Press "Enter" to skip to content

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக – பாஜகவை சேர்த்து வைக்க ஜி.கே. வாசன் முயற்சியா? என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY/X

தமிழ்நாடு அரசியல் கட்சிகள், 2024 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கிப் பரபரப்பாக இயங்கத் தொடங்கியுள்ளன. ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு, அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட குழுக்களை அமைத்து பணியாற்றத் தொடங்கியுள்ளன.

திமுக கூட்டணி இந்த முறை 40க்கு 40 என்ற இலக்கோடு களமிறங்கியுள்ளது. திமுக மீதான எதிர்ப்பலையை வாக்குகளாக மாற்றி வெற்றி பெறுவோம் என நம்பிக்கையோடு இருக்கிறது அதிமுக.

இதர கட்சிகளான காங்கிரஸ், பாஜக, பாமக, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் வருகின்ற தேர்தலை நோக்கி வேகமாக இயங்கத் தொடங்கியுள்ளன. அதேநேரம் நடிகர் விஜய் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளதும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை இடங்கள், அதிமுக கூட்டணியில் யார் இடம்பெறப் போகிறார்கள், பாஜகவின் நகர்வுகள் என்ன, இதர மாநில கட்சிகளின் பாத்திரம் என்ன போன்ற கேள்விகள் அரசியல் களத்தை ஆக்கிரமித்துள்ளது.

திமுக கூட்டணி

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், DMK / TWITTER

தமிழ்நாட்டில் தற்போது ஆளும்கட்சியாக இருந்து வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கடந்த சட்டமன்றத்தில் போட்டியிட்ட அதே கூட்டணி களம் இறங்குகிறது. இதில் இந்திய ஜனநாயகக் கட்சி மட்டும் ஏற்கெனவே பாஜகவில் இணைந்துவிட்டது. மற்றபடி மீண்டும் அதே கூட்டணியே தொடர்வதாகக் கூறியுள்ளார் தமிழன் பிரசன்னா.

இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கு கடந்த முறையைவிட குறைந்த இடங்களே வழங்கப்படும் என்று திமுக சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிலும் குறிப்பாக, இந்த முறை கண்டிப்பாக திமுக 25 இடங்களில் போட்டியிட உள்ளதாகவும், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு 15 இடங்களை ஒதுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீடு செய்வதற்காக திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னா, “தொகுதி பங்கீட்டுக்கான குழு பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இதைத் தாண்டி யாருக்கு எவ்வளவு தொகுதிகள், எந்த இடங்கள் வழங்க வேண்டும் என்பதைக் கூட்டணியின் தலைவர் முதல்வர் முக.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து வந்ததற்குப் பிறகு முடிவு செய்வார்,” என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணி குறித்துப் பேசிய அவர், “தேர்தல் அறிக்கைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான பணிகள் சிறப்புக் கூட்டங்கள் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நடந்து வருவதாக” கூறியுள்ளார்.

முதல் கட்ட பேச்சுவார்த்தை

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், SELVA PERUNTHAGAI / TWITTER

முதல் கட்டமாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது திமுக. இந்தப் பேச்சுவார்த்தையில் கடந்த தேர்தலைவிட அதிக இடங்களில் போட்டியிட காங்கிரஸ் பட்டியல் அளித்ததாகவும், ஆனால் இந்த முறை 5 முதல் 7 இடங்களே காங்கிரசுக்கு ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் களத்தில் தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை, “திமுகவுடனான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் காங்கிரசின் அகில இந்திய தலைவர்களில் ஒருவரான முகுல் வாஸ்னிக் தலைமையில் பங்கேற்றோம். எந்தெந்த தொகுதி, எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறோம் என்று பின்னால் முடிவு செய்து கொள்ளலாம் என்று பேசிவிட்டு மகிழ்ச்சியோடு விடைபெற்றுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

இதற்குப் பின் பிப்ரவரி 9ஆம் தேதிக்கு மேல் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த முறை 9+1 என்ற அடிப்படையில் போட்டியிட்ட காங்கிரசுக்கு இந்த முறை தொகுதிகளின் எண்ணிக்கை குறையுமா என்று கேட்டபோது, “இல்லை திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவானது. கேட்பதற்கு எங்களுக்கும் உரிமை உள்ளது. கொடுப்பதற்கு அவர்களுக்கும் தாராளமான மனது உள்ளது. எத்தனை இடம் என்பதை உயர்மட்டக் குழு தீர்மானித்து, பேச்சுவார்த்தையின் இறுதியில் அறிவிக்கும்,” என்று பதிலளித்தார்.

இடதுசாரிகளின் நிலை

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், ANI

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று (பிப்ரவரி 3) திமுகவுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இந்த முறை முன்பைவிட அதிகமான இடங்களைக் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைக்குப் போன 10 நிமிடங்களிலேயே வெளியே வந்துவிட்டனர்.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனிடம் கேட்டபோது, “பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. எங்களது விருப்பத்தைத் தெரிவித்து வந்துள்ளோம். அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும். மற்ற விஷயங்கள் பின்னர் அறிவிக்கப்படும்,” என்று பதிலளித்துள்ளார்.

மற்றுமொரு இடதுசாரி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஞாயிற்றுக்கிழமை (4.2.2024) பேச்சுவார்த்தைக்குச் செல்ல இருக்கிறது. அவர்களும் இந்த முறை மூன்று இடங்களைக் கேட்க வாய்ப்புள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் மற்ற கூட்டணிக் கட்சிகள்

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், DMK / TWITTER

திமுக கட்சியில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு முக்கிய கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த தேர்தலில் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றில் திமுக சின்னத்திலும், மற்றொன்றில் பானை சின்னத்திலும் போட்டியிட்டது.

இந்நிலையில் இந்த முறை கூடுதல் இடங்ளையும், அனைத்து இடங்களிலும் பானை சின்னத்தில் போட்டியிட கேட்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து விசிகவின் தலைவர்களில் ஒருவரான வன்னியரசுவிடம் கேட்டபோது, “தற்போதைக்கு எந்தத் தகவல்களும் கூற இயலாது. கட்சித் தலைமை முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடந்த பின்னரே இன்னும் 10 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும்,” என்று தெரிவித்தார்.

இதர கூட்டணிக் கட்சிகளான மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஏற்கெனவே தங்களுக்கு வழங்கப்பட்ட தொகுதிகளையே எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக, மதிமுக தலைவர் வைகோ, “நான் திமுகவை நிர்பந்திக்கும் சூழலை உருவாக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார். இது இல்லாமல், மக்கள் நீதி மையம் கமல்ஹாசனும் திமுக கூட்டணிக்குள் வந்தால் அவருக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என்று பேச்சுவார்த்தை ஓடிக் கொண்டிருக்கிறது.

அதிமுக கூட்டணியின் நிலை என்ன?

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், AIADMK / TWITTER

ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சியான அதிமுக பொறுமையாகவே தேர்தல் பணிகளைக் கையாண்டு வருகிறது. இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைவருமான ஜெயக்குமார் அவர்களிடம் பேசியபோது, போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், “பாஜகவோடு கூட்டணி சேர 1000% வாய்ப்பு இல்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்களுக்கு திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அரசியல் எதிரிதான்.

எனவே இந்த இரண்டு கட்சிகள் தவிர வேறு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம். எங்கள் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதற்காகப் பல கட்சிகள் தயாராக உள்ளனர். விரைவில் அறிவிப்பு வெளியாகும்,” என்று கூறியுள்ளார்.

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், D JAYAKUMAR / TWITTER

ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் குறித்துப் பேசிய அவர், “தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எங்கள் தலைமையில் அமையும் கூட்டணியில்தான் வருவார்கள். அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் போன்றவர்களுடன் எந்தக் காலத்திலும் சேரப் போவதில்லை. அவர்கள் இல்லாத அதிமுகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளார் ஜெயக்குமார்.

இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுக இடையே இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் தமிழ் மாநில காங்கிரசின் தலைவர் ஜிகே வாசன் ஈடுபட்டுள்ளார் என்றும் சில தகவல்கள் பரவி வருகின்றன. இதற்குக் காரணமாக சமீபத்தில் ஜிகே வாசன் ஜேபி.நட்டா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களைச் சந்தித்தது கூறப்படுகிறது.

வழக்கமான சந்திப்புதான்

இதற்குப் பதிலளித்த ஜிகே வாசன், “ராஜ்ய சபா உறுப்பினராக கூட்டத்திற்குச் சென்றபோது ஜேபி.நட்டாவை சந்தித்தேன். ஒரு ஐந்து நிமிடம் சிரித்துப் பேசினோம்.

மூன்று நாளுக்கு முன்புகூட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் அவரது பயணம் குறித்து ஃபோனில் பேசினேன். நேற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்களைப் பார்த்தேன். ஒரு கட்சித் தலைவராக இது வழக்கமான சந்திப்புதான்,” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டணி குறித்துக் கேட்டபோது, “வருகின்ற 12ஆம் தேதி மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் கூடுகிறது. அங்கு எடுக்கப்படும் முடிவைப் பொறுத்தே யாருடன் கூட்டணி என்பது அறிவிக்கப்படும்,” என்று கூறியுள்ளார் அவர்.

பாஜக என்ன செய்யப் போகிறது?

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், NARAYANAN THIRUPATHY

அதிமுக-பாஜக கூட்டணி முறிவுக்குப் பிறகு பாஜக தலைவர்கள் பெரிதும் கூட்டணி குறித்துப் பேசாமல் மௌனம் காத்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் தயாரிப்புகள் குறித்து அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்.

அவர், “25 தொகுதிகளில் வெற்றி பெறுவதே எங்களுடைய இலக்கு. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதற்காக கட்சியை வலுப்படுத்தும் பணிகளைச் செய்துள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி குறித்துக் கேட்டபோது, “கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும். எங்களுக்கு 39 தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதே இலக்கு. அதை சிறப்பாகச் செய்துள்ளோம். நாங்கள் உறுதியாக வெற்றி பெறுவோம்,” எனக் கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.

இந்தியா கூட்டணி குறித்த கேள்வியை முன்வைத்தபோது, “நாடு முழுவதும் இந்தியா கூட்டணி உடைந்து போய்விட்டது. தமிழகத்தில் மட்டுமே திமுக வேறு வழியில்லாமல் காங்கிரசை பிடித்துக் கொண்டிருப்பது ஏன் என்றுதான் புரியவில்லை. காங்கிரஸ் தேவையில்லாத சுமை என்பதை எப்போது திமுக புரிந்துகொள்ளும் என்று தெரியவில்லை,” என்று கூறியுள்ளார் அவர்.

இந்தியா கூட்டணி

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

நாடு முழுவதும் பாஜகவை எதிர்த்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் மாநில கட்சிகள் சேர்ந்து காங்கிரசின் தலைமையில் ஒன்றிணைந்துள்ளன.

இந்நிலையில் அந்தக் கூட்டணியில் இருந்த நிதிஸ் குமார் சமீபத்தில் பாஜவுடன் இணைந்து பிகாரில் மீண்டும் ஆட்சி அமைத்துவிட்டார். மமதா பானர்ஜி போன்ற சிலர் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாஜகவின் விமர்சனம் குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, “பாஜகவை கூடுதல் சுமை என்று சொல்லி அதிமுகவே விரட்டிவிட்டது. அங்கு அவர்களை பதில் சொல்லச் சொல்லுங்கள். திமுக-காங்கிரஸ் கூட்டணி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி கூட்டணியாக இருக்கிறது.

அதேநேரம் , சந்திரபாபு நாயுடு, அகாலிதளம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பாஜகவை விட்டு விலகிவிட்டனர். ஆனால் நாங்கள் உறுதியான கூட்டணியாகத் தொடர்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம்

மக்களவை தேர்தல்

பட மூலாதாரம், VIJAY / INSTAGRAM

பிரதான கட்சிகளைத் தாண்டி இந்தத் தேர்தலில் நடிகர் விஜயின் புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் பங்கு எப்படி இருக்கும் என்ற விவாதம் அரசியல் களத்தில் அனலாய் கொதித்துக் கொண்டிருக்கிறது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பங்கேற்கவில்லை என்று விஜய் அறிவித்துவிட்டாலும், அவரது கட்சித் தொண்டர்களின் வாக்கு யாருக்குப் போகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராம்குமார், “நாங்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்கவில்லை என்று கூறிவிட்டாலும், ஒரு கட்சியாக எங்களது தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டிய சூழல் உள்ளது. எனவே, விரைவில் இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அல்லது என்ன செய்ய வேண்டும் என்று கட்சி அறிவிப்பு வெளியிடும்,” என்று தெரிவித்துள்ளார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »