Press "Enter" to skip to content

இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா செல்வாக்கு பெறாமல் தடுக்க மோதி அரசு என்ன செய்கிறது?

பொதுவாக மாலத்தீவுகளில் புதிய அதிபர் பதவியேற்ற பிறகு தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வருவார்.

ஆனால் மாலத்தீவுகளின் தற்போதைய அதிபர் முகமது முய்சு இந்த பாரம்பரியத்தை உடைத்துள்ளார். நவம்பரில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முய்சு இந்தியாவுக்கு வருவதற்கு பதிலாக, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவுக்குச் சென்றார்.

இந்தியாவிடமிருந்து சற்று விலகியிருக்கும் கொள்கையை தனது அரசு பின்பற்றப் போவதாக முய்சு தெளிவுபடுத்தினார்.

முய்சுவின் ஐந்து நாள் சீனப் பயணம் மாலத்தீவுகளின் வெளியுறவுக் கொள்கை மாறுவதைக் காட்டுகிறது என்று வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் கருதுகின்றனர்.

தனது நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் இந்த மாற்றத்தை அதிபரே மீண்டும் வலியுறுத்தினார். ‘எங்கள் நாடு சிறிதாக இருக்கலாம். ஆனால் இதன் காரணமாக எங்களை யாரும் மிரட்ட அனுமதியில்லை,’ என்று சீனாவுக்கு சென்று திரும்பிய பின்னர் அவர் ட்வீட் செய்துள்ளார்.

முய்சுவின் இந்த ட்வீட் தெளிவாக இந்தியாவை நோக்கியே உள்ளது.

இந்தியா

பட மூலாதாரம், ANI

இந்தியா – மாலத்தீவு மோதல்

அதிபர் முய்சு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போது ​​இந்தியாவிற்கும் மாலத்தீவுகளுக்கும் இடையில் யாரும் எதிர்பார்க்காத ஒரு தூதாண்மை மோதல் ஏற்பட்டது.

ஜனவரி 4 ஆம் தேதி பிரதமர் மோதி தனது லட்சத்தீவுகள் பயணத்தின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த போது இது தொடங்கியது.

லட்சத்தீவுகளில் மோதி செலவழித்த நேரத்தை மாலத்தீவுகளுடன் ஒப்பிட்டு பல சமூக வலைதளப் பயனர்கள் கருத்து தெரிவித்தனர். மாலத்தீவுகள் அரசு சீனாவுடன் நட்புறவை வளர்த்து வருவதால் இது நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் லட்சத்தீவுகளுக்கு ‘ஊக்கம்’ அளித்ததைக் கண்டித்து மாலத்தீவுகளின் மூன்று துணை அமைச்சர்கள் சமூக ஊடகங்களில் விமர்சன கருத்துகளை வெளியிட்டனர்.

பின்னர் அந்த அமைச்சர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் அதற்குள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துவிட்டன.

இந்திய தீவுகளுக்கு சுற்றுலா செல்வது பற்றி சிந்திக்குமாறு இந்தியாவின் பல பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை கேட்டுக் கொண்டனர். மாலத்தீவுக்குச் செல்ல நினைப்பவர்களுக்கு லட்சத்தீவுகளுக்குச் செல்வது ஒரு மாற்று தேர்வாக அமையக்கூடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அதன் பின்னர் நிலைமை மேலும் மோசமாகிவிட்டதாகத் தெரிகிறது.

2019 இல் இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட கடல் ஆய்வு (ஹைட்ரோகிராஃபி) ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை புதுப்பிக்க கூடாது என்று மாலத்தீவுகள் அமைச்சரவை முடிவு செய்தது.

இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு அதாவது 2024-ல் முடிவடைகிறது. முன்னதாக தான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மாலத்தீவில் தற்போது நிலைகொண்டுள்ள இந்திய வீரர்களை திருப்பி அனுப்ப அதிபர் முகமது முய்சு உறுதியளித்திருந்தார்.

முய்சுவின் இந்த நடவடிக்கை அவருக்கு முந்தைய இப்ராஹிம் சோலி அரசின் ‘இந்தியா முதல் கொள்கை’யை மாற்றியமைக்கும் நோக்கத்தின் மற்றொரு அறிகுறியாகும். கடந்த மாதம் மொரீஷியஸில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் மாலத்தீவுகளின் எந்தப் பிரதிநிதியும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் ​​இந்தியாவுடனான பாதுகாப்பு உறவுகளைத் தொடர முய்சு அரசு காட்டும் தயக்கம் மேலும் தெளிவானது.

கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2011 இல் ஆரம்பிக்கப்பட்டது. பாதுகாப்பான மற்றும் நிலையான இந்திய பெருங்கடல் என்ற கருத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இந்தியா மற்றும் மாலத்தீவுகளுடன் கூடவே இலங்கை மற்றும் மொரீஷியஸும் இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ளன.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ பிரசாரம்

2013 ஆம் ஆண்டு யாமீன் அப்துல் கயூம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே மாலத்தீவுகளில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் துளிர்விட ஆரம்பித்தன. யாமீன் தனது ஆட்சியின் போது சீனாவுடனான உறவை வலுப்படுத்த முயன்றார்.

இந்தியாவின் நண்பரான இப்ராகிம் சோலி 2018 தேர்தலில் யாமீனை தோற்கடித்தார். அதன் பிறகில் இருந்து ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ பிரசாரத்தை யாமீன் வழிநடத்தி வருகிறார்.

முகமது முய்சு யாமீனின் கீழ் பணிபுரிந்து வந்தார். 2023 அதிபர் தேர்தலில் யாமீன் அப்துல் கயூம் தகுதி நீக்கம் செய்யப்படாமல் இருந்திருந்தால், முய்சுவின் இடத்தில் அவர் மாலத்தீவுகளின் அதிபராகியிருப்பார்.

பாலிவுட் படங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் காரணமாக இந்தியா மாலத்தீவுகளின் மீது ஆழமான கலாசார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாலத்தீவின் தலைநகரான மாலேயைச் சேர்ந்த செய்தியாளர் ஹாமித் கஃபர் கூறுகிறார்.

”தெற்காசியப் பகுதி முழுவதும் இந்தியா தனது ஆதிக்கத்தைச்செலுத்தி வருவதாக மாலத்தீவில் உள்ள சிலர் நினைக்கின்றனர். மாலத்தீவின் ஒவ்வொரு குடிமகனின் சிந்தனையும் இதுதான் என்று நினைக்கிறேன்,” என்று ஹாமித் குறிப்பிட்டார்.

”இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி முய்சு ஆட்சிக்கு வந்தார். தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதைக் காட்டி தனது இந்திய எதிர்ப்பு ஆதரவாளர்களை இப்போது அவர் ஈர்க்க வேண்டும்,” என்று ஹாமித் கஃபர் தெரிவித்தார்.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

தெற்காசியாவில் இந்தியா – சீனா ஆதிக்கப் போட்டி

இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையிலான தூதாண்மை உறவுகள் தொடர்ந்து மோசமடைந்து வருவதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர சமன்பாடுகள் மட்டும் காரணம் அல்ல.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் ஆதிக்கப் போட்டியின் புதிய களமாக மாலத்தீவுகள் மாறியிருப்பதற்கான பல அறிகுறிகள் தென்படுகின்றன.

தில்லியின் ஃபோர் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் பேராசிரியரான மருத்துவர். ஃபைசல் அகமது, சீன விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். ”மாலத்தீவுகள் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளைப் பார்க்கும் போது, ​​பத்தாண்டுகளுக்கும் மேலாக நிலவி வரும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போட்டி இப்போது மாலத்தீவில் புதிய திசையை நோக்கி நகர்கிறது என்பது தெளிவாகிறது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

”சீனாவும் இந்தியாவும் புவிசார் பொருளாதார ரீதியாகவும் செயல்தந்திர ரீதியாகவும் மாலத்தீவுகளுடன் நெருக்கத்தை அதிகரிப்பதில் ஈடுபட்டுள்ளன. ஆனால் அண்மைக் காலமாக சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாலத்தீவுகள் அரசு எடுத்துள்ளது. உலகின் புவிசார் அரசியலின் நிலையற்ற தன்மை இதன் காரணமாக தற்போது இந்திய பெருங்கடல் பகுதியையும் எட்டியுள்ளது,” என்றார் அவர்.

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பில் (சார்க்) அங்கம் வகிக்கும் இந்தியாவின் எட்டு அண்டை நாடுகள் மீது சீனா தனது நிதி மற்றும் அரசியல் வலுவின் கயிற்றை தொடர்ந்து இறுக்கி வருவதாக கூறப்படுகிறது.

சீனாவின் இந்தச் செயல்பாடுகள் இந்தியாவுக்கு மிகவும் சங்கடமாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளன. இதற்காக சீனா தனது நிதி திறன்களையும், மிகப்பெரிய திட்டங்களுக்கு உறுதியான பொருளாதார ஆதரவை வழங்கும் திறனையும் நன்கு பயன்படுத்தி வருகிறது.

இந்த காரணத்திற்காக தெற்காசியாவின் சில நாடுகள் சீனாவின் பக்கம் சாய்ந்து வருகின்றன, ஏனெனில் அந்த நாடுகள் தங்கள் உள் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சீனாவின் உதவியைப் பெற முயற்சிக்கின்றன.

தெற்காசியாவில் இந்தியாவின் அண்டை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடலின் தீவு நாடுகளில் தன் செல்வாக்கை அதிகரிக்க சீனா தனது செல்லத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (பிஆர்ஐ) திறம்பட பயன்படுத்துகிறது.

சீனா 2017 இல் பெய்ஜிங்கில் முதலாவது பிஆர்ஐ உச்சி மாநாட்டை நடத்தியது. பல ஆசிய நாடுகளுடன் கூடவே பல மேற்கத்திய நாடுகளும் இதில் கலந்து கொண்டன. ஆனால் பிஆர்ஐ திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி இந்த உச்சிமாநாட்டை இந்தியா விமர்சித்தது.

இந்தப் புறக்கணிப்பின் மூலம், பெல்ட் அண்ட் ரோட் முன்முயற்சியின் திட்டங்கள் குறித்து இந்தியா தனது கவலையை தெளிவாக வெளிப்படுத்தியது.

சீனாவும் இந்தியாவும் இந்த பிராந்தியத்தில் தங்கள் செல்வாக்கை அதிகரிக்கவும், வெற்றி பெறவும் மிகவும் திட்டமிட்ட முறையில் போராடி வருகின்றன. இந்தியா அல்லது சீனாவுடனான ஒருங்கிணைப்பை அதிகரிக்க பல நாடுகள் தங்கள் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியுள்ளன.

ஆனால் இவை அனைத்தும் இந்தியாவின் சொந்தப் பகுதி என்று அழைக்கப்படும், அதன் அருகில் இருக்கும் புவியியல் பகுதியில் நடக்கிறது. இதன் காரணமாக சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது இந்தியாவுக்கு கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

இதை சமாளிக்க இந்தியா பல உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் பங்காளியாகி அண்டை நாடுகளுடனான தனது பொருளாதார உறவுகளுக்கு புதிய வடிவத்தை அளித்துள்ளது.

ஆனால், இந்தியாவின் இந்த முயற்சிகள் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும், உலக அளவில் வல்லரசாகும் கனவை நனவாக்கவும் போதுமானதா?

2014 இல் பிரதமர் மோதி தனது பதவியேற்பு விழாவிற்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்து சிறப்பான நடவடிக்கையை மேற்கொண்டார். இந்தியா அண்டை நாடுகளுடனான சர்ச்சைகளைத் தீர்த்து, உறவுகளை புதுப்பிக்கும் என்றும் இதன் காரணமாக பிராந்தியத்திற்குள் வர்த்தகம் மேம்படும் என்றும் நம்பிக்கை எழுந்தது.

மோதியின் அந்த முயற்சி இன்னும் தொடர்கிறது என்கிறார் மருத்துவர் ஃபைசல் அகமது. ”பிரதமர் மோதி ஆட்சிக்கு வந்ததும், ‘நெய்பர்ஹூட் முதல்’ என்ற கொள்கை மூலம் அண்டை நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுத்தார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாடுகளுடனான உறவுகளின் பயணம் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக இருந்தாலும் கூட தன் அண்டை நாடுகளுக்கான கொள்கையைப் பொருத்தவரை இந்தியா மிகச் சிறந்த வேலையைச் செய்துள்ளது என்று கூறுகிறார் ஒபி ஜிண்டல் குளோபல் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகளின் பேராசிரியர் மருத்துவர் ஸ்ரீராதா தத்தா, .

”பாகிஸ்தானைத் தவிர நமது மற்ற அண்டை நாடுகளுடனான நீடித்த பேச்சுகளில் ஏதோ ஒரு வகையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் இந்தியா தனது அண்டை நாடுகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகளுடன் தொடர்பு கொள்ளத் தவறிவிட்டது என்றும் சில விமர்சகர்கள் கூறுகின்றனர். மருத்துவர் ஸ்ரீராதா தத்தாவும் இதை ஒப்புக்கொள்கிறார்.

”ஆளும் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற நாம் விரும்புகிறோம். ஏனெனில், இந்தியாவுக்கு ஆதரவானவை என்று கருதப்படும் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது நமக்கு எளிதாக இருக்கிறது. இதனால் நாம் மற்றொரு தரப்பை அதாவது எதிர்க்கட்சிகளை நம்மிடமிருந்து விலகிச் செல்ல விட்டுவிடுகிறோம்,” என்றார் அவர்.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – வங்கதேசம் நட்பு

‘வங்கதேசம் வேறு திசையில் செல்கிறது. அது விரைவில் ஒரே ஒரு கட்சி இருக்கும் நாடாக மாறப்போகிறது. ஆளும் கட்சியுடன் மட்டுமே இந்தியா தொடர்பு கொள்வது அதன் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது.’

இந்தியா தனது அண்டை நாடுகளின் எதிர்க்கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளையும் தனது ‘நெய்பர்ஹூட் முதல்’ கொள்கையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் தத்தா கருதுகிறார்.

வங்கதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சியுடன் (BNP) தொடர்புகளை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

ஆனால் வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான தானியா அமீர் இந்த வாதத்தை எதிர்க்கிறார். இந்தியா பிஎன்பியுடன் எந்த விதமான தொடர்பும் கொள்வதற்கு முன் பங்களாதேஷ் தேசியவாத கட்சி, வலதுசாரி ஜமாத்-இ-இஸ்லாமியிடமிருந்து விலக வேண்டும் என்று தானியா கூறுகிறார்.

”இந்திய அரசு பிஎன்பி அல்லது ஜமாத்-இ-இஸ்லாமியுடன் எந்த விதமான உறவையும் வைத்துக் கொள்வது சாத்தியமற்றது. மோதி ஆதரவாளர்களாக இருக்கும் அண்டை நாடுகளின் அரசுகளுடன் மட்டுமே மோதி அரசு நட்பாக உள்ளது என்று கூறுவது தவறானது,” என்கிறார் இந்தியாவின் வலதுசாரி சிந்தனையாளர் மருத்துவர் சுவ்ரோகமல் தத்தா கூறுகிறார்.

”பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் மற்றும் வங்கதேசத்தில் உள்ள பிஎன்பி தவிர மற்ற அண்டை நாடுகளின் கட்சிகளுடன் அதாவது அவை ஆட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, இந்தியாவுக்கு உறவு உள்ளது. மாலத்தீவுகளின் எதிர்க்கட்சிகளுடன் நமக்கு நல்லுறவு உள்ளது,” என்றார் அவர்.

பாகிஸ்தான் எப்போதும் சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது. இந்த முழுப் பகுதியிலும் பூடான் இந்தியாவுக்கு மிக நெருக்கமான நாடு. எனவே இந்த நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை இந்த ஆய்வில் சேர்க்கவில்லை.

இந்த எல்லா நாடுகளும் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. கூடவே இந்த எல்லா நாடுகளுடனும் இந்தியாவுக்கு பொதுவான வரலாறு உள்ளது. பாரம்பரியமாக இந்த நாடுகள் அனைத்தும் வர்த்தகம், பொருளாதார உதவி மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களுக்கு இந்தியாவைச் சார்ந்திருந்தன.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இரண்டு படகுகளில் சவாரி செய்ய முயலும் மாலத்தீவுகள்

இந்தியாவிற்கும் அதன் ஏதாவது ஒரு அண்டை நாட்டிற்கும் இடையே மோதல் ஏற்படும் போது ​​இந்தியா எப்போதும் மிரட்டி அடக்குபவராக, அல்லது மூத்த சகோதரனைப் போல நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

தெற்காசியாவில் உள்ள மிகச் சிறிய அண்டை நாடுகளின் மீதான இந்தியாவின் கொள்கை குறித்து நிபுணர்கள் கேள்விகளை எழுப்பத் தொடங்குகின்றனர்.

ஆனால், இந்த முறை மாலத்தீவுகளுடன் இந்தியாவுக்கு மோதல் ஏற்பட்டபோது ​​ஆத்திரமூட்டும் வேலையை மாலத்தீவுகள் செய்ததாக இந்தியர்கள் தெரிவித்தனர்.

இது மட்டுமின்றி, நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முகமது முய்சு வெற்றி பெற்றதில் இருந்து மாலத்தீவுகள் இந்தியாவிலிருந்து விலகி இருக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

இந்தியாவின் எந்த நடுத்தர நகரத்தையும் விட குறைவான மக்கள் தொகை கொண்ட மாலத்தீவுகள், மார்ச் 15 ஆம் தேதிக்குள் இந்தியா தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி இந்தியாவின் கோபத்தைத் தூண்டியது.

மாலத்தீவில் 88 இந்திய வீரர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் மனிதாபிமான அல்லது மருத்துவ உதவிகளை வழங்குவதற்காகவே அவர்கள் மாலத்தீவுகளுக்கு அனுப்ப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழன்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உகாண்டா தலைநகர் கம்பாலாவில் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீரை சந்தித்தார்.

‘மாலத்தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசினோம்’ என்று இந்த சந்திப்புக்குப் பிறகு, ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

இந்திய துருப்புகளை திரும்பப் பெற மாலத்தீவு விதித்துள்ள காலக்கெடு குறித்து இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பதை ஜெய்சங்கர் தெரிவிக்கவில்லை. ‘இந்தியப் படைகளை திரும்பப் பெறுவது’ குறித்தும் தாங்கள் விவாதித்ததாக’ பின்னர் மூசா ஜமீர் பதிவிட்ட ட்வீட் குறிப்பிடுகிறது.

மார்ச் 15ஆம் தேதிக்குள் துருப்புகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் விதித்துள்ள காலக்கெடு இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

பதற்றத்தை குறைக்க இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்வினையாற்றியது.

அதிபர் முய்சுவின் அரசியல் வழிகாட்டியான யாமீன் அப்துல் கயூம் (இருவரும் இப்போது பிரிந்துவிட்டனர்) 2013 முதல் 2018 வரை ஆட்சியில் இருந்தார். யாமீன் ஆட்சியில் இருந்தபோது, ​​அவரும் சீனாவுக்கு நெருக்கமாக இருந்தார். மேலும் எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர் என்ற நிலையில் யாமீன் ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ பிரசாரத்தையும் தொடங்கினார்.

2018 இல் இப்ராஹிம் முகமது சோலி ஆட்சிக்கு வந்ததும் அப்துல்லா யாமீன் அரசின் சீனா சார்பு கொள்கையை மாற்றி, மாலத்தீவில் இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக ஆனார்.

முய்சு தான் விரித்த வலையிலேயே சிக்கிக் கொண்டதற்கான ஆதாரமும் உள்ளது. ‘இந்தியாவை வெளியேற்றுவோம்’ என்ற தீவிர பிரசாரத்தின் உதவியுடன் அவர் ஆட்சிக்கு வந்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது அவர் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் கூறி மக்களை தவறாக வழிநடத்தியதாக கூறப்படுகிறது.

”இந்தியா தனது ஆயிரக்கணக்கான வீரர்களை மாலத்தீவில் நிறுத்தியுள்ளது. மேலும் அவர்கள் எல்லா இடங்களிலும் இருப்பது மாலத்தீவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது,​​ அப்போது எதிர்க்கட்சியாக இருந்த மக்கள் தேசிய காங்கிரஸ் (பிஎன்பி), கூறியது,” என்று மாலத்தீவின் செய்தியாளர் ஹாமித் கஃபூர் பிபிசியிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

“உண்மையில் பி.என்.பி. தலைவர்கள் வேண்டுமென்றே இந்திய வீரர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தி மக்கள் மத்தியில் தேசியவாத உணர்வுகளை தூண்டிவிட்டனர்.’

2013 முதல் 2018 வரை முய்சு அமைச்சராக இருந்தபோது மாலத்தீவில் இந்தியப் படைகளை நிலைநிறுத்துவதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை என்பதே உண்மை. முய்சு தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள தேசியவாத பேச்சுகளைத் தொடங்கினார்,” என்று ஹாமித் கஃபூர் கூறினார்.

”தனது சொந்த நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகளின் வலையில் அதிபர் சிக்கியிருப்பதால், இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தைத் தொடர்வதைத் தவிர அவருக்கு இப்போது வேறு வழியில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் முய்சுவின் அணுகுமுறை அவரை பாதிக்கிறது போலத்தெரிகிறது. ஏனெனில், கடந்த வாரம்தான் முய்சுவின் கட்சி மேயர் தேர்தலில் எதிர்க்கட்சிகளிடம் படுதோல்வி அடைந்தது. வெற்றி பெற்ற கட்சி இந்தியாவுக்கு ஆதரவானதாக கருதப்படுகிறது.

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்திய வீரர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு முய்சு உத்தரவிட்ட நேரம் முக்கியமானது.

மாலத்தீவில் மார்ச் 17ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக இந்திய வீரர்கள் மாலத்தீவை விட்டு வெளியேற வேண்டும். ”நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அழுத்தத்தில் அதிபர் இருக்கிறார். எனவே ‘இந்தியா போன்ற பெரிய சக்தியைக் கூட எதிர்க்கத் தயாராக உள்ள’ ஒரு தீர்க்கமான தலைவராக அவர் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்,” என்று கஃபூர் கூறுகிறார்.

இந்தியாவுக்கு எதிரான இந்தக் கொள்கை நீண்ட காலம் நீடிக்காது என்று மருத்துவர் ஸ்ரீராதா தத்தா நம்புகிறார். ”தன்னை ஆட்சியில் அமர்த்திய வாக்காளர்களை மகிழ்விக்க முய்சு விரும்புகிறார். மேலும் அவர் சீனாவையும் கவர விரும்புகிறார். ஆனால் இந்தக் கொள்கையை நீண்ட காலம் தொடர முடியாது என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேண தனது நாடு கற்றுக்கொள்ள வேண்டும் என்று மாலத்தீவு செய்தியாளர் ஹாமித் கஃபூர் அறிவுரை கூறுகிறார்.

”இந்தியாவுடன் மட்டும் அல்லது சீனாவுடன் மட்டும் நல்ல அல்லது கெட்ட உறவை வைத்திருப்பது நல்ல விஷயம் அல்ல என்று நமது அரசியல்வாதிகள் அறிவுப்பூர்வமாக அறிவார்கள். ஆனால் அடுத்தடுத்து வந்த அரசுகள் தங்களுக்கு விருப்பமான கூட்டாளிகளுக்கு ஏற்ப தங்கள் வெளியுறவுக் கொள்கையை மாற்றிக்கொண்டன. வெளியுறவுக் கொள்கையை திரும்பத் திரும்ப மாற்றிக்கொண்டு மாலத்தீவை இரு பெரும் வல்லரசுகளுக்கு இடையே போர்க்களமாக மாற்றுவதில் எந்த புத்திசாலித்தனத்தையும் நான் காணவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

தனது நாடு அருகாமையில் இருப்பதாலும், கலாசார தாக்கத்தாலும், சீனாவை விட இந்தியா எப்போதும் ஒரு படி முன்னால் இருக்கும் என்பதை ஹாமி கஃபூர் ஏற்றுக்கொள்கிறார்.

இருப்பினும் மாலத்தீவுகளில் முய்சுவுடன் எல்லாம் சரியாக நடப்பதாகத் தெரியவில்லை. 2023 நவம்பரில் அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று மாலத்தீவு ஊடகங்களில் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கைகலப்புக்குப் பிறகு இதுபோன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – நேபாளம் உறவுகளில் சீனா தாக்கம்

‘எனது நெருங்கிய அண்டை வீட்டார்களின் நலன்களை புறந்தள்ளி, எனது தொலைதூர அண்டை வீட்டார்களின் நலன்களுக்காக பணியாற்ற நான் விரும்பவில்லை’ என்று மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார்,

இந்தியாவின் ‘ நெய்பர்ஹுட் முதல் கொள்கை’ இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த கொள்கை நடைமுறையில் செயல்படுத்தப்படுகிறதா?

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக தனித்துவமான உறவு உள்ளது. இந்த உறவின் மிக முக்கிய அம்சம் இரு நாடுகளுக்கும் இடையே திறந்த எல்லை மற்றும் இந்திய ராணுவத்தில் கூர்கா வீரர்களை சேர்ப்பது ஆகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சிறப்புமிக்க, தனித்துவமான உறவு கடந்த சில ஆண்டுகளில் மாறியுள்ளது என்று நேபாளத்தின் மூத்த பத்திரிக்கையாளர் யுவராஜ் கிமிரே கருதுகிறார்.

”பரஸ்பர உறவுகளில் தனித்துவமானதாகக் கருதப்படும் திறந்த எல்லைகள் பற்றிய விவாதம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. மேலும் 75 ஆண்டுகால தொடர்ச்சியான செயல்முறைக்குப் பிறகு இப்போது இந்திய ராணுவத்தில் கூர்கா வீரர்கள் ஆட்சேர்ப்பும் நிறுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

நேபாளம் தொடர்பான இந்தியாவின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்துப்பேசிய யுவராஜ் கிம்ரே, ”நேபாளத்தின் உள் அரசியலில் வலுக்கட்டாயமாக தலையிடுவதான குற்றச்சாட்டை இந்தியா அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது இந்தியா வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளது, இது இரு தரப்பிற்கும் சாதகமாக இருப்பதாகத் தெரிகிறது,” என்று தெரிவித்தார்.

‘இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் நேபாளமும் மின்சார வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் கீழ் அடுத்த பத்தாண்டுகளில் பத்தாயிரம் மெகாவாட் மின்சாரத்தை நேபாளம் இந்தியாவிற்கு விற்பனை செய்யும்.’

ஆனால், நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் சீன நிழலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. நேபாளத்தில் தொடர்ந்து முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவுக்கு அசௌகரியமான சூழ்நிலையை சீனா உருவாக்கியுள்ளது.

”நேபாளத்தில் அரசியல் ஸ்திரமின்மை, அரசு மற்றும் அரசியல் கட்சிகளில் பொறுப்பேற்றலில் குறைபாடு உள்ளது. குறிப்பாக 2006 இல் புரட்சிகரமான அரசியல் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியும் ஆதரவும் கிடைத்தது. அதில் இந்தியாவும் முக்கிய பங்கு வகித்தது. ஆனால் நிலநடுக்கத்திற்குப் பிறகு எரிசக்தி, சுற்றுலா, விருந்தோம்பல், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற துறைகளிலும் சீனா தனது இருப்பை அதிகரித்துள்ளது. இந்த விஷயங்கள் இந்தியாவுக்கு கவலையளிக்கின்றன,” என்று யுவராஜ் கிம்ரே சுட்டிக்காட்டினார்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மலைப்பகுதியில் உள்ள நேபாளத்தின் தற்போதைய பிரதமர் புஷ்ப கமல் தஹால், ஆயுதமேந்திய முன்னாள் மாவோயிஸ்ட் தலைவர் ஆவார். அவர் மூன்று முறை பிரதமர் பதவியை வகித்துள்ளார். இந்தியாவுடன் கூடவே அமெரிக்காவும் நேபாளத்தில் நடக்கும் இந்த மாற்றங்களை விரும்பவில்லை.

அதை முரண் அல்லது இந்தியாவின் நடைமுறை அணுகுமுறை என்று அழைக்கலாம். ஆனால் இப்போது இந்தியாவுக்கு நேபாளத்தில் ஒரு கம்யூனிஸ்ட் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது.

”இந்தியா மற்றும் அமெரிக்க எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்ட இடதுசாரி க்கட்சி அரசுகளுடன் ஒத்துழைப்பதும் ஒருங்கிணைப்பதும்தான் இந்தியாவில் பாஜக அரசு எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய இக்கட்டான நிலை,” என்று யுவராஜ் கிம்ரே குறிப்பிடுகிறார்.

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – வங்கதேச உறவு

இரண்டு நல்ல அண்டை நாடுகளுக்கும் மேலாக இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நல்லுறவு இருப்பது காணப்படுகிறது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவு தனித்துவமானது என்று தானியா அமீர் கூறுகிறார்.

”இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான உறவுகள் வேறுபட்டவை. வங்கதேசம் தனது எல்லையை இந்திய மாநிலங்களான மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் அசாம் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்வதால் இந்த நாடுகளின் உறவை, வேறு எந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுடன் ஒப்பிட முடியாது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவும் வங்கதேசமும் 54 நதிகளின் நீரை பகிர்ந்து கொள்கின்றன. இரண்டுக்கும் இடையே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீளமான நில மற்றும் கடல் எல்லை உள்ளது.

இந்த நேரத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு பிரதமர் மோதி முழு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரியது என்று கூறப்படும் தேர்தலில் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார்.

76 வயதான ஷேக் ஹசீனா காணும் தொடர்ச்சியான நான்காவது தேர்தல் வெற்றி இதுவாகும்.

நேபாளம் மற்றும் மாலத்தீவுகளைப் போலவே, வங்கதேசத்திலும் இந்திய எதிர்ப்பாளர்களின் தீவிரமான மற்றும் பெரிய பிரிவு உள்ளது. வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகளுக்கு மூன்று முக்கிய காரணங்கள் இருப்பதாக தானியா அமீர் கூறுகிறார்.

”முதலாவது காரணம், ஒரு வகையில் ஊழல் முதலாளித்துவம், பணக் கொள்ளை, ஊழல் மற்றும் வங்கதேசத்தை விட்டு வெளியேறும் மூலதனத்தை ஆதரிக்கும் வங்கதேச அரசை மோதி அரசு கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது. ஷேக் ஹசீனாவை ஆதரிப்பதன் மூலம் மோதி அரசு இவற்றை ஊக்குவிப்பதாக வங்கதேசத்தில் பலர் நம்புகிறார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

”இரண்டாவது காரணம், வங்கதேசத்தில் உள்ள பலர் தங்கள் நாடு சர்வாதிகார, ஜனநாயகமற்ற அமைப்பை நோக்கி நகர்வதாக உணர்கிறார்கள், அதை ஆதரிப்பதன் மூலம், இந்தியா ஜனநாயகத்தின் ஆதரவாளர் அல்ல என்பதைக் காட்டுகிறது”.

‘மூன்றாவது காரணம், மோதி அரசு கண்மூடித்தனமாக அவாமி லீக் அரசுக்கு ஆதரவளிக்கும் விதமானது ஒருவகையில் அவாமி லீக்கில் தீவிரவாதிகளின் ஊடுருவலை ஊக்குவிக்கிறது என்று முற்போக்கு மற்றும் மத சார்பற்ற வர்க்கம் கருதுகிறது.’

ஷேக் ஹசீனாவின் அரசை இந்தியா ஆதரிப்பது புத்திசாலித்தனமான விஷயம் என்று தானியா அமீர் நம்புகிறார். ”சீனாவின் பக்கம் சாயாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக ஆளும் கட்சிக்கு அதிக அழுத்தம் கொடுக்க இந்தியா விரும்பவில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான உறவுகளை ஒரு துறையில் இன்னும் சிறப்பாக்க முடியும். அதுதான் இரு நாடுகளுக்கும் இடையே மக்கள் தொடர்புகளை முறையாக மேம்படுத்துவது.

”இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான உறவுகளைப் பற்றி நீங்கள் பேசினால், இருநாட்டு சாமானிய மக்களிடையே போக்குவரத்து மற்றும் தொடர்பை அதிகரிப்பதற்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கூறுவேன். நமது பேச்சுவார்த்தைகளில் இந்த அம்சத்தை நாம் பெரும்பாலும் புறக்கணிக்கிறோம்,” என்று தானியா அமீர் குறிப்பிட்டார்.

”இரு நாடுகளின் அரசுகள் மற்றும் ஆளும் கட்சிகளுக்கு இடையிலான பரஸ்பர உறவுகளை மட்டுமே நாம் கருத்தில் எடுத்துக்கொள்கிறோம். உண்மையில் இரு தலைவர்கள் – மோதி மற்றும் ஷேக் ஹசீனாவின் பரஸ்பர உறவுகளை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் என்று நினைத்துவிடுகிறோம். மாணவர்களின் போக்குவரவு, சட்டக் கட்டமைப்பிற்குள் எல்லை மூலமாக வர்த்தக கூட்டாளித்துவத்தை மேம்படுத்துதல் போன்ற தேவைகள் குறித்து நாம் போதுமான அளவு விவாதிப்பதோ அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ இல்லை.”

இந்தியா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – இலங்கை உறவில் சீனாவின் நிழல்

”இலங்கை இந்தியாவுக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிந்தைய காலகட்டத்தில் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த வேளையில், இந்தியா அதற்கு நிதி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கியது. ​​சீனா உட்பட பெரும்பாலான நாடுகள் இலங்கைக்கு உதவ முன்வரவில்லை,’ என்று மருத்துவர் சுவ்ரோகமல் தத்தா தெரிவித்தார்.

”​‘இலங்கையுடனான நமது உறவுகள் மிகவும் வலுவானவை. இரு நாடுகளுக்கும் இடையே பழமையான உறவுகள் உள்ளன மற்றும் நம்பகமான பங்காளியாக இந்தியாவின் இடத்தை சீனாவால் ஒருபோதும் பிடிக்க முடியாது.”

இந்தப் பிராந்தியத்தில் சீனா ஒரு பெரிய போட்டியாளராக உருவாகியுள்ளதால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் சவால்கள் எழுந்துள்ளன என்பது உண்மை.

சில வருடங்களுக்கு முன்னர் பொருளாதார கூட்டாளித்துவம், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் செயல் தந்திர ஒத்துழைப்பு மூலம் இலங்கை சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டது.

ஆனால் இலங்கை மீதான தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டதன் வாயிலாக தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகத் தெரிகிறது.

இந்திய பெருங்கடலில் சீனாவின் இருப்பு மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களில் அதன் பங்கேற்பின் தாக்கங்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் ஒரு சிக்கலான பரிமாணத்தைச் சேர்த்துள்ளன.

சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைக் கருத்தில் கொண்டு இந்தியா பொருளாதார உறவுகளையும் செயல் தந்திர அக்கறைகளையும் சமநிலைப்படுத்தி இலங்கையுடனான தனது உறவைப் பேண வேண்டியுள்ளது.

இந்தியா vs சீனா

பட மூலாதாரம், Getty Images

இந்தியா- சீனா ஆதிக்கப் போட்டி

இந்தியாவின் அண்டை நாடுகளில் உருவாகி வரும் சமன்பாடுகள் இந்தியாவிற்கு சவாலாக உள்ள அதேநேரம் அவை வாய்ப்பாகவும் இருக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும் அதேவேளையில் பதற்றம் அதிகரிப்பது மற்றும் மோதல்கள் உருவாகும் ஆபத்தும் உள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால் இன்று தெற்காசியா ஒரு மூலோபாய போர் மண்டலமாக உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில் ​​இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான செல்வாக்கை அதிகரிப்பதற்கான போட்டி, வரும் காலங்களில் இந்த பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சூழ்நிலையை தீர்மானிக்கும்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »