Press "Enter" to skip to content

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் 75வது குடியரசு தினத்திற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, ஜனவரி 22 அன்று, பிரதமர் நரேந்திர மோதி அயோத்தியில் புதிய ராமர் கோவிலைத் திறந்து வைத்தார்.

சுமார் 73 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். சோம்நாத் கோவில் ஆப்கானிய படையெடுப்பாளர்களால் பலமுறை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. 11ஆம் நூற்றாண்டில் கஜினி முகமதுவின் தாக்குதலால் அந்தக் கோவில் அதிக சேதத்தைச் சந்தித்தது.

சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தக் கோவில் மீண்டும் கட்டப்பட்டு, ராஜேந்திர பிரசாத் முன்னிலையில் அக்கோவிலில் வழிபாடு தொடங்கியது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த மத நிகழ்வில், நாட்டின் குடியரசுத் தலைவர் பங்கேற்க வேண்டும் என்பதில் உடன்படவில்லை.

கடந்த 1951இல், ராஜேந்திர பிரசாத்துக்கு நேரு எழுதிய கடிதத்தில், “அன்புள்ள ராஜேந்திர பாபு, சோம்நாத் விவகாரம் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இந்த விவகாரம் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் அஞ்சியது போல், மதச்சார்பற்ற அரசாங்கம் இதுபோன்ற நிகழ்வுகளை எவ்வாறு கையாள முடியும் என்றும் கேட்கப்படுகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி இந்துத்துவா அரசியலில் இருந்து வளர்ந்தவர். நேரு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து சுதந்திரத்திற்கான போராட்டத்தில் இருந்து வளர்ந்து வந்தவர். நேருவின் தேசியவாதம் காலனித்துவத்திற்கு எதிரானது, அதன் மையத்தில் பெரும்பான்மைவாதம் அல்ல, பன்மைத்துவம் இருந்தது.

மோதியின் தேசியவாதம் என்பது அவரது கட்சியின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் அதாவது ஆர்.எஸ்.எஸ்-இன் தேசியவாதம். பல வரலாற்று ஆசிரியர்கள் ஆர்.எஸ்.எஸ் காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதத்திற்குப் பதிலாக மத அடிப்படையிலான தேசியவாதத்தை ஏற்றுக் கொண்டதாக நம்புகின்றனர்.

இந்துத்துவா மற்றும் சுதந்திரத்திற்கான போராட்டம்

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM

நேருவின் தேசியவாதத்தில், இந்தியா பிரிட்டிஷ் பேரரசின் அடிமையாகக் கருதப்படுகிறது. அதேநேரம், மோதியும் ஆர்எஸ்எஸ்ஸும் இந்தியாவை 1,200 ஆண்டுகால அடிமையாகக் கருதுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் இடைக்கால இந்தியா முழுவதையும் அடிமையாகக் கருதுகிறது. இத்தகைய சூழ்நிலையில், முஸ்லிம் ஆட்சியாளர்களின் சின்னங்கள் மற்றும் கட்டுமானங்களை அகற்றுவது ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சித்தாந்தத்தின் ஒரு பகுதி.

ராமர் கோவில் திறப்பு விழாவில் (‘பிரான் பிரதிஷ்டை’) மோதியே முன்னிலை வகித்தார். ஆனால், ​​மத நிகழ்ச்சிகளில் இருந்து அரசாங்கம் விலகியிருக்க வேண்டும் என்று நேரு விரும்பினார். இந்த இரண்டு சம்பவங்களும் இந்திய அரசியலுக்கு மிகவும் முக்கியமானவை என வரலாற்றாசிரியர் முகுல் கேசவன் கருதுகிறார்.

முகுல் கேசவன் பிபிசியிடம் கூறுகையில், “எந்த சூழ்நிலையிலும் மதத்திற்கும் அரசுக்கும் இடையிலான லட்சுமண ரேகையை உடைக்க நேரு விரும்பவில்லை. மறுபுறம், நரேந்திர மோதி மதத்திற்கும் அரசுக்கும் இடையிலான லட்சுமண ரேகையைக் கிட்டத்தட்ட துடைத்துவிட்டார். அயோத்தியில் ராமர் கோவில் ஒரு சக்தி வாய்ந்த மத அடையாளமாக உள்ளது. முதன்மையாக இது பெரும்பான்மை மேலாதிக்கத்தின் அரசியல் செய்தி,” என்றார்.

அவர் கூறுகையில், “சங் பரிவாரம் மற்றும் அதன் தலைவர்களின் திட்டத்தில் முதல் மசூதிதான் பாபர் மசூதி. அதில் வெற்றி வெளிப்படையாகத் தெரிகிறது. பெரும்பான்மையினரின் உணர்வுகளைத் தூண்டி சிறுபான்மையினரை அச்சுறுத்தும் இந்தத் தொடர்ச்சியான முயற்சி, இந்தியக் குடியரசின் ஜனநாயக அடித்தளத்தை அழித்துவிடும்,” என்கிறார்.

இந்த மாதம் பனாரஸின் ஞானவாபி மசூதியில் வழிபாடு நடத்த இந்து மதகுருமார்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கீழமை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பில் தலையிட அலகாபாத் உயர் நீதிமன்றமும் மறுத்துவிட்டது. மதுராவில் உள்ள மசூதி தொடர்பாகவும் இதே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், @NARENDRAMODI

காங்கிரஸின் காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதத்திற்கு மாறாக 1925இல் ஆர்எஸ்எஸ் உருவானதில் இருந்து நிறுவ விரும்பிய இந்து பெரும்பான்மை தேசியவாதம் பலனளிப்பதாகப் பலர் நம்புகிறார்கள்.

முகுல் கேசவன் கூறுகையில், “இந்துத்துவா அரசியல் வேண்டுமென்றே வரலாற்றை மாற்றி எழுதவும் காலனித்துவ எதிர்ப்பு தேசியவாதத்தை சீரழிக்கவும் முயல்கிறது. சுதந்திர இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபையின் பங்கு அற்பமானது. இந்த அமைப்புகள் பன்மைத்துவ தேசியவாதத்தின் தலைவர்கள். காந்தி மீதும் அவருடைய கொள்கைகள் மீது ஆழ்ந்த வெறுப்பு அந்த இயக்கங்களுக்கு இருக்கின்றன,” எனத் தெரிவித்தார்.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் எழுத்தாளருமான சபன் தாஸ்குப்தா மாநிலங்களவை எம்.பி-யாகவும் இருந்துள்ளார். ராமர் கோவில் கட்டப்பட்டதாலும், திறப்பு விழாவுக்கு பிரதமர் மோதி வருகை தந்ததாலும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்பதைத்தான் நம்பவில்லை என தாஸ்குப்தா கூறுகிறார்.

தாஸ்குப்தா பிபிசியிடம் கூறுகையில், “பாருங்கள், நீங்கள் அரசமைப்பு அடையாளத்தையும் கலாசார அடையாளத்தையும் பிரிக்க முடியாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. நேருவை பின்பற்றுபவர்கள் அரசமைப்பு அடையாளத்திற்கும் கலாசார அடையாளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்புகின்றனர். இந்தியா 1950இல் உருவானது என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், இந்தியா 1950இல் உருவாகவில்லை. இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது,” என்றார்.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

தாஸ்குப்தா கூறுகையில், “அயோத்தியின் இருப்பு இந்திய அடையாளத்தின் மீள் எழுச்சி என்று நான் நினைக்கிறேன். வரலாற்றை நம்மால் திருத்த முடியாது. ஆனால் கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பதை முன்னர் யாருமே ஏற்கவில்லை. குறைந்தபட்சம் வரலாற்றையாவது நீங்கள் திருத்தலாம். குறைந்தபட்சம் ஏற்றுக் கொள்ளுங்கள். ராமர் கோவில் கட்டுவது என்பது வரலாற்றைத் திருத்துவது அல்ல. ஆனால், அது வரலாற்றின் தவறுகளை நினைவுபடுத்தும்,” என்றார்.

இடைக்கால இந்தியாவில் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் நவீன ஜனநாயக இந்தியாவில் இந்து, முஸ்லிம் எனப் பார்க்கப்பட வேண்டுமா?

இந்தியாவின் புகழ்பெற்ற சமூக விஞ்ஞானி அஸ்கர் அலி கூறுகையில், “முந்தைய ஆட்சியாளர்களால் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது போரிலோ அல்லது படையெடுப்பிலோ வெற்றியின் சின்னம். அதை இந்து மற்றும் முஸ்லிம் என்று பார்ப்பது சரியல்ல,” என்று கூறினார்.

சபன் தாஸ்குப்தா கூறுகையில், “இந்துத்துவா ஓர் அரசியல் சித்தாந்தம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மதம் அதன் ஒரு பகுதி. அரசையும் மதத்தையும் இணைக்கக் கூடாது என்றும் நான் நம்புகிறேன். இந்தியாவில் மதச்சார்பின்மை ஆபத்தில் இருப்பதாக நான் நினைக்கவில்லை. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இருந்தால், அப்படிச் சொல்லலாம்,” என்றார்.

பாஜக தற்போது பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியில் உள்ளது. இந்திய குடியரசைத் தனது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைத்து வருகிறது.

இந்தியாவின் வகுப்புவாத மற்றும் மதப் பெரும்பான்மை அரசியலைப் பற்றி புத்தகம் எழுதியுள்ள ராம் புண்யானி கூறுகையில், “1947 மற்றும் 1950க்கு இடையில் எழுதப்பட்ட இந்திய அரசமைப்பில் இந்தியாவின் ஆன்மா நசுக்கப்பட்டதாக ஆர்எஸ்எஸ் உணர்கிறது. இப்போது அவர்களின் விருப்பப்படி அரசமைப்பை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆர்.எஸ்.எஸ் பெற்றுள்ளது,” என்றார்.

இந்தியா, ஐரோப்பாவின் மதச்சார்பின்மை

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

மேற்கே மதச்சார்பின்மையின் எழுச்சி, மத அரசுகளின் கொடுங்கோன்மைக்கு எதிரான இயக்கத்துடன் தொடங்கியது. மதத்தின் குறுக்கீடு அதிகமாக இருந்ததால் இந்த இயக்கம் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக இருந்தது.

திருச்சபையின் அதிகாரம் பலமாக இருந்தது. ஐரோப்பாவில் முதலாளித்துவம் மற்றும் வர்த்தகத்தின் விரிவாக்கத்துடன் தோன்றிய வர்க்கம் மதச்சார்பின்மையை ஆதரித்தது என்று பலர் நம்புகிறார்கள். ஆனால் ஐரோப்பாவில் சிறுபான்மையினர் அதே மத அரசில் அழிவைச் சந்தித்தனர்.

இந்தியாவில் காங்கிரஸை பொறுத்தவரை, ஆரம்பத்தில் மதச்சார்பின்மை என்பது அரசை மதத்தில் இருந்து பிரிக்கும் யோசனையாக இருந்தது. ஆனால் காலனித்துவ ஆட்சியின் கொள்கைகள் மற்றும் இந்தியர்களின் பல்வேறு குழுக்களின் அணுகுமுறை காரணமாக, காங்கிரஸும் மதச்சார்பின்மை தொடர்பான நிலைப்பாட்டில் மாற வேண்டியிருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவின் மதச்சார்பின்மை அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.

நேரு 1961இல் மதச்சார்பின்மை பற்றிக் கூறுகையில், “நாங்கள் இந்தியாவில் ஒரு மதச்சார்பற்ற அரசைப் பற்றி பேசுகிறோம். ஆனால், இந்தியில் ‘மதச்சார்பற்ற’ என்பதற்கு ஒரு நல்ல வார்த்தையைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. மதச்சார்பின்மை என்றால் மதத்தை எதிர்ப்பது என்று சிலர் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. இதன் பொருள் அரசு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும், அனைத்து மதத்தினருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் என்பதுதான்,” என்றார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியரான அகீல் பில்கிராமி, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் கடந்த மாதம் பேசுகையில், “இந்தியாவின் மதச்சார்பின்மை மூன்று உறுதிப்பாடுகளால் ஆனது. முதலில், மத நம்பிக்கை மற்றும் நடைமுறைச் சுதந்திரம். இரண்டாவது, சமத்துவம், சுதந்திரம் போன்ற அரசமைப்பின் அடிப்படை உரிமைகள். பாலின சமத்துவத்தை உறுதி செய்வதில் மதத்திற்கு எந்தப் பங்கும் இருக்காது. மூன்றாவது உறுதிப்பாடு என்னவென்றால், முதல் மற்றும் இரண்டாவது இடையே ஏதேனும் முரண்பாடு இருந்தால், இரண்டாவது உறுதிப்பாடு அவசியம் முன்னுரிமை பெற வேண்டும்,” என்றார்.

பேராசிரியர் பில்கிராமி கூறுகையில், “மதப் பெரும்பான்மைவாதத்தால் ஐரோப்பாவில் ஏற்பட்ட சேதத்தை ஈடுசெய்யவே மதச்சார்பின்மை என்ற எண்ணம் கொண்டு வரப்பட்டதாக மகாத்மா காந்தி கருதினார்.

அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் மதப் பெரும்பான்மையினரால் இத்தகைய சேதம் ஏற்படவில்லை என்று காந்தி நினைத்தார். எனவே, அதுபோன்ற மதச்சார்பின்மை இங்கு தேவையில்லை. இந்தியச் சூழலில் அது பொருத்தமற்றது.

காந்திக்கு தேசியவாதம் என்பது காலனித்துவ எதிர்ப்புதான். அத்தகைய சூழ்நிலையில் இந்திய தேசியமும் ஐரோப்பாவின் தேசியவாதத்தில் இருந்து வேறுபட்டு பன்முகத்தன்மை கொண்டது,” என்றார்.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

இந்தியாவின் புகழ்பெற்ற சமூகவியலாளரும் உளவியலாளருமான ஆஷிஷ் நந்தி, இந்தியாவின் மதச்சார்பின்மை பற்றிக் கூறுகையில், “இந்திய சகிப்புத்தன்மை என்பது நம்பிக்கையின் அடிப்படையிலானது. அக்பரும் அசோகரும் மதச்சார்பின்மை பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. அக்பர் ஒரு முஸ்லிம். அவருடைய இஸ்லாம் தாராளமயமானது. அசோகர் ஒரு பௌத்தர். அவருடைய பௌத்தம் தாராளமயமானது. இன்றைய மதச்சார்பின்மையின் சித்தாந்தத்தைவிட அசோகர், அக்பரின் சித்தாந்தம் மக்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. மக்களுடன் தொடர்பில்லாத ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதில் என்ன பயன்?” என்கிறார்.

இந்தியாவில் மதச்சார்பின்மை என்ற வரையறை தோல்வியடைகிறதா? அல்லது மதச்சார்பின்மையை வேறு விதமாகப் பார்க்க வேண்டுமா? மதச்சார்பின்மையின் விழுமியங்களைக் காப்பாற்ற அரசியல் வர்க்கமும் சமூகமும் என்ன செய்ய வேண்டும்?

இதற்குப் பதிலளித்த முகுல் கேசவன், “தற்போதைய காலத்தில் மதச்சார்பின்மையின் சுருக்கமான தர்க்கத்திற்குள் செல்லக்கூடாது. அரசமைப்பு உரிமைகளை அமல்படுத்த வேண்டும். குடியுரிமைக்காக மத அடையாளம் சிஏஏவின் (குடியுரிமை திருத்தச் சட்டம்) கீழ் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது, இது நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில், இவை பாகுபாடு காட்டும் சட்டங்கள். சிறுபான்மையினருக்கு எதிரானது, எனவே அவை திரும்பப் பெறப்பட வேண்டும். மத அடையாளத்தின் அடிப்படையில் குடிமக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்,” என்கிறார் அவர்.

அவர் கூறுகையில், “உதாரணமாக, உத்தர பிரதேச காவல்துறை இறைச்சி வியாபாரத்தில் ஈடுபடும் முஸ்லிம்களை குறிவைக்கிறது. இந்தியா இந்து தேசம் என்பதை முஸ்லிம்களுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற உணர்வை பெரும்பான்மை வாக்காளர்கள் மனதில் பாஜக விதைத்துள்ளது. இத்துடன், முஸ்லிம்களை இழிவுபடுத்துவது, நாட்டின் வளர்ந்து வரும் அரசியல் சக்தியின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது,” எனத் தெரிவிக்கிறார்.

மதச்சார்பின்மை பற்றிய விவாதத்தில், “வாழ்வாதாரம் மற்றும் குடியுரிமை ஆகியவற்றில் சம உரிமைக்காக நாம் போராட வேண்டும்,” என்று கேசவன் கூறுகிறார்.

அரசுக்கும் மதத்திற்கும் இடையிலான உறவுகள்

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், @BJP4INDIA

கடந்த 2020இல் அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பிரதமர் மோதி பூமி பூஜை செய்தபோது, அந்த பூஜை மதச்சார்பின்மையின் எச்சங்களைக்கூட எரித்துவிட்டது என்று பிரபல அரசியல் விஞ்ஞானியும் சிஎஸ்டிஎஸ் பேராசிரியருமான ராஜீவ் பார்கவா எழுதியிருந்தார்.

இந்தியாவில் மதச்சார்பின்மையை இரண்டு பகுதிகளாகப் பார்க்கிறார் பேராசிரியர் பார்கவா. ஒன்று அரசமைப்பு மதச்சார்பின்மை, மற்றொன்று கட்சி-அரசியல் மதச்சார்பின்மை.

அரசமைப்பு மதச்சார்பின்மையில் இரண்டு முக்கியமான விஷயங்களை பேராசிரியர் பார்கவா குறிப்பிடுகிறார். முதலில், அனைத்து மதங்களும் மதிக்கப்பட வேண்டும். ஏனென்றால் மற்ற நாடுகளின் மதச்சார்பின்மை போலன்றி, இந்தியாவின் மதச்சார்பின்மை மதத்திற்கு எதிரானது அல்ல.

பி.ஆர்.அம்பேத்கர், “மதத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் அல்லது ஒவ்வொரு சடங்குகளையும் மதிக்க முடியாது. அதாவது மதத்தை மதிக்க வேண்டும், ஆனால் விமர்சனத்துடன் இருக்க வேண்டும். இதனுடன், அரசு மற்றும் மதம் ஒன்றாக இருக்கக்கூடாது. மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும்போது, ​​மதம் பாகுபாட்டுக்குக் காரணமாக மாறும்போது, ​​​​அரசு தலையிட வேண்டும். இரண்டாவதாக, அரசு தன்னை மதத்தில் இருந்து முற்றிலும் பிரிக்காமல், மாறாக அனைத்து மதங்களில் இருந்தும் கொள்கை ரீதியான தூரத்தைப் பேண வேண்டும்,” எனக் கூறியிருக்கிறார்.

அவர் எழுதுகையில், “உதாரணமாக, தீண்டாமையை சகித்துக்கொள்ள முடியாது. தனிப்பட்ட சட்டத்தை அப்படியே இருக்க அனுமதிக்க முடியாது. மதத்தில் எப்போது தலையிட வேண்டும், எப்போது தூரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அரசு தீர்மானிக்க வேண்டும். அரசமைப்பு உறுதிப்பாட்டின்படி சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு இடையே மதம் குறுக்கே வர அனுமதிக்கக்கூடாது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேவையான நேரங்களில் மத விஷயங்களில் இந்திய அரசு பலமுறை தீர்க்கமாகத் தலையிட்டுள்ளது. விலங்குகள் பலி கொடுக்கப்படுவது, தலித்துகள் கோவில்களுக்குள் நுழைவதைத் தடுப்பது ஆகியவற்றில் தலையிட்டு அரசே தலையிட்டது. அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று நேரு பேசினார்.

இருப்பினும், பேராசிரியர் பார்கவா, இந்தியாவின் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தில், மதங்களுக்கு இடையிலான தூரம் கருத்தியல் மற்றும் சமமான தூரம் அல்ல என்று கூறுகிறார். “அரசாங்கம் சில நேரங்களில் வெவ்வேறு மத குழுக்களுடன் வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுக்கிறது. உதாரணமாக, இந்திய அரசு இந்து தனிநபர் சட்டத்தைச் சீர்திருத்தியது மற்றும் ஒரு புதிய இந்து சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது. ஆனால் மத சிறுபான்மையினரின் வழக்குகளில் இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஷரியா சட்டத்தில் இருந்து முஸ்லிம்கள் விலக்கப்படவில்லை,” என்கிறார் அவர்.

பேராசிரியர் பார்கவா கூறுகையில், “அரசமைப்பு மதச்சார்பின்மை அரசாங்கத்தைச் சார்ந்திருக்க முடியாது. அதைத் தக்க வைக்க, ஒரு பாரபட்சமற்ற நீதித்துறை, நேர்மையான ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விழிப்புள்ள குடிமக்கள் தேவை,” எனத் தெரிவிக்கிறார்.

பேராசிரியர் பார்கவா கூறுகையில், “இந்தியாவில் கட்சி-அரசியல் மதச்சார்பின்மை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தது. அது தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. இதில் மதச்சார்பற்ற கட்சிகள் எனப்படும் கட்சிகளும் இடம் பெற்றுள்ளன,” என்றார்.

பேராசிரியர் பார்கவா கூறுகையில், “கட்சி-அரசியல் மதச்சார்பின்மை அனைத்து மதிப்புகளையும் சந்தர்ப்பவாதத்துடன் மாற்றியுள்ளது. அரசியல் கட்சிகள் சந்தர்ப்பவாதமாக மதத்தில் இருந்து விலகி, உடனடி தேர்தல் ஆதாயங்களுக்காக மதக் குழுக்களுடன் சந்தர்ப்பவாத கூட்டணியை உருவாக்கத் தொடங்கின. அது பாபர் மசூதி/ராமர் கோவில் பூட்டுகளைத் திறந்து வழிபட்டதாக இருந்தாலும் சரி அல்லது ஷா பானோ வழக்கில் பெண்களின் உரிமைகளைப் புறக்கணித்து மத அடிப்படைவாதத்துடன் சமரசம் செய்ததாக இருந்தாலும் சரி” என்கிறார் அவர்.

நேருவுக்கு பிறகு அடிபட்ட காங்கிரஸின் மதச்சார்பற்ற மரபு

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

நேரு எப்போதும் நிலைநிறுத்திய மதச்சார்பின்மை பலவீனமடைவது அவரது குடும்பத்தில் இருந்தே தொடங்குகிறது. 1980களில் இருந்து, இந்தியாவின் மதச்சார்பின்மை நெருக்கடியை சந்திக்கத் தொடங்கியது. அதன் புகழ் குறைந்து வருவதால், காங்கிரஸ் கட்சி இதுபோன்ற பல முடிவுகளை எடுத்தது. இது ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா அரசியலை வலுப்படுத்தியது. இந்திரா காந்தி அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திற்கு சிறுபான்மை நிறுவன அந்தஸ்தை வழங்கினார்.

இந்திரா காந்தியும் இந்துத்துவ கட்சியான சிவசேனாவிடம் உதவி பெற்றார். பஞ்சாபில் அகாலி தளத்தைச் சீர்குலைக்க ஜெனரல் சிங் பிந்திரன்வாலேவை ஊக்குவித்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார். மேலும் 1983இல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஆதரவுடன் கட்டப்பட்ட பாரத மாதா கோவிலில் வழிபடத் தொடங்கினார்.

கடந்த 1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரது மகன் ராஜிவ் காந்தி பிரதமரானார். அவரது கொள்கைகள் மீது கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன. ஷா பானோ வழக்கில் ராஜிவ் காந்தி முஸ்லிம் அடிப்படைவாதிகளிடம் சரணடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஷா பானோ இந்தூரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண், விவாகரத்து வழக்கில் அவரது கணவருக்கு ஜீவனாம்சம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ராஜிவ் காந்தி நாடாளுமன்றத்தில் சட்டத்தை மாற்றும் செயல்முறையை ஏற்று இந்த முடிவை ரத்து செய்தார்.

ராஜிவ் காந்தியின் இந்த முடிவு இந்துத்துவா அரசியல் செய்பவர்களுக்கு காங்கிரஸ் போலி மதச்சார்பின்மை அரசியல் செய்கிறது என்று சொல்ல வாய்ப்பளித்தது. இங்கிருந்துதான் முஸ்லிம் சமாதானம் என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இதற்குப் பிறகு, இந்து தேசியம் பற்றிப் பேசுபவர்கள் தங்கள் அரசியலை வலுப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்தியர்கள் வகுப்புவாதிகளாக ஆகிவிட்டார்களா?

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், ANI

கடந்த 1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நேருவின் வெற்றி மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக மாறினாலும், இந்தியாவின் பெரும்பான்மையான இந்து மக்கள் மதச்சார்பற்ற இந்தியாவில் முத்திரை பதித்துள்ளதாகவும், பொதுவான கலாசாரத்தில் வாழத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரிவினைக்குப் பிறகு நடந்த வகுப்புவாத வன்முறையின் நினைவுகள் மக்கள் மனதில் பசுமையாக இருந்தபோதுதான் இது நடந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, ​​ராமர் கோவில் கேட்டு பிரசாரம் செய்த பாஜக தலைவர்களும் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தனர்.

பாபர் மசூதி 1992இல் இடிக்கப்பட்ட பிறகு, அடல் பிஹாரி வாஜ்பாய் பாஜகவின் தேசிய செயற்குழுவில் இருந்து விலக முன்வந்தார். ஆனால், அவரது ராஜினாமாவை கட்சி ஏற்கவில்லை. அப்போது கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில் அடல் பிஹாரி வாஜ்பாய், “டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் என்ன நடந்ததோ அது நடந்திருக்கக் கூடாது,” என்று கூறியிருந்தார்.

ஆனால், இப்போது காலம் மாறிவிட்டது, பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பாஜகவினர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. உண்மையில், ராமர் கோவில் பிரசாரத்தில் குரல் கொடுத்த உமாபாரதி, அதைப் பற்றிப் பெருமையாகப் பேசினார். பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வட இந்தியாவிலும் மும்பையிலும் பெரும் கலவரங்கள் நடந்தன.

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான நிலஞ்சன் முகோபாத்யாய், இந்து தேசியவாதம் குறித்த பிரபல நிபுணரும், ’மோதியின் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதியவருமான பேராசிரியர் கிறிஸ்டோஃப் ஜாஃபரெல்லோவிடம், ’மதச்சார்பின்மை என்பது இந்தியர்களின் ரத்தத்திலேயே இருப்பதாகக் கூறப்படுகிறதே, அது உண்மையா?’ எனக் கேட்டார்.

கிறிஸ்டோஃப் பதிலளிக்கையில், “இப்போது முழு விவாதமும் மாறிவிட்டது. இந்தியர்கள் இயல்பிலேயே மதச்சார்பற்றவர்கள் என்று சொல்ல முடியாது. 1984இல் அயோத்தி இயக்கம் தொடங்கியபோது, ​​மக்களை ஒன்றிணைப்பது மிகவும் கடினமாக இருந்தது.

எல்லாவற்றுக்கும் மேலாக, 1989க்குப் பிறகு பல கலவரங்கள் நிகழ்ந்தன. இந்தக் கலவரங்கள் பிரிவினை பிரசாரத்தில் பெரும் பங்கு வகித்தன. இயல்பிலேயே யாரையும் வகுப்புவாதிகள் என்றுகூடச் சொல்ல முடியாது. பயத்தைக் காட்டி மக்கள் வகுப்புவாதிகளாக ஆக்கப்படுகிறார்கள். ஒரு எதிரி உருவாக்கப்படுகிறான், பாதுகாப்பின்மை உணர்வு உருவாக்கப்படுகிறது,” எனத் தெரிவித்தார்.

கிறிஸ்டோஃப் கூறுகையில், “1992 மற்றும் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்துத்துவா திட்டத்தில் ஒருவித நிச்சயமற்ற தன்மையும் மோதல்களும் இருந்தன. ஆனால், இப்போது பாஜகவுக்கு இந்துக்களை அணி திரட்டுவது கடினம் அல்ல,” என்றார்.

மோதி குறிப்பிடும் புதிய சகாப்தம் என்ன?

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், ANI

ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழாவுக்குப் பிறகு, அங்கு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, “ஜனவரி 22, 2024 என்பது நாட்காட்டியில் எழுதப்பட்ட தேதி அல்ல, இது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம். எங்கள் பால ராமர் இனி கூடாரத்தில் வசிக்க மாட்டார். தெய்வீக கோவிலில் வசிப்பார்,” என்று கூறியிருந்தார்.

பிரதமர் இவ்வாறு கூறும்போது, ​​அவரது முகத்தில் வெற்றியின் தோற்றம் தெளிவாகத் தெரிந்தது. நரேந்திர மோதி எந்தப் புதிய கால சுழற்சியைப் பற்றிப் பேசுகிறார்? 2014இல் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்ததில் இருந்து நடந்து வரும் கால சுழற்சியைப் பற்றிப் பேசுகிறாரா அல்லது புதிய கால சுழற்சியைப் பற்றிப் பேசுகிறாரா?

பிரதமர் மோதி மற்றும் பாபர் மசூதி இடிப்பு குறித்து புத்தகம் எழுதியுள்ள நிலஞ்சன் முகோபாத்யாய், இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கையில், “புதிய கால சுழற்சி என்னவென்பது தெரியவில்லை. ஆனால், தற்போதைய கால சுழற்சியில் பல விஷயங்கள் தெரியும். அயோத்தி வழியில் ஞானவாபி வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதுராவிலும் இதே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்றார்.

“அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது, ​​எதிர்காலத்தில் இதுபோன்ற வழக்குகள் பரிசீலிக்கப்படாது என்று கூறியது. ஆனால், அது நடப்பதாகத் தெரியவில்லை. 2014 முதல் நிறைய நடக்கிறது, இந்தியாவின் சிறுபான்மையினரிடையே பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது. பல சட்டங்கள் வந்துள்ளதால் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுகின்றனர். இதுதவிர, புதிய கால சக்கரத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை,” என்கிறார் அவர்.

நிலஞ்சன் முகோபாத்யாய் கூறுகையில், “ராம் லல்லா இனி கூடாரத்தில் வசிக்க மாட்டார், தெய்வீக கோவிலில் வசிப்பார் என்று பிரதமர் கூறினார். ஆனால் இந்தியாவின் மதச்சார்பற்ற அரசமைப்பின் தெய்வீகத்தன்மை மற்றும் மகத்துவத்திற்கு என்ன நடக்கும்?

மதம் மற்றும் அரசியலுக்கு இடையே இருந்த பிளவுக் கோட்டை பிரதமர் மோதி கிட்டத்தட்ட துடைத்துள்ளார். இந்திய அரசு மற்றும் மதத்தின் கோடுகள்கூட ஒன்றுபட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில், மதம், அரசியல் மற்றும் இந்திய அரசு கலந்த நான்கு நிகழ்வுகளில் பிரதமர் மோதி பங்கேற்றார்,” என்றார்.

”நான்கு இடங்களிலும், பிரதமர் மோதி புரவலராக இருந்தார். முதலில், பிரதமர் மோதி ஆகஸ்ட் 5, 2020 அன்று அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை செய்தார். அதன் பிறகு, 2020 டிசம்பரில் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான பூமி பூஜை நடந்தது. மூன்றாவதாக, புதிய நாடாளுமன்ற கட்டடம் கடந்த ஆண்டு மே மாதம் திறந்து வைக்கப்பட்டது. இது முற்றிலும் இந்து சின்னங்கள் மற்றும் சடங்குகளுடன் செய்யப்பட்டது,” என்கிறார் அவர்.

”இதுவே ஆட்சேபனைக்குரியது, ஏனென்றால் மதச்சார்பற்ற தேசத்தின் நாடாளுமன்றம் இந்து சடங்குகளின்படி திறக்கப்பட்டது. இந்து மதம் என்பது இந்தியாவின் அரச மதம் என்பது போல. நான்காவதாக, அவர் ராமர் கோவிலை திறந்து வைத்து, அவரே தலைமை விருந்தினராக ஆனார். இந்தியா முறையாக ‘மத நாடு’ ஆக முடியும் என்பதை இது காட்டுகிறது,” எனத் தெரிவிக்கிறார்.

சர்தார் படேல், அம்பேத்கர் மற்றும் பாஜக

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, வரலாறு முதல் நிகழ்காலம் வரை அனைத்தையும் தனக்கே உரியது என வரையறுத்ததுடன், சுதந்திரப் போராட்டத் தலைவர்களையும்கூட தனது சொந்தக் கட்சிக்காகப் பயன்படுத்தியது. ஜார்ஜ் ஆர்வெல் தனது புகழ்பெற்ற நாவலான 1984இல் நிகழ்காலத்தில் உள்ளவர்களுக்கு கடந்த காலமும் உண்டு என்று எழுதியுள்ளார்.

இந்திய அரசியலில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் படேல் சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரானார். லால் கிருஷ்ண அத்வானி சர்தார் படேலை தனது முன்மாதிரியாகக் கருதினார். மேலும் அவரது ரசிகர்களால் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுவதையும் விரும்பினார். அடல் பிஹாரி வாஜ்பாய் அரசில் உள்துறை அமைச்சராகவும் அத்வானி பதவி வகித்தார்.

சர்தார் வல்லபாய் படேல் 1931இல் காங்கிரஸின் தலைவராக இருந்தபோது, கராச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் 45வது மாநாட்டில், ​​“பெரும்பான்மையினர் தைரியத்தை வெளிப்படுத்தி சிறுபான்மையினருக்குப் பதிலாகத் தம்மைத் தாங்களே முன்னிறுத்தினால்தான் இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஏற்படும்,” என்று கூறியிருந்தார்.

நவம்பர் 19, 1990 அன்று, அயோத்தியில் லால் கிருஷ்ண அத்வானி, “இந்துக்களின் நலன் பற்றிப் பேசுபவர் நாட்டை ஆள்வார்” என்று கூறியிருந்தார். அக்டோபர் 2, 1990 அன்று, அத்வானி புகார் தொனியில் “மதச்சார்பற்ற கொள்கைகள் இந்து அபிலாஷைகளுக்கு நியாயமற்ற கட்டுப்பாடுகளை விதிக்கின்றன,” என்று கூறியிருந்தார்.

ஜனவரி 13, 1991 அன்று, பாஜகவின் அப்போதைய தேசியத் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, “இந்து தேசத்திற்கு முறையான வடிவம் கொடுக்கத் தேவையில்லை, இந்து தேசம் இந்த நாட்டின் அடிப்படை கலாசாரம். இந்திய முஸ்லிம்கள் அனைவரும் முகமதியா இந்துக்கள் மற்றும் அனைத்து இந்திய கிறிஸ்தவர்களும் கிறிஸ்டி இந்துக்கள். இவர்கள்தான் பிற்காலத்தில் கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக்கொண்ட இந்துக்கள்,” என்றார்.

நரேந்திர மோதியின் அரசாங்கம் சர்தார் படேலுக்கு மிக உயரமான சிலையை அமைத்துள்ளது. பாஜக அவரைத் தனது லட்சியமாக முன்வைக்கிறது. ஆனால், சர்தார் படேல் எப்போதும் இந்துத்துவ அரசியலை நிராகரித்தார். அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது கூட ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்தார்.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

பிரபல தொழிலதிபர் பி.எம்.பிர்லா சர்தார் படேலுக்கு ஜூன் 5, 1947 அன்று ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் பிர்லா, “இந்தியப் பிரிவினை குறித்த வைஸ்ராயின் அறிவிப்பு நீங்கள் விரும்பியது போல் இருப்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இது இந்துக்களுக்கு நல்லது என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் இப்போது வகுப்புவாத கொடுமையில் இருந்து விடுபட்டுள்ளோம். பிரிக்கப்பட்ட பகுதி ஒரு முஸ்லிம் நாடாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு இது சரியான நேரம் இல்லையா?” என்று எழுதியிருந்தார்.

ஜூன் 10, 1947 அன்று பிர்லாவின் கடிதத்திற்குப் பதிலளித்த படேல், “ஜூன் 3 அறிவிப்புடன், குறைந்தபட்சம் நிச்சயமற்ற சூழ்நிலை முடிவுக்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா இந்துக்களுக்காக போராட வேண்டும் என நான் நினைக்கவில்லை. தேசத்தையும் இந்து மதத்தையும் அரச மதமாக்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். எஞ்சியிருக்கும் சிறுபான்மையினரின் பாதுகாப்பும் நமது முதல் பொறுப்பு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அரசு அனைவருக்காகவும் இருக்க வேண்டும், எந்தவொரு குறிப்பிட்ட சாதி, மதத்திற்காகவும் இருக்கக் கூடாது” (சர்தார் படேலின் கடிதங்கள், தொகுதி 4, பக்கம் 56) என்று தெரிவித்தார்.

சர்தார் படேலை மட்டுமல்ல, அம்பேத்கருடனும் கருத்தியல் நெருக்கம் இருந்தது போல் பாஜக முன்வைக்கிறது. பி.ஆர்.அம்பேத்கர் தனது ‘பாகிஸ்தானும் இந்தியப் பிரிவினையும்’ என்ற நூலில், “இந்து ஆட்சி நிஜமானால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய சோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்து ஆட்சி எப்படியும் நிறுத்தப்பட வேண்டும்,” என்று எழுதியுள்ளார். (1946, பக்கம் எண். 354-355)

அம்பேத்கர் 24 மார்ச் 1947 அன்று மாநில மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய அறிக்கையைத் தயாரித்தார்.

இந்த அறிக்கையில் அவர் எழுதியிருப்பதாவது: ”சிறுபான்மையினரை ஆட்சி செய்ய பெரும்பான்மையினருக்கு உரிமை உண்டு என்ற புதிய கோட்பாட்டை இந்திய தேசியவாதம் உருவாக்கியது இந்திய சிறுபான்மையினரின் துரதிருஷ்டம். சிறுபான்மையினர் அதிகாரத்தில் பங்கு கேட்டால், அவர்கள் வகுப்புவாதிகள் என்றும் அதிகாரத்தின் மீதான பெரும்பான்மையினரின் ஏகபோகம் தேசியவாதம் என்றும் அழைக்கப்படும்,” என எழுதியுள்ளார்.

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

அம்பேத்கர் எச்சரிக்கையாக இருந்த பெரும்பான்மை தேசியவாதம் இப்போது உண்மையாகி வருவதாக வரலாற்று அறிஞரும் மத தேசியவாதம் குறித்து புத்தகம் எழுதியவருமான ராம் புண்யானி கூறுகிறார். இந்தியாவின் சிறுபான்மையினர் அரசியல் ரீதியாக ஒதுக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் சமூக தனிமைப்படுத்தலையும் எதிர்கொண்டுள்ளனர் என்கிறார் அவர்.

நரேந்திர மோதி அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர்கூட இல்லை. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு 400 எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால், முஸ்லிம் எம்.பி. ஒருவர்கூட இல்லை. பெயரளவுக்குக்கூட பாஜக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக்கூட நீக்கியுள்ளது.

பியூ ஆராய்ச்சியின்படி, 2060ஆம் ஆண்டில் உலகில் அதிக முஸ்லிம் மக்கள்தொகையை இந்தியா கொண்டிருக்கும். 2014 பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 482 வேட்பாளர்களில் ஏழு முஸ்லிம்களை பாஜக நிறுத்தியது, ஆனால் யாரும் வெற்றிபெறவில்லை.

2019 பொதுத் தேர்தலில் பாஜக ஆறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் ஜம்மு காஷ்மீரில் 3 முஸ்லிம்களும், மேற்கு வங்கத்தில் 2 பேரும், லட்சத்தீவில் ஒரு முஸ்லிம் வேட்பாளரும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் 2019இல் கூட யாரும் வெற்றி பெறவில்லை.

இந்திய மக்கள்தொகையில் முஸ்லிம்களின் பங்கு அதிகரித்து வருகிறது. ஆனால், அரசியல் பங்கேற்பு குறைந்து வருகிறது. இந்தியாவில் கடைசியாக 2001 மற்றும் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முஸ்லிம்களின் மக்கள் தொகை 13.4% இல் இருந்து 14.2% ஆக அதிகரித்துள்ளது. 2014 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் நான்கு சதவீதம் பேர் மட்டுமே முஸ்லிம்கள், 1980இல் 10 சதவீதம் பேர் இருந்தனர்.

ஸ்வப்னா தாஸ்குப்தா இதற்கு முஸ்லிம்களையும் பொறுப்பாக்குகிறார். “முஸ்லிம்களின் அரசியல் கணக்கீடுகளாலும் தவறான தேர்வுகளாலும் இது நடக்கிறது. அவர்கள் பாஜக எதிர்ப்பு அரசியலுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர், எனவே அரசியலில் அவர்களின் பிரதிநிதித்துவம் குறைவதில் ஆச்சரியமில்லை” என்று அவர் கூறுகிறார்.

முஸ்லிம்களின் இந்தியத்தன்மை மீது சந்தேகம்

இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எதிர்காலம் இல்லையா?

பட மூலாதாரம், GETTY IMAGES

காங்கிரஸ் தலைவரும், ராஜிவ் காந்தியின் நண்பருமான மணிசங்கர் அய்யர், ‘ஒரு மதச்சார்பற்ற அடிப்படைவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தைப் பற்றி கூறுகிறார்.

“ஆர்.எஸ்.எஸ் பார்வையில் அசோகப் பேரரசர் பௌத்தத்தை ஏற்றுக் கொண்டது முதல் பௌத்த பேரரசர் ஹர்ஷவர்தன் வரையிலான ஆயிரம் ஆண்டுக்கால இந்து அல்லாத ஆட்சியை உள்ளடக்கவில்லை. அவர்கள் இந்து அல்லாத ஆட்சியின் கீழ் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் மட்டுமே வைத்திருந்தனர்,” என்கிறார்.

முஸ்லிம்களின் விசுவாசத்தைச் சந்தேகிப்பது இந்துத்துவா அரசியலுக்கு புதிதல்ல. இந்துத்துவா கொடி ஏந்திய விநாயக் தாமோதர் சாவர்க்கர் எப்போதும் முஸ்லிம்களை வெளியாட்களாகவே கருதினார்.

சாவர்க்கர் ‘ஹிந்துத்வா: வூ இஸ் இந்து’ (Hindutva: Who is Hindu) எனும் புத்தகத்தில், “இது முஸ்லிம்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டவர்களின் தாய்நாடு மற்றும் கலாசாரத்தின் பெரும்பகுதி ஒன்றுதான். ஆனால், இன்னும் அவர்களை இந்துக்களாகக் கருத முடியாது. இது அவர்களுடைய புனித பூமி அல்ல. அவர்களது புனித இடம் தொலைதூர அரேபியாவில் உள்ளது. அவர்களின் நம்பிக்கைகளோ, மதத்தலைவர்களோ, சிந்தனைகளோ, மாவீரர்களோ இந்த மண்ணில் இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பெயர்கள் மற்றும் பார்வைகள் அடிப்படையில் அந்நியமானவை,” என எழுதியுள்ளார்.

ஸ்வப்னா தாஸ்குப்தா சாவர்க்கரின் இந்தக் கூற்றில் உடன்படவில்லை என்று கூறுகிறார். தாஸ்குப்தா, “சாவர்க்கர் இந்துத்துவாவை குறியீடாக்க முயன்றார், ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்துத்துவம் என்பது ஒரு உணர்வு. தேசியத்தையும் மதத்தையும் இணைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை,” என்கிறார் அவர்.

முகுல் கேசவனும் சாவர்க்கரின் வாதத்தை ஏற்கவில்லை. ஜனநாயக சமூகத்தில் குடியுரிமை என்பது பிறப்பின் அடிப்படையிலான உரிமையே தவிர மத நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல என்று கூறுகிறார்.

அடல் பிஹாரியின் அரசில் அமைச்சராக இருந்த அருண் ஷோரியுடன் மணிசங்கர் ஐயர் தனது ‘மதச்சார்பற்ற அடிப்படைவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற புத்தகத்தில் பேசியிருக்கிறார். அருண் ஷோரி நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர் மற்றும் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

மணிசங்கர் அய்யர் அருண் ஷோரியிடம் கேட்கிறார், ஒரு முஸ்லிமாக இருப்பது இந்தியனாக இருப்பதற்கான பாதையில் சிரமங்களை உருவாக்குகிறதா?

இதற்குப் பதிலளித்த அருண் ஷோரி, “இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் பின்பற்றி இதைச் செய்ய முடியாது என்பதால், இஸ்லாம் மதத்தைப் பின்பற்றிய பிறகு, பல கலாசார மற்றும் பல மத சமூகத்தில் வாழ முடியாது,” என்றார்.

அருண் ஷோரியின் இந்தப் பதிலில், மணிசங்கர் ஐயர் மற்றொரு கேள்வியைக் கேட்கிறார் – அப்படியானால், நீங்கள் ஒரு நல்ல இந்தியராக வாழ முயன்றால், நீங்கள் ஒரு மோசமான முஸ்லிம் என்று சொல்ல விரும்புகிறீர்களா?

அருண் ஷோரி தனது பதிலில், “நீங்கள் இதைக் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நிச்சயமாக இது குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படைக் கொள்கைகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும்,” என்றார்.

ஆனால் பேராசிரியர் ராஜீவ் பார்கவா அருண் ஷோரியின் கருத்துகளுடன் உடன்படவில்லை. அவர் கூறுகையில், “ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதையில் உபதேசம் செய்தால், அவர் வன்முறையைத் தூண்டுகிறார் என்று ஒருவர் கூறலாம். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் பிரசங்கத்தை சூழலுக்கு அப்பால் பார்ப்பது சரியாக இருக்காது. அதேபோல், நாம் பார்க்கக்கூடாது,” என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தில் சிறப்பு அந்தஸ்து இருந்ததை, மோதி அரசு ரத்து செய்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை குற்றச் செயல் என்று கூறிய உச்ச நீதிமன்றம், ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. பாஜக ஆளும் மாநிலமான உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

முகுல் கேசவன் இதையெல்லாம் இந்து மேன்மையை இயல்பாக்கும் முயற்சியாகப் பார்க்கிறார். அவர் கூறுகையில், “இந்துத்துவத்தின் அரசியல் என்பது இந்து மேலாதிக்கத்தின் அரசியல். அவர்களின் ஒரே கருத்தியல் செயல்திட்டம் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்களை ஒன்றிணைப்பது,” என்கிறார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், அவர்களைப் பின்னுக்குத் தள்ளும் துணிச்சலைத் திரட்ட முடியாது என்கிறார் ராம் புண்யானி.

ஏற்கெனவே ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரிசெய்வது கடினம் எனக் கூறுகின்றனர். இனி மேலும் பாதிப்பைத் தடுப்பது எப்படி என்பதுதான் இந்தப் போராட்டம். இனி ஒரு முஸ்லிம் நபர் இந்திய குடியரசு தலைவராக இருக்க முடியாது என, கிறிஸ்டோஃப் ஜாஃபரெல்லோ கூறுகிறார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »