Press "Enter" to skip to content

அயோத்தி ராமர் கோவில்: உத்தரபிரதேசம் முதல் தெலுங்கானா வரை வெடித்த வன்முறை

பட மூலாதாரம், RAJAT GUPTA/EPA-EFE/REX/SHUTTERSTOCK

ஜனவரி 22 அன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் குடமுழுக்கு நடந்து கொண்டிருந்தபோது, ​​நாட்டின் பல பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அதேபோல, சமூகங்களுக்கு இடையே மோதல் சம்பவங்களும் பதிவானது.

ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த பிறகும் இந்த மோதல்கள் முடிவுக்கு வரவில்லை. சமூக ஊடகங்களில் தினமும் இதுபோன்ற சம்பவங்களின் காணொளிகள் வெளியாகி வருகின்றன.

கடந்த நான்கு நாட்களில் இதுபோன்ற எத்தனை சம்பவங்கள் நடந்தன, அவை எங்கு நடந்தன என்று இந்தக் கட்டுரையில் வரிசையாக எழுதப்பட்டுள்ளன.

முதலில், மும்பையின் மீரா ரோடு பகுதியில் நடந்த வன்முறை மோதலைப் பற்றிப் பார்ப்போம்.

மும்பை மீரா சாலை பேரணியில் கல்வீச்சு, கடைகள் இடிப்பு

மும்பையில் இடிக்கப்பட்ட கடைகள்.

பட மூலாதாரம், SHAHEER SHEIKH/BBC

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பிற்கு ஒரு நாள் முன்பு, மும்பை மீரா சாலையில் உள்ள நயா நகர் பகுதியில் இருந்து ‘ராம ராஜ்ஜிய ரத யாத்திரை’ என்ற பேரணி நடந்து கொண்டிருந்தது.

இந்தப் பேரணியின் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மறுநாள் மாநகராட்சி அப்பகுதியில் உள்ள சில கடைகளை புல்டோசர் மூலம் தகர்த்தது. விதிமீறல் கட்டுமானங்களை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆனால் சர்ச்சை இத்துடன் நிற்கவில்லை, அன்று மாலைக்குள் முஸ்லிம் சமூகத்தினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்தன.

நேரில் கண்ட சாட்சியும், பாதிக்கப்பட்டவருமான அப்துல் ஹக், மக்கள் எந்த மதம் எனக் கேட்டுத் தாக்கியதாகக் கூறினார்.

இதுகுறித்து காவல் துறை துணை கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 19 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாகக் கூறினார்.

தேவாலயத்தின் மீது ஏற்றப்பட்ட காவிக் கொடி

ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 21ஆம் தேதி, மத்திய பிரதேசத்தின் ஜபுவாவில் சிலர் மத கோஷங்களை எழுப்பியபடி தேவாலயம் ஒன்றின் மீது ஏறி, அங்கு காவிக் கொடியை ஏற்றினர்.

இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டது. இந்த காணொளியில் இரண்டு நபர்கள் கட்டடத்தின் உச்சியில் ஏறி சிலுவை அடையாளத்திற்குப் பதிலாக காவிக் கொடியை வைப்பதைக் காணலாம்.

இந்தச் சம்பவத்தின்போது, சிலர் இந்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்புவதைக் காணலாம்.

ராணாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டபட்லாய் கிராமத்தைச் சேர்ந்த தர்பு அமலியார் என்ற கிறிஸ்தவ நபருக்கு இந்த தேவாலயம் சொந்தமானது. அவர் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்ய மறுத்துவிட்டார்.

செய்தி இணையதளமான தி வயர் வெளியி்ட செய்தியின்படி, அமலியர் இச்சம்பவம் குறித்துப் பேசுகையில், “மத முழக்கங்களை எழுப்பியவர்களின் எண்ணிக்கை சுமார் 25 இருக்கும். அவர்கள் எனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு என்னைத் தெரியும்,” எனக் கூறியுள்ளார்.

காவிக்கொடி ஏற்றப்பட்ட தேவாலயம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்ரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 30-40 பேர் பிரார்த்தனைக்கு வருவதாகவும் அமலியார் கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மசூதிக்கு முன் அமர்ந்து பஜனை

மத்திய பிரதேசத்தில் கலவரம்

பட மூலாதாரம், Getty Images

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் உள்ள பெட்மா பகுதியில் இருந்தும் இதுபோன்ற செய்திகள் வந்துள்ளன.

நகரின் பெட்மா பகுதியில் உள்ள ஜாமா மஸ்ஜித் முன் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் காணொளி சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டுி வருகிறது.

அந்த காணொளியில், மசூதிக்கு முன்பாக உள்ள சாலையில் மக்கள் அமர்ந்து காவிக் கொடிகளை அசைத்துக் கொண்டிருந்தனர். மத்திய பிரதேசத்தில் உள்ள பிபிசியின் செய்தியாளர் நியாஸின் கூற்றுப்படி, இந்த காணொளி பெட்மா பகுதியில் உள்ள ஜாமா மஸ்ஜித்துக்கு வெளியே எடுக்கப்பட்டது.

உள்ளூர் முஸ்லிம் குடும்பங்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதால் இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசுவதற்கு அவர்கள் அஞ்சுவதாக நியாஸ் கூறினார்.

மசூதி வாசலில் காவிக் கொடி

மசூதி

பட மூலாதாரம், Getty Images

ராமர் கோவில் திறப்பு விழா அன்று உத்தர பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது, பள்ளிவாசல் ஒன்றின் வாயிலில் சிலர் ஏற முயற்சி செய்தனர்.

சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்ட காணொளியில், ஒரு கூட்டம் ஒரு மசூதியின் முன் வந்து காவி நிறக் கொடியை ஏற்றத் தொடங்குவதைக் காணலாம். காணொளியில், ஒரு நபர் மசூதியின் வாயிலில் ஏறுவதையும் காணலாம்.

இந்த மசூதி மேதாவால் நகர் பஞ்சாயத்துப் பகுதியில் உள்ளது. பிபிசியிடம் பேசிய மேதாவால் காவல் நிலைய ஆய்வாளர் விஜய் குமார் துபே, அமைதியைக் குலைத்ததற்காக ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

“தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. மசூதி தரப்பில் இருந்து எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை,” என்றார்.

அந்தப் பகுதியில் ஊர்வலம் நடந்தால், மசூதி இருக்கும் வழியாகத்தான் செல்லும் என்றார் துபே. ஜனவரி 22ஆம் தேதி நடந்த ஒரு ஊர்வலமும், அந்த மசூதியின் வழியாகச் சென்றதாகக் கூறிய துபே, அப்போதும் சிலர் பொது அமைதியைக் கெடுக்க முயன்றதாகக் கூறினார்.

சமீபத்தில் நடந்த ஊர்வலத்தின்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊர்வலத்தின் வழித்தடத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மசூதிகளின் கதவுகளை போலீசார் மூடினர்.

லக்னௌவின் தெருவில் ஆபாசமான பாடல்கள்

லக்னோவில் தெருவில் ஆபாசமான பாடல்கள்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

ஜனவரி 22ஆம் தேதி மாலை, லக்னௌவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நர்ஹி திராஹாவில் ஆபாசமான மற்றும் தவறான பாடல்கள் பகிரங்கமாக ஒலித்தன.

இந்தப் பாடலின் காணொளி சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டதை தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

லக்னௌவில் உள்ள கூடுதல் டிசிபி (மத்திய) மனிஷா சிங் பிபிசியிடம் பேசுகையில், “தற்போது மூன்று பேரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். அவர்கள் உள்ளூர் வியாபாரிகள். டி.ஜே.வை அவர்கள் அமர்த்தியதாகவும், யூடியூபில் தேடிய பிறகு பாடலை ஒலிக்கவிட்டதாகவும் அவர்கள் கூறினர். மேலும், வேண்டுமென்றே ஆபாசமான பாடலைப் பாடவில்லை என்றும் அவர்கள் கூறினார்,” என்றார் மனிஷா சிங்.

தெலுங்கானாவில் காவிக் கொடியை அவமதித்ததாகக் கூறி இளைஞர் மீது தாக்குதல்

தெலுங்கானாவில் கலவரம்

பட மூலாதாரம், Getty Images

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி அவரது அந்தரங்க உறுப்புக்குத் தீ வைக்க முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதன் காணொளிவும் சமூக ஊடகங்களில் மிகுதியாக பகிரப்பட்டது. இளைஞர் ஒருவரை சிலர் நிர்வாணமாகப் பிடித்து வைத்திருப்பதை காணொளியில் காணலாம். அந்த வீடியோவில் சிலர், மத கோஷங்கள் எழுப்புவதையும் கேட்கலாம்.

அந்த வீடியோவில், மற்றொரு நபர் பாதிக்கப்பட்டவரின் அந்தரங்க உறுப்பில் தீ வைக்க முயல்கிறார். பிபிசியிடம் சங்கரெட்டி காவல் கண்காணிப்பாளர் சிஎச் ரூபேஷ், “அந்தச் சம்பவம் ஜனவரி 22 அன்று நடந்தது,” என்றார்.

பாதிக்கப்பட்ட இளைஞர் காவிக் கொடியை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரூபேஷ் கூறினார்.

மத உணர்வைத் தூண்டியதாக இளைஞர் மீதும், இளைஞரை தாக்கியதாக மற்றொரு தரப்பினர் மீதும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞன் தற்போது சிறையில் இருப்பதாகவும், அவரைத் தாக்கியவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் ரூபேஷ் கூறினார்.

காவிக் கொடியை அவமதித்ததாக அந்த இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இளைஞரின் காணொளிவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது, அதில் அவர் காவிக் கொடியை அவமதித்துள்ளார்.

பிகார்: கல்லறையில் தீ

கல்லறையில் தீ வைக்கப்பட்டது

பட மூலாதாரம், SOCIAL MEDIA

ராமர் கோவில் திறப்பு விழா அன்று, பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள கிர்மா கிராமத்தில் உள்ள ஒரு கல்லறை தீப்பிடித்ததாக செய்தி வந்தது.

கிர்மா கிராமம், கெவாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. பிபிசியிடம் பேசிய காவல் நிலைய பொறுப்பாளர் ராணி குமாரி, “ராமர் கோவில் திறப்பு விழா அன்று, 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலம் சென்றனர். அப்போது, கல்லறையில் யாரோ பட்டாசுகளை வீசியதால், அங்கு தீ விபத்து ஏற்பட்டது,” என்றார்.

தீ விபத்திற்குப் பிறகு, இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினருக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது, ஆனால் சண்டை எதுவும் இல்லை, என்றார்.

இந்த வழக்கில் காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தற்போது குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் ராணி குமாரி கூறினார்.

இதுதவிர, நாட்டில் வேறு சில இடங்களில் இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

பஞ்சாபில் இரண்டு வழக்குகள் பதிவு

இக்பால் தனௌலா

மத உணர்வுகளைத் தூண்டியதாக பஞ்சாபில் இரண்டு இடங்களில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இரண்டு வழக்குகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக புகார்தாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த இரண்டு வழக்குகளும் பஞ்சாபின் பர்னாலா மற்றும் பதிண்டா மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்பால் தனௌலா என்ற நபரை பர்னாலா போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், பதிண்டா காவல் துறையினர் சாய்னா என்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பிபிசியின் செய்தியாளர் நவ்கிரண் சிங்கின் கூற்றுப்படி, 53 வயதான இக்பால் தனௌலா, பர்னாலா மாவட்டத்தில் ஒரு சிறிய அச்சகத்தை நடத்தி வருகிறார். அங்கு அவர் திருமணங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான பத்திரிகைகளை அச்சிடுகிறார்.

இக்பால், சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு தன்னை நாத்திகர் என்றும் சொல்லிக் கொள்கிறார்.

சமூக ஊடகங்களில் ஸ்ரீராமர் மற்றும் இந்து சமூகத்திற்கு எதிராக ஒரு பெண் தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக சில இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரி ஹர்மன் வீர் சிங் கில் தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »