Press "Enter" to skip to content

அயோத்தி ராமர் கோவில் மோதியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துமா?

பட மூலாதாரம், ANI

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே இன்றைய அரசியல் விவாதம் சூடுபிடித்து வருகிறது.

ஒருபுறம், கோயில் கட்டுமானம் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வேண்டுமென்றே திறப்பு விழா தேதியை அறிவித்ததாக ஒரு சாரார் விவாதிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் விழா அழைப்பை நிராகரித்ததும், சங்கராச்சாரியார்கள் நிகழ்வை புறக்கணிக்க முடிவு செய்ததும் பரபரப்பை கூட்டியது.

மறுபுறம், பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் அதனுடன் இணைந்த கட்சிகள், அமைப்புகள், ஒவ்வொரு வீட்டிலும் அக்ஷதை (சுப நிகழ்வுகளில் வழங்கப்படும் புனித அரிசி நெல்) விநியோகித்தல், கலச யாத்திரை போன்ற மத ஊர்வலங்கள் நடத்துதல் என தேசம் முழுவதும் மத சூழலை உருவாக்கியுள்ளது. தேசத்தின் ஒவ்வொரு மூலையும் காவி நிறத்தில் பக்தி சூழ காட்சியளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோதி இவற்றை வழிநடத்துகிறார். பிரமாண்ட முறையில் நடைபெறும் கோயில் திறப்பு விழா ஒன்றில், அதன் சடங்குகளில் பங்கேற்கும் முதல் இந்திய பிரதமர் இவர் ஆவார்.

இந்நிலையில், இந்நிகழ்வுகளின் அரசியல் நோக்கங்களை யாரால் நிராகரிக்க முடியும்?

தற்காலத்தில் அயோத்தி என்பது மதம் சார்ந்தது மட்டும் கிடையாது. அதில் எப்போதுமே அரசியலும் பின்னிப் பிணைந்தே உள்ளது.

ராமர் கோவில் இயக்கமானது, இந்துத்துவா மற்றும் பெரும்பான்மைவாதத்தை பொது நீரோட்டத்திற்கு கொண்டு வந்தது மட்டுமல்லாமல், இந்திய அரசியலின் தன்மையையும் மாற்றிவிட்டது. கோவில் விவகாரம் அரசியலில் புகுந்த பிறகு, அதன் பிறகு நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தேர்தலையும் அது தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும் என்று தெரிகிறது.

இன்னும் சில மாதங்களில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் முக்கிய விவகாரமாக ராமர் கோவில் விவகாரம் இருக்குமா? கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த விவகாரத்தை கொண்டு அரசியல் பலன்களை அறுவடை செய்த பாஜக, மூன்றாவது முறையாக நரேந்திர மோதி தலைமையில் பெரும்பான்மை பெறுமா?

ராமர் கோயில் திறப்பு- பாஜகவுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம், Getty Images

பாஜக மீண்டும் ஒரு முறை பலன் பெறுமா?

இந்திய அரசியல் வரலாற்றின் கடந்த மூன்று தசாப்தங்களை பார்க்கும் பொழுது ராமர் கோவில் விவகாரம் பாஜகவுக்கு தேர்தலில் பலன் அளித்துள்ளது. பாஜகவின் வாக்கு வங்கி மெல்லமெல்ல வளர்ந்தது. வெறும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக, அடுத்து 100 என்ற எண்ணிக்கையை தொட்டது. பிறகு, பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது.

தேர்தல் குறித்த ஆய்வுகளை நடத்தும் லோக்நிதி மையத்தின் இயக்குநர் சஞ்சய் குமார், 2014 மற்றும் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது இந்து வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வுகளைப் பற்றி குறிப்பிடும் போது மத நம்பிக்கை கொண்ட பெரும்பாலானவர்கள், கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர். இந்த வாக்கு சதவிகிதம் கணிசமானது என்று கூறுகிறார்.

கோவிலுக்கு தினசரி செல்பவர்களில் 51% பேர் 2019 ஆம் ஆண்டு பாஜகவுக்கு வாக்களித்து இருந்தனர். 2019ம் ஆண்டு தேர்தலிலும் கிட்ட தட்ட அதே எண்ணிக்கையிலான மக்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் மத நம்பிக்கை இல்லாதவர்கள், கோவில்களுக்கு தினமும் செல்லாதவர்கள் 32% பேர் பாஜகவுக்கு வாக்களித்திருந்தனர். இதன் மூலம் மத நம்பிக்கை கொண்டவர்கள் பாஜகவுக்கு சார்பாக இருக்கின்றனர் என்பது தெரிகிறது” என்று சஞ்சய் குமார் தெரிவித்தார்.

எனவே ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உருவாக்கப்பட்டிருக்கும் மத ரீதியான சூழல் என்பது ராமர் கோவிலை நோக்கி செல்லக்கூடிய உண்மையான பக்தர்கள் பாஜகவின் பக்கமும் செல்வதற்கான வாய்ப்புண்டு. ராமர் கோவில் விவகாரம் முக்கியத்துவம் பெற ஆரம்பித்த 1980கள் முதல் இந்த வாக்காளர்களின் ஆதரவை பாஜக பெற்று வருகிறது.

“2024ம் ஆண்டு தேர்தல் இந்துத்துவா மற்றும் ராமர் கோவிலை முன்னிறுத்தி நடைபெறும் என்று கருதுகிறேன். குறைந்தபட்சம் வட இந்தியாவின் வாக்காளர்கள் ராமர் கோவில் கட்டிய பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று உறுதியாக இருக்கிறேன்” இன்று சஞ்சய்குமார் கூறுகிறார்.

ராமர் கோவில் விவகாரம் முழுக்கமுழுக்க மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம் என்று பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் வலியுறுத்துகிறார்கள். எனினும் மக்களது உணர்வுகள் இந்த அளவில் தூண்டப்படும் போது, அவர்களது கருத்துகளில் அது கண்டிப்பாக தாக்கம் செலுத்தும்.

“நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் வகையில், இதுபோன்ற மாபெரும் இயக்கம் நடைபெறும் போது, மக்களது கருத்துகள் ஒரே திசையில் நகர தொடங்கும். அதனுடைய தாக்கம் ஏதாவது ஒரு வகையில் இருக்கும். அதனுடைய பலன் கண்டிப்பாக தெரியும்” என்று உறுதியாக கூறுகிறார் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக துணை தலைவர் மாதவ் பண்டாரி.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று கொடுத்த சத்தியத்தின் மூலம் பாஜக இந்த விவகாரத்தை பல ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருந்தது. பாஜக கடந்த காலங்களில் கிடைத்த வெற்றிகளை போலவே தற்போதும் கோவில் திறப்பு மூலமாக பெறுவதற்கு நினைத்தாலும் தேர்தல் களத்தில் சில மாற்றங்கள் இருக்கும் என்று வரலாறு நமக்கு கூறுகிறது.

“ பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்துத்துவா எல்லா இடங்களிலும் தலைதூக்கும் என்றும் பாஜக அனைத்து தேர்தல்களிலும் வெல்லும் என்றும் கருதப்பட்டது. ஆனால் உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் மற்றும் கான்ஷி ராம் ஒன்றாக இணைந்தனர், பாஜக வீழ்த்தப்பட்டது. அடுத்தடுத்த தேர்தல்கள் சிலவற்றிலும் பாஜக ஆட்சி அமைக்க முடியவில்லை” என்று நினைவுகூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ராம்தத் திரிபாதி.

“பாஜகவுக்கு எப்படி இருந்தாலும் கிடைக்கப் பெறவிருந்த பெரும்பான்மை ராமர் கோவில் தாக்கத்தினால் 10 அல்லது 20 இடங்கள் அதிகரிக்கலாம். பாஜக மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு ராமர் கோவில் மட்டுமே காரணம் என்று கூற முடியாது. நீங்கள் ஒரே பொருளை மீண்டும் மீண்டும் விற்க முடியாது. மக்கள் ராமர் கோவில் என்ற கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். அது தயாராக இருக்கிறது. எல்லாரும் இதனை எதிர்பார்த்தார்கள். எனவே பாஜக இதனால் சிறப்பு பலன்கள் எதையும் பெறப் போவதில்லை.

ஆனால் அவர்கள் கண்டிப்பாக, ராமர் கோவில் உருவாக்கியிருக்கும் உணர்ச்சிமய சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். அரசியல் என்பது அதுதானே” என்கிறார் லோக் சத்தா இதழின் ஆசிரியர் கிரிஷ் குபேர்.

ராமர் கோயில் திறப்பு- பாஜகவுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம், ANI

மண்டல் ஆணையமா? கமண்டல அரசியலா? : சாதியா மதமா?

பொதுத் தேர்தல்கள் வரவிருக்கும் பின்னணியில், அயோத்தி ராமர் கையில் எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நாம் ஏற்கனவே பார்த்ததைப் போலவே இந்த முறையும் மண்டல் (இட ஒதுக்கீடு) vs கமண்டல் (மதம்) என்ற அரசியல் வாதங்கள் எழலாம்.

1980 களில் ராமர் கோவில் இயக்கம் தொடங்கியது. பத்தாண்டுகளில் அது தீவிரமடைந்த போது மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகள் அமலாகத் தொடங்கின. இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் காரணமாக அரசியல் சூழல் மாறியது. தேர்தல் அரசியலில் மதமும் சாதியும் முக்கியமான தாக்கம் செலுத்தும் காரணிகளாக இருக்கின்றன. அந்த வரலாறு மீண்டும் திரும்புமா என்பதுதான் இப்போதைய கேள்வி. மத அரசியலின் தீவிரத்தை இட ஒதுக்கீட்டு முழக்கங்களால் தடுத்து நிறுத்த முடியுமா?

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி அதைத்தான் செய்ய முயற்சிக்கிறது. ராமர் கோவில் பிரச்னை முன்னுக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையும் முன்னெடுக்கப்படுகிறது. சாதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிமைகளை பகிர்ந்து தர வேண்டாமா என்ற முழக்கமும் அதன் பகுதியாக உள்ளன. இருப்பினும் 1992-93 ஆண்டுகளில் நிலவிய சமூக அரசியல் நிலைமை இப்போது மாறியிருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.

சமுதாயத்திற்குள் சாதிகளுக்கும் மதங்களுக்கும் இடையிலான உறவு மாற்றமடைந்துள்ளது, அடையாளங்களின் அரசியல் மாறிவிட்டது. பாஜகவின் அரசியல் கமண்டல் என்பதாக மட்டுமே இல்லை, அவர்களும் சாதியை உள்வாங்கியுள்ளார்கள், சோசியல் என்ஜினியரிங் எனப்படும் உத்திகளை அவர்களும் கைக்கொள்கின்றனர்.

ராமர் கோயில் திறப்பு- பாஜகவுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம், ANI

உத்தர பிரதேச ஜன் மோர்ச்சா பத்திரிகை ஆசிரியரான சுமன் குப்தா இவ்வாறு கூறுகிறார், “ 2014ம் ஆண்டுவரை, வட இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள் பாஜகவிடம் இருந்து தள்ளியே இருந்தார்கள். அவர்களுக்கென்று வேறு அரசியல் திட்டம் இருந்தது. மண்டலும் இருந்தது கமண்டலும் இருந்தது. வேலையின்மை போன்ற மற்ற பிரச்னைகளும் முக்கிய இடம் பெற்றிருந்தன. ஆனால் இப்போது அரசியல் ஒட்டுமொத்தமாக மாறியுள்ளது. கமண்டல் vs மண்டல் என்ற நிலைமை இப்போது இல்லை. அதி பிற்பட்ட சாதிகளோடு பாஜக கைகோர்த்துக் கொண்டுள்ளது, மிகவும் ஏழைகளான அவர்கள் முன்பு இட ஒதுக்கீட்டு அரசியலின் பகுதியாக இருந்தார்கள்.

கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளுக்காக பாஜக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் காரணமாக இது நடைபெற்றதாக குப்தா கூறுகிறார். இந்த திட்டங்கள் அவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக அமல்படுத்தப்பட்டன. எனவே இந்த பிரிவு மக்களும் பாஜகவுக்கு நெருக்கமாக வந்தனர். மூத்த பத்திரிகையாளர் ராம தத் திரிபாதி “பாஜகவின் அரசியல் மதம் மற்றும் மக்கள் நலன் என்றாகி விட்டது” என்று கூறுகிறார்.

லோக்நிதி மையத்தின் சஞ்சய்குமார் ராமர் கோயில் விவகாரத்தையும் இந்த விவகாரத்தையும் எதிர்கொள்வதற்காக சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தாலும் அது அதிக பலன் கொடுக்காது இன்று கருத்து தெரிவிக்கிறார்.

“கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் கோவில் விவகாரத்தின் காரணமாக மறைக்கப்படும். எதிர்க்கட்சிகள் இதுபோன்ற கணக்கெடுப்பு குறித்து பேசினாலும் தற்போது சாதியைவிட மதம் முக்கியமாகி விட்டது. சாதிக்கு ஒரு ஆபத்து வந்துள்ளது என்ற கருத்து தற்போது எடுபடவில்லை. ஆனால் இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள் என்ற கருத்து மேலோங்கி நிற்கிறது. சாதி அரசியலை விட மக்களை ஒன்றிணைப்பதற்கு இதுவே உதவியாக இருக்கும். சாதி கணக்கெடுப்பைக் கொண்டு மக்களை இதுபோல ஒன்றிணைப்பது கடினமாக இருக்கும்” என்கிறார் சஞ்சய்குமார்.

ராமர் கோயில் திறப்பு- பாஜகவுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவில் இருந்து ஒதுங்கி நிற்பது காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு சாமர்த்தியமான செயலா அல்லது ஆபத்தானதா?

இதுதான் கடந்த சில நாட்களாக கோயில் விவகாரத்தை ஒட்டி நடைபெறக் கூடிய அரசியல் விவாதங்களில் முக்கிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு முன்பாக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் யாருக்கெல்லாம் வழங்கப்படும் என்ற கேள்வி இருந்தது. ஆனால் அழைப்பிதழ் காங்கிரஸ் உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அனுப்பப்பட்டது. எனினும் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த விழாவை புறக்கணித்துவிட்டு அயோத்திக்கு வேறு ஒரு சமயத்தில் செல்வோம் என்று கூறியுள்ளனர்.

ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பை ஏற்க வேண்டுமா வேண்டாமா என்பது மிகவும் தர்மசங்கடமான நிலையாக எதிர்க்கட்சிகளுக்கு இருந்திருக்கும். விழாவில் பங்கேற்றால் பாஜகவின் அரசியல் வெற்றியாக அந்த நிகழ்வை குறிப்பிடுவதாக அமைந்திருக்கும். விழாவில் பங்கேற்காவிட்டால் தீவிர இந்து வாக்காளர்களின் ஆதரவை இழக்கும் ஆபத்து உள்ளது.

ஆனால் இந்நிகழ்வு அரசியலாக்கப்பட்டுள்ளது என்று கூறி எதிர்க்கட்சி தலைவர்கள் அயோத்திக்கு செல்லவில்லை. ராமர் கோவில் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட பிறகு அவர்கள் அங்கே செல்வார்கள் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் தேர்தலை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பது வாக்காளர்கள் ராமர் கோவில் திறப்பு விழாவை மத ரீதியாக பார்க்கிறார்களா அரசியல் ரீதியாக பார்க்கிறார்களா என்பதை பொறுத்துதான்.

ஒரு புறம் தேசிய அரசியலின் சூழலை மாற்றக்கூடிய ராமர் கோவில் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மறுபுறம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வடகிழக்கு மாநிலங்களில் பாரத் ஜோடோ நியாய் யாத்திரா என்று நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். எனினும் காங்கிரஸ் அந்த நடை பயணத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று கூறுகிறது.

மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவுஹான், “இந்த விழா நடந்த விதத்தை பார்க்கும் போது பாஜகவுக்கு எதிராக வாக்களித்தவர்கள் தங்கள் மனங்களை மாற்றிக் கொள்வார்களா? மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று கூறுகிறார்.

ராமர் கோவில் திறப்பினால் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று பாஜகவின் அனுமானமும், காங்கிரஸ் வாக்காளர்களை இது பாதிக்காது என்ற காங்கிரஸின் ஆதங்கமும் இதில் எது உண்மையோ, அதுவே வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும்.

ராமர் கோயில் திறப்பு- பாஜகவுக்கு பலன் தருமா?

ஆனால் தற்போதைய சூழலில், அயோத்தியில் நடைபெறும் விழாவை புறக்கணிக்கும் சங்கராச்சாரியார்களின் நிலைப்பாடு, காங்கிரஸுக்கு ஆதரவாகவும், இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதற்கு ஒரு காரணமாகவும் அமைந்துவிட்டது.

“இந்து மதத்தின் மதிப்புமிக்க மதத் தலைவரான சங்கராச்சாரியார் அயோத்தியில் நடக்கும் அனைத்தும் தவறு என்று கூறுகிறார். அவர் திறப்பு விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டார். இப்போது கூறுங்கள் சங்கராச்சாரியாரும் இந்து எதிர்ப்பாளரா? அவர் இஸ்லாமிய ஆதரவாளரா? அவர் பாஜகவின் ராமர் கோவில் அரசியலை தோலுரித்து காண்பித்திருக்கிறார்கள்” என்று பிரித்விராஜ் சவுகான் மேலும் கூறுகிறார்.

விலைவாசி உயர்வு, வேலையின்மை – இவற்றைவிட ராமர் கோவில் வலிமை வாய்ந்ததா?

கள நிலவரம் இதுவும் தான் – நாட்டின் சாதாரண மக்கள் தங்கள் வாழ்வில் அடிப்படை பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

ஆனால் ஊடகங்களை பார்க்கும் போது கோவில் விவகாரம் தான் அரசியலில் பிரதானமாகிவிட்டதாக நீங்கள் நம்பி விடுவீர்கள். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் சமீபத்திய அறிக்கையின்படி வேலையின்மை 8%க்கும் அதிகமாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களில் இதுவே அதிகமானதாகும்.

மற்றொரு புறம் விலைவாசி உயர்வு பல குடும்பங்களின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். சாதாரண மக்களின் இந்த விவகாரங்கள், ராமர் கோவில் விவகாரத்தால் மத ரீதியாக உந்தப்பட்டு இருக்கும் சூழலில், தேர்தல்களில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா?

ராமர் கோயில் திறப்பு- பாஜகவுக்கு பலன் தருமா?

பட மூலாதாரம், Getty Images

“மக்களும் மற்ற விவகாரங்களை புறந்தள்ளும் அளவு இந்த (மத) கட்டுப்பாடற்ற உணர்வு உருவாக்கப்படும். சமூகத்தின் தலைவர்கள் இதில் பங்கேற்கும் போது சமூக ஏணியில் கீழே இருப்பவர்கள் இயல்பாக அதை கேள்வி கேட்க மாட்டார்கள். ஒரு மோதலுக்கான வாய்ப்பே கிடையாது. சொல்லப்போனால் கேள்வி எழுப்புவதற்கான எந்த வாய்ப்பும் அவர்களுக்கு கிடையாது” என்று பத்திரிகையாளர் கிரிஷ் குபேர் கூறுகிறார் .

விலைவாசி உயர்வு, வேலையின்மை போன்ற பற்றி எரியும் விவகாரங்களை மக்கள் பேசினாலும் கூட அதன் தாக்கம் வாக்களிக்கும் போது இருக்காது என்றும் இதுவே நிதர்சனம் என்றும் லோக் நீதி மையத்தின் சஞ்சய்குமார் கூறுகிறார்.

“இந்த பிரச்னைகளை மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறார்கள். எங்களது ஆய்வுகளில் கடந்த சில தேர்தல்களாக வேலையின்மையும் விலைவாசி உயர்வும் அதிகரித்து வருகிறது என்பதை கவனித்து வருகிறோம். எனினும் இந்த விவகாரங்களையும் மீறி பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வேலையின்மையும் விலைவாசி உயர்வும் இருந்தன. எனினும் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். மக்கள் இந்த பிரச்னைகள் குறித்து கவலை கொள்கின்றனர். ஆனால் இதற்காக வாக்களிப்பதில்லை. அவர்கள் வாக்களிப்பதற்கான காரணம் வேறாக இருக்கிறது. அது தேசியவாதமும் இந்துக்களின் ஒற்றுமையும் ஆகும்” என்று கூறுகிறார் சஞ்சய்குமார்.

அரசியல் பார்வையாளர்கள் பலரது கூற்றுப்படி தேசியவாதத்தையும் கோவிலையும் இணைப்பதில் பாஜக வெற்றிகரமாக இருந்துள்ளது. இதனால் தான் பாஜகவின் தேர்தல் களத்தில் தேசியவாதத்தைப் பற்றி பேசக் கூடிய சக்தி ராமர் கோவில் விவகாரத்துக்கு இருக்கிறது. இந்திய அரசியலில் ராமர் கோவில் அத்தியாயம் முடிவுக்கு வருகிறதா அல்லது புதிய அத்தியாயம் தொடங்குகிறதா என்பதை வரக்கூடிய தேர்தல் முடிவு செய்யும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »