Press "Enter" to skip to content

மாலத்தீவு: ராணுவ வீரர்களுக்கு பதில் தொழில்நுட்ப குழுவை அனுப்பும் இந்தியாவின் முடிவால் கிடைக்கும் பலன்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்தியா – மாலத்தீவு உறவில் பதற்றம் நிலவி வரும் நிலையில் அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றுவது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகளை திரும்ப அழைத்த பிறகு அந்த இடத்திற்கு இந்தியாவில் இருந்து ஒரு தொழில்நுட்பக் குழு அனுப்பி வைக்கப்படும் என்று வியாழக்கிழமை தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்தியா ஒரு நடுநிலையான பாதையைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மாலத்தீவும் அதை ஏற்கத் தயாராகும் என்றும் பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். அங்கு இந்திய வீரர்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியா தனது தொழில்நுட்பக் குழுவைக் கொண்டும் தனது பணிகளைச் செய்ய முடியும்.

மாலத்தீவின் பூகோள அமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மாலத்தீவு வழியாக மட்டுமே வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் அந்த நாடு செயல் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

உறவுகள் ஒரு கட்டத்திற்கு மேலே மோசமடையாமல் இருக்க மாலத்தீவு அவ்வாறு செய்வது அவசியம் என்று புது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வுகளுக்கான மையத்தின் இணைப் பேராசிரியர் அரவிந்த் யெலேரி கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்தார்.

மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா தனது துருப்புகளை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதில் மாலத்தீவு தொடக்கத்தில் பிடிவாதமாக இருந்த போதிலும், அங்கு பணியமர்த்தப்படுபவர்கள் ராணுவ நடவடிக்கைகளில் நேரடி தொடர்புடையவர்களாக இருக்கக்கூடாது என்று இப்போது ஒப்புக்கொண்டிருப்பது பெரிய விஷயம் என்று அரவிந்த் யெலேரி குறிப்பிட்டார்.

“பணியில் இருக்கும் ஒரு ராணுவ வீரர் தனது நாட்டில் நிறுத்தப்பட்டிருப்பது ஒரு நாட்டிற்குக் கவலை அளிக்கும் விஷயம்தான். ஓய்வுபெற்ற அதிகாரிகள், கடலோர காவல்படை அல்லது பிற துணை ராணுவப் படைகளின் விஷயம் வேறு. இருப்பினும் இத்தகைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்வது மாலத்தீவுடைய நெகிழ்வுத்தன்மையின் அடையாளம். இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை முழுமையாகப் புறந்தள்ள முடியாது என்பதை அது ஒருவகையில் ஏற்றுக்கொண்டுள்ளது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு கேட்டுக் கொண்டிருந்தது.

​​”மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறியுள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையின்படி, மூன்றில் ஒரு விமான தளங்களில் இருந்து துருப்புகள் 2024 மார்ச் 10ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படும். மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் துருப்புகள் 2024 மே 10ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்படும்,” என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது தெரிவித்தார்.

ஆனால் தற்போது இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இந்திய தொழில்நுட்பக் குழு நியமிக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முகமது முய்சு அதிபராகப் பதவியேற்றதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகின்றன. முய்சு சீன சார்புடையவர் என்று கருதப்படுகிறது.

வெளியுறவு அமைச்சகம் சொன்னது என்ன?

மாலத்தீவு

பட மூலாதாரம், MEA

டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் மாலத்தீவின் உயர்மட்ட மையக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்குப் பிறகு பிப்ரவரி 2ஆம் தேதி இதுகுறித்துத் தெரிவிக்கப்பட்டது என்றும் அதன் மூன்றாவது கூட்டம் விரைவில் நடைபெறும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மேலும் “மாலத்தீவில் இருக்கும் இந்தியப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு அவர்களின் இடத்தில் இந்தியாவில் இருந்து தகுதியான தொழில்நுட்பக் குழு பணியமர்த்தப்படும்” என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில் மாலத்தீவுக்கான நிதியுதவியை இந்தியா குறைத்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ஜெய்ஸ்வால், ”இந்தத் தொகை உண்மையில் அதிகரித்துள்ளது. இறுதி புள்ளி விவரங்கள் வரும்போது, ​​உதவி எவ்வளவு அதிகரித்துள்ளது என்பது குறித்து இன்னும் தெளிவு ஏற்படும்,” என்றார்.

இந்தியா 2023 வரவு செலவுத் திட்டத்தில் இந்தச் சிறிய தீவு நாட்டிற்கு 400 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால் பின்னர் இந்த உதவி 770 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இந்த உதவி 600 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

“முன்னோக்கிச் செல்லும் வழி குறித்து எதிர்காலத்தில் தெளிவு ஏற்படும்போது புதிய புள்ளிவிவரங்களை மாற்றவும் முடியும். நாம் மாலத்தீவின் நட்பு நாடு. அதன் வளர்ச்சியில் உறுதியுடன் இருக்கிறோம்,” என்று இதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் பதில் அளித்தது.

மாலத்தீவில் இருந்து படைகளை அகற்றுவது குறித்த பேச்சு

மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

மாலத்தீவில் இருக்கும் தனது படைகளை இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று அதிபராகப் பதவியேற்ற பிறகு முய்சு கேட்டுக் கொண்டார். வேறு எந்த நாட்டு ராணுவ வீரர்களுக்கும் தனது நாட்டில் இடம் கொடுக்கப் போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.

மாலத்தீவில் பொதுமக்களின் மருத்துவ தேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காகச் செயல்படும் இந்திய விமான தளத்தின் பணிகள் நிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நடைமுறை தீர்வு எட்டப்படவேண்டும் என்று இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் பின்னர் தெரிவித்தது.

மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஒரு தளத்தில் இருந்தும், மே 10ஆம் தேதிக்குள் மீதமுள்ள இரண்டு தளங்களில் இருந்தும் இந்திய துருப்புகள் திரும்பப் பெறப்படும் என்று இப்போது இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் அதன் பிறகு விமான தளங்களுக்கு மாலத்தீவு ராணுவம் பொறுப்பேற்கும் என்பது கிடையாது. இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக இந்திய தொழில்நுட்பக் குழு அங்கு நியமிக்கப்படும்.

மாலத்தீவில் தற்போது 77 இந்திய வீரர்கள் உள்ளனர். அவர்கள் கடல் கண்காணிப்புக்காக ஒரு டார்னியர் 228 விமானத்தையும், மருத்துவ உதவிக்காக இரண்டு ஹெச்ஏஎல் துருவ் உலங்கூர்திகளையும் இயக்குகின்றனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை

மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

சீனாவிடம் இருந்து பெரும் பொருளாதார உதவியை நாடப் போவதாக முய்சு அறிவித்ததைத் தொடர்ந்து மாலத்தீவு “கடுமையான கடனில் சிக்கும் அபாயத்தில்” இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் புதன்கிழமை எச்சரித்தது.

மாலத்தீவு சீனாவிடம் இருந்து எவ்வளவு கடன் வாங்கப் போகிறது என்பது பற்றிய விரிவான தகவலை செலாவணி நிதியம் அளிக்கவில்லை. ஆனால் “மாலத்தீவு விரைவில் தன் கொள்கையில் மாற்றம் கொண்டுவர வேண்டும்” என்று அந்த நாட்டின் பொருளாதாரத்தை மதிப்பாய்வு செய்த பின்னர் ஐஎம்எஃப் கூறியது.

“பெரிய கொள்கை மாற்றங்கள் இல்லையென்றால் மாலத்தீவின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அரசு கடன் ஆகிய இரண்டும் தொடர்ந்து அதிகரிக்கும் அபாயம் உள்ளது. தீவிர வெளிநாட்டுக் கடனில் சிக்கும் ஆபத்தில் அது உள்ளது,” என்று நாணய நிதியம் மேலும் தெரிவித்தது.

“எரிபொருள் விலைகள் மற்றும் இறக்குமதிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் அதன் நிதிப் பற்றாக்குறையும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர மாலத்தீவு காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடியது. வெள்ளம் மற்றும் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகக் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படலாம்.”

மாலத்தீவு

பட மூலாதாரம், ANI

சீனாவிடம் கடன் வாங்கி பல தெற்காசிய நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பாகிஸ்தானும் இலங்கையும் சீனாவின் லட்சிய திட்டமான ’பெல்ட் அண்ட் ரோட்’ திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பு கட்டுமானங்களுக்காக அந்த நாட்டிடமிருந்து பெரும் கடன் வாங்கி இப்போது கடுமையான நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.

இந்தோ பசிபிக் பகுதியில் உள்ள செயல் உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு நாடு மாலத்தீவு. எனவே சீனா இந்தத் திட்டம் தொடர்பாக ஆர்வம் காட்டுகிறது.

உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான கிழக்கு-மேற்கு கடல் வழி, மாலத்தீவுகளின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய தீவுகள் வழியாகச் செல்கிறது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. முய்சுவுக்கு முன் அவரது கட்சியின் தலைவர் அப்துல்லா யாமீன் அதிபராக இருந்தபோது ​​கட்டுமானத் திட்டங்களுக்காக சீனாவிடம் பெருமளவில் கடன் வாங்கினார்.

மாலத்தீவின் மீது மொத்தமாக மூன்று பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடன் உள்ளது. அதில் 42 சதவீதம் சீனாவுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை என்று உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.

முய்சு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்

மாலத்தீவு

பட மூலாதாரம், Getty Images

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் புள்ளி விவரங்கள்படி, நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் உள்ளது என்று ஐஎம்எஃப்பின் எச்சரிக்கைக்கு முன்பு முய்சு கூறியிருந்தார்.

மாலத்தீவின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தனது நிர்வாகம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். பொருளாதார சிக்கல்களைச் சமாளிக்க நிர்வாகம் வகுத்துள்ள உத்திகளை சமீபத்திய கூட்டங்களில் நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் முன் தாம் அளித்ததாகவும், அவை இரண்டு அமைப்புகளாலும் ஆதரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மாலத்தீவு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை இந்த வாரம் ஒப்புக்கொண்ட முய்சு, தடைபட்டுள்ள அனைத்து திட்டங்களையும் தொடங்க விரும்புவதாகக் கூறினார். நாட்டின் பொருளாதார நிலை பற்றிக் குறிப்பிட்ட அவர் பெரும் கடனுடன் தத்தளிக்கும் பொருளாதாரம் தனக்குக் கிடைத்துள்ளது என்றார்.

அரசு அதிகாரிகளைச் சந்தித்து தங்களின் வளர்ச்சித் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிடுமாறும் இதனால் திட்டங்களுக்கான பணிகளை இந்த ஆண்டு தொடங்க முடியும் என்றும் இந்த வாரம் மாலத்தீவு குடிமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முய்சு தனது இந்திய விரோத அணுகுமுறையால் அரசியல் மட்டத்திலும் சிரமங்களை எதிர்கொள்கிறார். மாலே நகரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற மேயர் பதவிக்கான தேர்தலில் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி (எம்டிபி) வேட்பாளர் ஆதம் அசீம் பெரும் வெற்றி பெற்றார். இந்தியா சார்புடையவர் என்று கருதப்படும் முகமது இப்ராகிம் சோலியின் கைகளில் அக்கட்சியின் தலைமைப் பொறுப்பு உள்ளது.

சர்ச்சை என்ன?

மாலத்தீவு

பட மூலாதாரம், MATT HUNT/ANADOLU VIA GETTY IMAGES

இந்த ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோதி லட்சத்தீவு சென்றார். அவரது பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டனர், அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே தூதாண்மை தகராறு தொடங்கியது.

இருப்பினும் இதற்கு முன்பே பதற்றமான சூழலைப் பார்க்க முடிந்தது. மாலத்தீவு அதிபர் தேர்தலில் சீனாவின் பக்கம் சார்புடைய முய்சுவின் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தில் ‘இந்தியா அவுட்’ என்ற கோஷத்தை முன்வைத்தது. தான் அதிபரானால் இந்திய வீரர்களை இங்கிருந்து வெளியேறச் சொல்வேன் என்று முய்சு கூறியிருந்தார்.

தூதாண்மை தகராறு தொடங்கிய பின்னர் சுற்றுலாவுக்காக மாலத்தீவு செல்வதற்குப் பதில் லட்சத்திவு செல்லுமாறு மக்கள் சமூக ஊடகங்களில் முறையிடத் தொடங்கினர். இதனிடையில் முய்சு சீனாவுக்கு சென்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மேலும் சீனாவிடம் இருந்து பெரும் பொருளாதார உதவி பற்றியும் அறிவித்தார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாலத்தீவுக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் இருந்து மாலத்தீவுக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்று தி இந்து நாளிதழின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியா மட்டுமின்றி அங்கு செல்லும் ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இருப்பினும் இதற்கு தூதாண்மை தகராறு மட்டுமே ஒரே காரணம் என்று சொல்ல முடியாது.

இந்த முழு விஷயத்திலும் மாலத்தீவு மட்டுமே நஷ்டத்தை சந்திக்கும் எனச் சொல்ல முடியாது என்றும் தி இந்து நாளிதழ் கூறுகிறது. வெளிநாட்டில் சிகிச்சை பெறக்கூடிய அரசு காப்பீட்டுத் திட்டத்தின் பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து ஆகியவை சேர்க்கப்படும் என்று ஜனவரி மாதம் முய்சு கூறினார். இதன் பிறகு, மாலத்தீவில் இருந்து சிகிச்சைக்காக இந்தியா வருபவர்களின் எண்ணிக்கை குறையக்கூடும்.

மாலத்தீவு இந்தியாவில் இருந்து கிரானைட், இரும்பு, ஸ்டீல், புல்டோசர்கள் போன்றவற்றோடு கூடவே அரிசி, முட்டை, இறைச்சி, வெங்காயம், தக்காளி போன்ற பொருட்களையும் அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நிலவும் பதற்றம் இதன் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »