Press "Enter" to skip to content

ராமர் பெயரில் பூஜை: நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டும் தமிழ்நாடு அரசு விளக்கமும் – உண்மை என்ன?

பட மூலாதாரம், Getty Images

ஜனவரி 22ஆம் தேதி திங்கள்கிழமையன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதி உட்பட 8000 துறவிகள், திரைப்படம் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து யாரும் செல்ல விரும்பினால் அதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே. சேகர்பாபு அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஜனவரி 22 அன்று தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் ராமர் பெயரில் சிறப்பு பூஜைகளோ அல்லது அன்னதான நிகழ்வுகளோ நடக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு வாய்மொழி உத்தரவு போட்டுள்ளதாகவும், அயோத்தியில் நடக்கும் நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பும் போது மின்சாரத் தடை ஏற்படும் என்று கேபிள்தொலைக்காட்சிஉரிமையாளர்களுக்கு கூறப் பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்த தனியார் செய்தித்தாளின் செய்தியை பகிர்ந்து தமிழ்நாடு அரசின் இந்து எதிர்ப்பு மனநிலையை கண்டிப்பதாக அவர் விமர்சனம் செய்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவில்

பட மூலாதாரம், X/Nirmala Sitharaman

தமிழ்நாடு அரசு மறுப்பு

இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை திங்கட்கிழமை நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும். அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தினமலர் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீய நோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தினமலர் நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ராமர் பெயரில் பூஜை செய்ய தடையா? உண்மை என்ன?

பட மூலாதாரம், TNDIPR

கேபிள்தொலைக்காட்சிஆபரேட்டர்கள் மறுப்பு

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு நேரலையின் போது மின்சாரம் தடைபட வாய்ப்புள்ளதாக கேபிள்தொலைக்காட்சிஆபரேட்டர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்படி ஏதும் மாநில அரசாங்கத்திடம் இருந்து தங்களுக்கு அறிவுறுத்தல் வரவில்லை என்றும், அயோத்தி ராமர் கோவில் நேரலையை ஒளிபரப்புவது அந்தந்த ஊடகங்களின் உரிமை, அதில் தலையிட எந்த அரசுக்கும் உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார் தமிழக கேபிள்தொலைக்காட்சிஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் சுப. வெள்ளைச்சாமி.

மேலும் பேசிய அவர், “செய்தி நிறுவனங்கள் ஒளிபரப்பு உரிமை தொடர்பான அதிகாரங்கள் (Satellite channel) அந்த நிறுவனத்திற்கும், மத்திய அரசிற்கும் மட்டுமே உள்ள நிலையில் மாநில அரசிற்கு இதில் எந்த அதிகாரமும் இல்லை. ராமர் கோவில் திறப்பு விழா நேரலையை ஒளிபரப்ப கூடாது என்று தமிழ்நாடு அரசு எங்களுக்கு எந்த நிர்பந்தமும் தரவில்லை” என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் ராமர் பெயரில் பூஜை செய்ய தடையா? உண்மை என்ன?

பட மூலாதாரம், VELLAISAMI

அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, “சில நாளிதழ்கள் தொடர்ந்து இது போன்ற பொய் செய்திகளை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், உயர் பதவியில் இருக்க கூடிய நிர்மலா சீதாராமன் எதைப் பற்றியும் ஆராயாமல் ஒரு கருத்தை தெரிவிப்பது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகல்ல. உணவுப் பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட எந்த ஒரு திருக்கோவில்களிலும் உணவுகள் வழங்க தடையில்லை. அதேபோல் வழக்கமான பூஜை நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் எந்த தடையும் இல்லை.

இந்த ஆட்சி ஆன்மிகவாதிகளுக்கு அரணாக இருக்கின்ற ஆட்சி என்பதற்கு சான்றாக, இன்று(21/1/2024) மட்டுமே தமிழகத்தில் 40 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடந்திருக்கின்றது. நாளை 20 கோவில்களில் நடைபெற உள்ளது. இதுவரை இந்த ஆட்சியில் 1,270 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. 8,416 திருக்கோவில்களுக்கு மாநில அளவிலான ஆய்வுக்குழு அனுமதி அளித்துள்ளது. இன்று சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி மாநாட்டு செய்திகளை திசை திருப்பவே இது போன்ற பொய் செய்திகளை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.”

மேலும் பேசியுள்ள அவர், “ மத்திய அமைச்சர் என்ன கடவுளா? அவர் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள அவர் என்ன கடவுளா? யாராக இருந்தாலும் ஆராய்ந்து உண்மையை சொல்ல வேண்டும். எந்த ஆதாரத்தோடு இந்த குற்றச்சாட்டுகளை அவர் வைக்கிறார்? எங்காவது அவர் சொல்வது போல் பூஜைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதா? இல்லை, எல்லா இடங்களிலும் வழக்கமான நிகழ்வுகளுக்கு எந்த தடை செய்யவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் ராமர் பெயரில் பூஜை செய்ய தடையா? உண்மை என்ன?

பட மூலாதாரம், P.K SEKAR BABU / TWITTER

அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்த விவகாரம் குறித்து தமிழக பாஜக தலைவர்கள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். அதில் முக்கியமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசு தங்களது சனாதன எதிர்ப்பு நிலையை தீவிரமாக அமல்படுத்தியுள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

ஒரு சில அனுமதி கடிதங்களை பகிர்ந்து “ தனியார் இடங்களில் நடக்க இருந்த ராமருக்கான சிறப்பு பூஜை மற்றும் நேரலை நிகழ்வுகளுக்கு கூட தமிழ்நாடு அரசு அனுமதியில்லை என்று மறுத்துள்ளது என்றும், தமிழக பாஜக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ராமர் கோவில் நிகழ்வை முன்னிட்டு சிறப்பு பூஜைகளை செய்வார்கள்” என்றும் பதிவிட்டுள்ளார்.

அதில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பாக ஜனவரி 22 அன்று பல்வேறு பகுதிகளில் ராமர் கோவில் குடமுழுக்கு குறித்து வாகனங்களில் விளம்பரம் செய்வதற்கான அனுமதி காவல்துறையிடம் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை காரணம் காட்டி அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள காவல்துறை கடிதத்தை அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ்(ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ள அண்ணாமலை, தமிழக அரசு பொய் பேசி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். “இதே திமுக அரசில் இதற்கு முன்பு பிரதமர் பங்கேற்ற நிகழ்வுகள் ஸ்ரீரங்கம் கோவில் உட்பட முக்கியமான கோவில்களில் எல்இடி திரையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் அனுமதி அளித்த அரசு இப்போது ஏன் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுக்கின்றனர். அனுமதி மறுத்தால்தான் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே, பாஜக தொண்டர்கள் மற்றும் மக்கள் நாளை பூஜைகள் மற்றும் அன்னதான நிகழ்வுகளை நடத்துங்கள்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ராமர் பெயரில் பூஜை செய்ய தடையா? உண்மை என்ன?

பட மூலாதாரம், K ANNAMALAI / TWITTER

கன்னியாகுமரி பாஜகவினர் தெரிவிப்பது என்ன?

அண்ணாமலை குற்றச்சாட்டு குறித்து கன்னியாகுமரி பாஜக பொதுச்செயலாளர் ஜெகநாதன் அவர்களிடம் கேட்டோம்.

“கடந்த 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ராம் கோவில் குடமுழுக்கு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு காவல்துறை அலுவலகத்திற்கு தபால் மூலம் கடிதம் வழங்கியிருந்தோம். அதற்கு அனுமதி மறுத்து 19ஆம் நள்ளிரவு 2 மணியளவில் எனது வீட்டில் நோட்டிஸ் ஒட்டி சென்றுள்ளனர்” என்று தெரிவித்தார் அவர்.

மேலும், அனுமதி மறுக்கப்பட்டது குறித்து வாய்வழி அல்லது நேரடியாக கூட விளக்கம் தராமல், சட்டம் ஒழுங்கு கேட்டு விடும் என்று சொல்லி நள்ளிரவில் வீட்டில் அறிவிப்பு ஒட்டி சென்றுள்ளனர். இருப்பினும் எங்களது திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. மாவட்டம் முழுவதும் ராமர் பெயரில் பூஜைகள் மற்றும் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மாவட்ட காவல்துறை கூறுவது என்ன?

இதுகுறித்து கன்னியாகுமாரி மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரியிடம் கேட்டபோது, கோவில்களில் வழக்கமாக நடைபெறும் எந்த நிகழ்வுக்கும் தடை விதிக்கப்படவில்லை. ஆனால், விழிப்புணர்வு பேரணிக்கு மட்டுமே சட்ட ஒழுங்கு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், பொதுவாகவே மாவட்டம் முழுவதும் கல்விசார் நிகழ்வுகளை தவிர வேறு எந்த அரசியல் மற்றும் மதசார் நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. அந்த அடிப்படையில் இந்த நிகழ்வுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல் நள்ளிரவு இரண்டு மணிக்கு சென்று அறிவிப்பு ஒட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், அதுகுறித்து தான் விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ராமர் பெயரில் பூஜை செய்ய தடையா? உண்மை என்ன?

பட மூலாதாரம், K ANNAMALAI / TWITTER

பாஜக நாளை என்ன செய்யும்?

நாளை ராமர் சார்ந்த பூஜைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி வரும் நிலையில் நாளை என்ன செய்ய போகிறார்கள் என்ற கேள்வியை அவர்களிடம் முன்வைத்தோம்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி “அரசியலமைப்பு சட்டம் 125 இன் படி, வழிபடும் உரிமையை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது” அப்படியிருக்க எப்படி காவல்துறை ராமர் கோவில் குடமுழுக்கு விழா நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்க முடியும்?, சில இடங்களில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை என கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அப்படி எந்த கோவிலும் அந்த துறைக்கு சொந்தமானது அல்ல” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஏற்கனவே பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியுள்ள போதிலும், அமைச்சர் சேகர் பாபு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் நாளை பாஜக தரப்பின் திட்டம் என்ன என்ற கேள்விக்கு, “இந்த நிகழ்வு வெறும் பாஜக தொண்டர்களால் மட்டும் நடப்பது அல்ல. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ராமருக்கு பூஜை செய்ய விரும்புகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு அவர்களை மிரட்டுவது போல் செயல்பட்டு வருகிறது. எனவே எங்கள் மாநிலத் தலைவர் ஏற்கனவே சொல்லியது போல மாநிலம் முழுவதும் பாஜக தொண்டர்கள் கோவில்களில் ராமர் பெயரில் பூஜைகள் செய்வது, அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுவார்கள்” என்று கூறியுள்ளார் நாரயணன் திருப்பதி.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »