Press "Enter" to skip to content

மத்திய கிழக்கில் மீண்டும் பெரும் போரா? ஆதிக்கம் செலுத்தப்போகும் நாடு எது?

பட மூலாதாரம், Getty Images

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பதற்றம் அதிகரித்து வருகிறது. ஒருபுறம், காஸா போர், மறுபுறம் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் என ஏற்கெனவே சிக்கல் ஏற்பட்டிருக்கும்போது, ஜோர்டான் எல்லை அருகே சிரியாவில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 3 அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர்.

இப்படி பதற்றம் அதிகரித்து வருவது மத்திய கிழக்கு என்று அழைக்கப்படும் மேற்கு ஆசியாவில் பெரிய போருக்கு வழிவகுக்குமோ என்ற விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதில் இஸ்ரேல்-ஹமாஸ் போரானது மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்திற்கான தொடக்க அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

இதைத் தவிர இந்த பிராந்தியத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வெவ்வேறு மோதல்கள் காரணமாக இப்பிராந்தியமே ஆட்டம் கண்டுள்ளது.

அதில், இஸ்ரேல் – லெபனானின் ஹெஸ்புலா குழு மோதல்,மேற்குலகத்திற்கு எதிரான யேமனின் ஹூத்தி கிளர்ச்சிக் குழுவின் தாக்குதல், இராக்,சிரியா, பாகிஸ்தானுக்கு எதிரான இரானின் தாக்குதல், மற்றும் இதர இரான் ஆதரவு குழுக்களால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களது நட்பு நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல் என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பு

பட மூலாதாரம், PLANET LABS/AP

இப்படியொரு சூழலில் அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல், “இரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்களால் நடத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் பதிலடி கொடுப்போம்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த வன்முறை போக்கால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர் எழுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் இப்பிராந்தியத்தில் பாரம்பரியமாக அதிகாரம் செலுத்தி வரும் கூட்டணிகளும் மாறலாம் என்ற நிலை எழுந்துள்ளது.

தற்போது மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நடந்து வரும் பிரச்னைகளை இரண்டாக பிரித்து சொல்ல வேண்டுமெனில், ஒன்று இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையில் நிலவி வரும் மோதல்போக்கு.

மற்றொன்று இப்பிராந்தியத்தில் தன்னை முன்னணி சக்தியாக கருதிக்கொள்ளும் சௌதி அரேபியாவின் ஆதரவு பெற்ற சன்னி மற்றும் இரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவினருக்கு இடையே நிலவும் மோதல் ஆகும்.

அதே சமயம் இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள், சமீப காலமாக மதநம்பிக்கை சார்ந்த மோதல்கள் குறைந்துள்ளதாகவும், தற்காலிக அரசியல் மற்றும் இராணுவ கூட்டணி சார்ந்த காரணங்களே மோதல்போக்குக்கு அதிக காரணமாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம், Getty Images

இரான் மற்றும் நாடற்ற ஆயுத குழுக்கள்

ஜனவரி மாதம் 15 முதல் 17 ஆகிய மூன்றே நாட்களில் சிரியா, பாகிஸ்தான் மற்றும் இராக் ஆகிய மூன்று நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்தியது சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் இராக்கில் உள்ள இஸ்ரேலிய உளவு அமைப்பின் தளம் மற்றும் பாகிஸ்தான், சிரியாவில் உள்ள எதிர் இஸ்லாமிய குழுக்கள் ஆகியவற்றின் தளங்கள் என குறிப்பிட்ட தளங்களை குறி வைத்து நடத்தப்பட்டது என்றாலும், தற்போதைய கொந்தளிப்பான சூழலில் தங்களின் பலத்தை காட்டுவதே இரானின் விருப்பம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து தாங்கள் புதிய மோதல்கள் எதிலும் ஈடுபட விரும்பவில்லை என்று தெஹ்ரான் சொல்லிக்கொண்டாலும், அதன் ஆதரவு பெற்றதாக அறியப்படும் குழுவான “எதிர்ப்பின் அச்சு” (axis of resistance) சமீப வாரங்களாகவே மிக சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவானது லெபனானின் ஹெஸ்புலா, இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஷியா போராளிகள், ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இதர போராளி குழுக்கள் மற்றும் யேமனின் ஹூதி குழுக்கள் என அனைவராலும் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டமைப்பாகும்.

இந்த குழுவின் சித்தாந்தம் “குறிப்பிடத்தகுந்த அமெரிக்க எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு” என்று விவரிக்கிறது பிபிசியின் பெர்சிய சேவை. இவர்கள் அனைவருமே அக்டோபர் மாதத்தில் காஸாவில் போர் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து பிபிசி முண்டோவிடம் விவரித்துள்ள எல்கானோ ராயல் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த மத்திய கிழக்கு நிபுணர் ஹைசம் அமிரா-ஃபெர்னாண்டஸ், “இந்த ‘எதிர்ப்பின் அச்சு’ குழுவுடனான இரானின் கூட்டணி இந்த பிராந்தியத்தில் நிலையாக நீடித்திருக்கும் சில கூட்டணிகளில் ஒன்று என்று” குறிப்பிடுகிறார்.

“1979இல் நடந்த இரான் புரட்சியின் விளைவாக உருவான இந்த கூட்டணி, அதன் அரசியல் கொள்கைகளையும், வடிவத்தையும் பிற நாடுகளுக்கும் பரப்புவதற்காக இயங்கி வருகிறது” என்கிறார் லினா கதீப். இவர் லண்டனை தளமாக கொண்டு இயங்கி வரும் எஸ்ஓஏஎஸ் மிடில் ஈஸ்ட் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனராக உள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம், REUTERS

நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த குழுக்கள் தத்தமது நாடுகளில் நிலவி வந்த அரசியல் சூழலினால் உருவானவை. அதை இரான் தனது பிராந்திய செல்வாக்கை விரிவுபடுத்த பயன்படுத்தி கொண்டது.

பிபிசி பெர்சிய சேவையின் செய்தியாளர் கெய்வான் ஹொசைனி, இந்த குழுக்கள் இரானிடமிருந்து “தளவாடம், பொருளாதாரம் மற்றும் சித்தாந்த ரீதியான உதவிகளை” பெற்று வருவதாக, 2020ஆம் ஆண்டு பிபிசி முண்டோவில் வெளியான ஒரு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

அதே போல் இந்த பிரச்னையில் மதரீதியான காரணங்கள் இருப்பதையும் ஒதுக்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார் தெற்காசியாவில் இருக்கும் வில்சன் மையத்தின் இயக்குநரான மைக்கேல் ககுல்மேன். இதற்கு உதாரணமாக ஷியா குழுக்களுடன் இரானின் நெருக்கத்தையும், அதற்கு எதிரில் சௌதியின் சன்னி ஆதரவையும் சுட்டுகிறார் அவர்.

ஆனால், அதே சமயம் தற்போதைய போட்டிகளுக்கு மத வேறுபாடுகளை விட அதிகாரத்திற்கான சண்டையே காரணமாக இருப்பதையும் குறிப்பிடுகிறார் அவர்.

ஹமாஸ் இயக்கம் இஸ்லாத்தின் சன்னி பிரிவை சேர்ந்ததாக இருந்தாலும் அந்த இயக்கத்துக்கு இரானிய ராணும் ஆதரவளிப்பதை வைத்து இந்த கூற்றை புரிந்து கொள்ளலாம், அல்லது குறிப்பிட்ட மோதலில் ஒரே கூட்டணியை சேர்ந்த குழுக்கள் அந்த பிரச்னையை பொறுத்து இரண்டு பக்கங்களுக்கு ஆதரவளித்ததை எடுத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக , சிரிய போரின்போது ஹமாஸ் மற்றும் ஹெஸ்புலா ஆகிய குழுக்கள் எதிர் எதிர் நிலையை எடுத்தன. ஆனால் இஸ்ரேலுக்கு முடிவு கட்டுவதில் இரண்டும் இணைந்து விட்டன.

சிரியாவின் பஷார் அல் அசாத் ஆட்சியைத் தவிர மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மற்ற நாடுகளுடன் இரான் வலுவான கூட்டணியில் இல்லாததற்கு இரண்டு முக்கிய காரணிகளை முன் வைக்கின்றனர் நிபுணர்கள்.

இதுகுறித்து நிபுணர் அமிரா- பெர்னாண்டஸ் கூறுகையில், முதல் காரணம் “இஸ்லாமிய புரட்சி வடிவத்தை மற்ற நாடுகளுக்கும் பரப்ப நினைப்பது எண்ணெய் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகள் மற்றும் இந்த பிராந்தியத்தின் இதர நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது” என்கிறார்.

இரண்டாவது, வரலாற்று ரீதியாகவே தனது நாடு, தங்களது வளங்கள், மக்கள் தொகை மற்றும் பெர்சிய பேரரசின் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில் இரான் தன்னை இந்த பிராந்தியத்தின் மேலாதிக்க சக்தியாக கருதி வருகிறது என்கிறார் அவர்.

“இந்த காரணங்களே இதர நாடுகளின், குறிப்பாக சௌதி அரேபியாவின் நோக்கங்களோடு முரண்படுவதாக” அவர் தெரிவிக்கின்றார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம், Getty Images

சௌதி அரேபியா தலைமையில் அரபு நாடுகளின் கூட்டமைப்பு

அரபு உலகின் தலைமையாக தன்னை நிறுவ சமீப ஆண்டுகளில் சௌதி அரேபியா சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் இந்த பிராந்தியத்தின் வலிமையான மக்கள்தொகை, அரசியல், கலாச்சாரத்தை கொண்டிருந்த எகிப்து தான் சில தசாப்தங்களுக்கு முன்பு அரபு நாடுகளின் மையமாக பார்க்கப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் வளைகுடா நாடுகள் மற்றும் அரேபிய தீபகற்பங்களை நோக்கி அதிகாரம் நகர்ந்து விட்டது. இந்த நாடுகளில் இருந்த அதிகளவிலான ஆற்றல் வளங்கள் செல்வமாக மாற்றப்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் செல்வாக்காக மாறியது.

சிறிய நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் அல்லது கத்தார் போன்ற நாடுகள் முதலில் தனித்து நின்றன. ஆனால் பின்னர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பதவிக்கு வந்தவுடன், “சௌதி அரேபியா உள்நாட்டளவிலும், உலகளவிலும் பெரிய அளவிலான மாற்றத்தை சந்தித்தது.”

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம், REUTERS

நிபுணர் அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இதன் வளர்ச்சிக்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று அதன் செழிப்பான ஹைட்ரோகார்பன் பொருளாதாரம். மற்றொன்றுஅமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருந்த சமயத்தில் இரானுக்கு எதிரான நடவடிக்கையாக சௌதிக்கு வழங்கிய ஆதரவு.”

பிராந்தியத்தில் 22 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட அரபு லீகின் தலைமை சௌதிதான் என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

“பொதுவாகவே ஒவ்வொரு நாடுகளுக்கும் தனிப்பட்ட லட்சியங்கள் இருந்தாலும் கூட, எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற நாடுகள் தங்களை நிலைநிறுத்தி கொண்டும், சௌதி அரேபியா உருவாக்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றியும் வருகின்றன” என்கிறார் கதீப்.

சில நிபுணர்கள் விவரிப்பது போல் “புதிய மத்திய கிழக்கு பனிப்போர்” என்ற மோதல்போக்கை கடந்த 40 ஆண்டுகளாகவே சௌதி அரேபியாவும் இரானும் வெளிப்படையாகவே கடைபிடித்து வந்தன. ஆனால், இது தற்போது இந்த பிராந்தியத்தை சேர்ந்த பலரும் ஈடுபட்டுள்ள மோதலாக மாறி மோசமடைந்து விட்டது.

2015ஆம் ஆண்டிலிருந்தே ஏமனை சேர்ந்த ஹூத்தி கிளர்ச்சிக் குழுவுக்கு எதிரான உள்நாட்டுப்போரில் அரசு படைகளுக்கு ஆதரவளித்து வருகிறது சௌதி அரேபியா.

அதே சமயம் சௌதி மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் இந்த குழுவிற்கு இரான் ஆயுதம் மற்றும் ஆதரவு வழங்குவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது இரான்.

ஷியா கிளர்ச்சியாளர்கள் அதிக அரசியல் மற்றும் ராணுவ பலம் கொண்டுள்ள லெபனான் மற்றும் இராக்கிலும் இரான் தலையிடுவதாக சௌதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. இதில் சில குழுக்கள் சௌதி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 2023 இல், சீனாவின் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலமாக இராஜதந்திர உறவுகளை மீண்டும் தொடங்குதல், பாதுகாப்பை புதுப்பித்தல், வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை புதுப்பித்தல் என சௌதி-இரானிய உறவு ஒரு புதிய சகாப்தத்திற்குள் நுழைந்தது.

பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்கள் எச்சரித்தபடியே, மத்திய கிழக்கில் உள்ள அதிகார உறவுகளில் நிலவும் நிலையில்லா தன்மை மற்றும் சிக்கலுக்கு இது மேலும் ஒரு எடுத்துக்காட்டு.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம், EPA

மத்தியஸ்தம் செய்வதன் மூலம் அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளும் கத்தார்

கத்தாரை சௌதி அரேபியாவின் தலைமையிலான குழுவின் பக்கம் உள்ள நாடாக கருதுவதை கதீப் மற்றும் அமிரா-பெர்னாண்டஸ் ஆகிய இருவருமே ஒப்புக்கொள்கிறார்கள். அதே சமயம் அதை இந்த பிராந்தியத்தில் தனித்துவமாக காட்டும் அதன் மத்தியஸ்தர் பாத்திரத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

தற்போதைய சூழலில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் கத்தார் மத்தியஸ்தர்களே முதன்மையானவர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

பணக்கார வளைகுடா நாடான கத்தார் பல ஆண்டுகளாகவே இஸ்ரேல் அல்லது இரான் போன்ற நாடுகளுடன் நல்லுறவை பேணி வருகிறது. மேலும், அதன் அரசியல் குழுக்களுக்கான ஆதரவு , அதன் அண்டை நாடுகளை விட முற்றிலும் மாறானதாக இருக்கிறது.

குறிப்பாக பெரும்பாலும் சௌதியின் பழைய எதிராளிகளான ஹமாஸ் அல்லது சன்னி ஆதரவு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு(muslim brotherhood) உள்ளிட்ட இஸ்லாமிய குழுக்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது கத்தார்.

கத்தாரின் இது போன்ற அணுகுமுறைகள் அதன் அண்டை நாடுகளால் வரவேற்கப்படவில்லை.

இதுகுறித்து நினைவுகூர்ந்த கதீப், “2017இல் தங்களது அரசியல் நோக்கங்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுவதாக கூறி சௌதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, ஏமன், லிபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தால் கத்தார் தடை செய்யப்பட்டதாக” தெரிவிக்கிறார்.

கத்தார் ஒரு மிகப்பெரிய பணக்கார நாடாக இருந்தாலும் கூட, அது சிறிய நாடாகும். எனவே அந்நாட்டை அபாய நிலைக்கு தள்ளும் காரணியாக அதுவே அமைந்துள்ளது. ‘கத்தார் : சிறிய நாடு, பெரிய அரசியல்’ என்ற தனது புத்தகத்தில் அரசியல் ஆய்வாளர் மெஹ்ரான் கம்ரவா கூறியுள்ளது போல், தனது “பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர அந்தஸ்தை உயர்த்தி கொள்ள” அந்நாடு பல மற்றும் மாறுபட்ட கூட்டணிகளை அடைய வேண்டும்.

2021இல் கத்தார் மீதான தடைகள் நீக்கப்பட்டன. அதன் பிறகு அண்டை நாடுகள், குறிப்பாக சௌதி அரேபியாவுடன் அதன் உறவுநிலை நட்பு அடிப்படையில் நீடித்து வருகிறது.

கண்டிப்பாக கத்தார் “இன்னமும் தன்னை மேலும் சிறந்த மத்தியஸ்தம் மற்றும் சமரசம் செய்யும் நாடாக” நிலைநிறுத்த விரும்புவதாக அழுத்தி கூறுகிறார் கதீப்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் எழும் சூழல்

பட மூலாதாரம், Getty Images

மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற இஸ்ரேலின் நிலைப்பாடு என்ன?

இஸ்ரேலின் பிரச்னையை இந்த பிராந்தியத்தின் கூட்டணியில் “அசாதரணமான” ஒன்றாக வரையறுக்கிறார் அமிரா-பெர்னாண்டஸ். மேலும் கதீப்போ, இஸ்ரேல் எந்த நாட்டின் கூட்டணியையும் சேராதது போல் நடந்து கொள்வதாக கூறுகிறார்.

இரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற போராளி குழுக்கள் மீது இஸ்ரேல், அறிவிக்கப்படாத நீண்ட போரை கடைபிடித்து வருகிறது. அங்கெல்லாம் மோதல் வெளிப்படையான அல்லது முழுமையான நிலையை எட்டாமல் சிறிய அளவிலான புகைச்சல் நீடித்து கொண்டே இருக்கிறது.

மேலும் இஸ்ரேலுக்கு அரபு அண்டை நாடுகளுடனும் நல்லுறவு இல்லை.

ஒரு நாடாக மிகக் குறைந்த அங்கீகாரமே பெற்றுள்ள மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல், துருக்கி மற்றும் இரான் மட்டுமே அரபு அல்லாத நாடுகளாகும்.

அரபு நாடுகளில் 1979லிருந்து எகிப்தும், 1994லிருந்து ஜோர்டானும், 2020லிருந்து ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடுகளும் இஸ்ரேலை நாடாக அங்கீகரித்து வருகின்றனர்.

அமிரா-பெர்னாண்டஸ் கூற்றுப்படி, “ இஸ்ரேலின் அரபு-முஸ்லீம் அண்டை நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு, பாலத்தீனத்துடனான மோதல் போக்கால் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக தெரிவதே” இதற்கு முக்கிய காரணமாகும்.

கடந்த அக்டோபர் 7 இல் போர் ஆரம்பிப்பதற்கு சிறிது காலம் முன்பு கூட, சௌதி அரேபியாவுடனான உறவை இயல்பாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது இஸ்ரேல். அது வெற்றியடைந்திருந்தால் யூத அரசிற்கு பெரும் முன்னேற்றமாக இருந்திருக்கும்.

ஆனால், தாக்குதல் குறித்த தகவல் வந்த உடனேயே இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையை நிறுத்தி வைக்குமாறு அமெரிக்காவிடம் சொல்லி விட்டனர் சௌதி அதிகாரிகள்.

பிபிசி முண்டோவிடம் பேசிய நிபுணர்களின் கூற்றுப்படி, பாலத்தீனத்துடனான மோதல் போக்கை கைவிடும் வரை, இஸ்ரேலுடனான கூட்டணி நாடுகள் மற்றும் உறவுகளில் நிலவும் அசாதாரணத்தன்மை முடிவுக்கு வர வாய்ப்பில்லை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »