மீண்டும் ரஜினியுடன் நடிக்கும் பிரபல நடிகை

சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தலைவர் 168’ படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல நடிகை ரஜினியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறார்.

ரஜினி நடிப்பில் தற்போது ‘தர்பார்’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. 

இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

தற்போது இப்படத்தில் நடிகை மீனா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்குமுன் நடிகை மீனா ரஜினியுடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். மேலும் வீரா, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் இணைய இருக்கிறார்.

Related Tags :

Source: Malai Malar