Press "Enter" to skip to content

பிறந்ததும் பிரிந்து போன இரட்டையர்களை 21 ஆண்டுக்குப் பின் ஒன்று சேர்த்த ‘டிக்டாக்’ – எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், BBC/ WOODY MORRIS

ஏமி மற்றும் ஆனோ ஆகிய இருவரும் ஒத்த தோற்றம் கொண்ட இரட்டை சகோதரிகள். ஆனால், பிறக்கும்போதே இருவரும் அவரது தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு, வெவ்வேறு குடும்பங்களிடம் விற்கப்பட்டுள்ளனர். பல வருடங்கள் கழித்து, ஒரு தொலைக்காட்சி நடத்திய திறமைக்கான நிகழ்ச்சி மற்றும் டிக்டாக் காணொளி மூலமாக தற்போது இருவரும் ஒன்றிணைந்துள்ளனர்.

ஜார்ஜியாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து 2005 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் கடத்தப்பட்டு விற்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளில் இவர்களும் அடங்குவர் என்பதை தற்போது தான் இவர்கள் தெரிந்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களது மனதில் ஓடிக் கொண்டிருக்கும் ஆயிரம் கேள்விகளுக்கு விடை தேடி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜெர்மனியில் உள்ள லீப்சிக் நகர ஹோட்டலில் முன்னும்பின்னுமாக நடந்துகொண்டே பேசினார் ஏமி.

பதற்றத்துடன் காணப்பட்ட அவர் “ நான் மிகவும் பயத்தில் இருக்கிறேன்” என்று கூறினார். “ இந்த வாரம் முழுவதும் நான் தூங்கவே இல்லை. இறுதியாக எங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த கேள்விகளுக்கு விடை கிடைக்க போகிறது.”

இவரின் சகோதரியான ஆனோ, சோபாவில் அமர்ந்து தனது கைபேசியில் டிக்டாக் காணொளிக்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். “இந்தப் பெண்தான் எங்களை விற்றிருக்க வேண்டும்” என்று தனது கண்களால் சைகை செய்தார்.

தானும் பதற்றத்தில் இருப்பதாக ஒப்புக்கொண்டார் ஆனோ. ஆனால் அவர் எப்படி நடந்து கொள்வார், அவரது கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா என்ற பதற்றம் அது.

நீண்ட பயணத்தின் முடிவு இது. காணாமல் போன புதிரின் பகுதியை ஜெர்மனியில் கண்டுபிடிக்க போகிறோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அவர்கள். இறுதியாக தங்கள் சொந்த தாயை(biological mother) சந்திக்கப் போகிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக என்ன நடந்தது என்பது குறித்த புரிதலை பெற முயற்சித்து வருகிறார்கள் இவர்கள்.

இறுதியில் அவர்கள் உண்மையை கண்டுபிடித்த போது, இப்படி விற்கப்பட்டவர்கள் தாங்கள் மட்டுமல்ல, பல ஆண்டுகளாகவே ஜார்ஜியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விஷயத்தில் என்ன நடந்துள்ளது என்பதை கண்டறிய இதுவரை பல விசாரணைகள் நடந்துள்ள போதிலும் கூட, இதற்கு யார் பொறுப்பென்று கண்டுபிடிக்கப்படவில்லை.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், BBC/ FREMANTLE / SIMCO LTD

ஒரே தோற்றம் கொண்ட சகோதரிகள்

ஏமியும் ஆனோவும் ஒருவரையொருவர் எப்படி கண்டுபிடித்தார்கள் என்ற கதை அவர்களின் 12 வயதிலிருந்து தொடங்குகிறது.

கருங்கடலுக்கு அருகில் உள்ள தனது வளர்ப்புத்தாயின் வீட்டில் இருந்தபடி, தனக்குப் பிடித்த ஜார்ஜியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஏமி.

திடீரென்று ஒரு ஜிவ் நடனமாடும் சிறுமி அந்த போட்டியின் மேடையில் தோன்றினார். அந்த சிறுமி ஏமியை போலவே இருந்தார். அது ஏதோ பார்க்க இவரை போல் இருக்கிறார் என்பதல்ல, அவரது முக ஜாடை உள்ளிட்ட அடையாளங்கள் அனைத்துமே ஏமியை போல் இருந்துள்ளது.

“பலரும் எனது அம்மாவை தொடர்பு கொண்டு, ஏன் ஏமி வேறு பெயரில் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாள் என்று கேட்டனர்”

இதுகுறித்து தனது குடும்பத்திடம் ஏமி தெரிவித்த போது, அவர்கள் அது குறித்து எதுவுமே சிந்திக்காமல், “ இங்கு எல்லோரையும் போல் இன்னொருவர் எங்கோ ஒரு இடத்தில் இருப்பார்” எனறு அவரது தாய் கூறியுள்ளார்.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், AMY KHVITIA

ஏழு ஆண்டுகள் கழித்து, 2021 மாதம் ஏமி, டிக்டாக்கில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார். அதில் அவர் நீல நிற முடியுடனும், புருவத்தில் அணிகலனோடும் காணப்பட்டார்.

320 கி.மீ தொலைவில் உள்ள திபிலிசியில் இருந்த மற்றொரு 19 வயது பெண்ணான ஆனோ சர்தானியாவுக்கு, இந்த காணொளி ஒரு நண்பர் மூலமாக காண கிடைத்துள்ளது. அதை பார்த்த ஆனோ “இவள் என்னைப்போலவே இருக்கிறாள்” என்று நினைத்தார்.

அதன்பிறகு இணையத்தில் பார்த்த அந்த பெண் எந்த இடத்தை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் அவர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், தன்னுடைய பல்கலைக்கழக வாட்ஸப் குழுவில் அந்த காணொளியை பகிர்ந்து யாராவது உதவி செய்கிறார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஏமிக்கு தெரிந்த நபர் ஒருவர் அந்த தகவலை பார்த்துவிட்டு முகநூல் வழியாக அவரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதன் பிறகு தான் ஏமிக்கு புரிந்துள்ளது, பல வருடங்களுக்கு முன்பு தான் தொலைக்காட்சியில் பார்த்த அந்த சிறுமி ஆனோ தான் என்று.

“நீண்ட நாட்களாக உன்னை தான் தேடி கொண்டிருக்கிறேன்” என்று ஆனோவுக்கு செய்தி செய்தார் ஏமி , “நானும்தான்” என்று பதிலளித்தார் ஆனோ.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், BBC/ WOODY MORRIS

கடந்த கால புதிர்களுக்கான விடைகள்

அடுத்தடுத்த நாட்களில் இருவரும் தங்களுக்குள் பல விஷயங்கள் ஒத்து போவதை கண்டுபிடித்தனர். ஆனால் அவை அனைத்திற்கும் சரியான விளக்கங்கள் பிடிபடவில்லை.

இருவருமே மேற்கு ஜார்ஜியாவில் உள்ள தற்போது செயலில் இல்லாத கட்ஸ்கி மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தவர்கள். ஆனால், அவர்களது பிறப்பு சான்றிதழ்களின் படி, அவர்களது பிறந்த தேதி ஒரு சில வாரங்கள் முன்னும் பின்னும் உள்ளது.

இந்த ஆவணங்களின்படி, இவர்கள் சகோதரிகளாகவோ அல்லது இரட்டையர்களாகவோ இருக்க முடியாது. ஆனால், அவர்களுக்குள் பல ஒற்றுமைகள் இருந்தது.

அவர்கள் இருவருக்கும் ஒரே பாடல் மற்றும் நடனமாடுவது பிடித்திருந்தது, அவர்களின் தலை முடியின் ஸ்டைல் கூட ஒரே மாதிரியானதாக இருந்தது.

இவர்கள் இருவருக்கும் ஒரே மரபணு நோயான டிஸ்ப்ளாசியா எனப்படும் எலும்புசார் நோய் இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

இருவரும் இணைந்து ஏதோ ஒரு மர்மத்தை தீர்ப்பது போல் இருந்தது. “ஒவ்வொரு முறையும் ஆனோவைப் பற்றி புதிய விஷயத்தை தெரிந்து கொள்ளும் போது, நிலைமை இன்னும் விசித்திரமாக மாற தொடங்கியதாக , ” கூறுகிறார் ஏமி.

அவர்கள் சந்திக்க முடிவு செய்து, ஒரு வாரம் கழித்து திபிலிசியில் உள்ள ருஸ்டாவேலி பாதாளத்தொடர்வண்டி (மெட்ரோத் தொடர்வண்டி) நிலையத்தில் முதல் முறையாக ஆனோவும், ஏமியும் சந்தித்துக் கொண்டனர்.

“அது ஏதோ கண்ணாடியை பார்ப்பது போல் இருந்தது, அப்படியே அதே முகம், அதே குரல். நான்தான் அவள், அவள்தான் நான்” என்று கூறுகிறார் ஏமி. அதற்கு பிறகு தாங்கள் இரட்டை சகோதரிகள் என அறிந்துகொண்டார் அவர்.

“எனக்கு கட்டி தழுவுதல் பிடிக்காது, ஆனால், ஏமியை அணைத்துக் கொண்டேன்” என்கிறார் ஆனோ.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், BBC/ WOODY MORRIS

ஒரே கதை

தங்களது குடும்பங்களிடம் பேசுவது என்று முடிவு செய்த அவர்கள், அதன் மூலம் உண்மைகளை முதன்முறையாக தெரிந்து கொண்டனர். 2002இல் வெவ்வேறு வார காலத்தில் இவர்கள் தனித்தனியாக தத்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதை அறிந்த மனமுடைந்து போன ஏமி, தனது ஒட்டுமொத்த வாழ்க்கையுமே பொய்யானது போல் உணரத் தொடங்கி விட்டார்.

முழுவதும் கருப்பு உடை அணிந்து உறுதியானவர் போல் தோன்றினாலும், பதற்றத்துடன் அவர் கையில் இருந்து அணிகலனை அசைத்து கொண்டிருந்தார். அவரது கண்களில் போடப்பட்டிருந்த மஸ்காரா கண்ணீரில் கரைந்து கன்னத்தில் படிந்திருந்தது.

“இது ஒரு பைத்தியக்காரத்தனமான கதை, ஆனால் உண்மை” என்றார் அவர்.

ஆனோ தனது குடும்பத்தின் மீது கோவத்துடனும், வருத்தத்துடனும் இருந்தார், “ஆனால் இந்த கடினமான உரையாடல்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி நடந்தால் இதை கடந்த செல்ல முடியும்” என்று கூறினார்.

மேற்படி விசாரணையில், இரட்டையர்களின் அதிகாரப்பூர்வ பிறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்த நேரத்தில் தனது நண்பர் ஒருவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் ஆதரவற்ற குழந்தை இருப்பதாக கூறியதாக தெரிவித்தார் ஏமியின் வளர்ப்பு தாய்.

மருத்துவர்களுக்கு பணம் கொடுத்து விட்டு அந்த குழந்தையை எடுத்து சென்று வளர்த்து கொள்ளலாம் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கதைதான் ஆனோவின் வளர்ப்பு தாய்க்கும் சொல்லப்பட்டுள்ளது.

தத்தெடுத்த இரு குடும்பங்களுக்குமே இவர்கள் இரட்டையர்கள் என்பது தெரியாது. அவர்களை தத்தெடுக்க அதிக பணம் கொடுக்க வேண்டியிருந்த போதிலும் கூட, இது சட்டவிரோதமானது என்று அவர்களுக்கு தெரியவில்லை என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த சமயத்தில் ஜார்ஜியாவில் கொந்தளிப்பு சூழல் நிலவி வந்தது. மேலும் இந்த சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளதால் இது சட்டப்பூர்வமானது என்று அவர்கள் நினைத்துள்ளார்கள்.

இரண்டு குடும்பங்களுமே எவ்வளவு பணம் கைமாறியது என்பதை தெரிவிக்கவில்லை.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், BBC/ WOODY MORRIS

தேடல்(Vedzeb)

இருவராலும் தங்களது சொந்த பெற்றோர்களே தங்களை லாபத்திற்காக விற்றுவிட்டார்களா என்று ஆச்சரியப்படாமல், சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.

அதை தெரிந்து கொள்ள தங்களை பெற்றெடுத்த தாயை கண்டுபிடிக்க விரும்பினார் ஏமி, ஆனால் ஆனோ அதில் உறுதியாக இல்லை.

“ உனக்கு துரோகம் செய்த ஒரு நபரை பார்க்க ஏன் விரும்புகிறாய்?” என கேட்டார் அவர்.

ஜார்ஜியாவில் பிறப்பின்போது கடத்தப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குழந்தைகளை அவர்களது குடும்பத்தோடு சேர்த்து வைக்கும் முகநூல் குழு ஒன்றை கண்டறிந்து அதில் தனது கதையை பகிர்ந்துக் கொண்டார் ஏமி.

அதன் பிறகு ஏமியை தொடர்பு கொண்ட இளம் ஜெர்மானிய பெண் ஒருவர், தனது தாய் 2002 ஆம் ஆண்டு கட்ஸ்கி மகப்பேறு மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், ஆனால் குழந்தைகள் இறந்துவிட்டதாக அவருக்கு சொல்லப்பட்டதாகவும், தற்போது அவருக்கு சந்தேகங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பின்னர் மரபணு சோதனையின் மூலம் முகநூலில் தொடர்பு கொண்ட பெண் தங்களது தங்கை தான் எனவும், அவர் தன்னுடைய சொந்த தாய் ஆசாவுடன் ஜெர்மனியில் வசித்து வருவதும் இவர்களுக்கு உறுதியானது.

ஆசாவை சந்திக்க மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார் ஏமி. ஆனால் ஆனோவுக்கு சந்தேகமாக இருந்தது.

“அவர்தான் உன்னை விற்பனை செய்தவர், அதனால் அவர் உண்மையை சொல்லப்போவதில்லை” என்று ஏமியை எச்சரித்தார் ஆனோ. ஆனாலும் ஏமியுடன் ஆதரவாக ஜெர்மனிக்கு சென்றார் அவர்.

இவர்கள் இருவரும் பயன்படுத்திய முகநூல் குழுவின் பெயர் வெட்ஜேப் (Vedzeb). இதற்கு ஜார்ஜிய மொழியில் “நான் தேடிக்கொண்டிருக்கிறேன்” என்று அர்த்தம்.

இதில் தங்களது குழந்தைகளை தொலைத்த பல தாய்மார்களின் எண்ணிலடங்கா பதிவுகள் குவிந்து கிடக்கிறது. பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை பணியாளர்கள் இந்த தாய்மார்களிடம் கூறியுள்ளனர். ஆனால், பின்பு இறப்பு பதிவில் குழந்தைகள் பதியப்படாதை அறிந்த பின்னரே இன்னமும் அவர்கள் எங்கோ உயிரோடிருக்கலாம் என்று இந்த பெற்றோர்கள் புரிந்துக் கொண்டுள்ளனர்.

மறுபுறம், ஏமி மற்றும் ஆனோ போன்ற சொந்த பெற்றோரை இழந்தவர்களின் பதிவுகள் அந்த முகநூல் குழு முழுவதும் நிறைந்திருக்கிறது.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், BBC/ WOODY MORRIS

பல ஆண்டுகளாக நடந்து வந்த குழந்தை கடத்தல்

இந்த குழுவில் 23,000த்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், இதில் டிஎன்ஏ தரவுகளுக்கான இணையதளங்களின் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு தானும் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று அறிந்து கொண்ட பத்திரிகையாளர் தமுனா மியூசரைட்ஸ் இந்த குழுவை தொடங்கியுள்ளார்.

தன்னுடைய காலம்சென்ற வளர்ப்பு அம்மாவின் வீட்டை சுத்தப்படுத்தி கொண்டிருந்த போது தனது பிறப்பு குறித்து தவறான விவரங்கள் கொண்ட பிறப்பு சான்றிதழ் ஒன்றை கண்டுபிடித்துள்ளார் இவர்.

அதன் பிறகே தனது சொந்த குடும்பத்தை கண்டுபிடிப்பதற்காக இந்த குழுவை அவர் தொடங்கினார். ஆனால் இறுதியில் இந்த குழு ஜார்ஜியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த குழந்தை கடத்தல் குழுவை அம்பலப்படுத்துவதில் முடிந்தது.

இவர் இதுவரை நூற்றுக்கணக்கான குடும்பங்களை மீண்டும் இணைத்துள்ளார். ஆனால், இன்னமும் தனது சொந்த குடும்பத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதில் 1950 களில் இருந்து 2005 வரை ஜார்ஜியாவில் செயல்பட்டு வந்த தத்தெடுத்தலுக்கான கருப்பு சந்தை ஒன்றை கண்டுபிடித்தார் தமுனா.

இந்த குற்றங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் சமூகத்தின் பல துறைகளையும் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் முதல் மூத்த அரசு அதிகாரிகள் வரை சம்மந்தப்பட்டுள்ளதாக நம்புகிறார் அவர்.

தவறான அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பான தத்தெடுத்தலுக்காக அதிகாரபூர்வ ஆவணங்களை போலியாக தயாரித்துள்ளனர்.

“ இந்த குற்றத்தின் அளவு கற்பனைக்கு அப்பாற்பட்டது. 10000 குழந்தைகளுக்கும் மேல் இதில் கடத்தப்பட்டுள்ளனர். மேலும் இது ஒருங்கிணைக்கப்பட்ட குற்றமாக நடைபெற்றுள்ளது என்கிறார்” அவர்.

இதுவரை தன்னை தொடர்பு கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் கடந்த காலம் மற்றும் தேசிய அளவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை ஆகியவற்றை ஒன்று சேர்த்து கணக்கிட்டு இந்த எண்ணிக்கையை கூறுவதாக விவரிக்கிறார் தமுனா.

சில ஆவணங்கள் தொலைந்து விட்டதாலும், மேலும் சில பொதுவெளியில் கிடைக்கப் பெறாததாலும், குறைந்த ஆவணங்களை கொண்டு துல்லியமான எண்ணிக்கையை கணக்கிடுவது வாய்ப்பில்லாத ஒன்று என்கிறார் அவர்.

குழந்தைகள் இறந்துவிட்டதாக கூறப்பட்ட பெற்றோர்கள் தங்களது இறந்து குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கேட்டபோது, ஏற்கனவே உடல்கள் மருத்துவமனை மைதானத்தில் புதைக்கப்பட்டுவிட்டதாக அவர்களிடம் கூறப்பட்டதாக தமுனாவிடம் அந்த பெற்றோர்கள் கூறியதாக தெரிவிக்கிறார் அவர்.

ஆனால், ஜார்ஜிய மருத்துவமனை கல்லறைகள் என்று ஒன்று இல்லவே இல்லை என்பதை அவர் தெரிந்துகொண்டுள்ளார்.

மேலும் சில வழக்குகளில், பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உறைந்து போன குழந்தைகளின் உடல்கள் பெற்றோர்களுக்கு காட்டப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையை பணத்திற்கு வாங்குவது அதிக செலவு மிக்கது என்று கூறும் தமுனா அது ஒரு வருட சம்பளத் தொகைக்கு சமம் என்று தெரிவிக்கிறார்.

சில குழந்தைகள் அமெரிக்கா, கனடா , சைப்ரஸ், ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற வெளிநாட்டு குடும்பங்களுக்கு விற்கப்பட்டுள்ளதையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டில், ஜார்ஜியா தனது தத்தெடுப்பு சட்டத்தை திருத்தியமைத்தது. மேலும் 2006 இல் மனித கடத்தலுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தியது, இதன் மூலம் சட்டவிரோத தத்தெடுப்புகளை மிகவும் கடினமாக்கியது.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், BBC/ WOODY MORRIS

அவர்கள் இறக்காமல் இருந்தால்?

இவர்களை போலவே தனது குழந்தைகள் குறித்த கேள்விகளுக்கான பதில்களை தேடிக்கொண்டிருக்கும் மற்றுமொரு நபர் இரினா ஒட்டராஷ்விலி.

1978 ஆம் ஆண்டில், ஜோர்ஜியாவின் காகசஸ் மலைகளுக்கு அடிவாரத்தில் இருக்கும் குவாரேலியில் உள்ள ஒரு மகப்பேறு மருத்துவமனையில் இவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

அங்கிருந்த மருத்துவர்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதாக இவரிடம் கூறியுள்ளனர். ஆனால் எந்த காரணமும் சொல்லாமலேயே அந்த குழந்தைகளை இவரிடம் ஓப்படைக்கவில்லை.

அவர்கள் பிறந்து மூன்று நாட்களுக்கு பிறகு திடீரென்று அவர்கள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் எந்த அர்த்தமும் இல்லையென இரினாவும் அவரது கணவரும் உணர்ந்துள்ளனர். ஆனால் அப்போது, குறிப்பாக சோவியத் காலகட்டத்தில் “அதிகாரிகளை யாரும் கேள்வி கேட்க முடியாது” என்று கூறுகிறார் அவர். எனவே அவர்கள் சொன்னதையெல்லாம் இவர்கள் நம்பினர்.

அந்த கால வழக்கப்படி, குழந்தைகளின் உடலை எடுத்து சென்று கல்லறை அல்லது வீட்டின் பின்புறம் புதைப்பதற்காக பெட்டிகளை எடுத்து வருமாறு இவர்களிடம் மருத்துவர்களால் சொல்லப்பட்டுள்ளது.

உடல்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதால், அந்த பெட்டியை திறக்கவே கூடாது என்று மருத்துவர்கள் கூறினர்.

அவர்கள் சொன்னபடியே இரினாவும் செய்தார். ஆனால் 44 ஆண்டுகள் கழித்து இரினாவின் மகள் நினோ தமுனாவின் முகநூல் குழுவை பார்த்த பிறகு அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

“எங்களது சகோதரர்கள் உண்மையில் இறக்காமல் இருந்தால்?” என்று அவர் யோசித்தார். எனவே நினோ மற்றும் அவரது சகோதரி நனா அந்த பெட்டியை தோண்டி எடுக்க முடிவு செய்தனர்.

“என்னுடைய இதயம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு மைல் ஓடும் அளவிற்கு துடித்தது” என்று கூறும் அவர் “ அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் எலும்புகள் எதுவும் இல்லை. வெறும் குச்சிகள் மட்டுமே இருந்தது. அதை பார்த்து சிரிப்பதா அல்லது அழுவதா என்று கூட தெரியவில்லை” என்று கூறினார்.

அதில் இருந்தவை ஒரு மரக்கிளை என்றும் அதில் மனித எச்சங்கள் இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை என்று உள்ளூர் காவலர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொலைந்து போன தங்களது சகோதரர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்பதை தற்போது அவர் நம்புகிறார்.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், BBC/ WOODY MORRIS

கஷ்டங்களில் இருந்து விடுதலை

ஏமியும் ஆனோவும் லீப்சிக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் , தங்களது சொந்த தாயை சந்திப்பதற்காக தயாராகி கொண்டிருக்கின்றனர்.

ஆனால், தான் அவரை பார்க்க வரவில்லை என்று இறுதி நொடியில் கூறிவிட்டார் ஆனோ. ஆனால் அது அந்த நேரத்து தயக்கம் மட்டுமே. அதன் பின்பு ஆழமாக மூச்சை இழுத்து விட்டுவிட்டு , அதிலிருந்து கடந்து போக முடிவு செய்தார் அவர்.

அவர்களின் சொந்த தாயான ஆசா மற்றொரு அறையில் பதற்றத்துடன் இவர்களுக்காக காத்திருந்தார்.

ஏமி தயக்கத்துடன் கதவை திறந்து உள்ளே போக அவரை கிட்டத்தட்ட அறைக்குள் தள்ளிக்கொண்டே பின் தொடர்ந்தார் ஆனோ.

அவர்களை பார்த்த ஆசா இறுக்கமாக இருவரையும் அணைத்து கொண்டார். சிறிது நேரம் அங்கு அமைதி நிலவியது. மூவரும் கலவையான உணர்வுகளால் ஆட்கொள்ளப்பட்டிருந்தனர்.

ஏமியின் முகத்தில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஆனால் ஆனோவோ அசைவற்று இருந்தார். சிறிது எரிச்சலாகவும் காணப்பட்டார்.

மூவரும் தனியாக அமர்ந்து பேசத் தொடங்கினர்.

பிறகு, பிரசவத்திற்கு பிறகு உடல்நிலை மோசமாகி தான் கோமாவுக்கு சென்றுவிட்டதாக தங்கள் தாய் கூறியதாக இருவரும் தெரிவித்தனர்.

மேலும் அவர் முழிப்பு வந்து எழுந்தபோது, அங்கிருந்த மருத்துவமனை பணியாளர்கள் பிறக்கும் போதே குழந்தைகள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

டிக்டாக் மூலம் 21 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்த இரட்டை சகோதரிகள்

பட மூலாதாரம், BBC/ WOODY MORRIS

ஏமி மற்றும் ஆனோவை சந்தித்தது தனது வாழ்விற்கு புதிய அர்த்தத்தை தந்துள்ளதாக கூறியுள்ளார் அவர்களது தாய். அவர்கள் அவ்வளவு நெருக்கமாக இல்லை என்றாலும் கூட, தொடர்பில் இருக்கின்றனர்.

2022ஆம் ஆண்டு குழந்தைகள் கடத்தல் குறித்த விசாரணையை அறிவித்தது ஜார்ஜிய அரசாங்கம்.

ஆனால், 40க்கும் மேற்பட்ட மக்களோடு இது குறித்து பேசியதாகவும், இந்த வழக்குகள் மிகவும் பழையதானதால் அதன் தகவல்கள் தொலைந்து விட்டதாகவும் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.

அதேசமயம் தகவல்களை பகிர்ந்து கொண்டதாக பத்திரிகையாளர் தமுனா மியூசரைட்ஸ் கூறும் நிலையில், அரசாங்கம் அதன் அறிக்கையை எப்போது வெளியிடும் என்று தெரிவிக்கவில்லை.

என்ன நடந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள நான்கு முறை முயற்சிக்கப்பட்டுள்ளது.

அவற்றில், பல கைதுகளுக்கு வழிவகுத்த 2003 ஆம் ஆண்டு சர்வதேச குழந்தை கடத்தல் பற்றிய விசாரணையும் ஒன்று. ஆனால் இது பற்றி மிகக் குறைந்த தகவல்களே பொதுவெளியில் கிடைக்கப்பெற்றுள்ளது.

மேலும் 2015இல் நடந்த மற்றுமொரு விசாரணையில், ருஸ்தாவி மகப்பேறு மருத்துவமனையின் இயக்குநர் அலெக்ஸாண்ட்ரே பரவ்கோவி இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினார் என்றும் ஜார்ஜிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதுபோன்ற தனிப்பட்ட வழக்குகள் குறித்த கூடுதல் தகவல்களுக்காக பிபிசி, ஜார்ஜிய உள்துறை அலுவலகத்தைத் தொடர்புகொண்டது. ஆனால் தரவுப் பாதுகாப்பின் காரணமாக குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படாது என்று பதில் கிடைத்தது.

தமுனா தற்போது மனித உரிமை வழக்கறிஞர் லியா முகாஷவ்ரியாவுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகளை ஜார்ஜிய நீதிமன்றங்களுக்கு கொண்டு வந்துள்ளார்.

அவர்களுக்கு தற்போது ஜார்ஜிய அரசாங்கம் அனுமதிக்காத தங்களின் பிறப்பு சான்றிதழ்களை கையாள உரிமை வேண்டும்.

இதன் மூலம் நீண்ட கால கஷ்டங்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

“நான் எப்போதுமே ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் இல்லாமல் இருப்பது போலவே உணர்ந்தேன்” என்று கூறும் ஆனோ “எப்போதும் எங்கேயும் கருப்பு உடையில் என்னை பின்தொடர்ந்து வந்து, எனது நாளை பற்றி விசாரிக்கும் ஒரு பெண் குறித்து கனவு காண்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்” என்கிறார்.

ஆனால், ஏமியை கண்டுபிடித்த பிறகு அந்த உணர்வு காணாமல் போய்விட்டது.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »