Press "Enter" to skip to content

நிதிஷ் குமார் பாஜக பக்கம் சாய்கிறாரா? – குழப்பத்தால் சூடு பிடிக்கும் பிகார் அரசியல்

பட மூலாதாரம், Getty Images

பிகார் தலைநகர் பட்னாவில் கடும் குளிருக்கு இடையே திடீரென அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ’இந்தியா ‘ கூட்டணி மற்றும் பிகாரில் மகா கூட்டணியில் இருந்தும் நிதிஷ் குமார் விலகப் போகிறாரா?

பிகாரின் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் பிறந்தநாளான புதன்கிழமை அவருக்கு அஞ்சலி செலுத்தும்போது நிதிஷ் குமார் வாரிசு அரசியலைத் தாக்கிப் பேசினார்.

ஆயினும் எவருடைய பெயரையும் நிதிஷ்குமார் குறிப்பிடவில்லை. கர்பூரி தாக்கூர் தனது குடும்பத்தின் பக்கம் சாயவில்லை. ஆனால் இன்று அவர் குடும்பத்தை முன்னேற்றிக் கொண்டு செல்வதில் மக்கள் தீவிரமாக இருப்பதாக அவர் கூறியிருந்தார்.

நிதிஷ் குமாரின் இந்தக் கருத்து லாலு குடும்பத்தை குறிவைப்பதாகப் பார்க்கப்பட்டது. கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை பாஜக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்காக பிரதமர் நரேந்திர மோதிக்கு நிதிஷ் குமார் நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் ஜனவரி 30ஆம் தேதி பிகார் மாநிலம் பூர்னியாவில் நடைபெறவுள்ள ராகுல் காந்தியின் பேரணியில் நிதிஷ்குமார் கலந்து கொள்ளமாட்டார் என்று வியாழக்கிழமை காலை செய்திகள் வெளியாயின.

பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக ராகுல் காந்தி பூர்னியா சென்றடைய உள்ளார். நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் பேரணியில் கலந்து கொள்வார் என்று ஐக்கிய தனதா தளம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இந்தியா கூட்டணியில் குழப்பம்

பட மூலாதாரம், Getty Images

”இந்தப் பேரணியில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை,’ என இதுகுறித்துப் பேசிய ஜேடியு மூத்த தலைவர் விஜய் குமார் செளத்ரி குறிப்பிட்டார். இந்த அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு நிதிஷ்குமார் பாஜகவுடன் மீண்டும் கைகோர்க்கக் கூடும் என்ற ஊகங்கள் வலம் வரத் தொடங்கியுள்ளன.

வாரிசு அரசியல் பற்றி நிதிஷ் குமார் பேசியது கர்பூரி தாக்கூரை புகழ்வதற்காக மட்டுமே என்றும் அவரது அறிக்கை லாலு பிரசாத் யாதவ் பற்றியது அல்ல என்றும் ஜேடியு செய்தி தொடர்பாளர் கே.சி.தியாகி கூறினார்.

பிகார் மாநில பாஜக மாநிலத் தலைவர் சாம்ராட் சௌத்ரி செய்தியாளர்களிடம் பேசும்போது, “யாரும் யாரிடமும் பேசுவதைத் தடுக்க முடியாது,” என்றார். நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் சேர்வது குறித்துக் கேட்டதற்கு, “அவை எல்லாம், மேல் மட்டத்தில் முடிவு செய்யப்படும்,” என்றார்.

பிகாரின் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோதி பேசுகையில், “அரசியலில் எந்தக் கதவும் மூடப்படுவதில்லை. தேவைக்கு ஏற்ப கதவுகள் மூடவும் திறக்கவும் செய்யும்,” என்றார்.

நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணிக்குத் திரும்புவார் என்ற ஊகங்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பிகார் பாஜக தலைவர்கள், கட்சியைப் பொருத்தவரையில் இது ‘பொன் குடத்திற்குப் பொட்டு வைப்பது போன்றது’ என்றும் இது பிகாரில் பாஜகவின் தார்மீக தைரியத்தை அதிகரிப்பது மட்டுமின்றி தேசிய அளவில் ’இண்டியா’ கூட்டணியைப் பலவீனப்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே பாஜக நிதிஷ் குமாரை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் என்று பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தைனையின் பேரில் ’தி இந்து’ நாளேட்டிடம் பேசிய பிகார் பாஜக தலைவர்கள், தெரிவித்தனர். அத்தகைய சூழ்நிலையில் சட்டப் பேரவையைக் கலைப்பதும் ஒரு மாற்று வழியாக இருக்கக்கூடும்.

குழந்தைகள், பெரியவர்களின் விவகாரங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று லாலு யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யாவுக்கு கே.சி.தியாகி அறிவுரை கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணியில் குழப்பம்

பட மூலாதாரம், ANI

உறவில் விரிசல்

நிதிஷ்குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தால் அது 2005 நவம்பருக்கு பிறகு முதலமைச்சராக அவர் செய்யும் ஐந்தாவது ‘யு டர்ன்’ ஆக இருக்கும். 2022 ஆகஸ்ட் மாதம்தான் நிதிஷ் குமார் பாஜகவிடமிருந்து விலகி ஆர்ஜேடியுடன் கைகோர்த்தார்.

நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக ஊகங்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய ஜேடியுவின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி, “எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது. ஆனால் இந்தியா கூட்டணியில் நடப்பது எதுவும் சரியில்லை என்று என்னால் சொல்ல முடியும். பிராந்தியக் கட்சிகள் வலுவாக உள்ள இடங்களில் காங்கிரஸ் சீட்டுகளை கேட்கக்கூடாது,” என்று தெரிவித்தார்.

புத்தாண்டு தினம் மற்றும் முன்னாள் முதல்வரும், லாலு பிரசாத் யாதவின் மனைவியுமான ராப்ரி தேவியின் பிறந்தநாளுமான ஜனவரி 1ஆம் தேதி, லாலுவுக்கும், நிதிஷுக்கும் இடையே அவ்வளவாகப் பேச்சு வார்த்தை இல்லாதது போலவே காணப்பட்டது.

முன்னதாக டிசம்பர் 29ஆம் தேதி டெல்லியில் நடந்த ஜேடியு கூட்டத்தில் கட்சியின் தலைவர் லலன் சிங் ராஜினாமா செய்தார், பின்னர் நிதிஷ் குமார் கட்சித் தலைவரானார். அப்போது பாஜக தலைவர் சுஷீல் மோதி, ‘லாலுவுடன் நெருக்கமான காரணத்தால் லலன் சிங் நீக்கப்பட்டுள்ளார்’ என்று கூறியிருந்தார்.

வாரிசு அரசியல் குறித்து நிதிஷ் குமார் தெரிவித்த கருத்துக்குப் பிறகு ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகிணி ஆச்சார்யா ட்வீட் மூலம் கிண்டல் செய்தார். பின்னர் அவர் அந்த ட்வீட்டை நீக்கிய போதிலும், இது நிதிஷ் குமாரை பற்றியதுதான் என்று நம்பப்படுகிறது.

எந்தவொரு தலைவனும் தான் ஆசைப்பட்டால் மட்டுமே தன் குழந்தைகளை அரசியலில் முன்னேற்றிவிட முடியாது என்றும், அப்படிப்பட்ட ஒரு தலைவரை பொது மக்கள்தான் முன்னேறச் செய்கிறார்கள் என்றும் ஆர்ஜேடி கூறியுள்ளது.

டெல்லியில் இருந்து பாட்னா வரையிலான சந்திப்புகள் மற்றும் கூட்டங்கள்

இந்தியா கூட்டணியில் குழப்பம்

பட மூலாதாரம், ANI

இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பிகார் பாஜக தலைவர் சாம்ராட் செளத்ரி வியாழக்கிழமை மாலை டெல்லி சென்றடைந்தார். பிகார் பாஜக மூத்த தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது என்று செய்தி முகமை ஏஎன்ஐ தெரிவிக்கிறது.

“2024 மக்களவைத் தேர்தலில் எப்படிப் போட்டியிடுவது என்பது பற்றி மதிப்பாய்வு செய்யப்பட்டது,” என்று அமித் ஷாவை சந்தித்த பிறகு சாம்ராட் செளத்ரி கூறினார்.

முன்னதாக பிகார் அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான ஆர்ஜேடியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆர்ஜேடி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை தங்கள் இல்லத்திற்கு அழைத்து அவர்களைச் சந்தித்தனர்.

இருப்பினும், இதுபோன்ற சந்திப்புகள் அடிக்கடி நடக்கும் ஒன்றுதான் என்றும் பிகார் அரசுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, நிதிஷ் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்றும் ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் சக்தி சிங் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

பிகார் அரசில் நிலவுவதாகச் சொல்லப்படும் மோதல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கிரிராஜ் சிங், “நான் என் தாய்வீட்டிற்குச் சென்றுவிடுவேன் என்று நிதிஷ் குமார் லாலு யாதவை அடிக்கடி மிரட்டி வருகிறார். ஆனால் தாய்வீட்டின் கதவு அவருக்கு மூடப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டார்.

நிதிஷ் மீண்டும் பாஜகவுடன் கைகோர்ப்பது பற்றியே கிரிராஜ் சிங்கின் இந்தப் பேச்சு உள்ளதாக நம்பப்படுகிறது

கிரிராஜ் சிங் கூறியது என்ன

இந்தியா கூட்டணியில் குழப்பம்

பட மூலாதாரம், ANI

லாலு பிரசாத் யாதவும், கிரிராஜ் சிங்கும் சமீபத்தில் ஒரு விமானப் பயணத்தின்போது சந்தித்தனர். லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவை பிகார் முதல்வராக ஆக்க விரும்புகிறார் என்று இந்த சந்திப்புக்குப் பிறகு கிரிராஜ் சிங் கூறியிருந்தார்.

மாநில அரசில் எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று மாநில நிதி அமைச்சரும், ஜே.டி.யு எம்.எல்.ஏ.வுமான விஜய் செளத்ரி செய்தியாளர்களிடம் கூறினார். பிகார் பாஜக தலைவர்கள் அமித்ஷாவை சந்தித்தது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த அவர் சந்திப்புகளை நடத்துவது கட்சிகளின் வேலை என்று கூறினார்.

அதே நேரத்தில் மற்றொரு ஜேடியு எம்எல்ஏவும், மாநில அமைச்சருமான அசோக் செளத்ரி, நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற கோரிக்கை குறித்து ட்வீட் செய்துள்ளார்.

இத்தகைய கோரிக்கை பாஜக மற்றும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அரசியலின் ஒரு பகுதி. இதனிடையே பிகார் சட்டப் பேரவையைப் பார்த்தால் இங்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் 79 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. அதே நேரத்தில் பாஜக 78 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 இடங்கள் உள்ளன. அதாவது 243 உறுப்பினர் சட்டப்பேரவையில் யாருக்கு ஜேடியுவின் ஆதரவு உள்ளதோ அந்தக் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.

அதே நேரத்தில் பிகார் மாநிலத்தில் மதுவிலக்கு தொடர்பாக நிதிஷ்குமார் அரசை பாஜக மீண்டும் ஒருமுறை சாடியுள்ளது. அதாவது பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் குழப்பம் நிலவி வருவதாகச் சொல்லப்படும் நிலையில், நிதிஷ் மீது பாஜக பகிரங்கமாக மென்மையாக நடந்து கொள்வதைப் பார்க்க முடியவில்லை. அதே நேரம் ஆட்சியில் இழுபறி இருப்பதை மகா கூட்டணி தலைவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை.

பாஜகவின் வியூகம்

இந்தியா கூட்டணியில் குழப்பம்

பட மூலாதாரம், ANI

பிகார் பாஜகவின் ட்வீட்களும், கிரிராஜ் சிங்கின் அறிக்கைகளும் மற்றொரு குறிப்பைத் தருகின்றன. அதாவது ஜேடியு பாஜகவுடன் இல்லாவிட்டாலும், ஆர்ஜேடியும் ஜேடியுவும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிட்டால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக பலன் அடையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

கடந்த 2014 மக்களவை தேர்தலிலும் இதேதான் நடந்தது. அப்போது பாஜகவும் ஜேடியுவும் தனித்தனியாக இருந்தன. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 22 இடங்கள் கிடைத்தன. அதேநேரம் அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 31 இடங்கள் கிடைத்தன.

இதில் எல்ஜேபிக்கு 6 இடங்களும், உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எஸ்பி கட்சிக்கு 3 இடங்களும் கிடைத்தன. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் இவற்றில் 17 இடங்களை பாஜகவும், 16 இடங்களை ஜேடியுவும், 6 இடங்களை எல்ஜேபியும் கைப்பற்றின.

பின்னர் 2022 ஆகஸ்டில் ஜேடியு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்தது.

ராகுலின் யாத்திரை 29ஆம் தேதி பிகார் சென்றடையும்

இந்தியா கூட்டணியில் குழப்பம்

பட மூலாதாரம், ANI

முழு வலுவுடன் பாஜகவை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி, தன் பிராந்திய கூட்டணிக் கட்சிகளை அந்தந்த மாநிலங்களில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று சில வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதே நேரத்தில் பாஜகவுடன் நேரடிப் போட்டி நிலவும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்படுகிறது.

பிகார் அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நீதி யாத்திரை ஜனவரி 29ஆம் தேதி பிகாரில் நுழைய உள்ளது.

அதேநேரம் ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ‘வேலைக்கு நிலம்’ விவகாரத்தின் விசாரணைக்காக டெல்லி வருமாறு லாலு பிரசாத் யாதவுக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் அமலாக்க இயக்குனரகம் அதிகாரப்பூர்வமான அழைப்பு அனுப்பியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் பிகாரில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி எந்த திசையில் செல்கிறது என்பதை ராகுல் காந்தியின் பேரணி தொடர்பான ஜேடியுவின் நிலைப்பாடு தீர்மானிக்கும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »