Press "Enter" to skip to content

பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்? இம்ரான் கானின் எதிர்பாராத வெற்றியால் யாருக்கு லாபம்?

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானில் பரபரப்பான பொதுத் தேர்தல் நடந்து முடிந்து ஐந்து நாட்களுக்குப் பிறகும், அங்கு எந்தக் கட்சி அரசாங்கம் அமைக்கப் போகிறது, அடுத்த பாகிஸ்தான் பிரதமர் யார் என்பது இன்னும் பெரிய குழப்பமாகவே உள்ளது.

முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சிக்குப் பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட 93 வேட்பாளர்கள் வென்றதன் மூலம் அனைவரையும் திகைக்க வைத்திருக்கின்றனர். இருப்பினும், ஆட்சி அமைக்க குறைந்தது 169 இடங்கள் தேவை.

மற்றொரு முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரிஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் (PML-N) 75 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அவர் பாகிஸ்தானின் மிகவும் சக்தி வாய்ந்த இராணுவத்தின் ஆதரவைக் கொண்டவராகக் காணப்படுகிறார். பாகிஸ்தானை விட்டு வெளியேறி, பின்னர் நாடு திரும்பியுள்ள அவர் ஐந்து ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பிலாவல் பூட்டோ சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 54 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

அரசியல் கட்சிகள் பிப்ரவரி 29-ஆம் தேதி அல்லது தேர்தல் நடந்த நாளுக்கு மூன்று வாரங்களுக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் அரசியல் சாசனம் கூறுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் உள்ளன. அவற்றில் 266 நேரடி வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்படுகின்றன. மீதமுள்ள 70 இடங்கள் இடஒதுக்கீடு மூலம் முடிவு செய்யப்படுகின்றன — 60 பெண்களுக்கும், 10 இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கும் – இவை நாடாளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு கட்சியின் பலத்திற்கும் ஏற்ப ஒதுக்கப்படுகின்றன.

“இந்தத் தேர்தல் முடிவு மிகப் பிளவுபட்டிருக்கிறது. எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லை. இன்னும் அவர்கள் ஒரு பொது தளத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும்,” என்று இஸ்லாமாபாத்தில் உள்ள பிபிசி உருது சேவையிடம் அரசியல் ஆய்வாளர் ரஃபியுல்லா கக்கர் கூறினார்.

இம்ரான் கான் ஆதரவாளர்கள் மற்றும் நவாஸ் ஷெரீஃபின் கட்சி ஆகிய இரண்டு அணிகளும் தாங்களே வெற்றி பெற்றதாக கூறும் நிலையில், கூட்டணி அரசாங்கம் தவிர்க்க முடியாததாகத் தோன்றுகிறது. சர்ச்சை தொடர்வதால், தோல்வியடைந்த சுயேச்சை வேட்பாளர்கள் வாக்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீதிமன்றங்களை நாடியுள்ளனர். இம்ரான் கான் ஆதரவாளர்கள் நாடு முழுவதும் தேர்தல் கமிஷன் அலுவலகங்களுக்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

அடுத்து என்ன நடக்கலாம்? சில சாத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

பாகிஸ்தான் தேர்தல், இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப், பிலாவல் பூட்டோ

பட மூலாதாரம், EPA/REX/SHUTTERSTOCK

நவாஸ் ஷெரிஃப் – பிலாவல் பூட்டோ கூட்டணி

பிலாவல் பூட்டோவின் PPP மற்றும் சில சிறிய கட்சிகளுடன் நவாஸ் ஷெரிஃபின் PML-N கூட்டணி உருவாக்குவது ஒரு சாத்தியம் என்று மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமினா யாஸ்மீன் பிபிசியிடம் தெரிவித்தார். இரு கட்சிகளும் 2022-இல் இம்ரான் கானை ஆட்சியில் இருந்து வெளியேற்ற கூட்டணி அமைத்து, கடந்த ஆகஸ்ட் வரை ஆட்சி செய்தன.

இந்தக் கூட்டணியில் ‘அடுத்த பிரதமர் யார்’ என்பது முக்கியமான கேள்வியாக இருக்கும் என்றார்.

17 இடங்களை வென்ற சமூக தாராளவாத முட்டாஹிதா குவாமி இயக்கத்துடனும் (MQM) நவாஸ் ஷெரீபின் PML-N கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சுயேச்சைகளை தன் பக்கம் இழுக்கவும் முயற்சிக்கிறது.

பாகிஸ்தான் தேர்தல், இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப், பிலாவல் பூட்டோ

பிலாவல் பூட்டோ – இம்ரான் கான் கூட்டணி

பிலாவல் பூட்டோவின் கட்சியின் மூத்த தலைவர் ஷெர்ரி ரெஹ்மானிடம், அவர்கள் இம்ரான் கானின் PTI கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புவார்களா என்று கேட்ட போது, எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க அவர்கள் தயாராக இருப்பதாக பிபிசி உருது சேவையிடம் கூறினார்.

இருப்பினும் இம்ரான் கானின் ஊடக ஆலோசகர் சுல்பி புகாரி பிபிசியிடம் கூறுகையில், அவர்கள் பெரும்பான்மையை பெறத் தவறினால் கூட்டணி அமைப்பதற்குப் பதிலாக எதிர்க்கட்சியாகவே இருக்க விரும்புவதாகக் கூறினார்.

பல்வேறு குற்றச்சாட்டுகளில் தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இம்ரான் கானின் முன்னர் கூறியதையே இது பிரதிபலிக்கிறது. 2018-இல், ‘கூட்டணி அரசாங்கம் பலவீனமாக இருக்கும்’ என்றும், ‘நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க வலிமையான அரசாங்கம் தேவை’ என்றும் அவர் கூறினார். ஆயினும்கூட, அவர் MQM போன்ற சிறிய கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்கினார்.

பாகிஸ்தான் தேர்தல், இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப், பிலாவல் பூட்டோ

நவாஸ் ஷெரிஃப், இம்ரான் கான் மற்றும் பிற கட்சிகளின் கூட்டணி

தலைவர் சிறையில் அடைக்கப்பட்டு, சின்னம் பறிக்கப்பட்டு, ஏராளமான ஆதரவாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு கட்சிக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாக அமையும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், எதுவும் நடக்கக் கூடும்.

‘அனைவரும் கைகோர்த்த பங்கேற்பு கூட்டணி’ அரசாங்கம் வேண்டும் என்ற PML-N மூத்த தலைவர் அசம் நசீர் தாராரின் கூற்று, இம்ரான் கானின் PTI கட்சியை புறக்கணிக்க முடியாது என்பதை மறைமுகமாக அவர் ஏற்றுக்கொள்வது போல் தோன்றுகிறது.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் உதய் சந்திரா பிபிசியிடம் கூறுகையில், “முன்பு இம்ரான் கானுக்கு வாக்களிக்காதவர்கள் கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரும் அவரது கட்சியும் ராணுவத்தால் நடத்தப்பட்ட விதம் அநீதியானது என்று உணரலாம். “நாடு முழுவதும் இருக்கும் ஒரு பொதுவான ஜனநாயக உணர்வு, அந்தச் சம்பவங்கள் மூலம் மீறப்பட்டதாகத் தெரிகிறது,” என்றார்.

மேலும் அவர், “சுயேச்சைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம், வாக்காளர்கள் இராணுவத்திற்கு தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள்: ‘ஜனநாயகம் மேலோங்கட்டும்’,” என்றார்.

பாகிஸ்தான் தேர்தல், இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப், பிலாவல் பூட்டோ

பட மூலாதாரம், EPA

இம்ரான் கான் ஆதரவு சுயேச்சைகள் சிறிய கட்சியுடன் இணைவார்களா?

கூட்டணி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் இம்ரான் கானின் PTI கட்சி ஆதரவு வேட்பாளர்கள் ஒரு சிறிய கட்சியுடன் சேரலாம். இதன்மூலம் அவர்கள் வென்ற இடங்களை இணைப்பதற்கும், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 தேசிய சட்டமன்ற இடங்களைப் பயன்படுத்தவும் இதனை பயன்படுத்திக்கொள்வர்கள்.

ஒரு அரசியல் கட்சி வெற்றி பெறும் ஒவ்வொரு 3.5 இடங்களுக்கும் ஒரு பெண்ணுக்கு இடம் ஒதுக்கீடு பெறுகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் எந்த கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால் அவர்கள் இதற்கு தகுதியற்றவர்கள். தேர்தல் முடிவுகள் வெளியாகி 72 மணி நேரத்திற்குள், அவர்கள் ஒரு கட்சியில் சேரவோ அல்லது சுயேச்சையாக நாடாளுமன்ற உறுப்பினராகவோ அமர விருப்பம் தெரிவிக்க வேண்டும்.

இருப்பினும், லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் அஸ்மா ஃபைஸ் கூறுகையில், PTI கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் சாத்தியம் மிகவும் குறைவு, ஏனெனில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம்.

“PTI கட்சியைப் பொருத்தவரை, ஒரு சிறிய கட்சியுடன் இணைவது அவர்களுக்குச் சட்டப்பூர்வமான தேவையே தவிர, அதன்மூலம் அவர்களுக்கு எண்ணிகை சார்ந்து எந்த நன்மையும் இல்லை,” என்று அவர் கூறினார்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »