Press "Enter" to skip to content

இந்தியா – மியான்மர் எல்லை: 1643 கி.மீ வேலி அமைப்பதன் மூலம் சீனாவின் செல்வாக்கை தடுக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், அனந்த் பிரகாஷ்
  • பதவி, பிபிசி இந்தி

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மியான்மர் இந்தியா எல்லைப் பகுதியில் 1643 கி.மீ நீளத்திற்கு வேலி அமைக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதில், 10 கிலோமீட்டருக்கான வேலி அமைக்கும் பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்துவிட்டன.

இதுகுறித்துத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ள அமித்ஷா, “யாரும் ஊடுருவ முடியாத எல்லைகளைக் கட்டமைப்பதில் மோதி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அதற்காக இந்தியா மற்றும் மியான்மருக்கு இடையே அமைந்துள்ள 1643கி.மீ பகுதியில் வேலி அமைக்க முடிவு செய்துள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ சிறந்த கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக ரோந்துப் பாதை அமைக்கப்படும் என்றும், ஒட்டுமொத்த எல்லையில் மணிப்பூரில் உள்ள மோராவில் 10 கிலோமீட்டருக்கு ஏற்கெனவே வேலி அமைக்கப்பட்டு விட்டதாகவும்” அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த உள்துறை அமைச்சரின் ட்வீட்டில் “மிகப்படுத்துதல்ரிட் கண்காணிப்பு அமைப்பு மூலம் அமைக்கப்படும் இந்த வேலி திட்டத்திற்கான முன்திட்டங்கள் தொடங்கப்படும். அதன் அடிப்படையில், அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிப்பூரில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வேலி அமைக்கப்படும். மேலும், மணிப்பூர் எல்லையில் 10 கி.மீ வேலி அமைப்பதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணியும் விரைவில் தொடங்கப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலி குறித்த விவாதம்

மியான்மர் எல்லை

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே அதன் சிக்கல்கள் குறித்த விவாதங்கள் தொடங்கிவிட்டன. அப்படி இந்தத் திட்டத்தின் சிக்கல்கள் குறித்துக் கேள்வி எழுப்பியவர்களில் முக்கியமானவர் முன்னாள் ராணுவ மூத்த அதிகாரியான மனோஜ் முகுந்த் நரவனே.

இதுகுறித்து ‘தி ப்ரிண்ட்’ ஆங்கில இணையதளத்தில் அவர் எழுதி வெளியாகியுள்ள கட்டுரையில், “வேலி அமைப்பதைவிட, அது குறித்துப் பேசுவது எளிதுதான். அதுவும் இந்த வேலியானது காடுகளால் சூழப்பட்டுள்ள இந்திய-மியான்மர் எல்லையின் கடுமையான மலைப் பகுதிகளில் அமைக்கப்பட வேண்டும். சாலைகளை விடுங்கள், இந்தப் பகுதிகளில் நடந்துகூடப் போக முடியாத பல இடங்கள் உள்ளன. இது ஒன்றும் வேலி அமைக்க எளிமையான இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளைப் போன்றது அல்ல,” என்று கூறியுள்ளார்.

“அதுமட்டுமின்றி, நீங்கள் வேலியை அமைத்தாலும்கூட, முழு பகுதியையும் கண்காணித்து ரோந்து சென்றால் மட்டுமே அது பயனுள்ளதாக இருக்கும். அதேவேளை ஊடுருவல் ஏதும் ஏற்படும் நேரத்தில் அதற்குப் பதிலடி கொடுக்க முடியாமல் போனாலும், இந்த வேலியை அமைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நரவனே இந்தத் திட்டத்திற்கான செலவினம் குறித்தும் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துகளும் இதில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதுகுறித்து எழுதுகையில், எல்லைப் பகுதிகளில் இருக்கும் உள்ளூர் மக்களைத் தனிமைப்படுத்தும் எந்தவொரு திட்டமும், அங்கு ஏற்கெனவே நிலவும் உறுதியில்லாத சட்ட ஒழுங்கு நிலையை மேலும் மோசமாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலி அமைக்கும் திட்டத்தோடு சேர்த்து, இந்திய அரசு 2018இல் அறிமுகப்படுத்திய சுதந்திரமாக இயங்குவதற்கான அனுமதியை (Free Movement Regime) நிறுத்தி வைப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அமித்ஷா.

இதுபோன்ற சூழலில், அரசின் இந்த நிலைப்பாடு இந்தியா மற்றும் மியான்மருக்கு இடையிலான வரலாற்றுப்பூர்வமான மற்றும் தற்கால உறவுகள் குறித்த கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியாவுக்கும், மியான்மருக்கும் இடையிலான உறவு

மியான்மர் எல்லை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிற்கு கிழக்குத் திசையில் அமைந்துள்ள நாடு மியான்மர். சுதந்திரம் அடைந்ததில் இருந்தே உள்நாட்டுப் போர், அமைதியற்ற தன்மை மற்றும் நிலையற்ற தன்மையால் பாதிக்கப்பட்ட நாடு அது.

கடந்த 1948ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பர்மா(மியான்மர்) இந்தியாவுடனான ராஜ்ஜீய உறவுகளை ஏற்படுத்திக் கொண்டது. ஆனால், அந்த உறவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. 1962இல் ஏற்பட்ட ராணுவ புரட்சிக்குப் பிறகு, இந்த உறவு ஒரு விரிசலைக் கண்டது. அதுவே 1987 வரை தொடர்ந்தது.

அதற்குப் பிறகு 1987ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பர்மாவிற்கு சென்றார். ஆனால், அதிலிருந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 1989ஆம் ஆண்டு அங்கு மீண்டும் ஆட்சி ராணுவத்தின் கைகளுக்குச் சென்றது. அந்தச் சூழலில்தான் பர்மா என்ற பெயர் மியான்மர் என மாற்றம் செய்யப்பட்டது.

அதன் பின்பும், மியான்மரில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக போராட்டம் தொடர்ந்துகொண்டே இருந்தது. இறுதியில் இந்தப் போராட்டம் 2011ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலோடு முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில் ஆங் சான் லிஸ்ட்டின் கட்சி வெற்றி பெற்றது.

ஆங் சான் லிஸ்ட் டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் படித்தவர். இவர் பொறுப்புக்கு வந்த பிறகு மீண்டும் இந்தியா-மியான்மர் இரு தரப்பு உறவில் எழுச்சி ஏற்பட்டது. 2012ஆம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மியான்மருக்கு சென்றார். இதுதான் பர்மா மியான்மராக ஆன பிறகு ஒரு இந்திய பிரதமரின் முதல் பயணமாகும்.

அதன் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்து 2021இல் நடந்த ராணுவ கிளர்ச்சியில், மீண்டும் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. அந்த நேரத்தில் மீண்டும் இந்தியா மற்றும் மியான்மர் உறவில் ஓர் இடைவெளி கண்கூடாகத் தெரிந்தது. ஆனால், மியான்மர் எல்லைகளில் வேலி அமைக்க எடுக்கப்பட்டுள்ள தற்போதைய முடிவை இரு நாட்டு உறவில் ஏற்பட்டுள்ள விரிசலாகப் பார்க்க முடியுமா?

இதற்கான பதிலைத் தருகிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சஞ்சய் பரத்வாஜ்.

இதுகுறித்து பரத்வாஜ் பேசுகையில், “இந்த முடிவை இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட் கொள்கைக்கு எதிரானதாக நாம் பார்க்கக்கூடாது. இதற்கு ஒரு உதாரணமாக வங்க தேசத்துடனான நமது உறவை எடுத்துக் கொள்ளலாம். அதன் எல்லைகளில்கூட வேலி அமைக்கும் பணிகள் செய்யப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கு என்ன கட்டாயம்?

மியான்மர் எல்லை

பட மூலாதாரம், ANI

இந்நிலையில், மியான்மர் எல்லையில் வேலி அமைப்பதற்கான முடிவை எடுக்க இந்தியாவிற்கு என்ன கட்டாயம் என்ற கேள்வி எழுகிறது. அதற்குக் காரணம் இதே இந்தியா 2018ஆம் ஆண்டு சுதந்திரமாக இயங்கும் அனுமதியில் கையெழுத்திட்டது.

அதன்படி, இந்தியா மற்றும் மியான்மர் எல்லைகளில் 16 கிலோமீட்டர்களுக்கு உள்ளே வாழும் மக்கள் எந்த ஆவணங்களும் இல்லாமலே எல்லைகளைக் கடக்க முடியும்.

இந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் எல்லையின் ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் சென்று குடியேறியவர்கள். எனவே, மக்களுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் உள்ளூர் வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்பே இந்த முடிவை எடுத்து அதை அமல்படுத்த முற்பட்ட மத்திய பாஜக அரசு, ஏன் தற்போது இதுபோன்ற அணுகுமுறையைக் கடைபிடிக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இதற்குப் பதிலளித்த சஞ்சய் பரத்வாஜ், “இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது, மியான்மரில் நிலவும் அமைதியற்ற சூழல் தனது நாட்டிற்குள்ளும் பரவிவிடாமல் தடுப்பது. இரண்டாவது, இந்தப் பகுதியில் நடந்து வரும் போதைப் பொருள் மற்றும் ஆயுத விற்பனையைத் தடுப்பதாகும்” என்கிறார்.

மூன்றாவது காரணம், “இந்தப் பகுதியில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கை நிறுத்துவதே அதன் நோக்கம். மியான்மரின் ராணுவ அதிகாரத்தில் சீனாவுக்கு ஆழமான செல்வாக்கு உள்ளதாக இந்தியா நம்புகிறது. அதற்கான ஆயுதங்களும்கூட சீனாவில் இருந்து மட்டுமே வழங்கப்படுகின்றன” என்கிறார் சஞ்சய்.

“இதுபோன்ற சூழலில், இந்தப் பகுதியில் நிலைமை தீவிரமடையும்போது, வங்கதேசத்தில் செய்ததைப் போலவே, மியான்மர் எல்லைகளிலும் கண்காணிப்பை அதிகப்படுத்த இந்தியா நினைக்கிறது.”

கடந்த சில நாட்களாகவே, அமைதியின்மையால் போராடி வரும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் முதல்வர் என் பிரேன் சிங் இந்தப் பகுதியில் வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகிறார்.

எல்லைப் பகுதிகளில் வேலி இல்லாததன் காரணமாக, எல்லைக்கு அப்பால் உள்ள மக்கள் இந்த நிலையைப் பயன்படுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கான காரணங்கள்

மியான்மர் எல்லை

பட மூலாதாரம், Getty Images

இந்நிலையில், அரசின் இந்த முடிவு குறித்துக் கேள்வி எழுப்பும் சிலரில் 2013 முதல் 2016 வரை மியான்மருக்கான இந்திய தூதராக இருந்த முன்னாள் ராஜ்ஜீய அதிகாரியான கௌதம் முகோபாத்யாயும் ஒருவர்.

பிபிசியுடன் பேசிய அவர், “இந்த முடிவுக்கான காரணம் என்ன என்று எனக்குத் தெரியவில்லை. உள்துறை அமைச்சரின் ட்வீட்டிலும், பிஐபி வெளியிட்ட ஊடக செய்தியிலும்கூட காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை,” என்கிறார்.

“அதில் எல்லைகளில் ஊடுருவ முடியாதபடி உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் இலக்கு மியான்மர் அல்ல. ஆனால், தேவையற்ற விரோத செயல்களுக்கு மியான்மர் மூலகாரணமாக இருப்பதால், அதிலிருந்து காத்துக் கொள்ள இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுக்க வேண்டியுள்ளது என்ற செய்தியை உணர்த்துவதற்காகச் செய்யப்பட்டுள்ளது. அண்டை நாட்டுக்கு எதிரான இந்த நடவடிக்கை அவ்வளவு நல்ல நகர்வாகப் பார்க்கப்படாது,” என்று தெரிவித்துள்ளார் அவர்.

அதேநேரம், ஆங்கில நாளிதழான தி டெக்கான் ஹெரால்டில் முகோபாத்யாய் எழுதியுள்ள கட்டுரையில், இந்த நடவடிக்கையை நியாயமற்றது(illogical) என்று குறிப்பிட்டுள்ளார்.

அதில், “எப்படி சுதந்திரமாக இயங்கும் அனுமதியை நிறுத்துவது வரலாற்றுரீதியாக மற்றும் அரசியல்ரீதியாக நியாயமற்றதோ, அதே போல் எல்லையில் வேலி அமைப்பதும் கேள்விக்குரியது. இருப்பினும் இந்த முடிவுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அதில் மியான்மரில் ராணுவத்திற்கு எதிராக நடந்து வரும் மோதலால் இந்தியாவிற்குள் அகதிகள் அல்லது பயங்கரவாதிகள் நுழையாமல் தடுக்கும் காரணமும் இருக்கலாம். அதே போல் அதிகரித்து வரும் போதைப் பொருள், தங்கம், பாக்கு மற்றும் மர விற்பனையைத் தடுப்பதற்காகக்கூட இருக்கலாம்.”

“இதோடு வேறு பல காரணங்களும் உள்ளன. அவற்றில் பல தவறான எண்ணங்களால் உருவான காரணங்களாகும். ஆனால், வேலி அமைப்பதால் எல்லாம் இந்தப் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »