Press "Enter" to skip to content

முகமது ஜுபைர்: மத நல்லிணக்க பதக்கம் பெற்றவரை பாஜக ‘இந்து விரோதி’ என எதிர்ப்பது ஏன்?

பட மூலாதாரம், MOHAMMED ZUBAIR / TWITTER

சென்னையில் நேற்று 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு குடியரசு தின அணிவகுப்பு நடந்து முடிந்துள்ளது. அதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும், இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்ட 14 பேருக்கு குடியரசு நாள் விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் மதுரையில் தனது 7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்காகக் கொடுத்த ஆயி அம்மாளுக்கு முதலமைச்சர் சிறப்பு விருதும், பெரு வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய நபர்களுக்கு வீரதீர செயலுக்கான அண்ணா விருதும் வழங்கப்பட்டது.

இந்த வரிசையில் ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை இயக்குநரான ஊடகவியலாளர் முகமது ஜுபைருக்கு ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்’ வழங்கப்பட்டுள்ளது. இந்த பதக்கம் தற்போது தமிழகத்தின் பேசுபொருளாக மாறியுள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு பாஜகவை சேர்ந்தவர்கள் மதரீதியாக பிரச்னைகளை உருவாக்கும் இந்து விரோதிக்கு மத நல்லிணக்க பதக்கத்தை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

யார் இந்த முகமது ஜுபைர்?

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், MOHAMMED ZUBAIR / TWITTER

பொதுவெளியில் தவறாகப் பரவி வரும் செய்திகள் மற்றும் தகவல்கள், குறிப்பாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வெறுப்பு பிரசாரங்கள் மற்றும் பொய்யான தகவல்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து வெளிப்படுத்தும் நிறுவனமாக அறியப்படும் ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை இயக்குநராக இருப்பவர் முகமது ஜுபைர்.

கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பலமுறை பல்வேறு தகவல்களை ஆராய்ந்து செய்திகளை வெளியிட்டதற்காக சர்ச்சையில் சிக்கியுள்ளது. குறிப்பாக பிகாரில் இருந்து வந்த இந்தி பேசும் தொழிலாளர்களை தமிழ்நாட்டினர் தாக்கியதாகக் கூறி கடந்த மார்ச் மாதம் பரவிய காணொளி மூலம் பரவிய பொய்யான தகவல் பெரிய சர்ச்சையை கிளப்பியது.

இதனால் மாநிலங்கள் இடையிலான மோதல்போக்கு ஏற்படும் சூழல் எழுந்த நிலையில் அந்த காணொளிக்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதை போலிச் செய்தி என்று ஆல்ட் நியூஸ் மற்றும் முகமது ஜுபைர் செய்தி வெளியிட்டனர். இது அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்காக தற்போது தமிழ்நாடு அரசால் விருது வழங்கப்பட்டிருக்கும் ஜுபைர் தனது பணியால் 23 நாட்கள் சிறைக்குச் சென்றுள்ளதாகக் கூறுகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியில் பிறந்த இவர் தற்போது ஆல்ட் நியூஸ் முகமையின் மூலம் தேசிய அளவில் சமூக ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் வெளியிடும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உண்மையான தகவல்களை வெளியிடும் பணியைச் செய்து வருவதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஜுபைருக்கு என்ன விருது வழங்கப்பட்டது?

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், MOHAMMED ZUBAIR / TWITTER

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா, சுதந்திர தின விழா உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியுள்ள நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் வெவ்வேறு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் சென்னையில் நடந்த 74வது குடியரசு தின விழாவில் ஊடகவியலாளர் முகமது ஜுபைருக்கு “கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்” வழங்கப்பட்டது.

இந்தப் பதக்கம் குறித்து அவரிடம் கேட்டபோது, “இந்தப் பதக்கம் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்குமான பதக்கம். ஒரு ஃபேக்ட் செக்கராக எப்போதும் அரசுகளிடம் இருந்து வழக்குகளும், சிறை தண்டனைகளும் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், முதல் முறையாக ஒரு அரசிடம் இருந்து பதக்கம் கிடைத்துள்ளது வித்தியாசமாக உள்ளது,” என்றார்.

மேலும் இது உண்மை கண்டறியும் குழுவின் முக்கியத்துவத்தை காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “பல நேரங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் மட்டும் ஆளாகும் நிலையில், ஒரு அரசு எங்கள் பணியை அங்கீகரிப்பது சிறப்பான விஷயம்,” என்கிறார் அவர்.

ஜுபைருக்கு வழங்கப்பட்டுள்ள பதக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், “இன்று அதிகமான பிரச்னைகள் பொய் தகவல்கள் மூலமாக ஏற்படும்போது, அதை வெளிப்படுத்தும் நபர் மிக முக்கியமான ஜனநாயக கடமையை ஆற்றுபவராக இருக்கிறார். அந்த வகையில் ஜுபைருக்கு கிடைத்திருப்பது ஓர் அடிப்படையான அங்கீகாரம்,” என்று கூறியுள்ளார்.

ஜுபைருக்கு வழங்கப்பட்ட விருதை பாஜக விமர்சிப்பது ஏன்?

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், FACEBOOK/NARAYANAN THIRUPATHY

இந்நிலையில் முகமது ஜுபைருக்கு இந்தப் பதக்கம் வழங்கப்பட்டதை எதிர்த்து பாஜகவை சேர்ந்த பலரும் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது, “மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் ஒரு நபருக்கு மத நல்லிணக்க விருதை திமுக அரசு வழங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஒரு மதத்திற்கு எதிராகப் பேசுவதையே வழக்கமாகக் கொண்டுள்ள நபர் அவர். ஆகவே மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் சமூக விரோதியாகவே அவரை நாங்கள் பார்க்கிறோம். மேலும் இவரே பல நேரங்களில் உண்மைகளை மறைத்து பொய்களைத்தான் பதிவிடுகிறார்.

இவர் ஒரு இந்து விரோத நபர் என்பது அவரது பதிவுகள் மற்றும் எழுத்துகள் மூலமாகத் தெரிய வருகிறது. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு இந்து விரோத கட்சி என்பதால், இது போன்ற நபருக்கு கொடுக்க கூடாத விருதைக் கொடுத்துள்ளது,” என்று கூறியுள்ளார்.

‘பாஜகவை எதிர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு பதக்கம் கொடுக்கக்கூடாது எனக் கூறுகிறீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பாஜகவின் கொள்கையை எதிர்க்கிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு பதக்கம் கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், இரு மதங்களுக்கு இடையில் சீர்குலைவை ஏற்படுத்தும் நபருக்கு, அவரது இந்து விரோத போக்கை உற்சாகப்படுத்தவும், அதை அவர் தொடர்ந்து செய்யவும் உள்நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு விருது வழங்கியிருப்பது, அதிலும் மத நல்லிணக்க விருதை வழங்கியிருப்பது தவறு என்று சொல்கிறோம்,” என்றார் நாராயணன் திருப்பதி.

பாஜக தலைவர்கள் எதிர்ப்பது ஏன்?

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், BJP TAMILNADU / TWITTER

தமிழ்நாடு பாஜகவின் இந்த விமர்சனம் குறித்து ஜுபைரிடம் கேட்கும்போது, தமிழ்நாடு மக்கள் குறித்த போலிச் செய்திகளை அம்பலப்படுத்தும்போது மகிழ்ச்சியடைய வேண்டிய அவர்கள் ஏன் என்னை விமர்சிக்கிறார்கள் என்று புரியவில்லை என்கிறார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், “கடந்த மார்ச் மாதம் புலம்பெயர் தொழிலாளிகள் குறித்துப் பரவி வந்த போலி காணொளி மற்றும் செய்திகளை அம்பலப்படுத்தியதற்காக இந்த பதக்கம் கிடைதுள்ளது. நாங்கள் அதைச் சரியான நேரத்தில் செய்ததால்தான் இரு மாநிலங்களுக்குள் ஏற்பட இருந்த கசப்பான சூழல் தவிர்க்கப்பட்டது,” என்றார்.

ஆனால், இந்தச் செயல்பாடு குறித்து தமிழக பாஜக தலைவர்களே தன்னை விமர்சித்துப் பதிவுகள் போட்டதைப் பார்க்க முடிவதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு மக்கள் இதர மாநில மக்களைக் கொலை செய்கிறார்கள் என்று பரவிய போலிச் செய்தியை அம்பலப்படுத்திய என்னை தமிழ்நாடு பாஜக தலைவர்களே அதிகம் விமர்சனம் செய்து எழுதுகின்றனர். சொல்லப்போனால் அவர்கள் தம் மாநில மக்கள் மீதான பொய்ச் செய்தியை உடைத்ததற்காக மகிழ்ச்சியடைய வேண்டும். ஆனால், அவர்களோ அதை வெளிப்படுத்திய என்னையே விமர்சிக்கிறார்கள் என்றால் ஏன் என்று எனக்குப் புரியவில்லை,” என்கிறார் ஜுபைர்.

அதிக தாக்குதலுக்கு உள்ளாவது ஏன்?

சமூக ஊடகங்கள் தொடங்கி பொதுவெளிகளில் அதிகம் பாஜகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் முகமது ஜுபைரை விமர்சனம் செய்வதைப் பார்க்க முடிகிறது.

இது குறித்து அவரிடம் கேட்கும்போது, “பல ஆண்டுகளாகவே இந்த உண்மையைக் கண்டறியும் துறையில் இருந்து வந்தாலும், 2017இல் தான் ஆல்ட் நியூஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். காரணம் 70 சதவீதமான போலிச் செய்திகள், மதரீதியான தவறான தகவல்கள் ஆளும் பாஜக அரசு மற்றும் அவர்களது ஆதரவாளர்களால்தான் பரப்பப்படுகிறது. எனவே அதை நாங்களே அம்பலப்படுத்தவில்லையெனில் யார் செய்வார்கள்?” எனக் கேட்கும் ஜுபைர் ஆகையால்தான் தாங்களே அந்தப் பணியைச் செய்து வருகிறோம் என்றார்.

அதனால்தான் பல நேரங்களில் அவர்களது இலக்காகத் தாங்கள் மாறி விடுவதாகவும் அதன் ஒரு பகுதியாகத் தங்களை சமூக ஊடகங்களில் தாக்குவது, குடும்பத்தை மிரட்டுவது, முகவரியை பொதுவெளியில் பகிர்வது, அழைப்புகளில் மிரட்டுவது, பொய் வழக்குகள் பதிவு செய்வது, கைது செய்வது போன்ற செயல்களைச் செய்கிறார்கள் என்கிறார் ஜுபைர்.

“பல நேரங்களில் காரணமே இல்லாமல்கூடக் கைது நடவடிக்கைகள் இருக்கும். காவல் துறையினரே அரசியல்வாதிகளின் அழுத்தத்தில் அதைச் செய்ய வேண்டியதிருப்பதாகக் கூறுகின்றனர்,” என்று தெரிவிக்கின்றார் ஜுபைர்.

இதே கேள்விக்குப் பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன், “ஜுபைர் போலிச் செய்திகளை அம்பலப்படுத்துவதே இவர்களுக்குப் பயமாக இருக்கிறது. பாஜகவின் மொத்த அரசுமே பொய் செய்திகளில்தான் நடைபெறுகிறது. அதை ஒருவர் வெளிப்படுத்தும்போது அவர்களுக்குப் பிரச்னையாக இருக்கிறது,” என்று தெரிவிக்கிறார்.

‘பாஜகவின் பார்வையில்தான் பிரச்னை’

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், A S PANEERSELVAN / TWITTER

முகமது ஜுபைருக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளதை பாஜக தீவிரமாக எதிர்ப்பதன் பின்னணி என்ன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, “ஒன்றிய ஆட்சி என ஒன்று இல்லையென்றால் இவர்களின் அறிக்கையை போடக்கூட யாரும் கிடையாது. மக்கள் செல்வாக்கே இல்லாமல் வெறும் ஒன்றிய ஆட்சியின் செல்வாக்கை வைத்துக்கொண்டு கருத்து தெரிவிப்பது எந்தவிதத்தில் நியாயம்?” என்று காட்டமாகப் பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், “பத்திரிகையாளர்களைத் தாக்கினால் பரிசு கிடைக்கும் இடமாக பாஜக இருக்கிறது. அப்படிப் பார்த்தால் மத்திய அமைச்சராக இருந்த வி.கே. சிங்கில் இருந்து தொடங்க வேண்டும். பத்திரிகையாளர்களை மோசமாக விமர்சித்த அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள். இந்த கட்சியில் மட்டும்தான் பிறரை தாக்கிப் பேசுபவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது,” என்று கூறுகிறார்.

“அவர்களிடம் சொல்வதற்கென்று எந்த சாதனையும் இல்லை என்றபோது, எளிமையான இலக்கு யாரோ அவர்களைத் தாக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதில் எதிர்கட்சிகளைத் தாக்குவது அவர்களுக்கு எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதனால் பத்திரிகையாளர்களைத் தாக்கி அதன் மூலம் பலன் பெற்றுக் கொள்கின்றனர்,” என்கிறார் அவர்.

தற்போது ஜுபைர் மட்டும் தீவிரமாக தாக்கப்படக் காரணம் என்னவென்ற கேள்விக்கு, “ஆல்ட் நியூஸில் ப்ரதீக் சின்ஹாவும் இருக்கிறார். ஆனால், அவரை விட்டுவிட்டு ஜுபைரை மட்டும் தாக்குவதற்குக் காரணம் அவர்களது மார்க்கெட்டிற்கு அதுதான் உதவும்.

அவர்கள் பேசும் எல்லாவற்றிலும் ஒரு மதரீதியான நோக்கத்தைப் புகுத்துவது அவர்களது பார்வையாக இருக்கிறது. எனவே அவர்கள் பார்வையில்தான் பிரச்னை,” என்கிறார் பன்னீர்செல்வன்.

தமிழ்நாடு அரசுக்கு உண்மை கண்டறியும் பிரிவு ஏன் தேவை?

முகமது ஜுபைர்

பட மூலாதாரம், M.K.STALIN / TWITTER

கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் தமிழக அரசு போலி செய்திகளைக் கணடறிவதற்காக உண்மை சரிபார்க்கும் குழு(Fact Checking Unit) ஒன்றை உருவாக்கி அதற்கான பணியாளர்களை நியமித்தது. அப்போதே அந்தக் குழு சர்ச்சைக்குள்ளானது. அதில் முக்கியமானது ஒரு அரசுக்கு ஏன் உண்மை சரிபார்க்கும் குழு தேவை என்ற கேள்வி.

அதே கேள்வியை முகமது ஜுபைரிடம் முன்வைத்தபோது, “எந்த அரசும் உண்மை சரிபார்க்கும் பிரிவுகளைக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது,” என்று கூறுகிறார் அவர்.

மேலும் பேசிய அவர், “இந்தக் குழுக்கள் எப்போதும் சுயாதீன அமைப்புகளாக மட்டுமே இருக்க வேண்டும். நான் ஒரு கட்சி சார்ந்த அமைப்பில் இயங்குகிறேன் என்றால் எப்படி என்னால் சார்புத்தன்மை இல்லாமல் உண்மையைக் கண்டறிய முடியும்?

எனவே ஒரு கட்சி, அரசு அல்லது கார்ப்பரேட் என எதன் ஒரு பகுதியாக இந்த உண்மை கண்டறியும் பிரிவுகள் செயல்பட்டாலும் அவர்களால் சார்புத்தன்மை இல்லாமல் இயங்க முடியாது,” என்கிறார் ஜுபைர்.

உதாரணத்திற்கு, “தமிழ்நாடு அரசைச் சேர்ந்த அமைச்சரோ அல்லது தலைவரோ ஒரு போலிச் செய்தியைப் பகிர்கிறார் என்றால் அதை எப்படி நீங்கள் அணுகுவீர்கள்?

ஒன்று அந்தத் தகவலையே ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு கடந்து விடுவீர்கள் அல்லது அதன் உண்மை எது எனக் கண்டறிவதற்குப் பதிலாக அந்த நபரையே தொடர்புகொண்டு அந்தத் தகவலை அழிக்கச் சொல்வீர்கள்.

மேலும் தமிழ்நாடு மட்டுமின்றி உண்மை சரிபார்க்கும் குழு கொண்டுள்ள எந்தவொரு அரசும் தங்களது எதிர்க்கட்சிகளை முக்கியமான இலக்காக வைத்து அவர்களின் குறைகளை மட்டுமே கண்டறிந்து வெளியிடுமாறு அழுத்தம் தர முடியும். எனவே, உண்மை கண்டறியும் ஊடகவியலாளர்கள் கண்டிப்பாக சுயாதீனமாகச் செயல்பட வேண்டும்,” என்று கூறுகிறார் அவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »