Press "Enter" to skip to content

கோவையில் எம்.எல்.எம் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திடீர் போராட்டம் – பின்னணி என்ன?

கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே புறவழிச் சாலையில் ’மைவி3 ஆட்ஸ்’ (Myv3 Ads) என்ற எம்.எல்.எம். நிறுவனத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் திடீரென குவிந்தனர். ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கே பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அவர்கள் அங்கே கூடியது ஏன்? இந்த போராட்டத்திற்கு என்ன காரணம்? பின்னணி என்ன?

’மைவி3 ஆட்ஸ்’ எவ்வாறு செயல்படுகிறது?

கோவை வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்த சக்தி ஆனந்தன் என்பவர், கோவையை தலைமையிடமாக கொண்டு Myv3 Ads என்ற செயலியை நடத்தி வருகிறார். இந்த செயலி வாயிலாக ஆயுர்வேத மருந்துகளை விற்பனை செய்து வருகிறார்.

அதேவேளையில், யூடியூபில் இந்த செயலியின் சேனலும் இயங்கி வருகிறது. இதில் தினமும் 2 மணிநேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும் புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

அதில், 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேர முடியும் எனவும் தினசரி மொபைல் தொலைபேசியில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1,800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செலுத்தும் பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படும் எனவும் புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கில் இதில் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் இதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதமாதம் பணம் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

’மைவி3 ஆட்ஸ்’ நிறுவனத்தின் மீது புகார் – வழக்குப் பதிவு

கோவையில் எம்.எல்.எம் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டது ஏன்?

பட மூலாதாரம், Myv3Ads Md Forum

இந்நிலையில், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது எனவும் தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் எனவும் ஆசை காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வரும் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து புகார் அளித்தார்.

இதேபோல, பாமகவின் கோவை மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி கடந்த 11-ம் தேதி MYV3ADS Md Forum என்ற சேனலில் உறுப்பினர்களாக சேர்ந்து தினசரி மொபைல் தொலைபேசியில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் சம்பாதிக்கலாம் என பொதுமக்களிடம் மோசடி செய்வதாக மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதன் பேரில், பரிசு சீட்டுகள் மற்றும் பண சுழற்சி திட்டங்கள் (தடை) சட்டம் 1978, கட்டுப்பாடற்ற வைப்புத் திட்டங்களுக்கான தடை உத்தரவு, 2019 ஆகிய சட்டங்களின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீது விசாரணை நடைபெற்று வருகின்றது.

வழக்குப் பதிவை கண்டித்து, ’மைவி3 ஆட்ஸ்’ நிறுவனத்தின் இயக்குநர் சக்தி ஆனந்த் உறுப்பினர்களுக்கு விடுத்த அறிக்கையில், “பல லட்சம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்து வரும் நம் நிறுவனத்தை பற்றி கடந்த சில மாதங்களாகவும் கடந்த சில நாட்களாகவும் சமூக விரோதிகள் அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டு காணொளி வெளியிட்டுள்ளார்.

மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் போராட்டம்

கோவையில் எம்.எல்.எம் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டது ஏன்?

இந்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் நீலாம்பூர் பகுதியில் உள்ள புறவழிச் சாலையில் கூடுமாறு அந்நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பேரில் கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே உள்ள புறவழிச் சாலையில் இன்று (ஜன. 29) ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குவிந்தனர். அப்போது அந்த நிறுவனம் எந்த மோசடியும் செய்யவில்லை எனவும் தவறான புகார் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அங்கு கூடியிருந்தவர்கள் தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து உறுப்பினர்கள் கூறும்போது, ”நாங்கள் முதலீடு செய்யவில்லை. பணம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளோம். இந்த நிறுவனத்தினால் பலரது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தினால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. யாரையும் மோசடி செய்யவில்லை. ஆனால் மோசடி செய்ததாக பொய் புகார் அளித்து இந்த நிறுவனத்தை மூடப் பார்க்கிறார்கள். இந்த நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் கோட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

புகார் அளித்தவர் கூறுவது என்ன?

கோவையில் எம்.எல்.எம் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் திரண்டது ஏன்?

அசோக் ஸ்ரீநிதியின் புகார் அடிப்படையில் கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அசோக் ஸ்ரீநிதி கூறுகையில்,“வழக்கமாக இம்மாதிரியான மோசடியால் பாதிக்கப்படும் மக்கள் நிறுவன உரிமையாளர் தப்பிய பிறகு போராட்டத்திற்கு வருவார்கள்.

மக்கள் தானாக அவருக்கு ஆதரவாக கூடவில்லை. இந்த வழக்கால் முதலீடு கிடைக்காமல் போகலாம் என வாட்ஸ் அப் மூலம் செய்தியை பரப்பியுள்ளனர். எம்.எல்.எம் போன்ற திட்டங்களுக்கு இந்தியாவில் தடை உள்ளது. இதனால் மக்கள் மோசடியில் சிக்குகின்றனர். புகார் அளித்த எனக்கும் தினமும் மிரட்டல்கள் வருகிறது” என தெரிவித்தார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »