சினி பாப்கார்ன் – நயன்தாரா படம் எந்தப் படத்தின் காப்பி…?

கேள்விக்குறியான அஜித்தின் வருகை: தமிழக அரசியலில் அனல் பறக்கிறது. சசிகலாவை பொதுச்செயலாளராக்கி, முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்க ஒரு கூட்டமே இறங்கி வேலை பார்க்கிறது. அவருக்கு எதிராகவும் சில பல குரல்கள் கேட்கின்றன.

 

இந்நிலையில், போயஸ் கார்டன் சென்ற அஜித் சசிகலாவை சந்தித்துப் பேசினார் என்ற செய்தி பிரேக்கிங் நியூசானது. ஆனால், சற்று நிதானித்து, அஜித் போயஸ் தோட்டத்துக்கு உண்மையிலேயே வந்தாரா என்று செய்தி வெளியிட்டவர்களே சந்தேகத்தோடு  பம்முகிறார்கள்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே, அடுத்த அதிமுக தலைமை அஜித்தான் என்ற செய்தி வைரலானது. இப்போது ஜெயலலிதா மறைந்த பிறகும் தலயின் தலை உருட்டப்படுகிறது. இந்த விவகாரத்தில் வழக்கம் போல் மௌனமாக இல்லாமல் அஜித் தனது நிலையை வெளிப்படையாக அறிவித்தால் வீண் குழப்பங்கள் தவிர்க்கப்படும்.

இதுதாண்டா வசூல்

அமீர் கானின் தங்கல் முதல் நாளில் 29.78 கோடிகளை இந்தியாவில் வசூலித்தது. சல்மானின் சுல்தான் உள்பட வேறுசில படங்களுடன் ஒப்பிட்டால் இந்த ஓபனிங் வசூல் மிகக்குறைவு.

ஆனால், அடுத்த நாள் தங்கல் இந்தியாவில் வசூலித்தது 34.82 கோடிகள். ஒரேநாளில் ராக்கெட் வேக வளர்ச்சி. 3 -வது நாள் ஞாயிற்றுக்கிழமை 42.35 கோடிகள். நாளுக்கு நாள் தங்கல் போட்ட ஹை ஜம்பில் 3 -வது நாளே படம் 106.29 கோடிகளை வசூலித்து அனைவருக்கும் ஷாக் தந்துள்ளது.

படத்துக்கு கிடைத்திருக்கும் நேர்மறை விமர்சனம் காரணமாக இதுவரை இந்தியாவில் அதிகம் வசூலித்த அமீர் கானின் பிகே படத்தின் வசூலை தங்கல் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ரஜினி படத்தைவிட ரஜினி முருகன் படம்தான் டாப்

2016 -இல் வெளியான படங்களில் கபாலி அதிரடியாக வசூலித்தாலும் தயாரிப்பாளர் தரப்புதான் லாபத்தில் அதிகம் எடுத்துக் கொண்டது. திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு கிடைத்தது கொஞ்சம்தான்.

அந்தவகையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் 2016 -இல் அதிக லாபத்தை தந்தது ரஜினி முருகன் படம்தான் என்கின்றனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கிவரும் படத்துக்கு விஜய், அஜித் பட அளவுக்கு பணம்தர விநியோகஸ்தர்கள் தயாராக உள்ளனர்.

நயன்தாரா படம் எந்தப் படத்தின் காப்பி…?

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும், கொலையுதிர்காலம் படம், சுஜாதாவின் கொலையுதிர்காலம் நாவலை தழுவி எடுப்பதாக சொல்லப்பட்டது. நாவலின் பெயரை மட்டும்தான் எடுத்துக் கொண்டோம், கதை வேறு என்று படக்குழு அதனை மறுத்தது.

இந்நிலையில், ஆங்கிலப்படமான ஹஷ் படத்தை தழுவி கொலையுதிர்காலம் எடுக்கப்படுவதாக செய்தி பரவியது. அதனை சக்ரி டோலட்டி மறுத்துள்ளார், ஆனால் கொஞ்சமாக.

அதாவது, ஹஷ் படத்தில் காது கேட்காத, வாய் பேச முடியாத பெண் எழுத்தாளர் தனியாக இருக்கையில் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் மாட்டிக் கொள்கிறார். அவனிடமிருந்து அவர் தப்பித்தாரா என்பது கதை. கொலையுதிர்காலத்தில் அந்த பிரதான பெண் வேடத்தின் சாயல் நயன்தாரா கதாபாத்திரத்தில் இருக்கும். ஆனால், கதை வேறு என்று சக்ரி டோலட்டி கூறியுள்ளார்.

படம் வரட்டும்… சுட்டது கதாபாத்திரம் மட்டும்தானா இல்லை மொத்த கதையுமா என்பது தெரிந்துவிடும்.

Source: Webdunia.com