Press "Enter" to skip to content

சென்சார் அதிகாரிகளுடன் இயக்குனர் வாக்குவாதம்

சென்சார் அதிகாரிகளுடன் இயக்குனர் வாக்குவாதம்

12/4/2019 4:46:04 PM

சிம்பு நடித்த தொட்டி ஜெயா, பரத்தின் நேபாளி மற்றும் ஏமாமலி போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட்.துரை. தற்போது சுந்தர்.சி, சாக்‌ஷி, யோகிபாபு நடிக்கும் இருட்டு படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தை தணிக்கை சான்றிதழுக்கு திரையிட்டபோது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஒரு சில படங்களை பார்த்தால் இது பாலா படம், இது ஹரி படம் என்று சொல்லிவிடலாம். என்னுடைய படம் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாணியிலிருக்கும்.

அந்த வகையில் இருட்டு திகில் கலந்த துப்பறியும் கதையாக உருவாகியிருக்கிறது. இஸ்லாமியத்தில் ஜின் எனப்படும் ஒரு பிறப்பை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய திரைப்படத்தில் இது முதல் முயற்சியாக இருக்கும். தணிக்கையில் இப்படத்தை காட்டியபோது அதிகாரிகள் இஸ்லாமியத்தில் வரும் பிறப்பைபற்றி சொல்கிறீர்கள்.

இதை எப்படி அனுமதிப்பது, ஏதாவது பிரச்னை வந்தால் யார் பொறுப்பு. நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக கடிதம் தாருங்கள் என்றனர். அதன்படி நான் பொறுப்பேற்று கடிதம் தந்தேன். ஜின் பற்றி எந்த வகையிலும் தவறாக காட்டவில்லை. இப்படத்தில் வரும் பாடல் மற்றும் திகில் காட்சிகளின் பெரும்பகுதியை வெட்டச் சொன்னார்கள். அந்த பாடல்தான் படத்திற்கே முக்கியமான அம்சம். திகில் படத்தில் திகில் காட்சி இருக்கத்தானே செய்யும் என்று வாதாடினேன். அதை ஏற்க மறுத்தார்கள்.

வேறு வழியில்லாமல் சுமார் 20 இடங்களில் தணிக்கை வெட்டுக்கு சம்மதித்தேன். என்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கு தணிக்கை என்பது ஒரு தடையாக இருக்கிறது. ஆனாலும் படத்தில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லியிருக்கிறேன். அடுத்து சிம்பு நடிக்கும் புதிய படம் இயக்க உள்ேளன். இது தொட்டி ஜெயா 2ம் பாகம் இல்லை. அப்படம் நிச்சயம் வரும். அதற்கு முன்பாக புதிய ஸ்கிரிப்ட்டில் அவரை இயக்க உள்ளேன். இவ்வாறு வி.இசட்.துரை கூறினார்.

Source: Dinakaran