Press "Enter" to skip to content

மும்பையில் இந்துக்களும், முஸ்லிம்களும் வழிபடும் ‘ஹாஜி மேலாங் தர்கா’ யாருடையது? இப்போது சர்ச்சை ஏன்?

எல்லா மத நம்பிக்கைகளையும் கொண்ட இந்தியர்களும் வழிபடும் சூஃபி வழிபாட்டுத் தலத்தை, இந்துக்களுக்கு மட்டும் “விடுவிக்க” விரும்புவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறியது, சமீபத்தில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது. பிபிசியின் செரிலான் மோல்லன் இந்த சர்ச்சை குறித்து புரிந்து கொள்வதற்காக அந்த இடத்திற்கு சென்றுள்ளார்.

மலையில் அமைந்துள்ள அந்த வழிபாட்டுத் தலத்திற்கு செல்வதற்கு பெரும் வலிமை தேவைப்படுகிறது. பாறைகளை வெட்டி அமைக்கப்பட்டுள்ள 1,500 படிக்கட்டுகளை கடந்து அந்த இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நம்பிக்கை, பழங்கதை மரபு, விவாதத்திற்குரிய வரலாறு ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் துறவி ஒருவரின் சமாதி அமைந்திருக்கிறது.

இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் மும்பை புறநகரில் மலையில் அமைந்துள்ள ஹாஜி மேலாங் தர்காவில், 700 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த அரபு மத போதகர் ஒருவரின் சமாதி அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அங்கு மதம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தாலும் இந்தியாவில் உள்ள மற்ற சூஃபி வழிபாட்டுத் தலங்களைப் போலவே, இந்த தர்காவும் சமூக நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கிறது.

நான் அங்கு சென்றபோது இந்துக்களும் முஸ்லிம்களும் மலர்கள் மற்றும் சூஃபி கலாசாரத்தில் மரியாதையின் அடையாளமாக கருதப்படும் ‘சடார்’ எனப்படும் துணி ஆகியவற்றை அந்த துறவியின் சமாதியில் வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். இங்கு “நல்ல மனதுடன்” எந்த விருப்பத்தைக் கேட்டாலும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

இந்த நல்லிணக்கம் தர்காவின் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களிடமும் பிரதிபதிலிக்கிறது. அந்நிர்வாக குழுவில் உள்ள இரண்டு அறங்காவலர்கள் முஸ்லிம்கள் ஆவர். பாரம்பரிய பாதுகாவலர்களாக இந்து பிராமண குடும்பத்தினர் உள்ளனர்.

இந்து கோவில் இருந்ததாக கூறும் ஷிண்டே

சூஃபி வழிபாட்டுத் தலம்

மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற அரசியல் பேரணி ஒன்றில், பல தசாப்த பழமையான கருத்தை மீண்டும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். பாரம்பரியமாக தர்காவாக உள்ள அந்த வழிபாட்டுத் தலம் இந்துக்களின் கோவிலாக இருந்ததாக கூறினார் ஷிண்டே. மேலும், அதனை இந்துக்களுக்கு மட்டுமேயான வழிபாட்டுத் தலமாக “விடுவிப்பது” தன் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக ஏக்நாத் ஷிண்டேவிடம் கருத்து கேட்க முயன்றபோது அவர் பதிலளிக்கவில்லை.

இந்தியாவில் உள்ள பிரபலமான மசூதிகள் மற்றும் இஸ்லாமிய நினைவுச் சின்னங்கள் பலவும் நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்து கோவில்களை அழித்து கட்டப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்து வரும் காலகட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

1980களில் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் வழிகாட்டி ஆனந்த் டிகே, ஹாஜி மேலாங் தர்காவை இந்துக்களுக்கு “மீட்டெடுக்கும்” இயக்கத்திற்கு தலைமை தாங்கினார். 1996-ம் ஆண்டில் சிவசேனா கட்சியினர் சுமார் 20,000 பேருடன் தர்காவுக்குள் சென்று பூஜை (இந்து மத வழிபாடு) நடத்தியதாக செய்திகள் உள்ளன.

அப்போதிலிருந்து, அந்த தர்காவை மலைக்கோட்டை (Malanggad) என குறிப்பிடும் இந்து மத தீவிர கொள்கையாளர்கள், பௌர்ணமி தினத்தன்று அங்கு பூஜைகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால், அவ்வப்போது முஸ்லிம் பக்தர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

அரசியல் ஆதாயம்

சூஃபி வழிபாட்டுத் தலம்

ஆனால், ஷிண்டேவின் நிலைப்பாடு நம்பிக்கையைவிட பொதுமக்கள் அதனை எப்படி உணர்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆனந்த் டிகேவின் இயக்கம் மகாராஷ்டிராவில் இந்து வாக்காளர்களிடையே அவரது பிம்பத்தை உயர்த்தியது.

“தற்போது ஷிண்டே மகாராஷ்டிராவின் ‘இந்து மீட்பராக’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறார்,” என முன்னாள் பத்திரிகையாளர் பிரசாந்த் தீக்‌ஷித் தெரிவித்தார்.

“மக்களவைத் தேர்தலை தவிர்த்து, இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தின் தனித்துவமான அரசியல் நில அமைவை வைத்துப் பார்க்கும்போது இந்து பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெறுவது ஷிண்டேவுக்கு முக்கியமானது” என, பிரசாத் தீக்‌ஷித் கூறுகிறார்.

மகாராஷ்டிராவில் எப்போதும் தேர்தலில் நான்கு முனை போட்டியே நிலவும். இந்து தேசியவாத கட்சிகளான சிவசேனா, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் தங்களுக்கென குறிப்பிடத்தகுந்த வாக்கு சதவீதத்தைக் கொண்டுள்ளன.

ஆனால், ஏக்நாத் ஷிண்டேவுக்கு கூடுதல் சிக்கலும் இருக்கிறது. 2022-ம் ஆண்டில் ஷிண்டேவும் அவருடைய ஆதரவாளர்களும் முந்தைய சிவசேனா கட்சியை கைவிட்டனர்.

அக்கட்சியிலிருந்து தன் ஆதரவாளர்களுடன் வெளியே வந்த ஷிண்டே, அப்போதைய சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, பாஜகவுடன் புதிய கூட்டணியை உருவாக்கி புதிய ஆட்சியை அமைத்தார்.

”ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினாலும் ஏற்கனவே தம்மிடம் உள்ள வாக்காளர்களின் விசுவாசத்தை மாற்றுவது கடினம்,” என தீக்‌ஷித் தெரிவித்தார். “தர்கா விவகாரத்தை எழுப்புவதன் மூலம், முந்தைய சிவசேனா வாக்காளர்களை கவர முடியும் என்றும் அதன்மூலம் இந்து வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க முடியும் எனவும் ஷிண்டே நம்புகிறார்” என தீக்‌ஷித் தெரிவித்தார்.

பக்தர்கள் கூறுவது என்ன?

சூஃபி வழிபாட்டுத் தலம்

பிபிசி பேசிய இந்து பக்தர்கள் ஷிண்டேவின் கருத்து குறித்து கலவையான எதிர்வினைகளை கொண்டுள்ளனர்.

உதாரணமாக, குஷல் மிஸ்ல் என்பவர், இந்த தர்கா உண்மையில் இந்து துறவியுடையதாக இருந்து பின் இந்தியாவில் படையெடுப்பின் போது முஸ்லிம்களால் எடுத்துக்கொள்ளப்பட்டதாக தான் மனதில் நினைப்பதையே ஷிண்டேவும் கூறுவதாக தெரிவித்தார்.

அதே கருத்தை தெரிவித்தாலும், தற்போதைய விவாதம் குறித்து அசௌகரியமாக உணர்வதாக கூறுகிறார் ராஜேந்திர கெய்க்வாட். “இந்தியாவில் இப்போது என்ன நடக்கிறதோ அது மிகவும் மோசமாக இருக்கிறது,” எனக்கூறும் அவர், ”ஒன்றே கடவுள்” என்ற தன் நம்பிக்கையை அடிக்கோடிட்டு காட்டுகிறார்.

ஒவ்வொரு மாதமும் தர்காவுக்கு செல்லும் அபிஜித் நாகரே, இந்த வழிபாட்டுத் தலம் எந்த மதத்திற்கு சொந்தமானது என்பது முக்கியமல்ல என்றும் தான் அமைதியை உணர்வதால் இங்கு வருவதற்கு பிடிக்கும் என்றும் கூறுகிறார்.

தர்காவின் அறங்காவலர்களுள் ஒருவரான நசீர் கான் பிபிசியிடம் கூறுகையில், இந்த சர்ச்சையால் தர்காவுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிவித்தார். “இங்கு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் வருகின்றனர். அதனால், தவறானவர்களிடம் சிக்கி தொந்தரவுக்கு ஆளாக வேண்டாம் என அவர்கள் நினைக்கின்றனர்” என அவர் தெரிவித்தார்.

இந்த சர்ச்சையால் உள்ளூர் தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் மக்கள் என்ன சொல்கின்றனர்?

சூஃபி வழிபாட்டுத் தலம்

3,000 அடி உயரத்தில் மலையில் இந்த வழிபாட்டுத் தலம் மட்டும் இல்லை. பல ஆண்டுகளாக கற்களாலும் பாறைகளாலும் அமைக்கப்பட்ட வீடுகள், கடைகள், உணவகங்களும் உள்ளன.

இந்துக்கள், முஸ்லிம்கள் என சுமார் 4,000 பேர் இங்கு வாழ்வதாக நசீர் கான் கூறுகிறார். இங்குள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு சுற்றுலாவையே நம்பியுள்ளனர்.

கோடைக் காலங்களில் குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளுக்காக தாங்கள் போராடி வருவதாக உள்ளூர் மக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

“ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாளொன்றுக்கு 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்,” என கிராம கவுன்சில் உறுப்பினர் ஆயூப் ஷேக் தெரிவித்தார்.

அம்மலைப்பகுதியில் முறையான மருத்துவமனை, பள்ளி மற்றும் உதவூர்தி வசதி கூட இல்லை.

”படித்தவர்கள் இங்கு வசிப்பதற்கு விரும்பவில்லை. அவர்கள் இங்கு செய்வதற்கென ஒன்றும் இல்லை,” என 22 வயதான ஆட்டோ ஓட்டுநர் ஷேக் தெரிவித்தார். அவர் தன் முதல் பெயரை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

“எல்லா அரசியல்வாதிகளும் வாக்குகளுக்காக விளையாடுகின்றனர். மக்களுக்கு என்ன தேவையோ அதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை” என்றார் அவர்.

இதே உணர்வு மற்ற உள்ளூர் மக்களிடமும் பிரதிபலித்தது.

“இந்த மலையில் பல நூற்றாண்டுகளாக இந்துக்களும் முஸ்லிம்களும் நல்லிணக்கத்துடன் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். தேவையான காலங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம்” என்கிறார் ஷேக்.

”வேறு யாரும் எங்களுக்காக நிற்பதில்லை. நாங்கள் ஏன் எங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்?” என ஷேக் தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »