்றுலாத் தொழிலின் பெரும்பகுதி உல்லாசக் கப்பல் பயணங்கள் மூலம் இயங்குகிறது. அதாவது உல்லாசக் கப்பல்களில் இருந்து தீவுகளைக் காண வருபவர்கள், பகலில் சுற்றிப் பார்த்து விட்டு, இரவு ஓய்வு எடுக்க கப்பலுக்குத் திரும்பிவிடுவார்கள்.

ஆனால் மாலத்தீவைப் பொறுத்தவரை சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு ஏராளமான வசதிகள் உள்ளன. இதில் ஓய்வு விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் என நூற்றுக்கணக்கான வசதிகள் அடங்கும்.

“மாலத்தீவில் இருக்கக்கூடிய அழகிய கடற்கரைகள், நீர் விளையாட்டுகளை லட்சத்தீவிலும் காண முடியும். ஆனால் அடிப்படை உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, நாங்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்,” என பைசல் கூறுகிறார்.

மேலும், எந்தவொரு நல்ல வளர்ச்சியும் நடைபெறுவதற்கு, நிர்வாகத்திற்கும் தீவுவாசிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

லட்சத்தீவின் மக்கள்தொகையில் தொண்ணூற்றாறு சதவீதம் பேர் முஸ்லிம்கள். மோதியின் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரான திரு.படேல் 2021இல் லட்சத்தீவின் நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பிறகு அங்கு ஒரு பதற்றநிலை உருவானது.

பள்ளி உணவு மெனுவில் இருந்து இறைச்சியை நீக்குவது மற்றும் நிலத்தைக் கையகப்படுத்தும் அதிகாரத்தை நிர்வாகத்திற்கு வழங்கும் வரைவு சட்டம் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை அவர் அறிவித்தார்.

படேலின் அலுவலகம், லட்சத்தீவு ஆட்சியர் மற்றும் அதன் சுற்றுலா மற்றும் தகவல் துறைகளை தொலைபேசி, மின்னஞ்சல் மூலமாகத் தொடர்புகொள்ள பிபிசி முயன்றது. ஆனால் பதில்கள் கிடைக்கவில்லை.

சில நேர்காணல்களில், படேல் தனது நிர்வாகத்தின் புதிய கொள்கைகளை ஆதரித்துப் பேசியிருந்தார். மேலும் “லட்சத்தீவின் வளர்ச்சி” மட்டுமே தனது செயல்திட்டம் என்று கூறினார். அகட்டி தீவில் ஒரு பயண நிறுவனத்தை நடத்தி வரும் அல்தாஃப் ஹுசைன், மோதியின் வருகைக்குப் பிறகு சுற்றுலாப் பயணங்கள் குறித்த விசாரணைகள் 30-40% அதிகரித்துள்ளன என்கிறார்.

அதிக சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் அதே வேளையில், ஹுசைன், எதிர்காலத்தில் அகட்டியில் சொந்தமாக ஒரு ரிசார்ட் அமைக்க விரும்புகிறார். சுற்றுலா சார்ந்த வாய்ப்புகள் பெரிய வணிகங்களுக்கு மட்டும் அல்லாமல், உள்ளூர் தொழில்முனைவோருக்குச் செல்ல வேண்டும் என்று கூறுகிறார்.

“இந்தத் திட்டங்கள் வருவதால் எங்களுக்கு சிறிய வேலைகள் கிடைக்கலாம், ஆனால் நாங்கள் விரும்புவது அதுவல்ல. இந்தத் திட்டங்களில் உள்ளூர் மக்களாகிய நாங்கள் தொழிலாளிகளாக மட்டுமில்லாமல், பங்குதாரர்களாகவும் இருக்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

எல் நினோவின் தாக்கம்

மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவு இருப்பதில் என்ன சிக்கல்? சுற்றுலா செல்ல எது சிறந்தது?

பட மூலாதாரம், LAKSHADWEEP.GOV.IN

லட்சத்தீவின் எந்தவொரு வளர்ச்சியும், காலநிலை மாற்றம் குறித்த அச்சத்தையும், மக்களின் வாழ்வாதாரம் குறித்த சிக்கல்களையும் சமநிலைப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“லட்சத் தீவுகளின் நீண்டகால நிலைத்தன்மை என்பது அதன் பவளப்பாறைகள், கடற்காயல்கள் மற்றும் கடற்கரைகளின் சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டைப் பொறுத்தது” என்று 1996 முதல் தீவுகளை ஆராய்ச்சி செய்து வரும் கடல் உயிரியலாளரும் பவளப்பாறை சூழலியல் நிபுணருமான ரோஹன் ஆர்தர் கூறுகிறார்.

ஆனால், கடந்த சில தசாப்தங்களாக, இந்தியப் பெருங்கடலின் இந்தப் பகுதியானது, எல் நினோ வானிலை நிகழ்வுடன் (கடல் மேற்பரப்பின் வெப்பமயமாதல்) தொடர்புடைய பேரழிவுகரமான வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்த வெப்ப அலைகள் பவளப்பாறைகளை அதிகம் பாதித்துள்ளன.

இந்த ஆண்டு எல் நினோவின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், லட்சத்தீவு பாறைகளுக்கு என்ன ஆகும் என்று யோசிப்பதே அவரை பயமுறுத்துகிறது.

காலநிலை மாற்றத்தைக் கணக்கில் கொள்ளாத, திட்டமிடப்படாத, திடீர் வளர்ச்சி, லட்சத்தீவில் இருக்கும் வாழ்விட நெருக்கடிச் சிக்கல்களுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.

லட்சத்தீவுகளின் பலவீனமான சூழலியல் அமைப்பு

மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவு இருப்பதில் என்ன சிக்கல்? சுற்றுலா செல்ல எது சிறந்தது?

பட மூலாதாரம், Getty Images

அதிக கரியமில தடத்திற்கு வழிவகுக்கும் ஆடம்பர சுற்றுலாவிற்குப் பதிலாக, தீவுக் கூட்டத்திற்கு அதன் பலவீனமான சூழலியல் மற்றும் அதன் மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு இயங்கக்கூடிய ஒரு சுற்றுலாத் துறை தேவை என நிபுணர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.

தீவுகளுக்கு ஏற்கெனவே “வளர்ச்சிக்கான பைபிள்” என ஒன்று உள்ளது என்று பைசல் கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரவீந்திரன் கமிஷன் முன்வைத்த திட்டத்தின் வடிவம். இதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2015இல் ஒப்புதல் அளித்துள்ளது.

கமிஷன் பரிந்துரைத்த திட்டம் செயல்படுத்தப்பட்டதாக படேல் கூறுகிறார். ஆனால் தற்போதைய நிர்வாகம், நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை அரிதாகவே பின்பற்றுகிறது என்று ஃபைசல் கூறுகிறார்.

ஒருங்கிணைந்த தீவு மேலாண்மைத் திட்டம், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் சுய-அரசு அமைப்புகளுடன் கலந்தாலோசித்து வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தப் பரிந்துரைக்கிறது. அதாவது கடற்காயல்கள், பவளப்பாறைகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்காக, அகழ்வாராய்ச்சி மற்றும் மணல் அகழ்விற்கான தடை மற்றும் மக்கள் வசிக்காத தீவுகளில் மட்டுமே சுற்றுலாத் திட்டங்களுக்கு அனுமதி போன்ற அம்சங்கள்.

“லட்சத்தீவுக்கான பயணம் என்பது அதன் அழகான கலாசார வரலாற்றைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்வது, உள்ளூர் உணவுகளை உண்பது, உள்ளூர் வழிகாட்டிகள் மற்றும் டைவர்ஸுடன் பவளப் பாறைகளை ஆராய்வது மற்றும் இந்தத் தனித்துவமான தீவுகள் நீண்டகாலத்திற்கு இதே அழகுடன் விளங்குவதற்கு உதவியாக இருப்பது,” என தன் பார்வையை முன்வைக்கிறார் ஆர்தர்.

“இத்தீவுகளின் இயற்கை வாழ்க்கை முறையைத் தொந்தரவு செய்யாமல் இருந்தால், உள்ளூர் மக்களின் பொருளாதாரத்தை அதிகரிக்கக்கூடிய மற்றும் அவர்களது கலாசாரத்தை மதிக்கக்கூடிய ஒரு சுற்றுலாத் துறையை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »