9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை முதன்மை செயலாளர் லட்சுமி நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி தொடங்கி 9-ந் தேதி வரை 8 நாட்கள் பெங்களூரு மற்றும் மைசூருவில் நடைபெற உள்ளது. பெங்களூருவில் 11 திரையரங்குகள் மற்றும் மைசூருவில் 4 திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும். இதில் சுமார் 50 நாடுகளை சேர்ந்த 180 திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன.

ஆசிய திரைப்படங்கள் போட்டி, இந்திய திரைப்படங்கள் போட்டி, கன்னட திரைப்படங்கள் போட்டி மற்றும் கன்னட ஜனரஞ்சகமான படங்கள் போட்டி என 4 பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இது தவிர நகைச்சுவை, மகளிர் பிரிவில் பெண்கள் இயக்கிய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆவண படங்கள் பிரிவிலும் ஏராளமான படங்கள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளன.

இவ்வாறு லட்சுமி நாராயண் கூறினார்.

அதைத்தொடர்ந்து கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் ராஜேந்திரசிங்பாபு கூறுகையில், “சினிமாத்துறையினரின் குறைகளை போக்க மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள் திரையரங்குகளை அமைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்“ என்றார்.

Source: Maalaimalar