Press "Enter" to skip to content

அயோத்தி குடமுழுக்கு நெருங்கும் வேளையில் பிரதமர் நரேந்திர மோதியின் தமிழ்நாடு வந்ததன் பின்னணி

பட மூலாதாரம், K.Annamalai/x

பிரதமர் நரேந்திர மோதி ஐந்து தென் மாநிலங்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று உரையாற்றுவதும் கூட்டங்களில் கலந்துகொள்வதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, அயோத்தியில் என்ன நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர் தென் மாநிலங்களுக்குச் செல்வது ஏன் என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 15 நாட்களில் இரண்டு முறை கேரளாவிற்கு பிரதமர் வருகை தந்துள்ளார். அங்குள்ள கோவில்களுக்குச் செல்வது, பெண்கள் பெருவாரியாக உள்ள கூட்டத்தில் உரையாற்றுவது ஆகியவற்றோடு மத்திய அரசு திட்டங்களின் பயனாளிகள் மத்தியில் ‘மோதி உத்தரவாதத்தை’ எவ்வாறு பரப்புரை செய்வது மற்றும் பிரபலப்படுத்துவது என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு வகுப்பும் எடுத்துள்ளார்.

மோதி கேரளாவில் உள்ள குருவாயூர் மற்றும் திரிபிராயர் ஸ்ரீராமஸ்வாமி கோவில்களிலும், ஆந்திராவில் உள்ள லேபக்ஷி கோவிலிலும் பிரார்த்தனை செய்துள்ளார். புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஜடாயு எனும் பறவை, ராவணனால் காயப்பட்டு விழுந்த இடமாக இந்த லேபக்ஷி கோவில் கருதப்படுகிறது.

தமிழ்நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்துமா?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

மேலும், சனிக்கிழமை (ஜன. 20) அன்று தமிழ்நாட்டில் அரிச்சல்முனைக்கு செல்வதற்கு முன், ராமரின் மூதாதையராகக் கருதப்படும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோவில் (திருச்சி ஸ்ரீரங்கம்), தனுஷ்கோடியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவில், ஸ்ரீ ராமநாதசுவாமி கோவில் மற்றும் ராமர் பாதம் பதிக்கப்பட்ட `ராமர் பாதம்` என்னும் கோவிலிலும் பிரார்த்தனை செய்தார். அதன்பின், ராமர் சேது கட்டப்பட்ட இடத்திற்கும் சென்றார். பின்னர், வங்காள விரிகுடாவும் இந்தியப் பெருங்கடலும் இணையும் இடத்தில் அவர் நீராடினார்.

திங்கட்கிழமை (ஜன. 22) ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெறுவதற்கு 11 நாட்களுக்கு முன்பு அவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியதில் இருந்து அவரது நடவடிக்கைகளை பாஜகவினர், எதிர்க்கட்சியினர் மற்றும் அரசியல் நிபுணர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கோணங்களில் இதுகுறித்து விவாதம் எழுந்துள்ளது.

வட மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் குறித்த பயம், கர்நாடகாவில் 28இல் 25 இடங்களைத் தக்க வைப்பது, தெலங்கானாவில் 2019இல் பெற்ற நான்கு இடங்களுக்கும் அதிகமான இடங்களைப் பெறுவது போன்ற கடினமான பணிகள் உள்ளதால், பிரதமர் மோதி 2024 மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.

மற்ற தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தவும் பாஜக முயன்று வருகிறது. கடந்த பத்தாண்டு கால அனுபவத்தை வைத்துப் பார்த்தால், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசோ அல்லது அவரது பரம எதிரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவோ மத்திய அரசுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதால், பாஜகவுக்கு முன்புள்ள சவாலான தென் மாநிலங்களின் பட்டியலில் இருந்து ஆந்திரா வசதியாக நீக்கப்பட்டுள்ளது.

விரக்தியின் அறிகுறியா?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், TN BJP IT Wing/X

கேரளாவில் தனக்குப் பிடித்த வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்வது உட்பட, ராமர் தொடர்பான கோவில்களுக்குச் செல்லுதல் மற்றும் அரசியல் தொடர்பான கூட்டங்களில் பிரதமர் கலந்துகொண்ட விதம், ஆட்சிக்கு எதிரான மனநிலையை இரு விதங்களில் போராடுவதற்கு அவர் மேற்கொள்ளும் முயற்சிகளை அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

“இந்தி பேசும் மாநிலங்களில் அயோத்தியை சுற்றி பாஜக உருவாக்க நினைக்கும் அலையை ஏற்படுத்துவது கடினமானது என்பதை பாஜகவையும் பிரதமரையும் உணர வைத்துள்ளது. குறைந்தபட்சம் தென் மாநிலங்களிலாவது சிறிது மாற்றத்தைக் கொண்டு வர பிரதமர் முயல்வதாக நான் உணர்கிறேன்,” என்று அரசியல் விமர்சகர் மருத்துவர் சந்தீப் சாஸ்திரி பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.

லிங்காயத்துகளின் சமூக அடித்தளம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி), பட்டியல் சாதியினரின் ஒரு பிரிவினருடன் பாஜக உருவாக்கிய அடித்தளம் காரணமாக, இதுவரை கர்நாடகா போன்ற மாநிலத்தில் பாஜக வளர முடிந்தது.

கடந்த 2019இல் தெலங்கானாவில் பாஜக நான்கு இடங்களை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், மே மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதிக்கு (முன்பு தெலங்கானா ராஷ்டிர சமிதி என்று அழைக்கப்பட்டது) பிரதான போட்டியாளராக களமிறங்கிய பாஜக, காங்கிரஸிடம் தோல்வியைத் தழுவியது.

“மோதி மந்திரம் மற்றும் ’மோதி உத்தரவாதத்தால்’ தென்னிந்தியாவையும் ஈர்க்க வேண்டும் என்று மோதி விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. கேரளா போன்ற ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் ஒரு இடத்தை வெல்வது, தென்னிந்தியாவில் பாஜக தீண்டத்தகாதது என்ற பிம்பத்தை இல்லாமலாக்கிவிடும்.

சபரிமலை விவகாரம்கூட பாஜகவுக்கு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற நிலையில், இது எல்லாவற்றையும்விட ஒரு அவநம்பிக்கையான முயற்சி,’’ என கேரளாவைச் சேர்ந்த அரசியல் விமர்சகர் எம்.ஜி. ராதாகிருஷ்ணன் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.

இழப்பை ஈடுசெய்ய முயல்கிறதா பாஜக?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், @BJP4INDIA

ஆனால், சென்னையைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் சுரேஷ் குமார், தென் மாநிலங்களில் பிரதமரின் கவனம் குறித்து வித்தியாசமான கருத்தைக் கொண்டுள்ளார்.

“வடக்கில் பாஜகவின் நிலை ஏற்கெனவே அனைவரும் அறிந்ததுதான். மக்களை ஒருங்கிணைப்பது அங்கு நடந்துள்ளது. ராமர் கோவில் கட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. தெற்கில், கர்நாடகாவை தவிர, ராமர் கோவில் இயக்கத்திற்கும் தென் மாநிலங்களுக்கும் இடையே பிளவு உள்ளது. மற்ற மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் மிகச்சிறிய தொடர்பு மட்டுமே உள்ளது,” என்றார்.

இந்த வகையான பரப்புரைக்கு நான்காவது பரிமாணம் உள்ளது. விஜயவாடாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர் நாகராஜ் கலி பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “மூன்று வட மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றாலும், ஆட்சிக்கு எதிரான நிலை உள்ளது என்பது தெளிவாகிறது. வட மாநிலங்களில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட பாஜக முயற்சி செய்து வருகிறது.

அடிப்படை பிரச்னைகள், வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவை தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக இழப்பை ஈடுகட்ட விரும்புகிறது. அதனால் பிரதமர் மோதி தென் மாநிலங்களுக்குச் செல்கிறார்,” என்றார்.

தலித் அறிவுசார் கூட்டமைப்பின் சென்னை ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சி. லட்சுமணன் பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “உத்தர பிரதேசம் தனக்கு உதவும் என்பது, அவருக்கு (பிரதமர் மோதி) உறுதியாகத் தெரியவில்லை. ராமர் கோவில் குடமுழுக்குக்குப் பிறகு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு அதிக ஆதரவு தேவைப்படும்.

மேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாஜக சந்திக்காத ஒன்று. எனவே, பிரதமர் மோதி மத அடிப்படையில் மக்களைத் திரட்ட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்,’’ என்றார்.

ராமர் தென் மாநிலங்களில் வித்தியாசமாக பார்க்கப்படுகிறார்

நரேந்திர மோதி

பட மூலாதாரம், TN BJP IT Wing/X

இருப்பினும், பிரதமரின் பிரசாரம் வேறு பல அம்சங்களையும் கொண்டுள்ளது. வட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, ​​தென் மாநிலங்களில் ராமர் எப்படி கருதப்படுகிறார் என்பது அவற்றில் முதன்மையானது.

“தென் மாநிலங்களிலும் ராமர் போற்றப்படுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவர் பார்க்கப்படும் விதம் வேறு. தென் மாநிலங்களில், ராமர் தனது மதச்சார்பற்ற தன்மைகளுக்காக அறியப்படுகிறார்,” என்றார் நாகராஜ்.

கோல்கொண்டாவில் குதுப் ஷாஹி வம்சத்தைச் சேர்ந்த அபுல் ஹசன் குதுப் ஷா என்ற தானா ஷாவின் கதையை நாகராஜ் விவரிக்கிறார். அவரது வருவாய் ஆய்வாளர்களில் ஒருவரான பத்ராசல ராமதாசு, 1662ஆம் ஆண்டு ராமருக்கு கோவில் கட்ட மக்களிடம் நிதி வசூலித்ததற்காக சிறையில் தள்ளப்பட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, தானா ஷாவின் கனவில் ராமர் தோன்றி, ராமர் தாசு தன் மீது கொண்ட பாசத்தால் பொது நிதியைச் சேகரித்ததாகக் கூறியதால் அவரை சிறையிலிருந்து விடுவித்தார். தானா ஷா உடனடியாக அவரை விடுவித்து பத்ராசலம் ராமர் கோவிலைக் கட்ட உதவியதாகச் சொல்கிறது அந்தக் கதை.

“திருப்பதி பாலாஜி விஷயத்திலும் முஸ்லிம் சமூகத்துடன் இதேபோன்ற தொடர்பு உள்ளது. அவருடைய மூன்றாவது மனைவி ஒரு முஸ்லிம் என்றும் நம்பப்படுகிறது,” என்றார் நாகராஜ்.

தமிழ்நாட்டில் எடுபடுமா?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், K.Annamalai/x

ஆனால், அரசியல் நிபுணர்களின் கூற்றுப்படி, “மத அடையாளத்திற்கு சாதி அடையாளம் விடுக்கும் சவால்தான் பாஜக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால். இதனாலேயே தெலங்கானாவில் பாஜக வெற்றி பெறும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றாலும், தெற்கில் பாஜக பெரும் முன்னேற்றம் காண்பது கடினமாக இருக்கும். சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு பி.ஆர்.எஸ். தன் பலத்தை இழந்து வருவதால், காங்கிரஸ் – பாஜக இடையே போட்டி நடக்க வாய்ப்புள்ளது,” என்றார் நாகராஜ்.

தமிழ்நாட்டில், சாதிக் கோட்பாட்டைக் குறைக்கும் முயற்சியில், அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைக்க விரும்பும் கட்சியாக பாஜக தனது நிலையை உறுதிப்படுத்த நிலையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

“பாஜகவின் நோக்கம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் அல்ல. அக்கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்துள்ளது. ஆனால், சமீப வாரங்களில் திமுக கடைபிடித்த அணுகுமுறையில்கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்துக்களுக்கோ அல்லது ராமர் வழிபாட்டுக்கோ தாங்கள் எதிரானவர்கள் அல்ல என்று திமுக கூறியுள்ளது. மாநிலம் முழுவதும் தனது பதவியை உறுதிப்படுத்த முடியாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் ஆதரவு தளத்தைக் கைப்பற்றுவதே பாஜகவின் நோக்கம்.

அமலாக்கத்துறையின் வழக்குகளை எதிர்கொண்டுள்ள டிடிவி தினகரனுடன்கூட கூட்டணி வைக்க பாஜகவுக்கு எந்தத் தடையும் இல்லை என்பதுதான் முக்கியமான அம்சம்,’’ என்றார் சுரேஷ் குமார்.

`மோதி மந்திரம்`

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம், @BJP4INDIA

கேரளாவில், பிரதமரின் கடந்த 15 நாட்களில் அவரது முதல் மற்றும் இரண்டாவது பயணத்தில் திருச்சூரின் மீதே அவருடைய கவனம் இருந்தது.

“இது மிகவும் திட்டமிட்ட நடவடிக்கை. திருச்சூர் (மக்களவைத் தொகுதி) கிறிஸ்தவ சமூகத்தின் கோட்டை. ராமர் விவகாரம் அங்கு எடுபடாமல் போகலாம். எனவே, அங்கு மோதி தான் வலு சேர்ப்பார். கூடுதல் உந்து சக்தி மோதி மந்திரத்தாலேயே ஏற்படும்.

இஸ்லாமிய வெறுப்பு பிரசாரத்தால் கிறிஸ்தவ சமூகம் பிளவுபட்டிருப்பது திருச்சூரில் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மறுபுறம், முஸ்லிம்களின் ஆதரவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சமீப ஆண்டுகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. நிச்சயமாக இந்துக்கள் சிபிஎம் கட்சியை ஆதரிக்கின்றனர். பாஜகவின் வெற்றி, கேரளாவில் அரசியல் சமன்பாடுகளை மாற்றாது,” என்றார் ராதாகிருஷ்ணன்.

கர்நாடகாவில் 2019 தேர்தலில் காங்கிரஸை ஓரிடத்திற்குத் தள்ளி பாஜக உச்சத்தை எட்டியது. மோதி மீதான ஈர்ப்பை மட்டுமே பாஜக அங்கு சார்ந்திருக்கும். ஆனால், மருத்துவர் சாஸ்திரியின் கூற்றுப்படி, தொகுதிகளின் எண்ணிக்கை சில காரணிகளைப் பொறுத்தது.

நிலைமை மாறுமா?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், K.Annamalai/X

“நான்கு காரணிகள் உள்ளன. காங்கிரஸால் எவ்வளவு சிறப்பாக உத்தரவாதங்களை மக்களிடம் கொண்டு செல்ல முடிகிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது. இலவசப் பேருந்துப் பயணம் மற்றும் பெண் குடும்பத் தலைவருக்கு பணம் கொடுப்பது குறித்த பெண் வாக்காளர்களின் கருத்தும் முக்கியம்.

காங்கிரஸ் எவ்வாறு ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது, பாஜக அதன் உள்முரண்பாடுகளை எவ்வாறு சமாளிக்கிறது, மோதியால் பாஜகவில் உள்ள சலசலப்புகளை ஈடுசெய்ய முடியுமா என்பதைப் பொறுத்தே நிலைமை இருக்கும்,” என்று மருத்துவர் சாஸ்திரி கூறினார்.

ஆனால், மருத்துவர் சாஸ்திரி சட்டமன்ற தேர்தல்களுக்கு ஓராண்டுக்குப் பின் நடந்த 2014 மக்களவைத் தேர்தல் குறித்த சி.எஸ்.டி.எஸ்-லோக்நிதி அமைப்புகள் நடத்திய கருத்துக் கணிப்பை மேற்கோள் காட்டுகிறார்.

“மக்களிடம் சித்தராமையா தலைமையிலான ஆட்சியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டோம். 90 சதவிகிதம் பேர் அவர் நன்றாக செயல்பட்டதாகக் கூறினர். பல மாநிலங்களில், பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் மிக அதிகமான சதவீதம் பேர், மோதி பிரதமர் வேட்பாளராக இல்லாவிட்டால், தாங்கள் வாக்களிக்கும் விருப்பத்தை மாற்றியிருப்போம் எனக் கூறியுள்ளனர்.

கர்நாடகாவில், பாஜகவுக்கு வாக்களித்த 10 பேரில் 6 பேர், மோதி பிரதமர் வேட்பாளராக இல்லாவிட்டால், எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்ற தேர்வை மாற்றியிருப்போம் என்று கூறியுள்ளனர்,” என்கிறார்.

இம்முறையும், காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பின் மீண்டும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை நிலைமை மாறுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »