Press "Enter" to skip to content

அமெரிக்கா: இரானிய இலக்குகள் மீது பதிலடி தாக்குதல் – சிரியா, இராக்கில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், சிரியா மற்றும் இராக்கில் உள்ள 85 இரானிய இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை அன்று, நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகள் மீது குண்டு வீசும் விமானங்கள் உட்படப் பல்வேறு வகையான விமானங்கள் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டன. அவை, சிரியாவில் நான்கு, இராக்கில் மூன்று என மொத்தம் ஏழு இடங்களில் தாக்கின. அவற்றில், 85க்கும் மேற்பட்ட இலக்குகள் தகர்க்கப்பட்டன.

அமெரிக்காவின் தாக்குதலில் இராக் மற்றும் சிரியாவில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள், ராணுவ தளவாட மையங்கள் மற்றும் ட்ரோன் சேமிப்புக் கிடங்குகள் தகர்க்கப்பட்டன.

இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் கார்ப் குட்ஸ் படை(Islamic Revolutionary Guards Corp Quds Force) மற்றும் அது சார்ந்த போராளிக் குழுக்களுக்கு எதிராக அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்காவின் மத்தியப் பாதுகாப்புப் படையான சென்ட்காம்(CENTCOM) கூறியுள்ளது.

அமெரிக்கப் படைகள்

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 28) அன்று அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானம் தாக்கி மூன்று வீரர்களைக் கொன்றதற்கு பதிலடியாக சிரியா மற்றும் இராக்கில் உள்ள 85 இலக்குகள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமெரிக்க மத்தியப் பாதுகாப்புப் படையினர் கூறினர்.

“எங்கள் பதிலடி இன்று தொடங்கியது. நாங்கள் தேர்ந்தெடுக்கும் நேரத்திலும் இடங்களிலும் எங்களின் பதிலடி தொடரும்” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

டவர் 22 என்ற அமெரிக்க தளத்தில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது, 40க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இரான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்கா, மோசமான விளைவுகள் பதிலாகத் தரப்படும் என்றும் கூறியிருந்தது.

ஆனால், இதற்குப் பதிலிளித்த இரான், தனது ஈடுபாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றது என்றும், அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்களின் முடிவுகளில் தாம் தலையிடுவதில்லை என்றும் இரான் கூறியது.

தாமதத்திற்கான காரணம் என்ன?

பதில் தாக்குதலுக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினரிடம் இருந்து கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது ஜோ பைடன் தலைமையிலான அரசு.

ஆனால், வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் இந்த கால தாமதமான அணுகுமுறை இரானுக்கு அவர்களின் ராணுவப் பணியாளர்களைத் தாக்குதல் நடக்கவிருக்கும் தளங்களில் இருந்து திரும்பப் பெற அனுமதித்ததாகக் கூறினர். இதனால், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒரு பெரிய மோதல் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கருதுகிறார்கள்.

“இது இரானிய ஆதரவுடைய போராளிகள், அமெரிக்கப் படைகளைத் தாக்கும் திறனைக் குறைக்கும்,” என மத்திய கிழக்கிற்கான முன்னாள் துணைப் பாதுகாப்புச் செயலாளரான மிக் முல்ராய் பிபிசியிடம் கூறினார்.

எனினும் இது எதிர்கால தாக்குதல்களுக்கு ஒரு தடையாக இருக்காது. ஆனால், அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே “நேரடியான போரைத் தவிர்த்ததுதான் இந்தத் தாமதத்தின் நன்மை,” என்றார் மிக் முல்ராய்.

தாக்குதலில் பலியான அமெரிக்க வீரர்கள்

பட மூலாதாரம், DoD

தாக்குதலுக்கு முன்னதாக, அமெரிக்க சென்ட்காம் கமாண்டர் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லா, வெள்ளியன்று எக்ஸ் தளத்தில், B-1 குண்டுவீச்சு விமானம் புறப்படும் காணொளியை பகிர்ந்தார்.

அதனுடன் கூடிய அறிக்கையில், “நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம், எங்கள் மக்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்தையும் செய்வோம், அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களை பொறுப்பேற்கச் செய்வோம்,” என்று கூறியிருந்தார்.

இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பென்டகன் தலைவர்கள், இறந்த மூன்று வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சில மணிநேரங்களில் நடத்தப்பட்டுள்ளது. இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பைடன் ஆறுதல் கூறினார்.

‘இரான் விளைவுகளைச் சந்திக்கும்’

அமெரிக்க ராணுவம்

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக பிபிசியிடம் பேசிய அமெரிக்காவிற்கான முன்னாள் பிரிட்டன் தூதர் லார்ட் கிம் டாரோச், இந்த பதில் தாக்குதல்கள் தவிர்க்க முடியாதவை எனக் குறிப்பிட்டார். அதுவும் இது அதிபர் தேர்தல் நடக்கும் ஆண்டாக இருப்பதால், பதில் தாக்குதலைத் தவிர்ப்பது கடினம் என்றார்.

“இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்குப் பதிலடி கொடுப்பதில் அமெரிக்க அரசு நிர்வாகம் மென்மையாக இருக்க விரும்பவில்லை. இரான் மற்றும் சிரியாவிற்கு இதுவொரு எச்சரிக்கையாக இருக்கும். ஆனால், இந்தத் தாக்குதல்களும் பதில் தாக்குதல்களும் தொடர்ந்தால், அது மேலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தும்,” என்றார்.

அமெரிக்க தளங்கள் மீது நடந்த தாக்குதலுக்கு தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இரான் மறுத்தாலும், ஒரு முறை போராளிக் குழுக்களுக்கு நிதியளிக்கத் தொடங்கிவிட்டு, பின் தாக்குதல் நடத்துவதற்கு நாங்கள் உத்தரவிடவில்லை எனக் கூற முடியாது,” என்றார் லார்ட் கிம்.

“அதன் விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ளப் போகிறீர்கள்,” என்றார் அவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »